7 Dec 2020

திருநாவுக்கரசர் பதிகம் 1 (மனைவிதாய்)


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பாடல் எண் : 291

சோலை மறைக்காட்டு அமர்ந்துஅருளும்

         சோதி அருள்பெற்று அகன்றுபோய்,

"வேலை விடம்உண் டவர்வீழி

         மிழலை மீண்டும் செல்வன்" என,

ஞாலம் நிகழ்ந்த நாகைக்கா

         ரோணம் பிறவும் தாம்பணிந்து,

சாலும் மொழிவண் தமிழ்பாடி,

         தலைவர் மிழலை வந்துஅடைந்தார்.


         பொழிப்புரை : சோலைகள் சூழ்ந்த திருமறைக்காட்டில் விரும்பி வீற்றிருக்கும் பேரொளிப் பிழம்பாய சிவபெருமானின் திருவருளைப் பெற்று, அங்கிருந்து நீங்கிச் சென்று, கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட சிவபெருமானின் திருவீழிமிழலையை மீண்டும் அடைவேன் என்று எண்ணிய நிலையில், உலகில் விளங்கிய திருநாகைக் காரோணத்தையும், அப்பதி முதலாய பிற பதிகளையும் வணங்கிச் சால்புடைய மொழிகளால் ஆய திருப்பதிகங்களைப் பாடித் தலைவரின் திருவீழிமிழலையை அடைந்தார்.


         குறிப்புரை : திருநாகைக்காரோணத்தில் அருளிய பதிகங்கள்:


     1.  `மனைவிதாய்` (தி.4 ப.71) - திருநேரிசை.

2.    `வடிவுடை மாமலை` (தி.4 ப.103) - திருவிருத்தம்.

3.    `பாணத்தான்` (தி.5 ப.83) - திருக்குறுந்தொகை.

4.    `பாரார் பரவும்` (தி.6 ப.22) - திருத்தாண்டகம்.


          பிற பதிகளாவன:


1. திருப்பயற்றூர் - `உரித்திட்டார்` (தி.4 ப.32) - திருநேரிசை.

2. திருக்கொண்டீச்சரம்: `வரைகிலேன்` (தி.4 ப.67) - திருநேரிசை. `கண்ட பேச்சினில்` (தி.5 ப.70) – திருக்குறுந்தொகை..



திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்


4. 071    திருநாகைக்காரோணம்          
    திருநேரிசை

                                             திருச்சிற்றம்பலம்

ஓதுவார் ஹரிஹர தேசிகர் 

ஓதுவார் மதுரை முத்துக்குமாரன்

பாடல் எண் : 1

மனைவிதாய் தந்தை மக்கள்

         மற்றுஉள சுற்றம் என்னும்

வினைஉளே விழுந்து அழுந்தி,

         வேதனைக்கு இடம் ஆகாதே,

கனையுமா கடல்சூழ் நாகை

         மன்னுகா ரோணத் தானை

நினையுமா வல்லீர் ஆகில்

         உய்யலாம் நெஞ்சி னீரே.


         பொழிப்புரை : மனமே ! பெற்றோர் மனைவி மக்கள் ஏனைய சுற்றத்தார் என்று சொல்லப்படும் தேக பந்துக்களின் பாசமாகிய வினையிலே அகப்பட்டு அழுந்தித் துயருக்கு இடமாகாமல் ஒலிக்கின்ற பெரிய கடல் ஒருபுறம் சூழ்ந்த நாகையில் உறையும் காரோணத்தானை விருப்புற்று நினைக்கும் ஆற்றல் உடையையாயின் துயர்களிலிருந்து தப்பி உய்யலாம் .


பாடல் எண் : 2

வையனை, வையம் உண்ட

         மால்அங்கம் தோள்மேல் கொண்ட

செய்யனை, செய்ய போதில்

         திசைமுகன் சிரம்ஒன்று ஏந்தும்

கையனை, கடல்சூழ் நாகைக்

         காரோணம் கோயில் கொண்ட

ஐயனை, நினைந்த நெஞ்சே

         அம்மநாம் உய்ந்த வாறே.


