29 Nov 2024

திருநாகைக்காரோணம் தல புராணமும் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களும்

 



🌷 இன்று திருநாகைக்காரோணம் தல புராணத்தை பற்றியும் இதை எழுதிய மகாவித்வான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் அனுபவ குறிப்புகளைப் பற்றியும் பார்ப்போம்.

🌷 நாகை திருத்தலத்தின் ஸ்தல புராணம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களால் இயற்றப் பெற்று 1860 அரங்கேற்றம் பெற்றது. இந்நூல் 61 - படலங்களையும், 2506 பாடல்களையும் கொண்டது.

🌷 இதிலுள்ள சுந்தரவிடங்கப்படலம் நாகை அழகிய விடங்கரின் பெருமைகள விரிவாகப் பேசுகின்றது. மேலும் பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு எடுத்துரைப்பது போல நாகையில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பதிகத்திற்கு மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் இத்தல புராணத்தில் விரிவாக உரை எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

🌷 சிவ ராஜதானி எனும் நாகை திருத்தலத்தின் பல புராண சிறப்புகளை பற்றிய இந்த ஆவண நூலினை திருவாடுதுறை ஆதினம் வெளியீடு செய்துள்ளது. இதன் பாதிப்பு வெகு சிலரிடமும் மட்டுமே உள்ளது, மேலும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் எழுதியபாடல்களை படித்து புரிந்துகொள்ள கடினமாக இருப்பதால் மீண்டும் தமிழறிஞர்களை கொண்டு அவற்றிற்கு உரை எழுதி அனைவரும் பயன்பெறும் வண்ணம் வெளியிட வேண்டும் என்பது பணிவான விண்ணப்பம்.

( பின்னிணைப்பு : நமது கோரிக்கைக்கு ஏற்றார்போல் புத்தகம் புது பதிப்பு பெற்று வெளியாகியுள்ளது, மேலும்  https://m.facebook.com/story.php?story_fbid=188724209693406&id=109859357579892 )

🌷 #நூல்_வரலாறு :

🌷 ​இந்த நூல் தொடர்பான சில குறிப்புக்கள் உ.வே.சா எழுதிய மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரிதம் நூலில் இடம்பெறுகின்றன. அதில் வரும் செய்திகளிலிருந்து கீழ்க்காணும் தகவல்களை அறிய முடிகின்றது.

🌷 1868ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாகப்பட்டணத்தில் ஓவர்ஸியராக இருந்த அப்பாத்துரை முதலியாரும் அவருடன் செல்வாக்கு பெற்ற இன்னும் சிலரும், தேவாரக் திருக்கூட்டத் தலைவராகிய வீரப்ப செட்டியாரும் பிள்ளையவர்கள் நாகைக்கு ஒரு புராணம் பாட வேண்டும் என்ற விருப்பத்தை இவரைச் சந்தித்து தெரிவித்தனர். அதனை பிள்ளையவர்கள் ஏற்றுக் கொண்டார். அவர் ஒரு கோயிலின் புராணம் பாடுவதற்கு முன்னர் அத்தலத்திற்கு நேரடியாகச் சென்று அங்கு இருந்து, பார்த்து, மக்களிடம் பேசி விவரங்கள் பெற்று, அங்கிருக்கும் பெரியோர்களிடமும் பேசி நகரச் சிறப்புக்களை அறிந்து கொள்வது பொதுவான வழக்கம். அதே போல நாகைக்கு புராணம் எழுது முன்னர் அங்கே சென்று தங்கியிருந்து இந்தத் தொடக்கப் பணிகளைச் செய்ய உத்தேசம் கொண்டு தயாரிப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டார்.

🌷 ஏற்கனவே இருந்த இத்தலத்திற்கான வடமொழி புராணத்தை ஸ்ரீ மகாதேவ சாஸ்திரி என்பவரைக் கொண்டு தமிழில் வசன நடையாகவும் மொழி பெயர்த்து வைத்துக் கொண்டார். 

🌷 காஞ்சி புராணத்தில் சிவஞான முனிவர் சித்திரக்கவிகளை அமைத்தது போல இப்புராணத்திலும் இருக்க வேண்டும் என சில நண்பர்கள் கேட்டுக் கொண்டதால் இப்புராணத்தில் நந்திநாதப் படலத்தில் சித்தாச்சிரம வருணனையில் சில சித்திரக் கவிகளை இவர் செய்திருக்கின்றார்.

🌷 இந்த நூலை பிள்ளையவர்கள் பாடத்தொடங்கியபோது இதனை ஏட்டில் எழுதி வந்தவர் முத்தாள்புரம் கோபால பிள்ளை என்னும் ஒருவர். காலை 7 மணிக்கு ஆரம்பித்து 10 மணிக்கு செய்யுள் சொல்வதை முடிப்பாராம்.

🌷 இந்த முத்தாள்புரம் கோபால பிள்ளைக்கு தாம் வெகு விரைவாக செய்யுள் எழுதுகின்றோம் என அகம்பாவம் இருந்திருக்கின்றது. ஒரு நாள் பிள்ளையவர்கள் புராணத்தில் சுந்தரவிடங்கப்படலத்தை விரிவாக செய்யுளாக்கிப் பாட கோபால பிள்ளைக்கு கைவலி எடுத்து விட்டது. பகல் 12 மணியாகியும் பிள்ளையவர்கள் செய்யுட் சொல்வதை நிறுத்தாமல் தொடர்ந்திருக்கின்றார். தனது கை வலி மிக அதிகமாகச் சுவடிக்கட்டை கீழே வைத்து விட்டு பிள்ளையவர்கள் பாதத்தில் விழுந்து வணங்கினாராம் இந்த கோபால பிள்ளை. தம்மை போல எழுதுவோர் யாருமில்லை என நினைத்திருந்த தன் அகம்பாவம் இன்று நீங்கியது என்று சொல்லி உருகினாராம்.  

🌷 ​இந்த நாகைப் புராணம் 1869ம் ஆண்டில் சுந்தரவிடங்கப் படலமும் இன்னும் சில பகுதிகளும் நிறைவடைந்தவுடன் தைமாதத்தில் நாகை தலத்திலேயே அரங்கேற்றம் பண்ணுவதென முடிவாக இவர் தம் மாணாக்கர்களுடன் அங்கு சென்று சேர்ந்திருக்கின்றார். 

🌷 முத்தி மண்டபம் எனும் மண்டபத்திலே தான் அரங்கேற்றத்தைத் தொடங்கியிருக்கின்றார்.

🌷 இந்தப் புராணப் பிரசங்கமும் அரங்கேற்றமும் ஒரு வருட காலம் நடைபெற்றிருக்கின்றது. இப்போது நினைத்துப் பார்க்க இப்படியும் நிகழ்ந்திருக்குமா என ஆச்சரியம் மேலிடுகின்றது. 

🌷 இந்த நிகழ்வு நடந்து வரும் வேளையில் ஸ்ரீ சங்கராச்சரிய சுவாமிகள் நாகப்பட்டினத்துக்கு விஜயம் செய்திருக்கின்றார். பிள்ளையவர்கள் புராணப் பிரசங்கம் நடைபெறுவதைக் கேட்டு அவரை பார்க்க விருப்பம் கொள்ள பிள்ளையவர்களும் மகாதேவ சாஸ்திரிகளுடன் வந்திருந்து  ஸ்ரீ சங்கராச்சரிய சுவாமிகளை சந்தித்திருக்கின்றார். பிரசங்கம் செய்யும் புராணத்திலிருந்து சில பாடல்களை பிள்ளையவர்கள் சொல்ல இவர் கேட்டு மகிழ்ந்திருந்திருக்கின்றார். கம்பராமாயணத்திலிருந்து சில பாடல்கள் கேட்க ஆசைப்பட அதனையும் பிள்ளையவர்கள் சொல்லியிருக்கின்றார். 

