7 Dec 2020

திருஞானசம்பந்தர் பதிகம் 1( புனையும் விரி)



திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 463

நீடுதிருநீலநக்கர் நெடுமனையில்

         விருந்துஅமுது செய்து, நீர்மைப்

பாடும்யாழ்ப் பெரும்பாணரும் தங்க

         அங்குஇரவு பள்ளி மேவி,

ஆடும்அவர் அயவந்தி பணிவதனுக்கு

         அன்பருடன் அணைந்து சென்று,

நாடியநண் புஉடைநீல நக்கடிகள்

         உடன்நாதர் கழலில்தாழ்ந்து.


         பொழிப்புரை : அன்பு நீடும் திருநீலநக்க நாயனாரின் பெரிய இல்லத்தில் விருந்து அமுது உண்டு, நல்ல நீர்மையுடன் பாடும் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் உடன்தங்க அன்று அங்குப் பள்ளி அமர்ந்து, கூத்தியற்றும் இறைவரின் `அயவந்தியினைப்\' பணிவதற்கு, அன்பர்களுடனே சேர்ந்து சென்று, நாடிய நட்பையுடைய நீலநக்க நாயனாருடன் இறைவன் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.



பெ. பு. பாடல் எண் : 464

கோதுஇலா ஆர்அமுதைக் கோமளக்கொம்

         புடன்கூடக் கும்பிட்டு ஏத்தி,

ஆதியாம் மறைப்பொருளால் அருந்தமிழின்

         திருப்பதிகம் அருளிச் செய்வார்,

நீதியால் நிகழ்கின்ற நீலநக்கர்

         தம்பெருஞ்சீர் நிகழ வைத்து,

பூதிசா தனர்பரவும் புனிதஇயல்

         இசைப்பதிகம் போற்றி செய்தார்.


         பொழிப்புரை : குற்றம் அற்ற அரிய அமிழ்தத்தைப் போன்ற இறைவரை, அழகிய இளம்கொம்பைப் போன்ற அம்மையாருடன் வணங்கி ஏத்தி, பழைய மறைகளின் பொருள் விளங்க அரிய தமிழின் திருப்பதிகம் பாடுவார், மறைவழி ஒழுகும் திருநீலநக்கரின் பெருஞ் சிறப்புகள் விளங்க வைத்து, திருநீற்று நெறியைப் போற்றி வரும் தொண்டர்கள் போற்றுமாறு, தூய இயல் இசை உடைய பதிகத்தை அருளிச் செய்தார்.



பெ. பு. பாடல் எண் : 465

பரவியகா தலில்பணிந்து பாலறா

         வாயர்புறத்து அணைந்து, பண்பு

விரவியநண்பு உடைஅடிகள் விருப்புஉறு

         காதலில் தங்கி மேவும் நாளில்,

அரவுஅணிந்தார் பதிபிறவும் பணியஎழும்

         ஆதரவால் அணைந்து செல்வார்,

உரவுமனக் கருத்துஒன்றாம் உள்ளம்உடை

         யவர்க்கு விடை உவந்து நல்கி.


         பொழிப்புரை : பாலறா வாயரான திருஞானசம்பந்தர், பெருகிய அன்பு மிகுதியால் கோயிலின் வெளியே வந்து, அன்புடன் பொருந்திய நட்புக்கொண்ட திருநீலநக்க அடிகளின் விருப்புடைய ஆசையினால் அங்குத் தங்கியிருந்த நாள்களில், பாம்பை அணிந்த இறைவரின் மற்றப் பதிகளையும் வணங்க எழுந்த அன்பினால், அவ்வப் பதிகளுக்கும் செல்வாராய், அறிவால் உள்ளத்தில் எழும் கருத்து ஒன்றேயான மனத்தையுடைய திருநீலநக்கரிடம் மகிழ்ச்சியுடன் விடைபெற்றுப் புறப்பட்டார்.



பெ. பு. பாடல் எண் : 466

மற்றுஅவர்தம் பெருங்கேண்மை மகிழ்ந்து கொண்டு,

         மால்அயனுக்கு அரியபிரான் மருவு தானம்

பல்பலவும் சென்றுபணிந்து ஏத்திப் பாடி,

         பரமர்திருத் தொண்டர்குழாம் பாங்கின் எய்த,

கற்றவர்வாழ் கடல்நாகைக் காரோ ணத்துக்

         கண்ணுதலைக் கைதொழுது, கலந்த ஓசைச்

சொல்தமிழ்மா லைகள் பாடி, சிலநாள் வைகித்

         தொழுதுஅகன்றார் தோணிபுரத் தோன்ற லார்தாம்.