         பொழிப்புரை : எருதை ஊர்பவனாய் , ஊழிக்காலத்தே உலகத்தை வயிற்றில் கொண்ட திருமாலுடைய எலும்புருவான கங்காளத்தை தன் தோள் மேல் கொண்ட செந்நிறத்தனாய் , செந்தாமரையில் தங்கிய பிரமனுடைய மண்டையோடு ஒன்றனை ஏந்திய கையனாய் ஒருபுறம் கடலால் சூழப்பட்ட நாகைக் காரோணத்தை இருப்பிடமாகக் கொண்ட தலைவனை விருப்புற்று நினைத்த மனமே ! நாம் துயரங்களிலிருந்து தப்பிப் பிழைத்தவாறு வியக்கத்தகும் .



பாடல் எண் : 3

நிருத்தனை, நிமலன் தன்னை,

         நீள்நிலம் விண்ணின் மிக்க

விருத்தனை, வேத வித்தை,

         விளைபொருள் மூலம்ஆன

கருத்தனை, கடல்சூழ் நாகைக்

         காரோணம் கோயில் கொண்ட

ஒருத்தனை உணர்தலால், நாம்

         உய்ந்தவா நெஞ்சி னீரே.


         பொழிப்புரை : மனமே ! கூத்தனாய் , தூயனாய் , நீண்ட இவ்வுலகம் , தேவருலகம் ஆகியவற்றிற்கு மேம்பட்டவனாய் , வேதங்களால் காரணன் என்று கூறப்படுபவனாய் , தோன்றும் பொருளையெல்லாம் படைப்பவனாய் உள்ள நாகைக்காரோணத்து ஒப்பற்ற பெருமானைப் பரம்பொருள் என்று உணர்வதால் நாம் உய்ந்தமை இருந்தவாறென்னே .




பாடல் எண் : 4

மண்தனை இரந்து கொண்ட

         மாயனோடு, அசுரர், வானோர்,

தெள்திரை கடைய வந்த

         தீவிடம் தன்னை உண்ட

கண்டனை, கடல்சூழ் நாகைக்

         காரோணம் கோயில் கொண்ட

அண்டனை நினைந்து, நெஞ்சே

         அம்மநாம் உய்ந்த வாறே.


         பொழிப்புரை : உலகங்களை மாவலியிடத்துத் தானமாகப் பெற்ற திருமாலோடு அசுரர்களும் தேவர்களும் தெளிந்த அலைகளை உடைய பாற்கடலைக் கடைய அப்பொழுது எழுந்த கொடிய நஞ்சினை உண்ட கழுத்தை உடையவனாய் உள்ள காரோணப்பெருமானை நினைந்த நெஞ்சமே ! நாம் உய்ந்தவாறு வியக்கத்தகும் .



பாடல் எண் : 5

நிறைபுனல் அணிந்த சென்னி நீள்நிலா அரவம் சூடி

மறைஒலி பாடி ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன்,

கறைமலி கடல்சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட

இறைவனை, நாளும் ஏத்த இடும்பைபோய் இன்பம் ஆமே.


         பொழிப்புரை : கங்கையை அணிந்த தலையிலே பிறையையும் பாம்பையும் சூடி , வேதங்களைப் பாடிக்கொண்டு , சுடுகாட்டில் கூத்தாடுதலை விரும்பிய ஆற்றல் உடையவனாய் , கரு நிறம் மிக்க கடல் சூழ்ந்த திருநாகைக்காரோணம் கோயிலாகக் கொண்ட இறைவனை நாள்தோறும் துதித்தலால் துன்பங்கள் நீங்க இன்பங்கள் மிகும் .


பாடல் எண் : 6

வெம்பனைக் கருங்கை யானை

         வெருவ அன்று உரிவை போர்த்த

கம்பனை, காலன் காய்ந்த

         காலனை, ஞாலம் ஏத்தும்

உம்பனை, உம்பர் கோனை,

         நாகைக்கா ரோணம் மேய

செம்பொனை, நினைந்த நெஞ்சே

         திண்ணம் நாம் உய்ந்த வாறே.


