29 Nov 2024

திருநாகைக்காரோணம் தல புராணமும் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களும்

 



🌷 இன்று திருநாகைக்காரோணம் தல புராணத்தை பற்றியும் இதை எழுதிய மகாவித்வான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் அனுபவ குறிப்புகளைப் பற்றியும் பார்ப்போம்.

🌷 நாகை திருத்தலத்தின் ஸ்தல புராணம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களால் இயற்றப் பெற்று 1860 அரங்கேற்றம் பெற்றது. இந்நூல் 61 - படலங்களையும், 2506 பாடல்களையும் கொண்டது.

🌷 இதிலுள்ள சுந்தரவிடங்கப்படலம் நாகை அழகிய விடங்கரின் பெருமைகள விரிவாகப் பேசுகின்றது. மேலும் பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு எடுத்துரைப்பது போல நாகையில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பதிகத்திற்கு மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் இத்தல புராணத்தில் விரிவாக உரை எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

🌷 சிவ ராஜதானி எனும் நாகை திருத்தலத்தின் பல புராண சிறப்புகளை பற்றிய இந்த ஆவண நூலினை திருவாடுதுறை ஆதினம் வெளியீடு செய்துள்ளது. இதன் பாதிப்பு வெகு சிலரிடமும் மட்டுமே உள்ளது, மேலும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதியபாடல்களை படித்து புரிந்துகொள்ள கடினமாக இருப்பதால் மீண்டும் தமிழறிஞர்களை கொண்டு அவற்றிற்கு உரை எழுதி அனைவரும் பயன்பெறும் வண்ணம் வெளியிட வேண்டும் என்பது பணிவான விண்ணப்பம்.

( பின்னிணைப்பு : நமது கோரிக்கைக்கு ஏற்றார்போல் புத்தகம் புது பதிப்பு பெற்று வெளியாகியுள்ளது, மேலும்  https://m.facebook.com/story.php?story_fbid=188724209693406&id=109859357579892 )

🌷 #நூல்_வரலாறு :

🌷 ​இந்த நூல் தொடர்பான சில குறிப்புக்கள் உ.வே.சா எழுதிய மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரிதம் நூலில் இடம்பெறுகின்றன. அதில் வரும் செய்திகளிலிருந்து கீழ்க்காணும் தகவல்களை அறிய முடிகின்றது.

🌷 1868ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாகப்பட்டணத்தில் ஓவர்ஸியராக இருந்த அப்பாத்துரை முதலியாரும் அவருடன் செல்வாக்கு பெற்ற இன்னும் சிலரும், தேவாரக் திருக்கூட்டத் தலைவராகிய வீரப்ப செட்டியாரும் பிள்ளையவர்கள் நாகைக்கு ஒரு புராணம் பாட வேண்டும் என்ற விருப்பத்தை இவரைச் சந்தித்து தெரிவித்தனர். அதனை பிள்ளையவர்கள் ஏற்றுக் கொண்டார். அவர் ஒரு கோயிலின் புராணம் பாடுவதற்கு முன்னர் அத்தலத்திற்கு நேரடியாகச் சென்று அங்கு இருந்து, பார்த்து, மக்களிடம் பேசி விவரங்கள் பெற்று, அங்கிருக்கும் பெரியோர்களிடமும் பேசி நகரச் சிறப்புக்களை அறிந்து கொள்வது பொதுவான வழக்கம். அதே போல நாகைக்கு புராணம் எழுது முன்னர் அங்கே சென்று தங்கியிருந்து இந்தத் தொடக்கப் பணிகளைச் செய்ய உத்தேசம் கொண்டு தயாரிப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டார்.

🌷 ஏற்கனவே இருந்த இத்தலத்திற்கான வடமொழி புராணத்தை ஸ்ரீ மகாதேவ சாஸ்திரி என்பவரைக் கொண்டு தமிழில் வசன நடையாகவும் மொழி பெயர்த்து வைத்துக் கொண்டார். 

🌷 காஞ்சி புராணத்தில் சிவஞான முனிவர் சித்திரக்கவிகளை அமைத்தது போல இப்புராணத்திலும் இருக்க வேண்டும் என சில நண்பர்கள் கேட்டுக் கொண்டதால் இப்புராணத்தில் நந்திநாதப் படலத்தில் சித்தாச்சிரம வருணனையில் சில சித்திரக் கவிகளை இவர் செய்திருக்கின்றார்.

🌷 இந்த நூலை பிள்ளையவர்கள் பாடத்தொடங்கியபோது இதனை ஏட்டில் எழுதி வந்தவர் முத்தாள்புரம் கோபால பிள்ளை என்னும் ஒருவர். காலை 7 மணிக்கு ஆரம்பித்து 10 மணிக்கு செய்யுள் சொல்வதை முடிப்பாராம்.

🌷 இந்த முத்தாள்புரம் கோபால பிள்ளைக்கு தாம் வெகு விரைவாக செய்யுள் எழுதுகின்றோம் என அகம்பாவம் இருந்திருக்கின்றது. ஒரு நாள் பிள்ளையவர்கள் புராணத்தில் சுந்தரவிடங்கப்படலத்தை விரிவாக செய்யுளாக்கிப் பாட கோபால பிள்ளைக்கு கைவலி எடுத்து விட்டது. பகல் 12 மணியாகியும் பிள்ளையவர்கள் செய்யுட் சொல்வதை நிறுத்தாமல் தொடர்ந்திருக்கின்றார். தனது கை வலி மிக அதிகமாகச் சுவடிக்கட்டை கீழே வைத்து விட்டு பிள்ளையவர்கள் பாதத்தில் விழுந்து வணங்கினாராம் இந்த கோபால பிள்ளை. தம்மை போல எழுதுவோர் யாருமில்லை என நினைத்திருந்த தன் அகம்பாவம் இன்று நீங்கியது என்று சொல்லி உருகினாராம்.  

