29 Nov 2024

அருள்மிகு அழகியநாதர் திருக்கோயில் alagiyanathar sivan kovil

 

திருமால் சிவபெருமானை வழிபட்டு தன் அழகை மீண்டும் திரும்பப் பெற்ற இந்த அழகிய நாதர் திருக்கோயில், சிவ ராஜதானி என போற்றப்படும் நாகப்பட்டினம் நகரில் அமைந்துள்ள பன்னிரு சிவாலயங்களில் ஒன்றாகும். 

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இத் திருக்கோயில் கருங்கல் திருப்பணிகள் ஆன ஒரு அழகிய கற்றளி ஆகும். ஆலய நுழைவாயில் மொட்டை கோபுரத்தில் விநாயகர், முருகர் ரிஷபத்தின் மீது அம்மையப்பர், அம்பிகை, சண்டிகேஸ்வரர் என பஞ்ச மூர்த்திகள் அவரவர் வாகனத்தில் அமைந்த படி சுதை சிற்பம் அமைந்துள்ளது. மேலும் அதன் பின்புறத்தில் மகாவிஷ்ணு சிவபூஜை செய்யும் காட்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றை கடந்து நந்தியம் பெருமானே வணங்கி நேராக உள்ளே சென்றால் சற்று உயரமான கருவறையில் நீண்ட பானத்துடன் லிங்கத் திருமேனியாக அழகிய நாதர் காட்சி கொடுக்கிறார். அம்பிகை தெற்கு நோக்கிய தனிச் சன்னதியில் நான்கு திருக்கரங்களுடன் "அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி" என்றாற் போல் அழகம்மை எனும் சௌந்தரவல்லி ஆக அருள்பாலிக்கிறாள்.

தல வரலாறு 

தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து அமிர்தம் பெற திருப்பாற்கடலை கடையும் பொழுது வாசுகி நாகத்தி டமிருந்து ஆலகால விஷம் வெளிப்பட்டு மகாவிஷ்ணுவின் உடல் கரிய நிறமாக மாறி ரோகம் ஏற்பட்டது. மீண்டும் தனது அழகை பெற திருமால் நாகைக்கு வந்து காயாரோகண சுவாமியை வணங்கி பின் தனியாக லிங்க பிரதிஷ்டை செய்து அமிர்த புஷ்கரணி என்ற தீர்த்தத்தை உண்டாக்கி வழிபட்டு வந்தார். 

சிவபெருமானும் திருமாலுக்கு காட்சியளித்து ரோகம் நீக்கி, கரிய நிறத்திலும் நீ அழகு பெறுவாய் என வரமளித்தார். தனது அழகை மீண்டும் பெற்ற திருமால் நீலமேகப்பெருமாள்,(சௌந்தர்ராஜன்) என்ற திருநாமத்துடன், இக்கோயிலின் தென்மேற்குத் திசையில் கோயில் கொண்டுள்ளார். 

 இதன் காரணமாக தான் நாகை பெரிய கோயில் காயாரோகணேஸ்வரர் 

சன்னதியில் பிரதோஷ காலங்களில் திருமால் மோகினியாக புறப்பாடாகிறார். சிவாலயங்களில் பிரதோஷ புறப்பாட்டின் போது திருமாலும் புறப்படுவது நாகப்பட்டினம் திருத்தலத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. திருமாலின் மோகினி வடிவத்தை பிரதோஷ காலங்களில் மட்டுமே தரிசிக்க முடியும் மற்ற நாட்களில் கருவறையிலிருந்து சிவபெருமானை ஆத்மார்த்த பூஜை செய்வதாக ஐதீகம். 

இக்கோயில் நகரின் மையத்தில் 

நான்கு கால் மண்டபத்திலிருந்து நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளது.





No comments:

Post a Comment