7 Dec 2020

திருஞானசம்பந்தர் பதிகம் 2 (கூனல்திங்கள்)





2.116 திருநாகைக்காரோணம்        
 பண் - செவ்வழி

(மயிலை சற்குருநாத தேசிகர்)

(ஹரிஹர தேசிகர்)
             
  திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1

கூனல்திங்கள் குறுங்கண்ணி கான்ற அந்நெடு வெண்ணிலா

ஏனல்பூத்தஅம் மராங்கோதை யோடும்விரா வும்சடை

வானநாடன் அமரர்பெரு மாற்கு இட மாவது

கானல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.


         பொழிப்புரை :வளைந்த பிறையாகிய சிறிய தலைமாலை , ஒளி உமிழும் வெண்ணிலவில் குறிஞ்சி நிலத்தில் தினைக்கொல்லையில் பூத்த கடம்பமலர்மாலை ஆகியவற்றைப் புனைந்த சடையை உடைய வானநாடனும் , அமரர் பெருமானும் ஆகிய இறைவற்கு இடமாவது சோலைகளை வேலியாகக் கொண்டதும் உப்பங்கழிகளை உடையது மாகிய கடல்நாகைக்காரோணமாகும் .



பாடல் எண் : 2

விலங்கல்ஒன்று சிலையாமதில் மூன்றுஉடன் வீட்டினான்,

இலங்கு கண்டத்து எழில்ஆமை பூண்டாற்கு இடம்ஆவது,

மலங்கி ஓங்கிவ் வருவெண்திரை மல்கிய மால்கடல்

கலங்கல் ஓதம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.


         பொழிப்புரை :மேருமலை ஒன்றை வில்லாகக் கொண்டு மும் மதில்களை அழித்தவனும் அழகிய கழுத்தில் ஆமை ஓட்டைப் பூண்ட வனும் ஆகிய இறைவனுக்கு இடம் , கலங்கி ஓங்கி வரும் வெண் திரை களை உடைய கடலின் கரையில் கலங்கிய நீர்ப் பெருக்கோடு கூடிய கழிகள் சூழ்ந்த கடல் நாகைக் காரோணமாகும் .



பாடல் எண் : 3

வெறிகொள் ஆரும் கடல்கைதை நெய்தல்விரி பூம்பொழில்

முறிகொள் ஞாழல் முடப்புன்னை முல்லைமுகை வெண்மலர்

நறைகொள்கொன்றை நயந்துஓங்கு நாதற்கு இடமாவது

கறைகொள்ஓதம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.


         பொழிப்புரை :தளிர்களோடு கூடிய ஞாழல் மலர் , வளைந்த புன்னை மரத்தில் பூத்தமலர்கள் , வெள்ளிய முல்லையரும்புகள் , தேன் நிறைந்த கொன்றைமலர் ஆகியவற்றை விரும்பி அணியும் பெருமானுக்கு இடம் , மணம் கமழும் தாழைமலர் , நெய்தல்மலர் ஆகியவை நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட , கரிய ஓதம் பரவி விளங்கும் கடல் நாகைக்காரோணமாகும் .



பாடல் எண் : 4

வண்டுபாட வளர்கொன்றை மாலைமதி யோடு உடன்

கொண்டகோலம் குளிர்கங்கை தங்கும் குருள் குஞ்சியுள்

உண்டுபோலும் எனவைத்து உகந்த ஒரு வற்குஇடம்

கண்டல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.


         பொழிப்புரை :வண்டுகள் பாடுமாறு மலர்ந்த கொன்றை மலர் மாலையை இளம்பிறையோடு ஒருசேர அணிந்து , சுருண்ட சடையுள் குளிர்ந்த கங்கையை ஐயப்படுமாறு மறைத்துவைத்து மகிழ்ந்த இறைவனுக்கு இடம் , தாழைவேலி சூழ்ந்ததும் உப்பங்கழிகள் நிறைந்ததும் ஆகிய கடல் நாகைக்காரோணமாகும்



பாடல் எண் : 5

வார்கொள்கோலம் முலைமங்கை நல்லார்மகிழ்ந்து ஏத்தவே

நீர்கொள்கோலச் சடைநெடு வெண்திங்கள் நிகழ்வுஎய்தவே

போர்கொள்சூலப் படைபுல்கு கையார்க்கு இடமாவது

கார்கொள் ஓதம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.


         பொழிப்புரை :நல்லவர் மகிழ்ந்தேத்த , கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையோடு கூடிய அழகோடு , தண்மையான அழகிய சடையில் நீண்ட நிலாக்கதிர்களைப் பரப்பும் இளம்பிறை விளங்கப் போருடற்றும் சூலப்படையைக் கையின்கண் கொண்டு விளங்கும் சிவ பிரானுக்குரிய இடம் ஓதம் பெருகும் கரிய கழிகள் சூழ்ந்த கடல் நாகைக் காரோணமாகும் .



பாடல் எண் : 6

விடை அதுஏறி  விடஅரவு அசைத்தவ் விகிர்தர்அவர்

படைகொள்பூதம் பலபாட ஆடும்பர மர்அவர்

உடைகொள்வேங்கை உரிதோல் உடையார்க்கு இடமாவது

கடைகொள்செல்வம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.