🌷 ​இந்த நாகைப் புராணம் 1869ம் ஆண்டில் சுந்தரவிடங்கப் படலமும் இன்னும் சில பகுதிகளும் நிறைவடைந்தவுடன் தைமாதத்தில் நாகை தலத்திலேயே அரங்கேற்றம் பண்ணுவதென முடிவாக இவர் தம் மாணாக்கர்களுடன் அங்கு சென்று சேர்ந்திருக்கின்றார். 

🌷 முத்தி மண்டபம் எனும் மண்டபத்திலே தான் அரங்கேற்றத்தைத் தொடங்கியிருக்கின்றார்.

🌷 இந்தப் புராணப் பிரசங்கமும் அரங்கேற்றமும் ஒரு வருட காலம் நடைபெற்றிருக்கின்றது. இப்போது நினைத்துப் பார்க்க இப்படியும் நிகழ்ந்திருக்குமா என ஆச்சரியம் மேலிடுகின்றது. 

🌷 இந்த நிகழ்வு நடந்து வரும் வேளையில் ஸ்ரீ சங்கராச்சரிய சுவாமிகள் நாகப்பட்டினத்துக்கு விஜயம் செய்திருக்கின்றார். பிள்ளையவர்கள் புராணப் பிரசங்கம் நடைபெறுவதைக் கேட்டு அவரை பார்க்க விருப்பம் கொள்ள பிள்ளையவர்களும் மகாதேவ சாஸ்திரிகளுடன் வந்திருந்து  ஸ்ரீ சங்கராச்சரிய சுவாமிகளை சந்தித்திருக்கின்றார். பிரசங்கம் செய்யும் புராணத்திலிருந்து சில பாடல்களை பிள்ளையவர்கள் சொல்ல இவர் கேட்டு மகிழ்ந்திருந்திருக்கின்றார். கம்பராமாயணத்திலிருந்து சில பாடல்கள் கேட்க ஆசைப்பட அதனையும் பிள்ளையவர்கள் சொல்லியிருக்கின்றார். 

🌷 இப்புராண அரங்கேற்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் தான் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஸ்ரீ அம்பலவாண தேசிகர்  பூரணம் எய்தினார்கள். அவரை அடுத்து இளைய பட்டமாக இருந்த சுப்பிரமணிய தேசிகர் ஆதீனப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள்.  இந்த நிகழ்வினால் புராணப் பிரசங்கத்தின் இடையில் பிள்ளைவர்கள் திருவாவடுதுறை சென்று மீண்டும் வந்து புராண பிரசங்கத்தைத் தொடர்ந்திருக்கின்றார்.  

🌷 பிள்ளைவர்கள் நாகப்பட்டினத்தில் இருக்கும் சமயத்திலேயே மாயூரத்திலிருந்த அரங்ககுடி முருகப்பிள்ளை என்பவரின் குமாரர் வைத்தியலிங்கம் பிள்ளை என்பவரின் உதவியால் மாயூரப் புராணமும் அப்பாத்துரை முதலியார்  உதவியால் நாகைக் காரோணப்புராணமும் சோடசாவதானம் சுப்பராய செட்டியாருடைய (இவரும் பிள்ளையவர்களின் மாணாக்கர்களில் ஒருவர்)  மேற்பார்வையில் அச்சிடப்பெற்று நிறைவேறின.

🌷 அரங்கேற்றி முடிவதற்குள் திருநாகைக் காரோணப் புராணமும் பதிப்பிக்கப்பட்டது என்பதும் தனிச் சிறப்பு. புராண அரங்கேற்றம் முடிந்த அந்த நன்னாளில் புராணச் சுவடி பல்லக்கில் வைக்கப் பெற்று மிகச் சிறப்பாக  ஊர்வலமாக கொண்டுவரப்பட்டதாம்.

🌷 ஒரு வருடத்திற்கும் மேல் நாகையில் இருந்து 1870ம் ஆண்டின் ஆரம்பத்தில் தான் பிள்ளையவர்கள் மீண்டும் மாயூரத்திற்கு வருகின்றார்.  பிள்ளையவர்கள் மாயூரம் திரும்பி விட்டார்கள் என்ற செய்தி அறிந்து தான் உ.வே.சா தன் தந்தையை அழைத்துக் கொண்டு பின்னர் இவரிடம் மாணவராக சேரதேடி வருகின்றார். 

🌷 உ.வே.சாவின் குறிப்புப்படி பிள்ளையவர்களின் புராணக் காப்பியங்களிலேயே மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது திருநாகைக்காரோணப் புராணம் தான். தமிழ் காப்பியத்தின் இலக்கணம் முழுவதும் உள்ளதாய் பலவகையில் நயம் சிறந்து விளங்கும் இக்காப்பியத்தை பெறுவதற்கு  தமிழ் நாடு தவம் செய்திருக்க வேண்டும் என்கின்றார் உ.வே.சா.

No comments:

Post a Comment