🌷 இப்புராண அரங்கேற்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் தான் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஸ்ரீ அம்பலவாண தேசிகர்  பூரணம் எய்தினார்கள். அவரை அடுத்து இளைய பட்டமாக இருந்த சுப்பிரமணிய தேசிகர் ஆதீனப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள்.  இந்த நிகழ்வினால் புராணப் பிரசங்கத்தின் இடையில் பிள்ளைவர்கள் திருவாவடுதுறை சென்று மீண்டும் வந்து புராண பிரசங்கத்தைத் தொடர்ந்திருக்கின்றார்.  

🌷 பிள்ளைவர்கள் நாகப்பட்டினத்தில் இருக்கும் சமயத்திலேயே மாயூரத்திலிருந்த அரங்ககுடி முருகப்பிள்ளை என்பவரின் குமாரர் வைத்தியலிங்கம் பிள்ளை என்பவரின் உதவியால் மாயூரப் புராணமும் அப்பாத்துரை முதலியார்  உதவியால் நாகைக் காரோணப்புராணமும் சோடசாவதானம் சுப்பராய செட்டியாருடைய (இவரும் பிள்ளையவர்களின் மாணாக்கர்களில் ஒருவர்)  மேற்பார்வையில் அச்சிடப்பெற்று நிறைவேறின.

🌷 அரங்கேற்றி முடிவதற்குள் திருநாகைக் காரோணப் புராணமும் பதிப்பிக்கப்பட்டது என்பதும் தனிச் சிறப்பு. புராண அரங்கேற்றம் முடிந்த அந்த நன்னாளில் புராணச் சுவடி பல்லக்கில் வைக்கப் பெற்று மிகச் சிறப்பாக  ஊர்வலமாக கொண்டுவரப்பட்டதாம்.

🌷 ஒரு வருடத்திற்கும் மேல் நாகையில் இருந்து 1870ம் ஆண்டின் ஆரம்பத்தில் தான் பிள்ளையவர்கள் மீண்டும் மாயூரத்திற்கு வருகின்றார்.  பிள்ளையவர்கள் மாயூரம் திரும்பி விட்டார்கள் என்ற செய்தி அறிந்து தான் உ.வே.சா தன் தந்தையை அழைத்துக் கொண்டு பின்னர் இவரிடம் மாணவராக சேரதேடி வருகின்றார். 

🌷 உ.வே.சாவின் குறிப்புப்படி பிள்ளையவர்களின் புராணக் காப்பியங்களிலேயே மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது திருநாகைக்காரோணப் புராணம் தான். தமிழ் காப்பியத்தின் இலக்கணம் முழுவதும் உள்ளதாய் பலவகையில் நயம் சிறந்து விளங்கும் இக்காப்பியத்தை பெறுவதற்கு  தமிழ் நாடு தவம் செய்திருக்க வேண்டும் என்கின்றார் உ.வே.சா.

காசி_விஸ்வநாதர் & முக்தி_மண்டபம்

 

🌷 காசிக்கு அடுத்தபடியாக முத்தி மண்டபம் அமைந்துள்ள திருத்தலம் சிவ ராஜதானி எனப்படும் திருநாகைக்காரோணம் ஆகும்.

🌷 தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு பெற்ற நாகையில் மிக முக்கிய தீர்த்தமான சிவ கங்கை எனும் தேவ தீர்த்தமும், அதன் அருகே காசி விஸ்வநாதரும் பெரிய கோயிலுக்கு அருகே தெற்கு மாட வீதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

🌷 கோயிலுக்கு அருகில் யாராவது இறந்து விட்டால், நடையை சாத்திவிடுவது வழக்கம். ஆனால், இறந்த பிணத்திற்கு சிவன் அணிந்த மாலை, வஸ்திரத்தை அணிவிக்கும் வழக்கம் இத்தலத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

🌷 திருநாகைக்காரோணம் திருத்தலத்தின் தல புராணத்தை மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இந்த மண்டபத்தில் தங்கி அரங்கேற்றம் செய்து உள்ளார்.

🌷 அருட்திரு வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் இங்கு தங்கியிருந்ததாகவும் சொல்லப் படுகிறது

🌷 மற்ற திருத்தலங்களுக்கு இல்லாத தனித்துவ சிறப்பு வாய்ந்த இந்த முக்தி மண்டபமும், உற்சவ காலங்களில் தீர்த்தம் எடுத்துச் செல்ல பயன்படும் 

 

🌷 மஹா சிவராத்திரியின் போது பெருமக்கள் கூடும் இக்கோயிலுக்கு மற்ற விசேஷ, தினமும் வழிபாடு செய்ய வேண்டுமெனவும், இதன் மகத்துவம் உணர்ந்து இனியும் அசுத்தம் செய்யாமல்  இருக்க  வேண்டும் என்பது ஊர் மக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் பணிவான விண்ணப்பம்.🙏



குதிரை வாகன திருவிழா




அனைவருக்கும் #விஜய_தசமி நல்வாழ்த்துக்கள் 🙏. சிவராஜதானி என போற்றப்படும் திரு #நாகை காரோணம் திருத்தலத்தில் பராவர தரங்க நடன சுந்தர விடங்க #தியாகராஜ_சுவாமி நம்பி ஆரூரன் #சுந்தர_மூர்த்தி நாயனாருக்கு #குதிரை வழங்கும் ஐதிக விழா இன்று மாலை வேளையில் தியாகராஜரின்  உடைவாளுடன் சுந்தர மூர்த்தி நாயனாரின் புறப்பாடு நடைபெறும்.

தலங்கள் தோறும் சென்று இறைவனை வழிபட்டு பதிகம் பாடி வந்த சுந்தரர் நாகை திருத்தலத்தில் தனக்கு வேண்டும் பொன் பொருள் ஆகியவற்றை ஓவ்வொரு பாடலிலும் கேட்டு பெறுகிறார்.

தியாகராஜ பெருமானிடம் சுந்தரர் முத்துமாலை, நவமணிகள், பட்டு, சாந்தம், சுரிகை ,காற்றோடு ஒத்த விரைந்த நடையினையுடைய குதிரை மேலும் இறைவனின் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு கேட்டு பெறுகிறார்.

மேலும் நயம்பட தனக்கே உரித்தான முறையில் , அளவின்றி உண்கின்ற பெருவயிற்றானாகிய கணபதி , தன் உணவையன்றி வேறொன்றையும் அறியானாகலின் , அவனிடம் நான் சென்று எதனை வேண்டுவேன் ? என குறிப்பிடுகிறார்.

பல தலங்களையும் செய்திகளையும் உள்ளடக்கிய இந்த பதிகத்தில் தனது இரு மனைவிகளையும் சேர்த்து பாடியது இதில் மட்டுமே என்பது தனி சிறப்பு.

இந்த நன்னாளில் சுந்தரர் பாடிய பதிகத்தை பாடி தியாகராஜ பெருமானின் அருள் பெறுவோம் ஆக. சிவார்ப்பணம் 🙏 பதிக குரல் காணொளி https://youtu.be/7V72BWGIoBE

1.🌷 பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்

பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்

செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்

செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநாள் இரங்கீர்

முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை

யவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறும்

கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

#பொருள்  கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், பலவூர்களிற் சென்று, பல பாமாலைகளைப் பாடி இரந்து உண்பீர்; அங்ஙனம் இரக்குங்கால், பிச்சைஇட வருகின்ற, பாவைபோலும் மகளிரோடு பொய்யான சொற்களைப் பேசிக் கரவு கொண்டு திரிவீர்; இறந்தவரது எலும்புகளை மேலே பூண்டுகொண்டு, எருதின்மேல் ஏறித்திரிவீர்; இவைகளைப் போலவே, உள்ள பொருளை மறைத்துவைத்து, என்பொருட்டு ஒரு நாளும் மனம் இரங்காது, ஏதும் இல்லை என்பீர்; இவையெல்லாம் உமக்குச் சிறிதும் ஒவ்வா; இப்பொழுது யான் அணிவதற்கு முத்தாரமும், மேற்பட்டு விளங்குகின்ற மாணிக்கமாலை வயிரமாலைகளும் ஆகிய அவைகளைத் தந்து, உடம்பிற் பூசிக் கொள்வதற்கு, இனிதாக மணம் வீசுகின்ற கத்தூரியையும், அத்தகையதான சந்தனமும் நீர், தவிராது அளித்தருளல் வேண்டும்.

2.🌷 வேம்பினொடு தீங்கரும்பு விரவியெனைத் தீற்றி

விருத்திநான் உமைவேண்டத் துருத்திபுக்கங் கிருந்தீர்

பாம்பினொடு படர்சடைக ளவைகாட்டி வெருட்டிப்

பகட்டநான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன்

சேம்பினொடு செங்கழுநீர் தண்கிடங்கிற் றிகழுந்

திருவாரூர் புக்கிருந்த தீவண்ணர் நீரே

காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டுங்

கடல் நாகைக் காரோண மேவியிருந் தீரே.

#பொருள் கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், என்னை, கைப்புடைய வேம்பினையும், தித்திப்புடைய கரும்பினையும் கலந்து உண்பித்து, நான், இங்கு உம்மிடம் எனக்குப் பிழைப்பை வேண்டிக் கொண்டிருக்க, நீர் என்முன் நில்லாது, திருத்துருத்தியில் புகுந்து, அங்கே இருந்துவிட்டீர்; இப்பொழுது உம்மைக் கண்டேன்; நீர் பாம்பும், விரிந்த சடைகளுமாகிய இவைகளைக் காட்டி என்னை வெருட்டிப் பெருமை அடைந்து விடநினைத்தால் நான் அதற்கு ஒட்டுவேனோ! ஒட்டேன்; ஏனெனில், உம்பின் நான் பலகாலும் திரிந்துவிட்டேன்; நீர்ச்சேம்பும், செங்கழுநீரும், குளிர்ந்த அகழியில் விளங்குகின்ற திருவாரூரில் குடி புகுந்திருக்கும் தீவண்ணராகிய நீர், இப்பொழுது எனக்கு 'காம்பு' என்றும் 'நேத்திரம்' என்றும் பெயர் சொல்லப்படும் பட்டாடை வகைகளை அளித்தருளல் வேண்டும்.

3.🌷 பூண்பதோர் இளவாமை பொருவிடைஒன் றேறிப்

பொல்லாத வேடங்கொண் டெல்லாருங் காணப்

பாண்பேசிப் படுதலையிற் பலிகொள்கை தவிரீர்

பாம்பினொடு படர்சடைமேல் மதிவைத்த பண்பீர்

வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால்

வெற்பரையன் மடப்பாவை பொறுக்குமோ சொல்லீர்

காண்பினிய மணிமாட நிறைந்தநெடு வீதிக்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

 #பொருள் விரிந்த சடையின்மேல் பாம்பையும், சந்திரனையும் வைத்த பெருமையுடையவரே, காண்பதற்கு இனிய மணிமாடங்கள் நிறைந்த நீண்ட தெருக்களையுடைய, கடற்கரைக் கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், அணிந்த ஓர் இளைய ஆமையின் ஓட்டோடு போர் செய்யும் எருது ஒன்றை ஏறி, விரும்புதல் இல்லாத வேடத்தைப் பூண்டு எல்லாருங் காண, இசைபாடி, இறந்தோரது தலையில் பிச்சை ஏற்றலை ஒழிய மாட்டீர்; அங்ஙனம் பிச்சை ஏற்குங்கால் பிச்சையைக் கொண்டொழியாது, வீண் சொற்களைப் பேசி, பிச்சையிட வருகின்ற மகளிரது வெள்ளிய வளைகளைக்கவர்வீராயின், மலையரையன் மகளாகிய உம் தேவி மனம் பொறுப்பாளோ? சொல்லீர்.

4.🌷 விட்டதோர் சடைதாழ வீணைவிடங் காக

வீதிவிடை யேறுவீர் வீணடிமை யுகந்தீர்

துட்டரா யினபேய்கள் சூழநட மாடிச்

சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே

வட்டவார் குழல்மடவார் தம்மைமயல் செய்தல்

மாதவமோ மாதிமையோ வாட்டமெலாந் தீரக்

கட்டிஎமக் கீவதுதான் எப்போது சொல்லீர்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

 #பொருள் கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே. நீ வீணாக அடிமைகளை வைத்துக் கொண்டீர்; மற்றும், அவிழ்த்துவிட்ட சடைகள் கீழே விழ, வீணை அழகுடையதாய் விளங்க, தெருவில் விடையை ஏறிச் செல்வீர்; கொடி யனவாகிய பேய்கள் சூழநடன மாடுதலை மேற்கொண்டு. அழகுடையவராய், மாசற்ற பிறையைச் சூடுவது அழகோ? அன்றியும் வட்டமாக முடிக்கப்படுகின்ற நீண்ட கூந்தலையுடைய மகளிரை மயக்குவதுதான் உமக்குப் பெரிய தவமோ? அல்லது பெருமையோ? இவையெல்லாம் எவ்வாறாயினும் ஆக; எங்கள் துன்பமெல்லாம் நீங்கும்படி எங்கட்குப் பொற்கட்டியைக் கொடுப்பது எப்போது? சொல்லீர்.

5.🌷 மிண்டாடித் திரிதந்து வெறுப்பனவே செய்து

வினைக்கேடு பலபேசி வேண்டியவா திரிவீர்

தொண்டாடித் திரிவேனைத் தொழும்புதலைக் கேற்றுஞ்

சுந்தரனே கந்தமுதல் ஆடைஆ பரணம்

பண்டாரத் தேயெனக்குப் பணித்தருள வேண்டும்

பண்டுதான் பிரமாண மொன்றுண்டே நும்மைக்

கண்டார்க்குங் காண்பரிதாய்க் கனலாகி நிமிர்ந்தீர்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

 #பொருள் அழகரே. கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், உமக்குத் தொண்டு செய்து திரிகின்ற என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டும் அருள் பண்ணாது. வன்கண்மை கொண்டு திரிந்தும், வெறுக்கப்படும் செய்கைகளையே செய்தும், காரியக்கேடு பலவற்றைச் சொல்லியும் உம் மனம் வேண்டியவாறே திரிவீர்; உம்மை நான் எவ்வாறு அகப்படக் காணுதல் கூடும்! ஏனெனில், முன்னே உம்மை அங்ஙனம் யாரேனும் கண்டார் என்பதற்கு யாதேனும் பிரமாணம் உண்டோ! 'கண்டோம்' என்பார்க்கும், அடிமுடி காணுதல் அரிதாம்படி நெருப்பாகியே. நீண்டு நின்றீரல்லிரோ? அதனால், நும் இயல்பையெல்லாம் விடுத்து, உமது கருவூலத்திலிருந்து நறுமணம், ஆடை, ஆபரணம் முதலியவற்றை எனக்கு அளித்தருளல் வேண்டும்.

