7 Dec 2020

திருநாவுக்கரசர் பதிகம் 2 (வடிவுஉடை)



4. 103   திருநாகைக்காரோணம்         
   திருவிருத்தம்

ஓதுவார் ஹரிஹர தேசிகர் 

ஓதுவார் மதுரை முத்துக்குமாரன்

                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1

வடிவுஉடை மாமலை மங்கை பங்கா,

         கங்கை வார்சடையாய்,

கடிகமழ் சோலை சுலவு கடல்

         நாகைக் காரோணனே,

பிடிமதவாரணம் பேணும் துரகம்

         நிற்கப் பெரிய

இடிகுரல் வெள்எருது ஏறும்

         இதுஎன்னைகொல், எம்இறையே.


         பொழிப்புரை : அழகிய பார்வதி பாகனே ! நீண்ட சடையில் கங்கையைத் தரித்தவனே ! நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த , கடலையடுத்த நாகைக் காரோணனே ! எம்தலைவனே ! பெண்யானை , மதமுடைய ஆண்யானை , விரும்பும் குதிரை இவைகள் இருப்பவும் பெரிய , இடிபோன்ற குரலையுடைய வெள்ளிய காளையை நீ இவர்வதன் காரணம் என்ன ?



பாடல் எண் : 2

கற்றார் பயில்கடல் நாகைக்கா

         ரோணத்துஎம் கண்ணுதலே,

வில் தாங்கிய கரம் வேல்நெடுங்

         கண்ணி வியன்கரமே,

நல் தாள் நெடும்சிலை நாண்வலித்த

         கரம் நின்கரமே,

செற்றார் புரம்செற்ற சேவகம்

         என்னைகொல், செப்புமினே.


         பொழிப்புரை : கற்றவர்கள் பெருகிய , கடலை அடுத்த நாகைக் காரோணத்தில் உறையும் , நெற்றியில் கண்ணையுடைய எம்பெருமானாரே ! வில்லைத் தாங்கிய கை , வேல் போன்ற நீண்ட கண்களை உடைய பார்வதி பாகத்தில் உள்ள கையே . நல்ல கால்களால் வில்லை மிதித்து அதற்கு நாணை ஏற்றிய கை உம் பாகத்தில் உள்ளகையே . இவ்வாறாகப் பகைவருடைய மும்மதில்களை அழித்த வீரம் உம்முடையது என்று கூறுவதன் காரணத்தை அடியேற்குத் தெரிவியுங்கள் .



பாடல் எண் : 3

தூமென் மலர்க்கணை கோத்துத்தீ

         வேள்வி தொழில்படுத்த

காமன் பொடிபடக் காய்ந்த கடல்

         நாகைக் காரோண,நின்

நாமம் பரவி நமச்சிவாய

         என்னும் அஞ்செழுத்தும்

சாம்அன்று உரைக்கத் தருதிகண்டாய்,

         எங்கள் சங்கரனே.


         பொழிப்புரை : தூய மெல்லிய பூக்களாகிய அம்புகளைக் கோத்துக் காமாக்கினியை வளர்க்க முற்பட்ட மன்மதன் சாம்பலாகுமாறு கோபித்த கடல்நாகைக் காரோணனே ! எங்கள் சங்கரனே ! உன் திருப் பெயரை முன்நின்று துதித்து நமசிவாய என்ற திருவைந்தெழுத்தையும் அடியேன் உயிர்போகும் பொழுது சொல்லும் பேற்றினை நல்குவாயாக .



பாடல் எண் : 4

பழிவழி ஓடிய பாவிப் பறிதலைக் குண்டர் தங்கள்

மொழிவழி ஓடி முடிவேன், முடியாமைக் காத்துக் கொண்டாய்

கழிவழி ஓதம்உலவு கடல் நாகைக் காரோண! என்

வழிவழி ஆள்ஆகும் வண்ணம் அருள், எங்கள் வானவனே.


         பொழிப்புரை : உப்பங்கழி வழியே கடலின் வெள்ளநீர் பாயும் கடல் நாகைக் காரோணனே ! எங்கள் தேவனே ! பழியான வழிகளிலே வாழ்க்கையை நடத்திய தீவினையாளர்களான , தலைமயிரை வலியப் போக்கும் மூர்க்கர்களான , சமணர்கள் சொற்களைக் கேட்டு அவற்றின் வழியிலே வாழ்ந்து அழிந்து போகக்கூடிய அடியேனை அழியாதபடி பாதுகாத்து உனக்கு அடியவனாகக் கொண்டாய் . வழிவழியாக அடியேன் உனக்கு அடிமையாகும் முறைமை யாது ? அதனை அடியேற்கு அருளுவாயாக .



பாடல் எண் : 5

செந்துவர் வாய்க்கருங் கண்இணை வெண்நகைத் தேன்மொழியார்

வந்து வலம்செய்து மாநடம் ஆட மலிந்த செல்வக்

கந்தம் மலிபொழில் சூழ்கடல் நாகைக்கா ரோணம் என்றும்

சிந்தை செய்வாரைப் பிரியாது இருக்கும் திருமங்கையே.


