7 Dec 2020

அருணகிரிநாதர் திருப்புகழ் 1 (ஓல மிட்டி ரைத்தெ ழுந்த)

ஓலமிட்டிரைத்து  

(நாகப்பட்டினம்)




பாடல் விளக்கம்



தான தத்த தத்த தந்த தான தத்த தத்த தந்த
     தான தத்த தத்த தந்த ...... தனதான

பாடல்


ஓல மிட்டி ரைத்தெ ழுந்த வேலை வட்ட மிட்ட இந்த
     ஊர்மு கிற்ற ருக்க ளொன்று ...... மவராரென்

றூம ரைப்ர சித்த ரென்று மூட ரைச்ச மர்த்த ரென்றும்
     ஊன ரைப்ர புக்க ளென்று ...... மறியாமற்

கோல முத்த மிழ்ப்ர பந்த மால ருக்கு ரைத்த நந்த
     கோடி யிச்சை செப்பி வம்பி ...... லுழல்நாயேன்

கோப மற்று மற்று மந்த மோக மற்று னைப்ப ணிந்து
     கூடு தற்கு முத்தி யென்று ...... தருவாயே

வாலை துர்க்கை சக்தி யம்பி லோக கத்தர் பித்தர் பங்கில்
     மாது பெற்றெ டுத்து கந்த ...... சிறியோனே

வாரி பொட்டெ ழக்ர வுஞ்சம் வீழ நெட்ட யிற்று ரந்த
     வாகை மற்பு யப்ர சண்ட ...... மயில்வீரா

ஞால வட்ட முற்ற வுண்டு நாக மெத்தை யிற்று யின்ற
     நார ணற்க ருட்சு ரந்த ...... மருகோனே

நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்ம னைக்க ளைந்த
     நாக பட்டி னத்த மர்ந்த ...... பெருமாளே.

சொல் விளக்கம்


ஓலமிட்டு இரைத்தெழுந்த வேலை ... ஓலம் இடுவதுபோல
அபயக்குரலுடன் பேரொலி செய்யும் அலைகடல்

வட்டமிட்ட இந்த ஊர் ... சூழ்ந்திருக்கும் இந்த ஊரில்

முகில் தருக்கள் ஒன்றும் அவர் யாரென்று ... மேகத்தைப் போல்
கைம்மாறு கருதாமல் கொடுக்கும் பிரபுக்கள், கற்பக விருட்சம் போல்
கேட்டதெல்லாம் தரும் பிரபுக்கள் யார் உள்ளார்கள் என்று தேடிப்போய்,

ஊமரை ப்ரசித்தரென்று மூடரைச் சமர்த்த ரென்றும் ... பேசவும்
வாய் வராதவர்களை மகா கீர்த்தி வாய்ந்த பிரபுக்கள் என்றும்,
முட்டாள்களைச் சமர்த்தர்கள் என்றும்

ஊனரை ப்ரபுக்க ளென்றும் அறியாமல் ... ஊனம் உள்ளவரைப்
பிரபுக்கள் என்றும், என் அறிவின்மையால்

கோல முத்தமிழ் ப்ரபந்த மாலருக்கு உரைத்து ... அழகிய
முத்தமிழ் நூல்களை மண்ணாசை பிடித்த மூடர்களுக்குச் சொல்லி,

அநந்த கோடி இச்சை செப்பி வம்பில் உழல்நாயேன் ...
எண்ணிலாத கோடிக்கணக்கான என் விருப்பங்களைத் தெரிவித்து
வீணே திரிகின்ற அடிநாயேன்,

கோப மற்று மற்றும் அந்த மோகமற்று ... கோபம் என்பதை
ஒழித்து, மேலும், அந்த ஆசை என்பதனை நீத்து,

உனைப்பணிந்து கூடுதற்கு ... உன்னைப் பணிந்து உன்
திருவடியைக் கூடுதற்கு

முத்தி யென்று தருவாயே ... முக்திநிலை என்றைக்குத்
தந்தருள்வாய்?

வாலை துர்க்கை சக்தி யம்பி ... வாலையும் (என்றும் இளையவள்),
துர்க்கையும், சக்தியும், அம்பிகையும்,

லோக கத்தர் பித்தர் பங்கில் ... உலகத்துக்கே தலைவர் ஆகிய
பித்தராம் சிவபிரானது இடப்பாகத்தில்

மாது பெற்றெடுத்து உகந்த சிறியோனே ... அமர்ந்தவளுமான
தேவி பெற்றெடுத்து மகிழ்ந்த இளையோனே,

வாரி பொட்டெழ க்ரவுஞ்சம் வீழ ... கடல் வற்றிப் போக,
கிரெளஞ்சமலை தூளாகி விழ,

நெட்டயில் துரந்த வாகை ... நீண்ட வேலைச் செலுத்திய, வெற்றி
வாகை சூடிய,

மற்புய ப்ரசண்ட மயில்வீரா ... மற்போருக்குத் திண்ணிய புயத்தை
உடைய பராக்ரமனே, மயில் வீரனே,

ஞால வட்டம் முற்ற வுண்டு ... பூமி மண்டலம் முழுமையும் உண்டு
தன் வயிற்றிலே அடக்கியவரும்,

நாக மெத்தை யிற்று யின்ற ... ஆதிசேஷன் என்னும் பாம்புப்
படுக்கையிலே துயில் கொள்பவரும்

நாரணற்கு அருட்சு ரந்த மருகோனே ... ஆகிய நாராயணருக்கு
அருள் பாலித்த மருமகனே,

நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்மனைக் களைந்த ...
நான்கு திசைகளிலும் ஜயித்த சூரபத்மனை அகற்றியவனே,

நாக பட்டினத்தமர்ந்த பெருமாளே. ... நாகப்பட்டினம் என்னும்
தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

No comments:

Post a Comment