         பொழிப்புரை :விடைமீது ஏறி வருபவனும் , விடம்பொருந்திய பாம்பை இடையில்கட்டிய விகிர்தனும் , பூதப்படைகள் பாட ஆடும் பரமனும் , புலித்தோலை உடையாக உடுத்தவனும் ஆகிய சிவபெரு மானுக்குரிய இடம் , மீன்களாகிய செல்வங்கள் நிறைந்த கழிசூழ்ந்த கடல்நாகைக்காரோணமாகும் .



பாடல் எண் : 7

பொய்துவாழ்வார் மனம்பாழ் படுக்கும் மலர்ப்பூசனை

செய்துவாழ்வார் சிவன்சேவடிக்கே செலும் சிந்தையார்

எய்தவாழ்வார் எழில்நக்கர் எம்மாற்கு இடமாவது

கைதல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.


         பொழிப்புரை :மனத்தைப் பாழ்படுத்தி வாழும் பொய்ம்மை வாழ்வுடையாரும் , சிவன் சேவடிக்கே செல்லும் சிந்தையராய் மலர் தூவிப் பூசனைசெய்து வாழ் அடியவரும் தம்மை எய்த வாழ்வாராகிய அழகிய பெருமானுக்கு இடம் , தாழை வேலியையும் உப்பங் கழிகளையும் உடைய கடல் நாகைக் காரோணமாகும் .



பாடல் எண் : 8

பத்துஇரட்டி திரள் தோள் உடையான் முடிபத்துஇற

அத்து இரட்டி விரலால் அடர்த்தார்க்கு இடமாவது

மைத்திரட்டிவ் வருவெண்திரை மல்கிய மால்கடல்

கத்திஉரட்டுங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.


         பொழிப்புரை :இருபது தோள்களை உடைய இராவணனுடைய பத்துத் தலைகளும் நெரியச் சிவந்த கால் விரல்களால் அடர்த்த பெருமானுக்குரிய இடம் , கரிய மணலைத்திரட்டி வரும் வெண்திரைகளை உடைய பெரியகடலைச் சூழ்ந்துள்ள கழிகள் ஒளிசிறந்து ஒலியெழுப் பும் கடல் நாகைக்காரோணமாகும் .



பாடல் எண் : 9

நல்லபோதில் உறைவானும் மாலும் நடுக்கத்தினால்

அல்லர் ஆவர் எனநின்ற பெம்மாற்கு இடமாவது

மல்லல் ஓங்கிவ் வருவெண்திரை மல்கிய மால்கடல்

கல்லல் ஓதம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.


         பொழிப்புரை :நல்ல தாமரை மலரில் உறையும் நான்முகனும் , திருமாலும் நடுக்கத்தால் இவரே சிவபரஞ்சுடர் எனவும் அல்லர் எனவும் ஐயுற நின்ற பெருமானுக்குரிய இடம் , வளமோங்கிவரும் வெள்ளிய அலைகள் நிரம்பிய பெரிய கடலினது ஒலிக்கும் ஓதங்களை யுடைய கழிகள் சூழ்ந்த கடல் நாகைக்காரோணமாகும் .



பாடல் எண் : 10

உயர்ந்தபோதின் உருவத்து உடைவிட்டு உழல்வார்களும்

பெயர்ந்தமண்டை இடுபிண்ட மாவுண்டு உழல்வார்களும்

நயந்துகாணா வகைநின்ற நாதர்க்கு இடமாவது

கயங்கொள்ஓதம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.


         பொழிப்புரை :தாமரை மலர் போன்று சிவந்த கல்லாடையை உடுத்தவர்களும் உடையின்றித் திரிபவர்களும் கையில் ஏந்திய மண்டையில் பிறர் இடும் பிச்சையை உணவாகக் கொண்டு உழல்பவரும் ஆகிய புத்தர்களும் சமணர்களும் விரும்பிக் காணாத வாறு நின்ற பெருமானுக்கு உரிய இடம் ஆழமும் நீர்ப் பெருக்கும் உடைய கழிகள் சூழ்ந்து விளங்கும் கடல்நாகைக் காரோணமாகும் .



பாடல் எண் : 11

மல்குதண்பூம் புனல்வாய்ந்து ஒழுகும்வயல் காழியான்

நல்லகேள்வித் தமிழ்ஞான சம்பந்தன்நல் லார்கள்முன்

வல்லவாறே புனைந்துஏத்துங் காரோணத்து வண்தமிழ்

சொல்லுவார்க்கும் இவைகேட்ப வர்க்கும்துயர் இல்லையே.


         பொழிப்புரை :நீர்நிறைந்த வயல்களால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றியவரும் நல்ல கேள்வியை உடையவரும் ஆகிய தமிழ் ஞானசம்பந்தர் நல்லோர்கள் முன் வல்லவாறு பாடிய காரோணத்துத் திருப்பதிகமாகிய இவ்வண்தமிழைச் சொல்பவர் கட்கும் கேட்பவர்கட்கும் துன்பம் இல்லை .


                                             திருச்சிற்றம்பலம்


No comments:

Post a Comment