         பொழிப்புரை : சிவந்த பவளம் போன்ற வாயையும் கரிய இருகண்களையும் , வெள்ளிய பற்களையும் , தேன்போன்ற இனிய சொற்களையும் உடைய இளைய மகளிர் வந்து வலம் செய்து சிறந்த கூத்து நிகழ்த்துமாறு , செல்வம் மிகுந்ததும் , நறுமணம் வீசும் பொழில்களால் சூழப்பட்டதுமான கடலை அடுத்து அமைந்த நாகைக் காரோணத்தை என்றும் தியானிப்பவர்களைத் திருமகள் என்றும் நீங்காது இருப்பாள் .



பாடல் எண் : 6

பனைபுரை கைம்மத யானை உரித்த பரஞ்சுடரே,

கனைகடல் சூழ்தரு நாகைக்கா ரோணத்துஎம் கண்ணுதலே,

மனைதுறந்து அல்உணா வல்அமண் குண்டர் மயக்கம் நீக்கி

எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என் இனி யான்செயும் இச்சைகளே.


         பொழிப்புரை : பனை மரத்தை ஒத்த துதிக்கையை உடைய மத யானையின் தோலைஉரித்த மேம்பட்ட சோதிவடிவினனே ! ஒலிக்கும் கடலால் ஒருபக்கம் சூழப்பட்ட நாகைக் காரோணத்தில் உறையும் எம் நெற்றிக் கண்ணனே ! இல்லறவாழ்க்கையை விடுத்து இரவில் உண்ணாத வலிய சமணர்களாகிய மூர்க்கர்திறத்து அடியேன் கொண் டிருந்த மயக்கத்தைப் போக்கி அடியேனை விரும்பி ஆட்கொண்ட உனக்கு அடியேன் விரும்பிக் கைமாறாகச் செய்வது யாது உள்ளது ?



பாடல் எண் : 7

சீர்மலி செல்வம் பெரிது உடையசெம்பொன் மாமலையே,

கார்மலி சோலை சுலவு கடல்நாகைக் காரோணனே,

வார்மலி மென்முலை யார்பலி வந்துஇடச் சென்றுஇரந்து

ஊர்மலி பிச்சைகொடு உண்பது மாதிமையோ உரையே.


         பொழிப்புரை : சிறப்புமிக்க செல்வத்தை மிகுதியாக உடைய செம்பொன்மலை போன்றவனே ! மழையால் செழித்த சோலைகளால் சூழப்பட்ட கடல் நாகைக் காரோணனே ! கச்சணிந்த மென்மையான முலையை உடைய மகளிர் வந்து பிச்சையிடுமாறு வீடுதோறும் சென்று பிச்சை வாங்கி ஊர்களில் கிட்டும் பிச்சை உணவை உண்பது பொருத்தமான செயல் ஆகுமா ? சொல்வாயாக .



பாடல் எண் : 8

வங்கம் மலிகடல் நாகைக்கா ரோணத்து எம் வானவனே,

எங்கள் பெருமான்ஒர் விண்ணப்பம் உண்டு,அது கேட்டுஅருளீர்

கங்கை சடையுள் கரந்தாய், அக் கள்ளத்தை மெள்ள உமை

நங்கை அறியில் பொல்லாது கண்டாய், எங்கள் நாயகனே.


         பொழிப்புரை : கப்பல்கள் நிறைந்த கடலை அடுத்த நாகைக் காரோணத்தில் உள்ள எம் தேவரே ! எங்கள் பெருமானாரே ! அடியேன் வேண்டிச் சொல்லும் செய்தி ஒன்று உள்ளது . அதனைத் திருச்செவி சார்த்தி அருளுவீராக . எங்கள் தலைவரே ! கங்கையைச் சடையுள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்தக் கள்ளச் செயலை மெதுவாகப் பார்வதிப் பிராட்டி அறிவாளானால் பொல்லாங்கு விளையும் என்பதைத் திருவுள்ளம் பற்றவேண்டும் .



பாடல் எண் : 9

கரும்தடங் கண்ணியும் தானும் கடல்நாகைக் காரோணத்தான்

இருந்த திருமலை என்று இறைஞ்சாது, அன்று எடுக்கல் உற்றான்,

பெருந்தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்து, அலற,

இருந்து அருளிச் செய்ததே, மற்றுச் செய்திலன் எம்இறையே.


         பொழிப்புரை : கரிய நீண்ட கண்களை உடைய பார்வதியும் தானுமாகக் கடல் நாகைக் காரோணத்தான் உகந்தருளியிருக்கும் திருமலை என்று அதனை வழிபடக் கருதாது , அன்று , அதனைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தலைகள் பத்தும் தோள்கள் இருபதும் சிதற அதனால் அவன் உரக்கக் கதறக் கயிலை மலையில் இருந்தவாறே அவனுக்கு வாள் முதலியவற்றை நாகைக் காரோணத்தார் அருளிச் செய்தாரே அல்லாமல் அவன் உயிருக்கு இறுதியைச் செய்யவில்லை .


                                             திருச்சிற்றம்பலம்




No comments:

Post a Comment