நாகப்பட்டினம் நகரின் கோயில்களுக்கு நடுநாயகமாக விளங்குவதால் இக்கோயிலுக்கு நடுவர் கோயில் எனவும், வடமொழியில் மத்தியபுரி என்றும் குறிப்பிடுவர். நாகை பன்னிரு சிவாலயங்களில் ஒன்றாக உள்ள இக்கோயில் தேசிய மேல்நிலைப்பள்ளி பின்புற சாலையில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது.
இக் கோயிலுக்கு முன்பாக மத்தியத்தலேச விநாயகர் அருள்பாலிக்கின்றார். கோபுரத்தை கடந்து சென்றால் பலிபீடம் கொடிமரம் ஆகியவற்றுக்கு அடுத்தாற்போல் மூன்று நிலை கோபுரம் அமைந்துள்ளது. கொடிமரத்தின் கீழே பிரம்மா மற்றும் எமன் சிவலிங்க வழிபாடு செய்வது போன்ற தல புராணத்தை குறிக்கும் வகையில் சிற்பம் உள்ளது.
இங்கு கிழக்கு நோக்கி லிங்கத்திருமேனியாக சிவபெருமான் மத்திய புரீஸ்வரர் மற்றும் நடுவதீஸ்வரர் எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இக் கருவறையில் ஒரு நிலவறை உள்ளதாக சொல்லப்படுகிறது. அம்பிகை தெற்கு நோக்கி சௌந்தர நாயகி எனும் திருநாமத்துடன் அருள்புரிகிறாள்.
தல வரலாறு
ஊழிக் கால பிரளய அழிவிற்குப் பின், உலகப் படைப்பிற்காக திருமாலின் ஆலோசனைப்படி பிரம்மா இத்தலம் வந்து சிவலிங்க பிரதிஷ்டையும், தீர்த்தமும் அமைத்து வழிபட்டு தனது படைப்புத் தொழிலை தொடங்கினார் என்று ஐதீகம். இந்த பிரம்ம தீர்த்தம் கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது.
மேலும் திருக்கடையூரில் சிவபெருமான் எமனை சம்ஹாரம் செய்து உயிர்ப்பித்த பின், தனது தவறுக்கான தோஷ நிவர்த்திக்காக எமதர்மன் நாகை வந்து இத்தல ஈசனை தீர்த்தம் அமைத்து வழிபட்டு விமோசனமும், இழந்த பதவியையும் பெற்றான். எனவே இந்த எம தீர்த்தத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்து எமவாதனை உள்ளவர்களுக்கு கொடுக்கும் பொழுது மித்ரு பயம் நீங்கி சிவபதவி அடைவார் என நம்பப்படுகிறது.
உயிரின் தொடக்கம் மற்றும் முடிவுக்கான தேவதைகளான பிரம்மா மற்றும் எமன் வழிபட்ட இந்த அற்புதத் தலத்தை தவறாது தரிசனம் செய்து இறைவன் அருள் பெறுக..
No comments:
Post a Comment