      பொழிப்புரை : கொடிய , பனைமரம் போன்ற துதிக்கையை உடைய யானை அஞ்சுமாறு அதன் தோலை உரித்துப் போர்த்த ஏகம்பனாய் , கூற்றுவனை உதைத்த காலை உடையவனாய் , உலகங்கள் துதிக்கும் தேவனாய் , தேவர்கள் தலைவனாய் , நாகைக் காரோணத்தில் விரும்பி உறையும் செம்பொன் மேனியனை நினைந்த நெஞ்சே ! நாம் துயரங்களிலிருந்து விடுபட்டமை நிச்சயமாயிற்று .



பாடல் எண் : 7

வெங்கடும் கானத்து ஏழை

         தன்னொடும் வேட னாய்ச்சென்று

அங்குஅமர் மலைந்து, பார்த்தற்கு

         அடுசரம் அருளி னானை,

மங்கைமார் ஆடல் ஓவா

         மன்னுகா ரோணத் தானைக்

கங்குலும் பகலும் காணப்

         பெற்றுநாம் களித்த வாறே.


         பொழிப்புரை : வெப்பம் மிக்ககொடிய காட்டிலே , பார்வதியோடு வேடன் வடிவில் சென்று , அங்கு அருச்சுனனோடு போரிட்டு அவனுக்குப் பாசுபதாத்திரத்தை வழங்கியவனாய் , பெண்களுடைய கூத்து நீங்காமல் நிலைபெற்ற காரோணத்தில் உள்ள பெருமானை இரவும் பகலும் தரிசிக்கப் பெற்று நாம் களிப்புற்றவாறென்னே !.



பாடல் எண் : 8

தெற்றினர் புரங்கள் மூன்றும்

         தீயினில் விழ,ஓர் அம்பால்

செற்றவெம் சிலையர், வஞ்சர்

         சிந்தையுள் சேர்வுஇ லாதார்,

கற்றவர் பயிலும் நாகைக்

         காரோணம் கருதி ஏத்தப்

பெற்றவர் பிறந்தார், மற்றுப்

         பிறந்தவர் பிறந்துஇ லாரே.


         பொழிப்புரை : மாறுபட்ட அசுரர்களின் மும்மதில்களும் தீயினில் எரிந்து சாம்பலாகுமாறு ஓர் அம்பால் அழித்த கொடிய வில்லை ஏந்தியவராய் , வஞ்சனை உடையவர் உள்ளத்தில் பொருந்தாதவராய் உள்ள பெருமானாருடைய திருவடிகளை வணங்கக் கற்றவர் பலராக உள்ள நாகைக்காரோணத்தை விரும்பிப் புகழும் பேறு பெற்றவர் பிறவிப் பயனடைந்தவராவர் . மற்றவர்கள் பிறந்தும் பிறவாதாரே ஆவார் .


பாடல் எண் : 9

கருமலி கடல்சூழ் நாகைக்

         காரோணர் கமல பாதத்து

ஒருவிரல் நுதிக்கு நில்லாது

         ஒண்திறல் அரக்கன் உக்கான்,

இருதிற மங்கை மாரோடு

         எம்பிரான் செம்பொன் ஆகம்

திருவடி தரித்து நிற்கத்

         திண்ணம்நாம் உய்ந்த வாறே.


         பொழிப்புரை : மனமே ! கருமைமிக்க கடல் ஒருபுறம் சேர்ந்த நாகைக்காரோணருடைய தாமரை போன்ற பாதத்து ஒருவிரல் நுனியைத் தாங்கமுடியாமல் சிறந்த திறமையை உடைய இராவணன் சிதறிவிட்டான் . கங்கை , பார்வதி என்ற இரண்டு பெண்களோடு சிவபெருமானுடைய சிவந்த பொன் போன்ற உடம்பைத் தாங்கி நிற்கும் திருவடிகளை நாம் நம்மிடத்தில் தாங்கிக் கொண்டிருப்பதால் நாம் துயரங்களிலிருந்து விடுபட்டவாறு நிச்சயமேயாயிற்று .


                                             திருச்சிற்றம்பலம்


No comments:

Post a Comment