         பொழிப்புரை : பிள்ளையார், அந்நீலநக்கரின் பெருநட்பை மகிழ்ந்து மனத்துட்கொண்டு, நான்முகன், திருமால் என்பவர்க்கும் அரிய சிவபெருமானின் பதிகள் பலவும் சென்று வணங்கிப் போற்றி, இறைவரின் தொண்டர் கூட்டமானது உடன் சூழ்ந்து வரச்சென்று கற்றவர் வாழும் `திருநாகைக் காரோணம்\' என்ற பதியில் வீற்றிருக்கும் இறைவரை வணங்கி, இசையுடன் கூடிய சொல் நிறைந்த தமிழ் மாலைகளைப் பாடிச் சிலநாள்கள் அங்குத் தங்கி, வணங்கி விடைபெற்று நீங்கினார்.


         குறிப்புரை : மருவுதானம் பற்பலவும் என்றது இறையான்சேரி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். எனினும் தெளிவாக எவையும் தெரிந்தில. திருநாகைக்காரோணத்தில் அருளிய பதிகங்கள்:


1.    `புனையும் விரி' : (தி.1 ப.84) - குறிஞ்சி

2.    `கூனல் திங்கள்' : (தி.2 ப.116) - செவ்வழி.


         இப்பாடற்கு முன்னும் பின்னும் உள்ள சந்தத்திற்கும் இப்பாடல் சந்தத்திற்கும் இடையறவு இருத்தல் கண்டு இதனை இடைச் செருகல் என்பர் சிவக்கவிமணியார். எனினும் இப்பாடலில் கடல்நாகைக் காரோணப் பெருமானை வணங்கினார் எனக் கூறி, அடுத்து வரும் பாடலில் `அந்நாகைக் காரோணத்தினின்றும் நீங்கி' என வருதலின் பொருளியைபு காணத்தகும் இப்பாடலை இடைச் செருகலாகக் கொள்ள வேண்டுவது இல்லை என்றே தெரிகிறது.


திருஞானசம்பந்தர் திருப்பதிகங்கள்


1.084     திருநாகைக்காரோணம்        
   பண் - குறிஞ்சி

                                             திருச்சிற்றம்பலம்
(ஹரிஹர தேசிகர்)

(மயிலை சற்குருநாத தேசிகர்)

பாடல் எண் : 1

புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல்பாய

நனையும் சடைமேல்ஓர் நகுவெண் தலைசூடி,

வினைஇல் அடியார்கள் விதியால் வழிபட்டுக்

கனையும் கடல்நாகைக் காரோ ணத்தானே.


         பொழிப்புரை :விரிந்த கொன்றை மலர் மாலையைப் புனையும் கடவுளாய சிவபிரான், கங்கை நீரைத் தாங்கியதால் நனைந்துள்ள சடையின்மேல், வாய் விரித்துச் சிரிப்பது போன்ற வெள்ளியதொரு தலைமாலையைச் சூடி, வினைநீங்கிய அடியவர்கள் விதிப்படி வழிபடச் செறிந்துள்ள கடற்கரையை அடுத்த நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளார்.



பாடல் எண் : 2

பெண்ஆண் எனநின்ற பெம்மான், பிறைச்சென்னி,

அண்ணா மலைநாடன், ஆரூர் உறை அம்மான்,

மண்ஆர் முழவுஓவா மாடந் நெடுவீதிக்

கண்ஆர் கடல்நாகைக் காரோ ணத்தானே.


         பொழிப்புரை :பெண்ணும் ஆணுமாய் ஓருருவில் விளங்கும் பெருமானும், பிறை சூடிய சென்னியனாய் அண்ணாமலை ஆரூர் ஆகிய ஊர்களில் எழுந்தருளிய தலைவனும் ஆகிய சிவபிரான் மார்ச்சனை பொருந்திய முழவின் ஒலி இடைவிடாமல் கேட்கும், மாட வீடுகளுடன் கூடிய நெடிய வீதிகளை உடைய அகன்ற இடப்பரப்புடைய கடலையடுத்த நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.



பாடல் எண் : 3

பாரோர் தொழ, விண்ணோர் பணிய, மதில்மூன்றும்

ஆர்ஆர் அழல்ஊட்டி, அடியார்க்கு அருள்செய்தான்,

தேர்ஆர் விழவுஓவாச் செல்வன், திரைசூழ்ந்த

கார்ஆர் கடல்நாகைக் காரோ ணத்தானே.


         பொழிப்புரை :மண்ணக மக்கள் தொழவும், விண்ணவர் பணியவும் அனைவர்க்கும் நெருங்குதற்கரிய அழலை ஊட்டி அழித்து அடியவர்க்கு அருள் செய்து, தேரோட்டமாகிய சிறப்பு விழா இடைவிடாது நிகழும் சிறப்பினை ஏற்றருளும் செல்வன் ஆகிய சிவபெருமான், அலைகள் நிரம்பிய, மேகங்கள் பொருந்திய கடலின் கரையில் விளங்கும் நாகைக் காரோணம் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்.



பாடல் எண் : 4

மொழிசூழ் மறைபாடி முதிரும் சடைதன்மேல்

அழிசூழ் புனல்ஏற்ற அண்ணல், அணிஆய

பழிசூழ்வு இலர்ஆய பத்தர் பணிந்து ஏத்த,

கழிசூழ் கடல் நாகைக் காரோ ணத்தானே.


         பொழிப்புரை :பொருள் பொதிந்த சொற்கள் நிரம்பிய வேதங்களைப் பாடிக் கொண்டு, முதிர்ந்த தன் சடைமுடி மேல் உலகை அழிக்க எண்ணிவந்த கங்கை நதியை ஏற்றருளிய தலைவனாகிய சிவபெருமான், அழகிய செயல்களோடு பழிபாவங்களை மனத்திலும் கருதாதவர்களாகிய அடியவர்கள் பணிந்து போற்ற உப்பங்கழிகள் சூழ்ந்த கடற்கரையை அடுத்துள்ள நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.



பாடல் எண் : 5

ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கு அருள் நல்கி,

சேண் நின் றவர்க்கு இன்னம் சிந்தை செயவல்லான்,

பேணி வழிபாடு பிரியாது எழுந்தொண்டர்

காணும் கடல்நாகைக் காரோ ணத்தானே.


         பொழிப்புரை :ஆணும் பெண்ணுமான வடிவோடு காட்சி தந்து, அடியவர்களுக்கு அருள் வழங்கி, வானுலகில் வாழும் தேவர்கட்கு மேலும் அருள்புரிய விரும்பும் மனத்தை உடையனாய் விளங்கும் சிவபிரான், அன்புடன் வழிபாடு செய்து பிரியாது வாழும் தொண்டர்கள் காணும் வண்ணம் கடற்கரையில் விளங்கும் நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.



பாடல் எண் : 6

ஏனத்து எயிறோடும் அரவம் மெய்பூண்டு

வானத்து இளந்திங்கள் வளரும் சடைஅண்ணல்

ஞானத்து உரைவல்லார் நாளும் பணிந்துஏத்தக்

கானல் கடல் நாகைக் காரோ ணத்தானே.


         பொழிப்புரை :பன்றியின் பல், பாம்பு ஆகியவற்றை மெய்யிற் பூண்டு, வானகத்தே இயங்கும் இளம்பிறை தங்கும் சடைமுடியை உடைய தலைமையாளனாகிய சிவபெருமான், மெய்யறிவு மயமான சொற்களைப் பேசவல்ல அடியவர்கள் நாள்தோறும் பணிந்து போற்றச் சோலைகள் சூழ்ந்த கடற்கரையை அடுத்துள்ள நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.



பாடல் எண் : 7

அரைஆர் அழல் நாகம் அக்கோடு அசைத்திட்டு

விரைஆர் வரைமார்பின் வெண்நீறு அணிஅண்ணல்,

வரைஆர் வனபோல வளரும் வங்கங்கள்

கரைஆர் கடல் நாகைக் காரோ ணத்தானே.


         பொழிப்புரை :இடையில் அழல்போலும் கொடிய நாகத்தைச் சங்கு மணிகளோடு இணைத்துக் கட்டிக் கொண்டு, மணம் கமழும் மலை போன்ற மார்பில் திருவெண்ணீறு அணிந்துள்ள தலைமையாளனாகிய சிவபெருமான், மலைகள் மிதந்து வருவன போலக் கப்பல்கள் கரையைச் சாரும் கடலை அடுத்துள்ள நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.



பாடல் எண் : 8

வலங்கொள் புகழ்பேணி வரையால் உயர்திண்தோள்

இலங்கைக்கு இறைவாட அடர்த்து,அங்கு அருள்செய்தான்,

பலங்கொள் புகழ்மண்ணில் பத்தர் பணிந்து ஏத்த,

கலங்கொள் கடல்நாகைக் காரோ ணத்தானே.


         பொழிப்புரை :மேலும் மேலும் வெற்றிகளால் பெற்ற புகழால் தருக்கி, மலை போன்று உயர்ந்த திண்ணிய தோளால் கயிலை மலையை எடுத்த இராவணனை வாடுமாறு அடர்த்துப்பின் அவனுக்கு அருள்செய்த சிவபிரான், வாழ்வின் பயனாகக் கொள்ளத் தக்க புகழை உடையவர்களாகிய அடியவர்கள் மண்ணுலகில் தன்னைப் பணிந்து ஏத்த மரக்கலங்கள் பொருந்திய கடற்கரையை அடுத்து விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.


 

பாடல் எண் : 9

திருமால் அடிவீழ, திசைநான் முகன்ஏத்தப்

பெருமான் எனநின்ற பெம்மான், பிறைச்சென்னிச்

செருமால் விடைஊரும் செல்வன், திரைசூழ்ந்த

கருமால் கடல்நாகைக் காரோ ணத்தானே.


         பொழிப்புரை :திருமால் தன் திருவடியில் விழுந்து வணங்கவும், நான்முகன் ஏத்தவும், தானே முழுமுதற் பரம்பொருள் என உணர்ந்து அழலுருவாய் ஓங்கி நின்ற பெருமானும், பிறைமதியை முடியிற்சூடிப் பகைவரை எதிர்க்க வல்ல விடையேற்றை ஊர்ந்து வரும் செல்வனும் ஆகிய சிவபெருமான், அலைகளால் சூழப்பட்ட கரிய பெரிய கடற்கரையில் விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.



பாடல் எண் : 10

நல்லார் அறம்சொல்ல, பொல்லார் புறம்கூற,

அல்லார் அலர்தூற்ற, அடியார்க்கு அருள்செய்வான்,

பல்ஆர் தலைமாலை அணிவான், பணிந்துஏத்தக்

கல்ஆர் கடல்நாகைக் காரோ ணத்தானே.


         பொழிப்புரை :நல்லவர்கள் அறநெறிகளைப் போதிக்கவும், பொல்லாதவர்களாகிய சமணர்கள் புறங்கூறவும், நல்லவரல்லாத புத்தர்கள் பழி தூற்றவும், தன் அடியவர்க்கு அருள்புரியும் இயல்பினன் ஆகிய இறைவன் சுடுகாட்டில் கிடக்கும் பலர் தலையோடுகளை மாலைகளாகக் கோத்து அணிந்தவனாய்ப் பலரும் பணிந்து ஏத்த, கல் என்னும் ஒலியோடு கூடிய கடற்கரையில் விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.



பாடல் எண் : 11

கரைஆர் கடல்நாகைக் காரோ ணம்மேய

நரைஆர் விடையானை நவிலும் சம்பந்தன்

உரைஆர் தமிழ்மாலை பாடும் அவர்எல்லாம்

கரையா உருவாகிக் கலிவான் அடைவாரே.


         பொழிப்புரை :இடைவிடாது ஒலி செய்யும் கடலின் கரையில் விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளிய வெண்மை நிறம் பொருந்திய விடை ஊர்தியைக் கொண்டுள்ள இறைவனை ஞானசம்பந்தன் பரவிப் போற்றிய புகழ்பொருந்திய இத்தமிழ் மாலையைப் பாடிப் பரவுபவர் அனைவரும் அழியாத வடிவத்தோடு ஆரவாரம் மிக்க வானுலகை அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment