அருள்மிகு மலையீஸ்வரன் திருக்கோயில், #நாகப்பட்டினம்.
#நாகை_பன்னிரு_சிவாலயங்கள் வரிசையில் இந்த பதிவில் #மலையீஸ்வரன் திருக்கோயில் பற்றி பார்ப்போம்.
🌷 முற்கால #பல்லவர்கள் திருப்பணி மற்றும் #கோச்செங்கட்_சோழன் கட்டிய மிகப்பழமையான மாடக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
🌷 இக்கோயிலின் நுழை வாயிலில் இராஜ கோபுரம் இல்லை. மொட்டைக் கோபுரத்தின் மேலே சுதை வடிவங்களாக ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் காட்சி அளிக்கிறார்கள். இருபுறமும் கணபதியும் கந்தனும் காட்சி தருகிறார்கள்.
🌷 மாடக்கோயிலின் கீழே நந்தியும் பலிபீடமும் அமைந்துள்ளன. மேலே பதினெட்டுப் படிகள் ஏறிச்சென்றால் சுவாமி சன்னதியை அடையலாம். பதினாறு பட்டை லிங்கமாக கைலாசநாதப் பெருமான் லிங்கத் திருமேனியாக தரிசனம் தருகிறார்.
🌷 மூலஸ்தானத்தில் லிங்கத் திருமேனிக்கு பின் சிம்மத்தில் ஆன சிற்பத்தின் நடுவே அம்மையப்பர் காட்சியளிக்கிறார். இதுபோல மற்றொரு சிம்ம விளக்குத்தூண் கோயிலின் கீழ் புறத்தில் அமைந்துள்ளது. இவையே பல்லவர்கால சிற்பமாக கூறப்படுகிறது.
🌷 மேலும் 1777 ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் நாகையில் கோட்டை அமைத்து ஆட்சி செய்த போது இக் கோயிலை புதுப்பித்த கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளது.
#ஸ்தல_வரலாறு
தைப்பூசம் அன்று பராசர முனிவருக்கு நாகையில் கிடைக்கப்பெற்ற கைலாய தரிசனம்.
🌷 இறைவனைப் பல்வேறு தலங்களில் காணும்படி யாத்திரையாக நாகைக்கு வந்த வேத வியாசரின் தந்தையான பராசர முனிவர்க்கு பதினாறாயிரம் சிகரங்கள் கொண்ட கயிலையங்கிரியைத் தரிசிக்கும் ஆவல் வந்தது. அதிலும், அம்மலையை நாகையிலே தரிசிக்கவேண்டும் என்ற பேராவல் ஏற்பட்டது.
🌷எனவே ஒரு பட்டை ஆயிரம் சிகரங்களுக்கு சமம் என்ற நோக்கில் பதினாறு பட்டைகளை உடைய பாணத்தோடு கூடிய சிவலிங்க பிரதிஷ்டை செய்து, அப்பெருமானை ஒரு உயர்ந்த கட்டுமலையில் வைத்து வழிபாட்டு வந்தார்.
🌷 அதன் பயனாக தைப்பூசம் நன்னாளில் சிவபெருமானின் கைலாய தரிசனம் கண்டு, கல்ப காலம் வரை நித்தியத்துவம் பெரும் வரம் பெற்றார் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment