15 May 2021

பரசுராமர் பூஜை செய்த கார்முகேஸ்வரர்

சித்திரை மாதம் வரும் அக்ஷய திரிதியை  தினத்தில் பகவான் ஸ்ரீ பரசுராமரின் அவதார தினமாகவும் கருதப்படுகிறது.


மகாவிஷ்ணுவின் அம்சமான இவர் நாகை காரோணத்தில் #சிவபூஜை செய்த புராண தொடர்பைப் பற்றியும், தனிக்கோயிலாக நிலைபெற்று இருந்த மூர்த்தி இடம்பெயர்ந்த வரலாற்று நிகழ்வையும் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.


#புராணத்தொடர்பு


ஜமதக்னி முனிவர், ரேணுகா தேவி ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் பரசுராமர். ஒரு சமயம் அவரது தாய் ரேணுகா தேவி ஆசிரம தேவைகளுக்காக நீர் எடுக்க செல்கையில் ஆற்றில் #கார்த்தவீரியன் எனும் அரசனின் உருவம் தெரிந்தது கண்டு தனது கற்பின் நெறியில் இருந்து சற்று தவறினார். 


இதனை அறிந்த ஜமதக்கினி முனிவர் #ரேணுகா தேவியை சிரச்சேதம் செய்யும்படி பரசுராமருக்கு ஆணையிட்டார். "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" என்ற வாக்கினை கடைபிடித்த பரசுராமரும் அவ்வாரே செய்தார். இதனை அறிந்த கார்த்தவீரியன் #ஜமதக்னி முனிவரை கொன்றான். 


தன் தாய் தந்தை இருவரும் இறப்பதற்கு காரணமான கார்த்தவீரியன் மீது பரசுராமர் கோபம் கொண்டு பழிதீர்க்க எண்ணினார் . பின்னர் தன் தாயை கொன்ற குற்றம் நீங்க #நாகை_காரோணம் அடைந்து ஆதிபுராணர் காயாரோகண சுவாமியை வழிபட்டார்.


 பின் #தேவநதி என்று போற்றக்கூடிய உப்பனாறு கரையில் சிவலிங்கமும் தீர்த்தம் அமைத்து வழிபட்டு வந்தார். அதன் பயனாய் சிவபெருமான் காட்சியளித்து பரசுராமர் அவர் தாயை கொன்ற குற்றம் நீக்கி, வலிமை கொண்ட அரசனை வெற்றிகொள்ள #கார்முகம் ஏனும் வில்லினை அருளினார். அதனைப் பெற்ற பரசுராமரும் கார்த்தவீரியனை அழித்தார்.


#வரலாற்று_நிகழ்வு


பரசுராமருக்கு அருளிய கார்முகேஸ்வரர் இறைவனுக்கு தனிக் கோயில் அமைத்து #கார்முகேசம் என்ற பெயரில் பலகாலம் உப்பனாறு கரையினில் விளங்கி வந்தது.


16ஆம் நூற்றாண்டில் நாகப்பட்டினத்தில் நிர்வாக அதிகாரம் பெற்றிருந்த #டச்சுக்காரர்கள் இக்கோயில் இருந்த இடத்தில் கோட்டை அமைக்க எண்ணி அதனை அப்புறப்படுத்தினர் என்று தெரிகிறது.


இக்கோயிலில் இருந்து இடம்பெயர்ந்த மூல லிங்க மூர்த்தி தற்போது நாகை #நீலாயதாட்சி அம்மன் கோயிலில், காயாரோகண சுவாமி பிரகார திருச்சுற்றில் மாவடி பிள்ளையார் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். 


மேலும் கோஷ்ட மூர்த்தியாக இருந்த #முருகப்பெருமான் தற்போது தனிக்கோயிலாக குமரக் கோயிலில் மூலவராக எழுந்தருளி உள்ளார். கார்முகேசம் கோயில் முன்பு இருந்த இடத்தை குறிக்கும் விதமாக தற்போது அங்கே சம்மட்டி #பிள்ளையார் அவ்விடத்தை காத்து வருகிறார். 


இத்தகைய புராண, வரலாற்று நிகழ்வுகளை பலரும் அறியாமையால், முன்பு மூலவராக தனிக்கோயிலில் வீற்றிருந்த #கார்முகேஸ்வர் மூர்த்தி தற்போது பக்தர்களின் கவனிப்பாரின்றி உள்ளார். இனியாவது இவரின் மகத்துவம் உணர்ந்து வழிபடுவோம். 🙏


மேலும் நாகப்பட்டினம் திருக்கோவில்கள் பற்றிய பதிவுகளை பெற நமது நாகை காரோணம் முகநூல் பக்கத்தை பின்தொடரவும், மற்றும் நாகை ஆலயங்கள் என்ற குழுவிலும் இணைந்து பயன்பெறுங்கள். 


#NagaiKaronam 🌷 #NagaiTemples