நாகாபரணப்பிள்ளையார்
மாமேவு தந்தையொரு மருப்பையென
விளித்திடத்தன் மெளலி யாய
தூமேவு பிறையொருபாற் சொருகாவத்
தந்தையெதிர் தோன்ற நின்று
பாமேவும் ஒருமருப்ப னியானோநீ
யோதெரிந்து பகரா யென்று
பூமேவு நகைகொளுநா காபரணக்
களிற்றிருதாள் போற்றி வாழ்வாம்
- திருநாகைக்காரோணம் தலபுராணம்
பொழிப்புரை: பெருமை மிக்க தந்தையாகிய சிவபெருமான் விநாயகரை நோக்கி, “ஒற்றைக்கொாம்பனே” (ஏகதந்தன்) என்று அழைத்திடவும், விநாயகர் தனது திருமுடியாக அணி செய்வதாகிய தூய்மை பொருந்திய பிறைநிலவை ஒருபுறம் சொருகித் தனது தந்தையாரின் எதிரே
தோன்றும்படியாக நின்று, "துதிக்கப்படும் பாடல்களில் பொருந்தியிருக்கும் ஒற்றைக்கொம்பன் நானா? நீயோ? தெரிந்து கூறுவாயாக !"
என்று கூறி, அழகு பொலியப் புன்னகை செய்திடுகின்ற நாகாபரணத்தை அணிந்த தலவிநாயகரின் திருவடி இணைகளைப் போற்றி வாழ்வோமாக !
குறிப்புரை: “ஒருபுறம் கொம்பு விளங்கவும், இன்னொரு புறம் வளைந்த பிறையையும் அணிந்தமையால் யான் ஒரு கொம்புடையவன் அல்லன்; இரு கொம்புடையவன் ஆவேன். முன்பொருகால் நீ வென்ற பன்றியின் ஒரு கொம்பை மட்டும் நீ அணிந்திருப்பதால், நீயே ஒற்றைக்கொம்பன் ஆனாய்" என விநாயகர் கூறினார் என்பர்
சிறப்பம்சம் :
🌷 நாகப்பட்டினத்தில் உள்ள நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாகும். மதுரை மீனாட்சி அம்மன், காஞ்சி காமாட்சி அம்மன், காசி விசாலாட்சி அம்மன் ஆலயங்களைப் போல, இந்தக் கோவிலும் அம்மனை முன்னிலைப் படுத்தும் திருக்கோவிலாக அமைந்திருக்கிறது.
🌷 இங்கு சிறப்பு மூர்த்தியாக நாகாபரணப் பிள்ளையார் என்பவர், இந்தக் கோவிலில் அருள்பாலிக்கிறார். ஆலயத்தின் முகப்பில் வீற்றிருக்கும் இந்த விநாயகர், உடலில் நாகத்தை ஆபரணமாக சூடி, தலைக்கு மேலே மற்றொரு நாகம் குடை பிடித்தபடி இருக்க அதன் கீழே காட்சி தருகிறார். இதன் காரணமாகவே இந்த விநாயகருக்கு, ‘நாகாபரண விநாயகர்’ என்று பெயர் வந்தது.
🌷 நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு, ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொண்டால், அந்த தோஷங்கள் விலகும் என்கிறார்கள். ராகு- கேது பெயர்ச்சியின்போது இவருக்கு விசேஷ பூஜைகளும் நடக்கிறது.
No comments:
Post a Comment