நாகப்பட்டினம் திருநகரில் தமிழ் கடவுளாம் முருகப்பெருமானுக்கு என எழுப்பப்பட்ட தனிப்பெரும் கோட்டமே குமர கோயிலாகும்.
இக்கோயிலின் மெய்க்காவலராக பணியில் இருந்த அழகுமுத்து என்பவர், முருகன் மீது அதீத பக்தி கொண்டவர். சிறுவயது முதலே, நோய் வாய்ப்பட்டிருந்த, அழகுமுத்து, கல்வி கற்கவில்லை. ஆனால், கல்வியின் பயன் நல்லொழுக்கம் என்பதற்கு ஏற்ப, அதில் தலைசிறந்து விளங்கினார். சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தை, மனதிற்குள்ளாகவே உருவேற்றி வந்தார். இவர் இரவு வழிபாடு முடிந்து, பிரசாதம் பெற்று, உண்டபிறகே வீடு திரும்புவார். ஒருநாள், குளிர் மிகுதியாலும், நோய் தொல்லையாலும், பசியின் கொடுமையாலும், மனம் நொந்த அழகுமுத்து, வாகனங்கள் வைக்கும் இடத்தில் படுத்து உறங்கி விட்டார்.
இரவு பூஜை முடிந்து, பிரசாதம் கொடுப்பதற்காக அழகுமுத்துவை தேடிய குருக்கள், அவரை காணாமல், வீட்டிற்கு போய் விட்டதாக எண்ணி, கோவிலைப் பூட்டி கிளம்பி விட்டனர்.
நள்ளிரவு தாண்டியது. விழித்தெழுந்தார், அழகுமுத்து. நடந்ததைப் புரிந்து கொண்டார். பசி வயிற்றைக் கிள்ளியது. மறுபடியும் படுத்தவர், துாங்கி விட்டார்.
சற்று நேரத்தில், மடப்பள்ளி பணியாளர் வடிவில், பிரசாத தட்டோடு வந்து, அழகுமுத்துவை எழுப்பி, அவருக்கு உணவளித்தார், முருகப்பெருமான்.
ஆர்வத்தோடு அதை உண்ட அழகுமுத்து, மறுபடியும் படுத்து உறங்கி விட்டார்.
அவரின் கனவில் காட்சியளித்த, முருகன், 'அன்பனே, அழகுமுத்து... எம் மீது பாடல்கள் பாடுவாயாக...' என்று உத்தரவிட்டார்.
'ஐயா, ஆறுமுகா... படிப்பறிவு இல்லாத அடியேன், உன்னை எப்படி பாடுவது...' என, தழு தழுத்தார்.
'பாடுவாய்...' என்று அருளியபடி மறைந்தார், முருகப்பெருமான்.
கனவு கலைந்தது. அழகுமுத்துவுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. அவரை அறியாமலே பாடத் துவங்கினார். இதற்குள் பொழுது விடிந்தது.
கோவில் கதவுகளைத் திறந்து, உள்ளே வந்த குருக்கள் முதலானோர், அழகுமுத்துவிடம் விசாரித்து, நடந்ததை அறிந்து கொண்டனர். நோய் நீங்கி, பளபளத்த திருமேனியோடு பைந்தமிழில் பாடல்கள் பாடிக்கொண்டிருந்த அழகுமுத்துவுக்கு, 'அழகு முத்து புலவர்' என, பெயர் சூட்டினர்.
அதன்பின், நாகையை விட்டுப் புறப்பட்ட, அழகுமுத்து, சிவத்தல யாத்திரை மேற்கொண்டார்.
காசி சென்று திரும்பியவர், சீர்காழியில் ஒரு திருமடத்தில் தங்கியிருந்தார். #சித்திரை சதயத் திருநாளன்று, தன் உடம்பை விட்டு, ஆறுமுகன் திருவடிகளை அடைந்தார்.
அழகுமுத்து, தன் உடம்பை உகுத்த அதே வேளையில், நாகப்பட்டினம், தெற்கு தெரு, மெய்கண்ட வேலாயுதர் கோவிலில், மாலை, வழிபாடு நடந்து கொண்டிருந்தது. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அங்கே கருவறையில் நுழைந்தார், அழகுமுத்து. கந்தன் திருவடிகளில் கலந்து மறைந்தார்; அனைவரும் திகைத்தனர்.
சன்னிதியில் அழகுமுத்து புகுந்து மறைந்த அதேவேளையில், சீர்காழியில் சித்தி அடைந்ததாக தகவல் கிடைத்தது.
தலைசிறந்த சிவன் அடியார்களான அறுபத்த மூன்று நாயன்மார்களைப் போலவே, சேய்த் தொண்டர்கள் என்றழைக்கப்படும் எழுபத்து எட்டு முருக பக்தர்கள் உள்ளனர். அகத்தியர், அவ்வையார், அருணகிரியார் என்று தொடரும் அந்த வரிசையில் உள்ளோருள் ஒருவர்தான். இந்த 'அழகு முத்து நயனார்'
“சுழறும் கடல் நாகை மெய்கண்ட வேலன் கழல் வணங்கி
விழவயர் ஆலய மெய்க்காவல் தொண்டு மிகப் புரிந்த
சூழகன் பெயரால் சதகம் திறப்புகழ் கூறி உய்ந்த
அழகு முத்து என்னும் ஒரு குணக்குன்று என் அகத்துற்றதே"
என்று புலவர் அழகு முத்துவைப் புகழ்கிறது சேய்த் தொண்டர் திருவந்தாதி
இத்தகைய சிறப்பு வாய்ந்த அழகுமுத்து புலவர் பற்றியும், இவர் முருகன் மீது இயற்றிய "மெய்கண்ட வேலாயுத சதகம்" மற்றும் "திறப்புகழ்" நூல் பற்றியும் அனேகமானவர்கள் அறிந்திருக்கவில்லை. அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் போன்ற பல சந்த பாக்கள் நிறைந்த இந்நூலினை பொருளுரையுடன் மீண்டும் பதிப்பித்து அவற்றிற்கு இசை வடிவம் பெற வேண்டும் என்பது விண்ணப்பம்.
#முருகா_சரணம் 🙏
No comments:
Post a Comment