6.🌷 இலவவிதழ் வாயுமையோ டெருதேறிப் பூதம்

இசைபாட இடுபிச்சைக் கெச்சுச்சம் போது

பலவகம்புக் குழிதர்வீர் பட்டோடு சாந்தம்

பணித்தருளா திருக்கின்ற பரிசென்ன படிறோ

உலவுதிரைக் கடல்நஞ்சை அன்றமரர் வேண்ட

உண்டருளிச் செய்ததுமக் கிருக்கொண்ணா திடவே

கலவமயி லியலவர்கள் நடமாடுஞ் செல்வக்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

#பொருள் தோகையையுடைய மயில்போலுஞ் சாயலை யுடைய மகளிர் நடனம் புரிகின்ற, செல்வத்தையுடைய கடற்கரைக்கண் உள்ள திருநாகைக்காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், இலவம்பூப்போலும் இதழ் பொருந்திய வாயை யுடைய உமையவளோடு எருதின்மேல் ஏறிக்கொண்டு, பூதங்கள் இசையைப் பாட, பலரும் இடுகின்ற பிச்சைக்கு, வேள்வியை உடைய உச்சிப் பொழுதில் பல இல்லங்களில் புகுந்து திரிவீர்; ஆயினும், நீ அன்று தேவர்கள் வேண்ட அசைகின்ற அலைகளையுடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு அவர்களுக்கு அருள்செய்தது, அவர்தம் முறையீட்டைக் கேட்டு உமக்கு வாளா இருக்க வொண்ணாது கருணை மேலிட்டமையாலே; அங்ஙனமாக, இப்பொழுது எனக்குப் பட்டும், சாந்தும் பணித்தருளாதிருக்கின்ற தன்மை என்ன வஞ்சமோ!

7.🌷 தூசுடைய அகலல்குல் தூமொழியாள் ஊடல்

தொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து

தேசுடைய இலங்கையர்கோன் வரையெடுக்க அடர்த்துத்

திப்பியகீ தம்பாடத் தேரொடுவாள் கொடுத்தீர்

நேசமுடை அடியவர்கள் வருந்தாமை அருந்த

நிறைமறையோர் உறைவீழி மிழலைதனில் நித்தல்

காசருளிச் செய்தீர்இன் றெனக்கருள வேண்டுங்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

#பொருள் கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நல்லாடையை உடுத்த அகன்ற அல்குலையும், தூய மொழியையும் உடைய உம் தேவி உம்பால் கொண்ட ஊடலை நீர் தொலைக்க முயன்றும் தொலையாதிருந்த காலத்தில், நீர் சொல்ல வந்தவன் போல, ஒளியையுடைய இலங்கைக்கு அரசனாகிய இராவணன் வந்து உமது மலையைப் பெயர்க்க, அவனை முன்னர் ஒறுத்து, அவன் சிறந்த இசையைப் பாட, அவனுக்குத் தேரும், வாளும் கொடுத்தீர்; அதுவன்றி, வற்கடத்தில் அன்புடைய அடியார்கள் பசியால் வாடுதல் இன்றி நன்கு உணவருந்தி இருக்குமாறு, மறையவர் நிறைந்த திருவீழிமிழலையில் நாள்தோறும் அன்று படிக்காசு அருளினீர்; அதுபோல, இன்று எனக்கு அருளல்வேண்டும்.

8.🌷 மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீ ரிருந்தீர்

வாழ்விப்பன் எனஆண்டீர் வழியடியேன் உமக்கு

ஆற்றவேல் திருவுடையீ நல்கூர்ந்தீ ரல்லீர்

அணியாரூர் புகப்பெய்த வருநிதிய மதனில்

தோற்றமிகு முக்கூற்றில் ஒருகூறு வேண்டுந்

தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்க லொட்டேன்

காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டுங்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

#பொருள் கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, யான் உமக்கு வழிவழியாக அடியேன்; அதுவன்றி, நீர் வலிந்து, என்னை, 'வாழ்விப்பேன்' என்று சொல்லி அடிமை கொண்டீர்; மிக்க செல்வம் உடையீர்; வறுமை யுடையீரும் அல்லீர்;ஆயினும், மறுமொழி ஒன்றும் சொல்லாது வாய் வாளாதிருக்கின்றீ; அழகிய திருவாரூரிலே சேரும்படி நீர் சேர்த்து வைத்துள்ள மிக்க பொருட் குவியலில், எனக்கு வேண்டுவதாய் என் உள்ளத்தில் மிக்குத் தோன்றுகின்ற முக்கூற்றில் ஒருகூறு எனக்கு அளித்தருளல் வேண்டும்; அதனோடு ஏறிப் போவதற்கு, காற்றோடு ஒத்த விரைந்த நடையினையுடைய குதிரை வேண்டும்; இவைகளை அளியாதொழியின், உம்மை ஒருபொழுதும் அப்பால் அடியெடுத்து வைக்க ஒட்டாது, உம் திருவடிகளைப் பிடித்துக் கொள்வேன்.

9.🌷 மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி

மலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன்

எண்ணிலிஉண் பெருவயிறன் கணபதிஒன் றறியான்

எம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்யீர்

திண்ணெனஎன் னுடல்விருத்தி தாரீரே யாகில்

திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக்

கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

#பொருள்  கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, எம்பெருமானே, மண்ணுலகிலும், விண்ணுலகிலும் ஆட்சி உம்முடையதே நடைபெறுகின்றது. ஆதலின, நான் உம்மையுந் தௌய மாட்டேன்; உம் தேவியாகிய மலையரையன் மகளையும், சிறுவனாகிய முருகனையும் தௌயமாட்டேன்; அளவின்றி உண்கின்ற பெருவயிற்றானாகிய கணபதி, தன் உணவையன்றி வேறொன்றையும் அறியானாகலின், அவனிடம் நான் சென்று எதனை வேண்டுவேன்? உம் குடிமுழுதும் இவ்வாறிருத்தல் தக்கதோ? சொல்லியருளீர்; இப்பொழுது உறுதியாக என் உடலிற்குப் பிழைப்பைத் தாரீரேயாகில், உம் திருமேனி வருந்தும்படி கட்டிப் பிடித்துகொள்வேன்; பின்பு, 'இவன் கண்ணோட்டம் சிறிதும் இல்லாதவன்; கொடுமையுடையவன்' என்று என்னை வெறுத்துரைக்க வேண்டா.

10.🌷 மறியேறு கரதலத்தீர் மாதிமையே லுடையீ

மாநிதியந் தருவனென்று வல்லீராய் ஆண்டீர்

கிறிபேசிக் கீழ்வேளூர் புக்கிருந்தீர் அடிகேள்

கிறியும்மாற் படுவேனோ திருவாணை யுண்டேல்

பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேலோர்

பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும்

கறிவிரவு நெய்சோறு முப்போதும் வேண்டுங்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

#பொருள்  மான் கன்று பொருந்திய கையை உடையவரே. தலைவரே, கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், பெருமையோ மிக உடையீர்; 'மிக்க பொருட்குவையைத் தருவேன்' என்று சொல்லி, வழக்கில் வல்லீராய் என்னை ஆட்கொண்டீர்; ஆனால், இப்பொழுது பொருள் இல்லீர் போல வஞ்சனைகள் பேசி, திருக்கீழ்வேளூரிற் போய்த் தங்கியிருக்கின்றீர்; உமது உறுதிமொழி எனக்கு உள்ளது என்றால், நான் உம்மால் வஞ்சிக்கப்படுவேனோ! படேன், இலச்சினை பொருந்திய, நல்ல அழகினைக் கொண்ட பொன்னாலாகிய உடை வாளும், தலையில் சூடிக்கொள்ளும் பொற்றாமரைப் பூவும், பட்டுக் கச்சும் எனக்கு அளித்தருளல் வேண்டும். அன்றியும் மூன்று பொழுதிலும், கறியும், சோறும், அவை இரண்டோடும் கலக்கின்ற நெய்யும் ஆகிய இவைகளும் வேண்டும்.

11.🌷 பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்

பற்றாய பெருமானே மற்றாரை யுடையேன்

உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும்

ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவும்

கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டுங்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரென்

றண்மயத்தால் அணிநாவல் ஆரூரன் சொன்ன

அருந்தமிழ்கள் இவைவல்லார் அமருலகாள் பவரே.

#பொருள் அழகிய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன், திருநாகைக் காரோணத்துப் பெருமானாரை அடுத்துநின்ற தன்மையால், அவரை, 'கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, இசையின் வண்ணமேயாய் உள்ள சொற்களையுடைய 'பரவை சங்கிலி' என்னும் இருவருக்கும், எனக்கும் சார்பாய் உள்ள பெருமானே, யான் உம்மையன்றி வேறு யாரைச் சார்பாக உடையேன்? உமக்கு நெஞ்சறிந்த வண்ணமே பூண்ட அடிமையையுடையேனாகிய என்குறையை நீக்கியருளல் வேண்டும்; ஒளியையுடைய முத்துக்களால் ஆக்கி அணிகின்ற மாலையும், ஒள்ளிய பட்டாடையும், பூவும், கண் நோக்கு நிறைந்த கத்தூரியின் மணம் கமழ்கின்ற, சந்தனமும் வேண்டும்' என்று வேண்டிப் பாடிய, அரிய தமிழ்ப் பாடல்களாகிய இவைகளைப் பாட வல்லவர்கள், அமரர் உலகத்தை ஆள்வார்கள்.

திருச்சிற்றம்பலம்

பக்தனை தடுத்து ஆட்கொண்ட நீலாயதாட்சி அம்பிகை

 பக்தனை தடுத்து ஆட்கொண்ட #நாகை #நீலாயதாட்சி 🌷 அம்பிகை ..

#இலங்கை யின் #யாழ்ப்பாணம் மற்றும் #நாகப்பட்டினம் நகருக்கும் உண்டான வர்த்தக தொடர்பு தொன்று தொட்டு நடைபெறுவதாகும். அதன் மூலம் கலாச்சார பண்பாட்டு ஒற்றுமைகளை இவ்வூர்களில் காணலாம்.

🌷 அவ்வகையில் பலரும் இங்கும் அங்குமாக வர்த்தக பயணம் செய்து கொண்டிரிருந்த போது, சுமார் நூறு வருடங்கள் முன் 1910 ஆம் ஆண்டு ஆன்மீகத்தை தேடி பயணபட்டவர் தான் அருளம்பல சுவாமிகள்.

🌷 யாழ்ப்பாணத்தில் இருந்து நீர்வழி பயணமாக கோடியக்கரை அடைந்து, #சிதம்பரம் நோக்கி யாத்திரையாக சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு நாள் நாகை அடைந்து நீலாயதாட்சி, காயாரோகண சுவாமியை வழிபட்டு, பின் பயண களைப்பில் அன்றிரவு அங்கேயே தங்க நேர்ந்தது.

🌷 சுவாமிகளின் தாக களைப்பை நீக்கி அருள்புரிய அம்பிகை வாலை சிறுமியாக வந்து நீர் கொடுத்து அவரிடம் எங்கு பயணமாக செல்கிறீர்கள்..? என்று கேட்க.. சுவாமிகள் சிதம்பரம் நோக்கி சித்திகள் பெற செல்வதாக கூறினார்.

🌷 இங்கு சித்திகள் பெற முடியாத என கேட்டு அம்பிகை அவரை சன்னதி அருகில் அழைத்து சென்று தனது நிஜரூப தரிசன காட்சி தந்தது அருள் புரிந்தாள். பின் சுவாமிகள் கோவிலிலே பலகாலம் நிஷ்டையில் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து விட்டார்.

🌷 பல காலம் நீர் உணவின்றி தியானத்தில் அமர்ந்திருந்த இவரை சோதிக்க எண்ணிய ஆங்கிலேயர்கள் கம்பியை காய்ச்சி இவர் காலில் சூடு வைக்க மௌனமாகவே இருந்தார், பின் இவரை தனி அறையில் பூட்டி அடைத்து வைத்தனர். சில காலத்தில் நிஷ்டை கைகூடி பூட்டியிருந்த அறையில் இருந்து வெளிப்பட்டு நீலாயதாட்சி ஸ்தோத்திரம், ஊஞ்சல் பாட்டு ஆகியவற்றை இயற்றினார்.

🌷 மீண்டும் சுவாமிகள் யாத்திரையாக 1914 இல் பயன்பாட்டு பாண்டிச்சேரி அடைந்தார் . அச்சமயம் அங்கு தலைமறைவாக தங்கியிருந்த மஹாகவி பாரதியார் சுவாமிகளின் தொடர்பு பெற்று அவரை குருவாக ஏற்று யாழ்ப்பாணத்து சுவாமிகள் என பாடல்கள் இயற்றி உள்ளார்.

🌷 பின் சுவாமிகள் மக்கள் பயன்பெறும் வகையில் பல நூல்களை புதுவை மற்றும் நாகையில் பதிப்பித்து பின் இலங்கை சென்று 1942 மார்கழி மாதம் 3 ஆம் தேதி ஹஸ்த நட்சத்திரத்தில் மகா சமாதி அடைந்தார். வியாபாரிமூலை அருள்மிகு ஸ்ரீ வீரபத்திரர் ஆலயத்தின் மூன்றாம் வீதியின் ஈசான மூலையில் சமாதி வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

🌷 1943 இல் சுவாமிகள் நினைவாக நாகையில் மடம் அமைத்து வழிபட்டு வந்துள்ளனர்.  கால ஓட்டத்தில் மக்களால் இவரது மடம் மறந்து விட்டது.  

🌷 அம்பிகையின் அருள் பெற்று பாரதியாரின் குருவாக விளங்கிய மௌனகுரு அருளம்பல யாழ்ப்பாணத்துச் சுவாமிகளை இனிவரும் காலங்களில் மறவாதிருப்போம். 

நாகை பா.சுபாஷ்

சுவாமி பற்றிய விரிவான விவரங்களுக்கு..

https://ourjaffna.com/cultural-heroes/யாழ்ப்பாணத்து-சுவாமி-வி

https://ta.m.wikipedia.org/wiki/மௌனகுரு_அருளம்பல_சுவாமிகள்






மஹா சிவராத்திரி சிவாலயங்களை 12 sivan temple on nagai

 இப்பதிவில் நாகைக்கும் சிவராத்திரிக்கும் உண்டான தொடர்பும் , நாகையில் அமைந்துள்ள பன்னிரு சிவாலயங்களை பற்றி பார்ப்போம்.

நாகர்களின் தலைவன் ஆதிசேஷன் மஹா சிவராத்தியன்று, இரவு முழுவதும், நான்கு காலங்களில் சிவன் கோயில்களில் வழிபட்டு, பேறு பெற்றான் என்பது ஐதீகம். அதன்படி குடந்தை கீழ்கோட்டம் எனும், கும்பகோணம் நாகேசுவரஸ்வாமி கோயிலில், முதல் காலத்திலும், திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமி கோயிலில், இரண்டாவது காலத்திலும், திருப்பாம்புரத்தில், மூன்றாவது காலத்திலும், இறுதியாக #நாகை காரோணத்தில், நான்காவது காலத்தில் ஈசனை வழிபட்டு, தரிசனம் பெற்றான். எனவே இவ்வூருக்கு நாகை என பெயர் பெற்றது.

காசிக்கு இணையாகக் கருதப்படும் சிவராஜதானி ஷேத்திரம் எனக் குறிப்பிடப்படும் நாகையில், காயாரோகணசுவாமி கோயிலை சுற்றியுள்ள 12 சிவாலயங்களை மகா சிவராத்திரி நாளில் ஒருசேர தரிசனம் செய்வது ஆன்மிகச் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது. அவை முறையே பின்வருமாறு.

1. #நாகைக்காரோணம் , காயாரோகணசுவாமி கோயில் (நீலாயதாட்சி அம்மன் கோயில்)

2. #அமரரேந்திரேஸ்வரம் , அமரநந்தீஸ்வரர் கோயில் 

(நீலா கீழ வீதி தேரடி அருகில்)

3. #சுந்தரேஸ்வரம் , சொக்கநாதசுவாமி கோயில் (அக்கரைக்குளம் அருகில்)

4. #ஆதிகாயாரோகணம் , சட்டையப்பர் கோயில் (எல்.ஐ.சி. கட்டடத்தின் எதிர் தெரு)

5. #நாகேஷ்வரம் , நாகநாதசுவாமி கோயில் (நாகநாதர் சன்னதி)

6. #அழகேசம் , அழகியநாதசுவாமி கோயில் (அழகர் சன்னதி)

7. #மத்யபுரீஸ்வரம் , நடுவதீஸ்வரர் கோயில் (தேசீய மேல்நிலைப்பள்ளி பின்புறம்)

8. #விஸ்வநாதம் , வீரபத்திரசுவாமி கோயில் (நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் அருகில்)

9. #அமிர்தகடேஸ்வரம் , கட்டியப்பர் கோயில் (குமரன் கோயிலுக்கு வடபுறம்)

10. #கயிலாசம் , மலையீஸ்வரர் கோயில் (நீலா தெற்கு மட வளாகம்)

11. #காசிவிஸ்வநாதம், 

காசி விஸ்வநாதர் கோயில் (நீலாயதாட்சி அம்மன் கோயில் தென்புறம்)

12. #அகஸ்தீஸ்வரம் , அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் (வெளிப்பாளையம் சிவன் கோயில்)

சிவராத்திரி நன் நாளில் பன்னிரு சிவாலயங்களை தரிசித்து ஈசன் அருள் பெறுவோம். நன்றி சிவார்பணம்




பிரதோஷ பெருமாள் (மோகினி) புறப்பாடு

 சிவன் கோயில்களில் பிரதோஷத்தின்போது, சிவன் ரிஷப வாகனத்தில் செல்வது வழக்கம். ஆனால் திருநாகைக்காரோணம் திருத்தலத்தில் மோகினி வடிவில் பெருமாளும் புறப்பாடு செய்வது மற்ற திருத்தலங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு.

🌷 திருநாகைக்காரோணம் திருத்தலத்தில் திருமால் ஆத்மார்த்தமாக சிவபெருமானை வழிபட்டு தான் இழந்த அழகை மீண்டும்  பெற்றதாக ஐதீகம். எனவே திருமால் இங்கு அழகின் சொரூபமான மோகினி வடிவில் கருவறையில் காட்சி தருகிறார்.

🌷 மகாவிஷ்ணு சிவபூஜை செய்த அழகிய நாதர் சன்னதி தனியாகவும் அதனருகே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலும் அமைந்துள்ளது.


#பிரதோஷ_வரலாறு

 🌷 தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடைந்தபோது, மகாவிஷ்ணு மோகினி வடிவில் வந்து அமுதம் பரிமாறினார். அப்போது, தேவர்கள் பாற்கடல் விஷத்தை அருந்திய சிவனை வணங்காமல் அமுதத்தை அருந்திவிட்டனர். 

🌷 இதற்காக தங்களை மன்னிக்கும்படி, சிவனிடம் வேண்டினர். அவர் தேவர்களை மன்னிக்கும்விதமாக, நந்தியின் மீது நடனமாடினார். இந்த நடனம் பிரதோஷ வேளையில் நிகழ்ந்தது. 

🌷 பிரதோஷ வேளைக்கு முன்பாக, பெருமாளின் மோகினி அவதாரம் நிகழ்ந்ததால், பிரதோஷத்தன்று மோகினி வடிவில் பெருமாள் புறப்பாடாகிறார். 

🌷 இவர் பிரதோஷத்தின்போது மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் சிவனின் மூலஸ்தானத்திற்குள் வைத்துவிடுகின்றனர்.







மலையீஸ்வரன் திருக்கோயில் malai eswaran kovil

 அருள்மிகு மலையீஸ்வரன் திருக்கோயில், #நாகப்பட்டினம்.

#நாகை_பன்னிரு_சிவாலயங்கள் வரிசையில் இந்த பதிவில் #மலையீஸ்வரன் திருக்கோயில் பற்றி பார்ப்போம்.

🌷 முற்கால #பல்லவர்கள் திருப்பணி மற்றும் #கோச்செங்கட்_சோழன் கட்டிய மிகப்பழமையான மாடக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

🌷 இக்கோயிலின் நுழை வாயிலில் இராஜ கோபுரம் இல்லை. மொட்டைக் கோபுரத்தின் மேலே சுதை வடிவங்களாக ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் காட்சி அளிக்கிறார்கள். இருபுறமும் கணபதியும் கந்தனும் காட்சி தருகிறார்கள். 

🌷 மாடக்கோயிலின் கீழே நந்தியும் பலிபீடமும் அமைந்துள்ளன. மேலே பதினெட்டுப் படிகள் ஏறிச்சென்றால் சுவாமி சன்னதியை அடையலாம். பதினாறு பட்டை லிங்கமாக கைலாசநாதப் பெருமான் லிங்கத் திருமேனியாக தரிசனம் தருகிறார்.

🌷 மூலஸ்தானத்தில் லிங்கத் திருமேனிக்கு பின் சிம்மத்தில் ஆன சிற்பத்தின் நடுவே அம்மையப்பர் காட்சியளிக்கிறார். இதுபோல மற்றொரு சிம்ம விளக்குத்தூண் கோயிலின் கீழ் புறத்தில் அமைந்துள்ளது. இவையே பல்லவர்கால சிற்பமாக கூறப்படுகிறது.

🌷 மேலும் 1777 ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் நாகையில் கோட்டை அமைத்து ஆட்சி செய்த போது இக் கோயிலை புதுப்பித்த கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளது.

