மார்பு ரம்பினளி(நாகப்பட்டினம்)தான தந்ததன தந்ததன தந்ததன தான தந்ததன தந்ததன தந்ததன தான தந்ததன தந்ததன தந்ததன ...... தந்ததான மார்பு ரம்பினளி னங்கிரியெ னுந்தனமொ டார மும்படித ரம்பொறியு டன்பணிகள் மாலை யொண்பவள மும்பரிம ளங்கலவை ...... தொங்கலாட வாள்ச ரங்கணிய லுங்குழைத ளம்பளக பார தொங்கலணி பெண்கள்வத னங்கள்மதி வாகை யென்பஇத ழுஞ்சலச மென்பகள ...... சங்குமோக சார மஞ்சள்புய முங்கிளிமு கங்களுகிர் பாளி தம்புனைது வண்டிடையொ டின்பரச தாழி யென்பஅல்கு லுந்துளிர ரம்பைதொடை ...... ரம்பைமாதர் தாள்ச தங்கைகொலு சுங்குலசி லம்புமணி யாடல் கொண்டமட மங்கையரு டன்கலவி தாக முண்டுழல்கி னுங்கழலு றுங்கழல்ம ...... றந்திடேனே வீர வெண்டையமு ழங்கவரி சங்குமுர சோடு பொன்பறைத தும்பவிதி யுஞ்சுரரும் வேத விஞ்சையரு டன்குமுற வெந்துகவ ...... டர்ந்தசூரன் வீற டங்கமுகி லுங்கமற நஞ்சுடைய ஆயி ரம்பகடு கொண்டவுர கன்குவடு மேகொ ளுந்தபல்சி ரந்தனையெ றிந்துநட ...... னங்கொள்வேலா நார சிங்கவடி வங்கொடுப்ர சண்டிரணி யோன டுங்கநட னஞ்செய்துஇ லங்கைவலி ராவ ணன்குலம டங்கசிலை கொண்டகரர் ...... தந்தமூல ஞான மங்கையமு தஞ்சொருபி யென்றனொரு தாய ணங்குகுற மங்கையைம ணந்தபுய நாகை யம்பதிய மர்ந்துவளர் நம்பர்புகழ் ...... தம்பிரானே. உரம் மார்பு பின் நளினம் கிரி எனும் தனமொடு ஆரமும் படி தரம் பொறியுடன் பணிகள் மாலை ஒண் பவளமும் பரிமள கலவை தொங்கல் ஆட ... வலிய மார்பு இடத்தில் தாமரை மொக்கு எனவும் மலை எனவும் சொல்லத் தக்க மார்பகத்தோடு, முத்து மாலையும் படிந்த, மேன்மையான தேமலுடன், அணி கலன்களும் மாலையாய் அணிந்த ஒளி வீசும் பவளமும் நறு மணச் சந்தனக் குழம்புடன் பூ மாலை அசைய, வாள் சரம் கண் இயலும் குழை த(ள்)ள அம்பு அளக பார(ம்) தொங்கல் அணி பெண்கள் வதனங்கள் மதி வாகை என்ப இதழும் சலசம் என்ப கள(ம்) சங்கு ... வாள் போல அசையும் கண் பொருந்திய (காதில் உள்ள) குண்டலங்களைத் தள்ளும் கூந்தல் பாரத்தில் பூமாலையை அணிந்துள்ள பெண்களின் முகங்கள் சந்திரனையும் வெற்றி கொண்டன என விளங்க, வாயிதழும் தாமரை இதழ் போல விளங்க, கழுத்து சங்கு போல் விளங்க, மோக சார(ம்) மஞ்சள் புயமும் கிளி முகங்கள் உகிர் பாளிதம் புனை துவண்ட இடையொடு இன்ப ரச தாழி என்ப அல்குலும் துளிர் அரம்பை தொடை ரம்பை மாதர் ... காதலை எழுப்பும் மஞ்சள் பூசப்பட்ட