பழந்தமிழர் கொண்டாடிய திருவிழாக்களில் இன்றளவும் விடாமல் பல நூறு ஆண்டுகளாக சீரும் சிறப்புமாகக் கொண்டாப்படும் விழா மாசிமகம் திருவிழாவாகும். மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், மக நட்சத்திரம் சிம்மராசிக்குரியது. மாசிமகம் அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிம்மராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் கோவில்களில் தீர்த்தோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தநாளாக #கடலாடும்விழா எனும் சிறப்புப் பெயருடன் மாசிமக பெருவிழா கொண்டாடப்படுகிறது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மாசிமகம், குடந்தையில் பெரும் திரளான மக்கள் கலந்துக் கொள்ளும் #மகாமகம் திருவிழாவாகக் கொண்டாடப்படுவதும், வடநாட்டில் கும்பமேளா எனும் பெயரில் சிறப்பாக. கொண்டாடப்படுவதும் அனைவரும் அறிந்ததே...
இத்தகைய சிறப்பு வாய்ந்த பெருவிழாவான மாசிமகம் தமிழர்களால் சீரும் சிறப்புமாகக் சங்க காலம் முதலே கொண்டாடப்பட்டதற்கு நமக்கு புறநானூறு, மதுரைக் காஞ்சி போன்ற சங்க இலக்கியங்களில் நிறைய சான்றுகள் கிடைக்கின்றன. அதன்பின் பல்வவர் காலத்தில் திருஞானசம்பந்தா் தன்னுடைய மயிலாப்பூா் பதிகத்தில் கபாலீசுவரரின் மாசிமகக் கடலாடு விழாவைப் பற்றிக் கூறுவது மூலம் மாசிமக விழா அப்போதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளதை காண்கிறோம். அதன் பின் பிற்காலச் சோழர்கள் எழுச்சிப் பெற்ற பின் மாசிமகம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டதற்கு நிறைய கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கின்றன. மாசிமக விழா என்று ஒரு நாள் மட்டுமல்லாமல் 6 முதல் 10 நாட்கள் வரை பல கோவில்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதற்கு நமக்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன.
முதலில் நாம் காண இருப்பது நாகப்பட்டினம் திருக்காரோணமுடையார் கோவிலில் உள்ள முதலாம் ராஜேந்திர சோழர் காலக் கல்வெட்டு! நாகப்பட்டினத்து ஊர்சபையினர் மாசிமக திருவிழா நடக்கும் ஆறு நாட்களிலும் இறைவனுக்கு திருவிளக்கெரிக்கவும், திருவமுது படைக்கவும் தானமாக இரண்டே ஏழுமா அளவுள்ள நிலத்தை வழங்கியதை குறிக்கும் சிறப்பானக் கல்வெட்டு இது. நிலத்தின் எல்லைகள் குறிப்பிடப்படுகையில் சேனாமுகத் துர்க்கையார், ஆரியச்சாலை துர்க்கையார், மடிகைத் துர்க்கையார் என்ற பல துர்க்கை கோவில் தேவதான நிலங்களும், அந்திரி சேந்தமான செம்பியன் மாதேவி தலைக்கோலி, வணிகன் கலியன் மாவேன் ஆன ராஜராஜ தோன்றி சிலேட்டி, வெங்கடவன் ஆதித்தன் போன்றோரின் நிலங்களும் தானம் தந்த நிலத்தின் எல்லைகளாகக் குறிக்கப்படுகின்றன. இதிலிருந்து நாகை ஊர்மக்கள் ஆறு தினங்கள் சோழர் காலத்தில் சீரும் சிறப்புமாக மாசிமக பெருவிழாவை கொண்டாடியதை அறியலாம்...!
#திருக்காரோணமுடையார்
#நீலாயதாட்சி_அம்மன்_திருக்கோயில்
#ராஜேந்திரசோழர்
#நாகப்பட்டினம்
#சோழமண்டலவரலாற்றுத்தேடல்குழு
No comments:
Post a Comment