#ஸ்தல_வரலாறு

 தைப்பூசம் அன்று பராசர முனிவருக்கு நாகையில் கிடைக்கப்பெற்ற கைலாய தரிசனம்.

 🌷 இறைவனைப் பல்வேறு தலங்களில் காணும்படி யாத்திரையாக நாகைக்கு வந்த வேத வியாசரின் தந்தையான பராசர முனிவர்க்கு பதினாறாயிரம் சிகரங்கள் கொண்ட கயிலையங்கிரியைத் தரிசிக்கும் ஆவல் வந்தது. அதிலும், அம்மலையை நாகையிலே தரிசிக்கவேண்டும் என்ற பேராவல் ஏற்பட்டது. 

 🌷எனவே ஒரு பட்டை ஆயிரம் சிகரங்களுக்கு சமம் என்ற நோக்கில் பதினாறு பட்டைகளை உடைய பாணத்தோடு கூடிய சிவலிங்க பிரதிஷ்டை செய்து, அப்பெருமானை ஒரு உயர்ந்த கட்டுமலையில் வைத்து வழிபாட்டு வந்தார். 

🌷 அதன் பயனாக தைப்பூசம் நன்னாளில் சிவபெருமானின் கைலாய தரிசனம் கண்டு, கல்ப காலம் வரை நித்தியத்துவம் பெரும் வரம் பெற்றார் என்பது ஐதீகம்.




அமரநந்தீஸ்வரர் திருக்கோயில் amara nanthiswarar temple

 நாகை பன்னிரு_சிவாலயங்கள் 🌷 வரிசையில் பிரதோஷ தினமாகிய இன்று இந்திரன் வழிபட்ட அருள்மிகு அமரநந்தீஸ்வரர் திருக்கோயில் பற்றி பார்ப்போம்.

🌷 நாகை பெரிய கோவில் (நுழைவு வாயில் அருகே) கீழை சன்னதித் தெருவின் முனையில் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ள இந்த ஆலயம், சிறிய கோபுர வாசலைக் கொண்டது. 

🌷 நாகைக் காரோணப் புராணத்தில் #அமரேந்திச்வரர் என்று காக தீர்த்தப் படலத்தில் சுவாமி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. காலப்போக்கில் மக்கள் வழக்கில், அமர நந்தீஸ்வரர் என ஆயிற்று .

🌷 ஆலயத்தின் பிரதான அம்பிகை #அபித_குஜாம்பாள் மற்றும் கோஷ்டத்தில் உள்ள #சூலினி_துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை தந்து அருள் புரிகின்றனர். 

🌷 மேலும் விநாயகர், பாலமுருகன், லட்சுமி, சரஸ்வதி, ஆஞ்சநேயர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் அமைந்துள்ளது.

🌷 ஆலயம் அழகிய கருங்கல் திருப்பணி செய்யப்பட்டு விளங்குகிறது. தற்போது இக்கோயில் திருவாடுதுறை ஆதின சைவ சித்தாந்த மற்றும் திருமுறை நேரடி பயிற்சி மையம், நாகப்பட்டினம் கிளை உறுப்பினர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

🌷 இங்கு பங்குனி மாத பிரம்மோற்சவம் பத்து நாட்கள் பெருவிழாவாக சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது.

புராண வரலாறு: 

🌷 அகலிகையை நாடிய இந்திரன் கௌதம முனிவரின் சாபத்தால் காக்கையாக மாறினான். சாப விமோசனத்திற்காக நாகை வந்து ஒரு தீர்த்தத்தை உண்டாக்கினான். அதுவே காக்கை தீர்த்தம் எனப்படுவது. 

🌷 தினமும் அதில் நீராடி, காயாரோகனரை வழிபட்டு நற்கதி பெற்றான். பின் ஆலயத்தின் கிழக்கே, ஒரு சிவலிங்க மூர்த்தியை பிரதிஷ்டை செய்து, தனது வஜ்ராயுதத்தால் ஒரு தீர்த்தம் உண்டாக்கி, வழிபட்டான்.

🌷 இம்மூர்த்திக்கு அமரனந்தீசுவரர் என்றும், தீர்த்தத்திற்கு வஞ்சி கங்கை தீர்த்தம் பெயர்கள் ஏற்பட்டன




ஹேரம்ப கணபதி heramba ganapati




 "திகடச் சக்கர செம்முகம் ஐந்துளான்

சகடச் சக்கர தாமரை நாயகன்

அகடச் சக்கர விண்மணி யாவுறை

விகடச் சக்கரன் மெய்ப்பதம்            போற்றுவாம்'

      - கந்தபுராணம்

"திகடச்சக்கர'  என்பது "திகழ் தசக் கர' என்பதாகும். அதாவது பத்து கரங்களுடையவன். ஹேரம்ப கணபதிக்கு ஐந்து தலை, பத்து கரங்கள்.

2. ஸ்ரீ ஹேரம்ப கணபதியின் மலர்ப் பதம் பணிந்தேன்

அஞ்சு முகம் கொண்ட ஆனைமுகத்தோன்

ஈரைந்து கரங்களில் பரசும் பாசாங்குசமும்

ஆரமும் மோதகமும் தந்தமுமேந்திய

சூரியனை மிஞ்சும் காந்தியுடையவன்

மாறனும் நாணுறும் பேரெழில் வடிவினன்

பாரெங்கும் புகழ் விளங்கும் கேசவன் மருகன்

வாரணமுகத்தோன் வருமிடர் களைபவன்


ஐந்து முகத்துடன் சிம்மத்தின் மீது அருளும் #ஹேரம்ப_கணபதி, மிகவும் அரிதான இந்த மூர்த்தி #நாகை மற்றும் தமிழகத்தில் சில ஆலயங்களில் மட்டுமே வழிபாட்டில் உள்ளார்.

ஹேரம்ப கணபதி என்பது விநாயகரின் 32 வடிவங்களில் 11 வது திருவுருவம் ஆகும். ஐந்து முகங்களை கொண்ட விநாயகர் திருவுருவம் நமது நாட்டை விட அண்டை நாடான நேபாளத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. தாந்திரிய வழிபாட்டுக்கு ஏற்ற திருவுருவமாக ஹேரம்ப கணபதி விளங்குகிறார்.

ஹேரம்ப என்ற சமஸ்கிருத சொல்லிற்கு அர்த்தம் “உதவியற்றவர்களை பாதுகாப்பவர்” என்று பொருள். முத்தல புராணம், பிரம்ம வை வர்த்த புராணம், பத்ம புராணம், சிந்தியாகமம் மற்றும் கணேச புராணத்தில் ஹேரம்ப கணபதி என்ற பெயர் இடம் பெற்றுள்ளது.

 பசுமை கலந்த கருமை நிறத்துடன் ஐந்து முகத்துடன் காணப்படுவார். அபயம், விரதம், பாசம், தந்தம், அட்சமாலை, மாலை, பரசு, சம்மட்டி, மோதகம், பழம் என பத்து கரங்களில் தாங்கி சிம்ம வாகனத்தில் அமர்ந்து இருப்பதே இவர் திருவுருவம்.



நாகையில் தசரதர் வழிபட்ட சனீஸ்வரர் nagai sani bagavan

சனீஸ்வரர், ரோகிணி நட்சத்திற்குள் பிரவேசிக்கும் காலத்தில், "ரோகிணி சகடபேதம்' என்னும் பஞ்சம் உண்டாகும். அயோத்தியை ஆட்சி செய்த தசரதர் (ஸ்ரீ ராமரின் தந்தை), தனது நாட்டில் இந்த பஞ்சம் உண்டாகப்போவதை அறிந்தார். எனவே, நாட்டு மக்களின் நலன் கருதி அவர், சனீஸ்வரனை எதிர்த்து போரிடச் சென்றார். 

🌷 அப்போது சூரியபகவான் அவரிடம், சனியை வெல்வது எளிதல்ல என்றும், அவரை எதிர்ப்பதை விட, பணிந்து வணங்குவது நல்லது என்றும் அறிவுரை கூறினார். அதன்படி தசரதர், நாகையில் உள்ள சிவனை வழிபட்டு, சனீஸ்வரரின் பார்வையிலிருந்து தப்ப அருளும்படி வேண்டினார். சிவனின் ஆணையால், சனீஸ்வரர் தசரதருக்கு காட்சி தந்தார். அவரிடம் தன் நாட்டில் பஞ்சம் ஏற்படாதிருக்க அருளும்படி வேண்டினார். 

🌷 சுயநலமின்றி நாட்டு நலனுக்காக தன்னையே எதிர்க்கத் துணிந்த தசரதனைக் கண்டு மகிழ்ந்த சனீஸ்வரர், அவரை பாராட்டியதோடு, பஞ்சம் ஏற்படாமல் அருளினார். இவர், தசரதரின் வேண்டுதலுக்காக இங்கேயே தெற்கு நோக்கி எழுந்தருளினார்.

இவருக்கு அருகில், நவக்கிரக மண்டபத்திலுள்ள கிரகங்கள் அனைத்தும், சிவனை பார்க்கும் விதமாக மேற்கு நோக்கியிருக்கின்றன.

வழிபடும் முறை:

🌷 இங்கு நவக்கிரகத்தை சுற்றி முடித்து தெற்கு நோக்கிய சனிபகவானே பக்காவாட்டில் நின்றவாறு மேற்கு நோக்கி சனி பகவானின் பாதத்தையும் , நமக்கு நேரெதிரே கிழக்கு நோக்கி அமைந்த மகாலட்சுமி சன்னதியை வணங்குவது சகல ஐஸ்வர்யம் தரும் என்பது ஐதிகம்.

🌷 வடமொழியில் தசரதர் இயற்றிய சனிபகவான்  ஸ்தோத்திரம் ..

தசரதன் வாக்கு தேவதையாகிய சரஸ்வதி தேவியை தியானித்து பின் சனிபகவானைக் குறித்து ஸ்தோத்திரம் செய்யத் தொடங்கினான்..

நம கிருஷ்ணாய நீலாய 

சதகண்ட நிபாய ச

நமகாலாக்னிரூனாய 

க்ருதாந்தாய ச வை நம

நமோ நிமலாம்ஸ தேஹாய 

தீர்கச்மரு ஜடாய ச

நமோ விசால நேத்ராய 

சுக்ஷ்கோதர பயாக்ருதே

நம புஷ்கல காத்ராய ஸ்தூல 

ரோம்ணேத வை நம

நமோ தீர்க யசுஷ்காய 

காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே

நமேஸ்த கோடாக்ஷாய 

துர்நிரீச்ரயாய வை நமே

நமோ கோராய ரெளத்ராய 

பீஷ்ணாய கபாலிநே

நமஸ்தே ஸர்வ பக்ஷாயபலீமுக நமோஸதுதே

சூர்ய புத்ர நமஸ்தேஸ்து 

பாஸ்கர பயதாய ச

அதோத்ருஷ்டே,நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே

நமோ மந்த கதே,துப்யம் நிஸிம்த்ரஷாய நமோஸ்துதே

தபஸா தகத் தேஹாய 

நித்யப் யோக ரதாய

நமோ நித்யம் க்ஷதார்த்தாய 

அத்ருப்தாய ச வை நம

ஞான சக்ஷுர் நமஸ்தேஸ்து கச்யபாத்தேஜ ஸுநவே

துஷ்டோ தகாசி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸு தத்க்ஷணாத்...

இந்த ஸ்தோத்திரன் விளக்கம் :

🌷 கரியவனே, நீல நிறம் படைத்தவனே, நீலகண்டன் போல் சிவந்த காலாக்னி போன்ற உருவன் உடையவனே, உன் கருணையைப் பெற வேண்டி மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். உயர்ந்த தேகம் படைத்தவனே. உன்னை வணங்குகிறேன் . அகன்ற விழிகளையுடையவனே உன்னை வணங்குகிறேன். 

🌷 பயங்கரமான தோற்றம் உடையவனே, உன்னை நான் வணங்குகிறேன். புஷ்கல கோத்திரத்தில் பிறந்தவனே, தடித்த ரோமம் உடையவனே, உன்னை வணங்குகிறேன். அகன்ற தாடை உடையவனே ,ஜடாமுடி தரித்தவனே, அகன்ற கண்களும், ஒட்டிய வயிறுமாக பயங்கரமான தோற்றமுடையவனே உன்னை வணங்குகிறேன். சூரிய புத்திரனே, சூரியனுக்கு பயத்தை உண்டாக்கக்கூடியவனே, மெதுவாக நடப்பவனே, நீண்ட தவத்தால் வருந்திய தாகம் உடையவனே, யோகத்தில் நிலைத்து நிற்பவனே, உன்னை வணங்குகிறேன். ஞனக்கண் உடையவனே, கச்யப் குமாரனாகிய சூரியனின் புத்திரனே, உன்னை வணங்குகிறேன்.

🌷 சனிபகவானே, நீ கருணைக் கட்டினால் உன்னுடைய அன்புக்கு பத்திரமான மனிதன் மகாராஜனாகிறன். யானை,சேனை,படைகளும் அந்தஸ்தும் பெறுகிறான். அதேபோல் உன்னுடைய கோபத்திற்கு ஆளாபவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்கணமே எல்லாவற்றையும் இழந்து பரம தரித்திரனாகி விடுகிறான்.

🌷 ஏ சனி பகவானே யாராக இருந்தாலும் அவர்கள் மேல் உன் பார்வை பட்டுவிட்டால் அவர்கள் வேரோடு அழிந்து போகிறார்கள் ஆகையால் நீ அனுக்கிரஹ மூர்த்தியாக கருணைக்கண் கொண்டே நீ பார்க்க வேண்டும். யாரையும் கோபப்பார்வை பார்க்க வேண்டாம். உன்னைத் தொழுது சேவை செய்கின்ற பாக்கியத்தை அளிக்க வேண்டும் என்று தசரதன் பிரார்த்தனை செய்தான்.

🌷 மஹா பகவானும், பயங்கரமனவனும், கிரகங்களுக்கு அரசனுமான சனிபகவான் இந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக , "ஏ ராஜேந்திரா, உன்னிடம் நான் மிகவும் பிரியமுள்ளவனாகி விட்டேன் உன்னுடைய ஸ்தோத்திரம் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியளிக்கிறது உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்றார் .

அதைக் கேட்ட தசரதன் , "ஏ செளரி இன்று முதல் யாருக்கும் துன்பம் அளிக்கக்கூடாது. தேவர்,அசுரர்,மனிதரானாலும்,பறவைகள்,விலங்குகள்,ஊர்ந்து செல்லும் ஜந்துக்களானாலும் எவர்க்கும் தீங்கு செய்யலாகாது என்றார்