தோளும், கிளியின் நாசியைப் போன்ற நகங்களும், பட்டாடை அணிந்து துவட்சி அடைந்துள்ள இடையுடன் இன்பத்தைத் தரும் பாண்டம் என்று சொல்லும்படியான பெண்குறியும், தழைத்துள்ள வாழை என்னும்படியான தொடைகளும் உடைய ரம்பை என்னும் தெய்வப் பெண் போன்ற விலைமாதர்கள். தாள் சதங்கை கொலுசும் குல சிலம்பும் அணி ஆடல் கொண்ட மட மங்கையருடன் கலவி தாகம் உண்டு உழல்கினும் கழலுறும் கழல் மறந்திடேனே ... காலில் உள்ள சதங்கை, கொலுசு சிறந்த சிலம்பு இவைகளைப் பூண்டு நடனத்தைச் செய்யும் அழகிய மாதர்கள் மீது கலவி தாகம் கொண்டு நான் திரிந்தாலும், போற்றப்படும் உன் திருவடிகளை மறக்க மாட்டேன். வீர வெண்டைய(ம்) முழங்க வரி சங்கு(ம்) முரசோடு பொன் பறை ததும்ப விதியும் சுரமும் வேத விஞ்சையர் உடன் குமுற வெந்து உக அடர்ந்த சூரன் வீறு அடங்க ... வீர வெண்டையம் என்னும் காலணி ஒலிக்க, இசையை எழுப்பும் சங்கும் முரசும் அழகிய பறையும் பேரொலி செய்ய, பிரமனும் தேவர்களும் வேதம் ஓத வல்லவருடன் கலந்து ஓசையை எழுப்ப, வெந்து அழிவதற்காக நெருங்கி வந்த சூரனின் கர்வம் ஒடுங்க, முகிலும் கமற நஞ்சு உடைய ஆயிரம் பகடு கொண்ட உரகன் குவடுமே கொளுந்த பல சிரம் தனை எறிந்து நடனம் கொள் வேலா ... மேகமும் மிக ஒலிக்க, விஷத்தைக் கொண்ட ஆயிரம் யானைகளின் பலத்தை உடைய பாம்பாகிய ஆதிசேஷனுடைய மலை போன்ற பணாமுடிகள் வேக, அசுரர்களின் பல தலைகளை அறுத்தெறிந்து (குடைக்) கூத்து ஆடிய வேலனே, நார சிங்க வடிவம் கொண்டு ப்ரசண்ட இரணியோன் நடுங்க நடனம் செய்து இலங்கை வலி ராவணன் குலம் அடங்க சிலை கொண்ட கரர் தந்த மூல ஞான மங்கை ... நரசிங்க வடிவத்தைக் கொண்டு கடுமை கொண்ட இரணியனை நடுங்க வைத்து நடனம் புரிந்து, இலங்கையில் வலிமை வாய்ந்த ராவணனின் கூட்டம் அடங்கி ஒழிய (கோதண்டம் என்னும்) வில்லை ஏந்திய கைகளை உடைய திருமால் பெற்ற ஞானம் படைத்த மங்கை, அமுதம் சொருபி என்றன் ஒரு தாய் அணங்கு குற மங்கையை மணந்த புய ... அமுத உருவினள், என்னுடைய தாய் ஆகிய குறப் பெண் வள்ளி நாயகியை மணந்த திருப்புயத்தை உடையவனே, நாகை அம் பதி அமர்ந்து வளர் நம்பர் புகழ் தம்பிரானே. ... நாகப்பட்டினம் என்னும் அழகிய தலத்தில் அமர்ந்து விளங்குபவனே, சிவபெருமான் போற்றும் தம்பிரானே. |
7 Dec 2020
அருணகிரிநாதர் திருப்புகழ் 2 (மார்பு ரம்பினளி)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment