15 May 2021

பரசுராமர் பூஜை செய்த கார்முகேஸ்வரர்

சித்திரை மாதம் வரும் அக்ஷய திரிதியை  தினத்தில் பகவான் ஸ்ரீ பரசுராமரின் அவதார தினமாகவும் கருதப்படுகிறது.


மகாவிஷ்ணுவின் அம்சமான இவர் நாகை காரோணத்தில் #சிவபூஜை செய்த புராண தொடர்பைப் பற்றியும், தனிக்கோயிலாக நிலைபெற்று இருந்த மூர்த்தி இடம்பெயர்ந்த வரலாற்று நிகழ்வையும் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.


#புராணத்தொடர்பு


ஜமதக்னி முனிவர், ரேணுகா தேவி ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் பரசுராமர். ஒரு சமயம் அவரது தாய் ரேணுகா தேவி ஆசிரம தேவைகளுக்காக நீர் எடுக்க செல்கையில் ஆற்றில் #கார்த்தவீரியன் எனும் அரசனின் உருவம் தெரிந்தது கண்டு தனது கற்பின் நெறியில் இருந்து சற்று தவறினார். 


இதனை அறிந்த ஜமதக்கினி முனிவர் #ரேணுகா தேவியை சிரச்சேதம் செய்யும்படி பரசுராமருக்கு ஆணையிட்டார். "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" என்ற வாக்கினை கடைபிடித்த பரசுராமரும் அவ்வாரே செய்தார். இதனை அறிந்த கார்த்தவீரியன் #ஜமதக்னி முனிவரை கொன்றான். 


தன் தாய் தந்தை இருவரும் இறப்பதற்கு காரணமான கார்த்தவீரியன் மீது பரசுராமர் கோபம் கொண்டு பழிதீர்க்க எண்ணினார் . பின்னர் தன் தாயை கொன்ற குற்றம் நீங்க #நாகை_காரோணம் அடைந்து ஆதிபுராணர் காயாரோகண சுவாமியை வழிபட்டார்.


 பின் #தேவநதி என்று போற்றக்கூடிய உப்பனாறு கரையில் சிவலிங்கமும் தீர்த்தம் அமைத்து வழிபட்டு வந்தார். அதன் பயனாய் சிவபெருமான் காட்சியளித்து பரசுராமர் அவர் தாயை கொன்ற குற்றம் நீக்கி, வலிமை கொண்ட அரசனை வெற்றிகொள்ள #கார்முகம் ஏனும் வில்லினை அருளினார். அதனைப் பெற்ற பரசுராமரும் கார்த்தவீரியனை அழித்தார்.


#வரலாற்று_நிகழ்வு


பரசுராமருக்கு அருளிய கார்முகேஸ்வரர் இறைவனுக்கு தனிக் கோயில் அமைத்து #கார்முகேசம் என்ற பெயரில் பலகாலம் உப்பனாறு கரையினில் விளங்கி வந்தது.


16ஆம் நூற்றாண்டில் நாகப்பட்டினத்தில் நிர்வாக அதிகாரம் பெற்றிருந்த #டச்சுக்காரர்கள் இக்கோயில் இருந்த இடத்தில் கோட்டை அமைக்க எண்ணி அதனை அப்புறப்படுத்தினர் என்று தெரிகிறது.


இக்கோயிலில் இருந்து இடம்பெயர்ந்த மூல லிங்க மூர்த்தி தற்போது நாகை #நீலாயதாட்சி அம்மன் கோயிலில், காயாரோகண சுவாமி பிரகார திருச்சுற்றில் மாவடி பிள்ளையார் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். 


மேலும் கோஷ்ட மூர்த்தியாக இருந்த #முருகப்பெருமான் தற்போது தனிக்கோயிலாக குமரக் கோயிலில் மூலவராக எழுந்தருளி உள்ளார். கார்முகேசம் கோயில் முன்பு இருந்த இடத்தை குறிக்கும் விதமாக தற்போது அங்கே சம்மட்டி #பிள்ளையார் அவ்விடத்தை காத்து வருகிறார். 


இத்தகைய புராண, வரலாற்று நிகழ்வுகளை பலரும் அறியாமையால், முன்பு மூலவராக தனிக்கோயிலில் வீற்றிருந்த #கார்முகேஸ்வர் மூர்த்தி தற்போது பக்தர்களின் கவனிப்பாரின்றி உள்ளார். இனியாவது இவரின் மகத்துவம் உணர்ந்து வழிபடுவோம். 🙏


மேலும் நாகப்பட்டினம் திருக்கோவில்கள் பற்றிய பதிவுகளை பெற நமது நாகை காரோணம் முகநூல் பக்கத்தை பின்தொடரவும், மற்றும் நாகை ஆலயங்கள் என்ற குழுவிலும் இணைந்து பயன்பெறுங்கள். 


#NagaiKaronam 🌷 #NagaiTemples




31 Mar 2021

சேத்திர கோவை & விண்ணப்பக் கலிவெண்பா

 ஸ்ரீ சுப்பிரமணியக் கடவுள் சேத்திரக் கோவை பிள்ளைத்தமிழ் || வாரானைப் பருவம் 


தாணுமா லயனுடன் மயேசுரர் சதாசிவர்

          சச்சிதா னந்தசாந்தர்

தந்தநவ சத்தியருள் போகாங்க மூர்த்திகள்

          தருமட்ட வித்தியேசுரர்

பேணுமெழு கோடிமா மந்திரே சுரரைந்து

          பேதமா மாகேசுரர்

பேதமொன் றில்லாத நந்திமா காளர்சொல்

          பிருங்கியுட னைங்கரத்தோன்

பூணிடபர் நீள்கௌரி தண்டியெண் டிசைநாதர்

          போற்றுந்த சாயுதங்கள்

பூமண்ட லத்திலுள தெய்வங்கள் வேதங்கள்

          புகழ்கொண்ட தேவர்முனிவர்

காணவரு சிவராச தானியெனு நாகைவரு

          கந்தசுவா மிவருகவே

கைகண்ட அடியர்பணி மெய்கண்ட வேலவன்

          கருணையங் கடல்வருகவே.  


- காஞ்சி சிதம்பர முனிவர் 


    தாணு - உருத்திரன். அட்டவித்தியேசுரர் - அனந்தர், சூக்குமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகவுருத்திரர், திரிமூர்த்தி, சீகண்டர், சீகண்டி என்னும் எண்மர். இவர் அதிகா ரமலம் ஒன்றே உடையவர்.


------------------------------------------------------------------------------

தூத்தகைய பாகைக்கார் என்னும் பணிமொழியார் வாழ்த்தோவா

நாகைக்கா ரோணம் நயந்தோனே – 


பொருள்

காய்ச்சிய பாகு கசப்பு என்று சொல்லும்படியான, தூய அழகிய, பணிவான சொற்களைப் பேசும்

மங்கையர்  வாழ்த்தும் ஒலி எப்போதும் ஒலிக்கும் திருநாகைக்காரோணத்து சிவபெருமானே

உம்மை வணங்குகிறேன். 


திருவருட்பிரகாசவள்ளலார் – விண்ணப்பக்கலிவெண்பா

29 Mar 2021

கணபதி தாசர் நெஞ்சறி விளக்கம்

 நாகை நாகநாதர் மீது கணபதிதாசர் சித்தரின் நெஞ்சறி விளக்கம் பாடல்


விநாயகர் காப்பு


வஞ்சக மனத்தி னாசை மாற்றிய பெரியோர் தாளில்

கஞ்சமா மலரிட் டோதுங் கணபதி தாசன் அன்பால்

நெஞ்சறி விளக்க ஞான நீதிநூல் நூறும் பாடக்

குஞ்சர முகத்து மூலக் குருபரன் காப்பதாமே.


நூல்


1. பூமியிற் சவுந்த ரப்பெண் புணர்ந்திடு நாகை நாதர்

நாமமெந் நாளும் நாவி னவின்றுசெந் தமிழாற் பாடிக்

காமமு மாசா பாசக் கன்மமு மகற்றி மூல

ஓமெனு மெழுத்தைந் தாலே யுனையறிந் துணர்வாய் நெஞ்சே!


2. தந்தைதாய் நிசமு மல்ல: சனங்களு நிசமு மல்ல

மைந்தரும் நிசமு மல்ல மனைவியும் நிசமு மல்ல;

இந்தமெய் நிசமு மல்ல; இல்லறம் நிசமு மல்ல;

சுந்தர நாகை நாதர் துணையடி நிசம்பார் நெஞ்சே!


3. காண்பது மழிந்து போகும்; காயமு மழிந்து போகும்;

ஊண்பொருள் அழிந்து போகும்; உலகமும் அழிந்து போகும்;

பூண்பணி நாகை நாதர் பொற்பதம் அழியா தென்று

வீண்பொழு தினைப்போக் காமல் வெளிதனில் ஒளிபார் நெஞ்சே!


4. மனமெனும் பேயி னாலே மாய்கையாம் இருடான் மூடச்

சனமெனும் ஆசா பாசந் தலைமிசை ஏற்றிக் கொண்டு

கனமெனுஞ் சுமையைத் தூக்கிக் கவலையுற் றிட்டாய் நீயுற்

பனமெனும் நாகை நாதர் பதம்பணிந் தருள்சேர் நெஞ்சே!


5. இருவினைப் பகுதி யாலே எடுத்திந்தத் தேகந் தன்னை

மருவிய நானான் என்று மாயையில் அழிந்தாய் நீதான்;

குருவினாற் குறியைப் பார்த்துக் குண்டலி வழியே சென்றங்கு

உருவினால்நாகை நாதர் உண்மையை உணர்வாய் நெஞ்சே!


6. வானதில் இரவியுன்றன் வயதெலாங் கொடுபோ கின்றான்;

தானதை யறிந்தி டாமல் தரணியி லிருப்போ மென்றே

ஊனமாம் உடலை நம்பி உண்மைகெட் டலைந்தாய் நீமெய்ஞ்

ஞானமே பொருளாய் நாகை நாதரைத் தொழுவாய் நெஞ்சே!


7. எட்டுடன் இரண்டு மாகி இருந்ததோர் எழுத்தைக் காணார்;

விட்டதோர் குறியுங் காணார்; விதியின்றன் விவரங் காணார்!

தொட்டதோர் குறியுங் காணார்: சோதிமெய்ப் பொருளுங் காணார்:

கிட்டுமோ நாகை நாதர் கிருபைதா னுரைப்பாய் நெஞ்சே!


8. வஞ்சக நடைம ரத்தில் வளர்வினைக் கொம்பி லேறிச்

சஞ்சல மனக்கு ரங்கு தாவியே அலைய நீதான்

பஞ்சபா தகங்கள் செய்து பாம்பின் வாய்த் தேரை யானாய்;

நஞ்சமு தருந்து நாகை நாதரை வணங்கு நெஞ்சே!


9. உடலினை நிசமென் றெண்ணி உலகெலாம் ஓடி யாடிக்

கடல்மரக் கலப்பாய்க் கம்பக் காகம் போற் கலக்க முற்றாய்;

திடமருள் குருவின் பாதஞ் சிக்கெனப் பிடித்து நின்றால்

நடமிடு நாகை நாதர் நற்பதம் பணிவாய் நெஞ்சே!


10. வீட்டிருள் போக வென்றே விளக்கினை ஏற்றி வைத்தால்

வீட்டிருள் எங்கே போச்சு? விளக்கொளி எங்கே போச்சு?

கூட்டினில் நடஞ்செய் ஈசன் குறிப்பறி யாமல் நீதான்

நாட்டினில் அலைந்தாய் நாகை நாதரை வணங்கு நெஞ்சே!


11. காட்டினில் மேவு கின்ற கனபுழு வெல்லாம் பார்த்து

வேட்டுவ னெடுத்து வந்து விரும்பியக் கிருமி தன்னைக்

கூட்டிலே அடைத்தும் அந்தக் குளவிதன் உருவாய்ச் செய்யும்

நாட்டினில் நீதா னாகை நாதரை வணங்கு நெஞ்சே!


12 குளத்திலே கிடக்கும் ஆமை குளக்கரை முட்டை யிட்டுக்

குளத்துநீர்க் குள்ளிருந்து குறிப்புடன் நினைக்கும் போது

குளத்திலே புதைத்த முட்டை கருவுரு வானாற் போலுன்

உளத்திலே நாகை நாதர் உருவறிந் துணர்வாய் நெஞ்சே!


13. மருவிய சிலந்திப் பூச்சி வயிற்றினிலே நூலுண் டாக்கி

உருவுடன் கூடு கட்டி உகந்ததி லிருக்கு மாபோல்

குருபர னுனது கூட்டில் குடியிருப் பதனைப் பார்த்து

பெருவெளி நாகை நாதர் பெருமைகண் டருள்சேர் நெஞ்சே!


14. வாரணம் முட்டையிட்டு வயிற்றில்வைத் தனைத்துக் கொண்டு

பூரணக் கூடுண் டாக்கிப் பொரித்திடுங் குஞ்சு போலக்

காரணக் குருவை மூலக் கனல்விளக் கதனாற் கண்டு

நாரணன் அறியா நாகை நாதரைப் பணிவாய் நெஞ்சே!


15. புல்லினுள் இருக்கும்பூச்சி பொருந்தவெண் ணுரையுண் டாக்கி

மெல்லிய தண்ணீர் வீட்டில் வெயிற்படா திருக்கு மாபோல்

சொல்லிலே நாகை நாதர் தோய்ந்திடச் சூட்சங் கண்டாற்

கல்லிலே தெய்வ மில்லைக் கருத்திலே தெய்வம் நெஞ்சே!


16. தண்ணீரி லிருக்கும் மீன்கள் தண்ணீரிற் கருவைப் பித்திக்

கண்ணினாற் பார்க்கும் போது கயலுறு வானாற் போல

நண்ணிய குருவைக் கண்டு நாதனல் லுருவைச் சேர்த்து

விண்ணின்மேல் நாகை நாதர் மெல்லடி வெளிபார் நெஞ்சே!


17. இலகிய ஊசிக் காந்தம் இரும்பினை இழுப்பதேபோல்

உலவிய குருப ரன்றாள் உன்னையாட கொண்ட தன்மை

நலமுடன் அறிந்த நீதான் நாயனை யறிந்தி டாமல்

நிலமிசை யலைந்தாய் நாத லிங்கரை நினைப்பாய் நெஞ்சே!


18. சூரிய காந்தம் பஞ்சைச் சுட்டிடுஞ் சுடரே போலக்

கூரிய அடிமூ லத்தின் குண்டலிக் கனலை மூட்டி

வீரிய விருந்து ணாத வெளிவீடு தன்னிற் சென்றே

ஆரிய நாகை நாதர் அடியினை தொழுவாய் நெஞ்சே!


19. ஐவகைப் பூதந் தொண்ணூற்றாறுதத் துவங்க ளாட்டும்

தெய்வமுன் னிடத்தி ருக்கத் தேசத்தில் அலைந்தாய் நீதான்;

பொய்வசத் தேக பந்தம் போக்கிமெய்ப் பொருளை நோக்கி

ஐவரோ ரிடத்திற் கூடும் ஆனந்தம் அறிவாய் நெஞ்சே!


20. ஊனமாம் உடலம் பொய்யென் றுணர்ந்துமெய் யறிவைக் கண்டு

தானவ னான போதே சற்குரு பதத்தைச் சேர்ந்தாய்.

வானதி லிரவி திங்கள் வந்துபோ வதனைக் கண்டால்

ஞானவான் நாகை நாதர் நடனமுங் காண்பாய் நெஞ்சே!


21. கிட்டுமோ ஞான யோகம்? கிடைக்குமோ குருவின் பாதம்?

கட்டுமோ மூல வாசி? காணுமோ கயிலை வீடு?

எட்டுமோ நாக லிங்கம்? ஏற்றுமோ தீப சோதி?

தட்டுமோ பளிங்கு மேடை தனையறியார்க்கு நெஞ்சே!


22. ஒருபதந் தன்னைக் தூக்கி ஒருபுதற் தன்னை மாற்றி

இருபதம் ஆடு கின்ற இயல்பைநீ அறிந்தா யானால்

குருபத மென்று கூறுங் குறிப்புனக் குள்ளே யாச்சு

வருபத நாகை நாதர் மலரடி காண்பாய் நெஞ்சே!


23. நாடென்றும் நகர மென்றும் நலந்திகழ் வாழ்வ தென்றும்

வீடென்றும் மனையா ளென்றும் மிக்கதோர் மைந்தர் என்றும்

மாடென்றுஞ் சம்பத் தென்றும் வாஞ்சை கொண்டலைந்தாய் இந்தக்

கூடொன்றும் அழிந்தாற் கூடத் தொடருமோ கூறு நெஞ்சே!


24. ஏட்டிலே எழுதும் நூல்கள் எத்தனை படித்தும் நீதான்

காட்டிலே எறித்த திங்கள் கானலிற் சலம்போ லானாய்;

நாட்டிலே தெய்வமென்று நடந்தலை யாம லுன்றன்

கூட்டினில் நாகை நாதர் குறிப்பறிந் துணர்வாய் நெஞ்சே!


25. நற்பிடி சோறு வைத்தால் நாயனென் றறிந்து கொண்டு

சொற்படி பின்னே ஓடுஞ் சுணங்கன் போற்குணமு ண்டாகி

விற்பிடித் தடிக்கப் பெற்ற விமலனார் கமல பாதம்

பிற்பிடி பிடித்து நாகை நாதரைக் காண்பாய் நெஞ்சே!


26. விரகநா யகனைத் தேடி விரும்பிய மங்கை போலக்

குரவனா ருபதே சத்தைக் குறிப்புடன் நிதமுந் தேடி

இரவுடன் பகலு மான இருபத நடனங் கண்டால்

சிரமதில் நாகை நாதர் சிலம்பொலி கேட்கும் நெஞ்சே!


27. வாரணன் அயன்மால் ருத்ரன் மகேசுரன் சதாசி வன்றன்

காரண மாறு வீட்டிற் கலந்தவ ரிருக்கும் அப்பால்

பூரண நிராதா ரத்தின் புதுமையுங் கண்டு போற்றி

ஆரண நாகை நாதர் அடியிணை தொழுவாய் நெஞ்சே!


28. மோரிலே நீரை விட்டால் முறிந்திடுங் கொள்கை போலக்

காரிய குருவை விட்டுக் காரண குருவைக் கண்டு

சீரிய சாலு நீர்போற் சேர்ந்திரு வருமொன்றாகி

ஆரிய நாகை நாதர் அடிபணிந் தேத்து நெஞ்சே!


29. நித்திரை வந்தபோது நினைவுதானிருந்த தெங்கே?

புத்திரர் தாமுமெங்கே? புணர்ந்திடும் மனைவி எங்கே?

பத்திர பூசை எங்கே? பல தொழில் செய்வதெங்கே?

சிற்பர நாகை நாதர் செயலினை அறிவாய் நெஞ்சே!


30. வேடத்தைத் தரித்தாலென்ன? வெண்பொடி யணிந்தா லென்ன?

நாடொத்து வாழ்ந்தாலென்ன? நதிதலங் கண்டா லென்ன?

தேடொத்த நாகை நாதர் சீரடி சிந்தை தேர்ந்தெ

ஓடைத்தா மரையின் பூப்போல் உயுர்வர்நற் பெரியோர் நெஞ்சே!


31. தள்ளிடு சுணங்கன் போலச் சாத்திரம் படித்தா லென்ன?

வெள்ளிய துகிலைத் தாவி வேட்டியாய்த் தரித்தா லென்ன?

உள்ளிருந் தாட்ட விக்கும் ஒருவனை உருகித் தேடித்

தெள்ளியல் நாகை நாதர் செயல் காணார் மாந்தர் நெஞ்சே!


32. பளிங்குற்ற குளத்து நீரைப் பாசிதான் மறைத்தாற் போலக்

களங்கற்ற புத்தி தன்னைக் காமந்தான் மூடிக்கொண்டு

விளங்கத்தான் செய்வதில்லை மெய்யறி விளக்கை யேற்றி

முழங்கத்தான் நாகை நாதர் முழுமொழி பகர்வாய் நெஞ்சே!


33. மண்ணதை எடுத்து நீரால் வகையுடன் பிசைந்து பாண்டம்

பண்ணியே கனலாற் கட்டுப் பாதையென் பதுதான் விட்டே

அண்ணலார் வாய்வா காச மடைந் தஐம் பூதக் கூட்டை

விண்ணமால் நாகை நாதர் விளையாட்டென்றறிவாய் நெஞ்சே!


34. கண்ணாடி தன்னிற் றோற்றுங் காரண உருவம் போல

உண்ணாடி மூலா தாரத் துதித்தசற் குருவைக் கண்டு

விண்ணாடி வெளியைப் பார்த்து விளக்கொளி மகிமை சேர்ந்தால்

மண்ணாடு நாகை நாதர் வந்துனை ஆள்வார் நெஞ்சே!


35. உருவமும் நிழலும் போல உகந்து பின்றொடரும் நாயன்

பருவங்கண் டறிந்தி டாமற் பருந்தின் காற் பட்சி யானாய்.

பருவனை நடுவ ணைக்குட் பொருந்திய நடனங் கண்டால்

குருபர நாகை நாதர் கூப்பிட வருவார் நெஞ்சே!


36. கணக்கிலா எழுவ கைக்குட் கலந்துரு எடுத்த இந்நாள்

பிணக்கிலா நரசென் மந்தான் பிறப்பதே அரிதென் றெண்ணிக்

குணக்கிலாக் குணமுண்டாகிக் கோதிலா ஞானம் போற்றி

இணக்கிலா நாகை நாதர் இணையடி சேர்வாய் நெஞ்சே!


37. அரியதோர் நரசென் மந்தான் அவனியிற் பிறந்து பின்னாள்

பெரியபே ரின்ப ஞானம் பெறுவதே யரிதென் றெண்ணி

உரியவே தாந்தத் தன்மை உரைக்குமா சானைப் போற்றித்

தெரியொணா நாகை நாதர் சீர்ப்பதந் தேடு நெஞ்சே!


38. பசும்பொனின் நாம மொன்றிற் பணிதிவே றானாற் போலே

விசும்பெலாங் கலந்த சோதி வெவ்வேறு தெய்வமாகி

உசும்புசீ வாத்து மாக்கள் உடல்பல வான தன்மை

கசிந்துகண் டுருகி நாகை லிங்கரைக் காண்பாய் நெஞ்சே!


39. விண்டவர் கண்டதில்லை விட்டதோர் குறைமெய்ஞ் ஞானம்

கண்டவர் விண்டதில்லை; ககனவம் பலத்தின் காட்சி

அண்டர்கோ டஞ்சை யீசன் அடியிணை வாசி யுச்சி

மண்டல நாகை நாதர் வாழ்பதி வழிபார் நெஞ்சே!


40. காதுடன் நாக்கு மூக்குக் கண்ணுயிர் சிரங்க ருத்து

மாதுட னீச னாடு மலர்ப்பதம் அறிந்தி டாமல்

வாதுசொற் றர்க்க நூல்கள் வகைபல படித்தா லென்ன?

சாதுவாய் நாகை நாதர் தாள்கண்டு தனைப்பார் நெஞ்சே!


41. தீபத்தை மலரென் றெண்ணிச் சென்றிடு விட்டில் போலக்

கோபத்தின் கனலில் வீழ்ந்து கொடியதோர் பிறவி பெற்றாய்;

ஆபத்து வந்தா லுன்னோ டியாவர் தாம் வருவார்? அந்தக்

கோபத்தை மறந்து நாகை லிங்கரைத் தொழுவாய் நெஞ்சே!


42. மின்மினிப் பூச்சி தன்னுள் மெய்யொளி கண்டாற் போல

உன்மன மொடுங்கி யேயுன் உள்ளொளி கண்டாற் பின்னைச்

சென்மமு மில்லை; அந்தச் சிவத்துளே சேர்வாய்; நாளும்

பொன்மகள் புகழும் நாகை நாதரைப் போற்று நெஞ்சே!


43. செம்பினிற் களிம்பு போலச் சீவனுஞ் சடமுங் கூடி

நம்பின உடலைக் கண்டு நல்லுயிர் வடிவங் காணாய்!

வெம்பிய காம மாயை விட்டுமெய்ப் பொருளைத் தேடிக்

கும்பிய நாகை நாதர் கூத்தாடல் காண்பாய் நெஞ்சே!


44.இலவுகாத் திருந்த பட்சி ஏங்கியே பறக்கு மாபோல்

உலகமே பொருளாய் நம்பி ஒருபலன் அற்றாய் நீதான்;

தலைமையாங் குருவைப் போற்றித் தாளிணை வாசி கண்டால்

நிலைமையாம் நாகை நின்னிடை நிற்பார் நெஞ்சே!


45. ஆத்தும லிங்கங் கண்டுள் அன் பெனும் மலரை நன்றாய்ச்

சார்த்தியே பிரண வத்தாற் றனிப்பெரு வட்டஞ் சூட்டிப்

போற்றியே தீப மூலப் புரிசுடர் விளக்கும் பார்த்துப்

போற்றியே நாகை நாதர் பொன்னடி பூசி நெஞ்சே!


46. சுக்கில விந்து தானுஞ் சுரோணிதக் கருவிற் கூடிப்

பக்குவக் குழவி யாகிப் பையுளே அடைந்த பாவை

அக்குவை யதனை விட்டிங் கவனியிற் பிறந்த சூட்சம்

அக்கினி நாகை நாதர் அமைத்ததென் றறிவாய் நெஞ்சே!


47. நீக்கமில் லாமலெங்கும் நிறைந்ததோர் வெளியை யுன்னுள்

தாக்கியே அறிவி னாலே தனைமறந் திருந்து பார்வை

நோக்கியே நிட்டை கூடி நொடியரை நிமிடம் வாங்கித்

தூக்கியே நாத நாகை நாதரைத் தொழுவாய் நெஞ்சே!


48. கடலென விளங்கும் வேத காரணக் குருவைக் கண்டுன்

உடல்பொருள் ஆவி மூன்றும் உகந்தவர்க் குதவி நீதான்

திடமுடன் பூர்த்தி யாகிச் செந்தூசிற் பரத்திற் சேர்ந்து

நடமிடும் வாசி நாகை நாதரை நாடு நெஞ்சே!


49. நாசியி னுனியின் மீது நடனமே செய்யுந் தேசி

வாசிவா வென்றே யன்னுள் வாங்கியே மௌன முற்றுக்

காசிமா நதியுந் தில்லைக் கனகவம் பலமுங் கண்டு

பூசித்து நாகை நாதர் பொன்னடி வணங்கு நெஞ்சே!


50. தாவுநல் லுதய காலந் தபனன்தே ரெழும்பக் கண்டு

கூவுமாக் குக்கு டங்கள் கூப்பிடு காட்டிற் சம்பு

மேவியே நீயும் அந்த மெய்யறி வறிந்தா யானால்

மூவர்கோ னாகை நாதர் முன்வந்து நிற்பர் நெஞ்சே!


51. வஞ்சியர் மீதில் ஆசை வைத்திந்த வைய மீதில்

சங்கையில் லாத துன்பச் சாகரந் தனிலே வீழ்ந்தாய்;

நங்கைமேல் வைத்த பாசம் நாயன்மேல் வைத்து நீயும்

செங்கையால் நாகை நாதர் சீர்பதந் தொழுவாய் நெஞ்சே!


52. அன்றிலும் பேடும் போல அடிமையுங் குருவுங் கூடிக்

கொண்டிருந்த தடிமூ லத்திற் குதித்தெழு வாசி யாடக்

கண்டிமை யாத நாட்டக் கருணையால் வெளியி லேறிப்

பண்டித நாகை நாத லிங்கரைப் பணிவாய் நெஞ்சே!


53. குலங்கெட்டுப் பாசங் கெட்டுக் கோத்திர பேதங் கெட்டு

மலங்கெட்டுக் கோபங் கெட்டு மங்கையர் ஆசை கெட்டுத்

தலங்கெட்டுத் தானும் கெட்டுத் தனக்குளே வெறும்பா ழாகிப்

பலங்கெட்டு நாகை நாதர் பதங்கொள்வார் பெரியோர் நெஞ்சே!


54. ஓமெனும் பிரண வத்துள் உதித்தவைந் தெழுத்து மாகி

ஆமெனும் அகார பீடத் தமர்ந்திடு வாசி கண்டே

ஊமெனு மௌன முற்றே யூறிடு மதிப்பா லுண்டு

தாமெனும் நாகை நாதர் தாண்டவம் பார்ப்பாய் நெஞ்சே!


55. அலைதனிற் றுரும்பு போலும் ஆலைவாய்க் கரும்பு போலும்

வலைதனில் மானைப் போலும் மயங்கிநைந் தலைந்தாய் நீதான்;

உலைதனில் மெழுகைப் போலும் உருகி மெய்ப் பொருளை யுன்னி

நிலைதனி னின்று நாகை லிங்கரைக் காண்பாய் நெஞ்சே!


56. பொறிவழி யலைந்து மீளும் புலன்களை அடக்கி ஞான

அறிவெனும் விழியினாலே அம்பர வெளியைப் பார்த்தே

உறிதனி லிருக்குங் கள்ளை உண்டுதற் போதம் விட்டு

நெறிதரு நாகை நாதர் நிலைமைகண் டறிவாய் நெஞ்சே!


57. ஆயாத நூல்க ளெல்லாம் ஆய்ந்துநீ பார்த்துங் காமத்

தீயான குழியில் வீழ்ந்து சென்னமுற் றலைந்தா யுன்னின்

காயாத பாலை யுண்டு கனகவம் பலத்தைக் கண்டு

மாயாமா நாகை நாதர் மலரடி வணங்கு நெஞ்சே!


58. ஆதார மாறுந் தாண்டி ஐம்பூத வடிவுந் தாண்டி

மீதான வெளியுந் தாண்டி விளங்கிய பரன்றன் கூத்தை

நீதானும் அறிந்து கொண்டு நின்மல வடிவ மாகி

வேதாந்த நாகை நாதர் மெல்லடி வெளிபார் நெஞ்சே


59. பார்த்திடும் திசைக ளெங்கும் பராபர வெளிதான் கூடிக்

கோத்திடும் வடிவை ஞானக் குருவினா லறிந்து கொண்டு

பேர்த்திடு மிமையா நாட்டத் திருந்துபே ரின்ப வெள்ளம்

வார்த்திட மூழ்கி நாகை லிங்கரை வணங்கு நெஞ்சே!


60. சச்சிதா னந்த மான சற்குரு பதத்தைப் போற்றிக்

கச்சிமா நகர மூலக் கனல்விளக் கதனை யேற்றி

உச்சிமேல் வைத்துப் பார்வை யுணர்வினால் வெளியி லுன்னித்

தச்சிலா வீட்டில் நாகை லிங்கரைத் தழுவு நெஞ்சே!


61. மாரின்ப முலையா ளோடு மன்றிலே நடஞ்செய் வோனைப்

பேரின்ப வீட்டைக் கண்டு பிரணவ விளக்கை யேற்றிச்

சேரின்ப வெளியில் வாசித் திருவிளையாடல் பார்த்தால்

ஓரின்ப நாகை நாதர்க் குகந்துவந் துரைப்பார் நெஞ்சே!


62. நாயனை யறிந்தி டாமல் நானென்னும் ஆண்மை யாலே

ஆயனில் லாத் காலி யாகி நீ யலைய லுற்றாய்:

காயமே கோயி லாகக் கலந்திருந் தவனைக் கண்டு

மாயொணா வாழ்க்கை நாகை நாதரை வணங்கு நெஞ்சே!


63. உருப்படுங் கல்லுஞ் செம்பும் உண்மையாய்த் தெய்வ மென்றே

மருப்புனை மலரைச் சூட்டி மணியாட்டித் தூபங் காட்டி

விருப்பமுற் றலைந்தாய் அந்த வினைமயல் விட்டு நின்னுள்

இருப்பவர் நாகை நாதர் இணையடி பூசி நெஞ்சே!


64. உனைவிட வேறே தெய்வம் உண்டென உலகிற் றேடும்

நினைவதே தெய்வமாகி நீகண்டு நின்றா யானால்

சென்னமாம் பிறவி போகும் சிவத்துளே சேர்க்கு மெங்கோன்:

மனமகிழ் வாசி நாகை நாதர் தாள் வணங்கு நெஞ்சே!


65. ஆசையாம் பாச மாயை அறிவதை மயக்கி யுன்னுள்

ஈசனைத் தேடொட் டாம லிருக்குமவ் விருளைப் போக்கிக்

கோசமா குறியை நோக்கிக் குருபரன் வடிவைக் கண்டு

வாசமா மலரால் நாகை நாதரை வணங்கு நெஞ்சே!


66. கன்றதைத் தேடுங் காறுங் காலியைப் போலே யுன்னுள்

நின்றபே ரொளியைக் கண்டு நினைவெனு மறிவாற் றெய்வம்

ஒன்றெனக் கண்டா யானால் உமையவ ளுடனே தில்லை

மன்றினுள் ஆடும் நாகை நாதர்முன் வருவாய் நெஞ்சே!


67. மடைவாயிற் பட்சி போலே மனந்தனை யடக்கி வாதி

விடையேறு மீசன் பாதம் விரும்பிய பெரியோர் பின்னே

தடையறத் திருந்து ஞான சாதகம் பெற்று நீதான்

புடைசூழ நாகை நாதர் பொன்னடி போற்று நெஞ்சே!


68. சிரமெனுங் குகையி னுள்ளே சிவகயி லாய மன்றில்

அரனிட மமையும் வாசி யாடல்தான் செய்வா ரென்று

பரமமெய்ஞ் ஞான நூல்கள் பகர்வதை யறிந்து பார்த்து

வரமிகு நாகை நாதர் மலரடி வணங்கு நெஞ்சே!


69. கடமதில் நிறைந்து நின்ற கனவொளி போலே யுன்றன்

செடமதில் நிறைந்து நின்ற சீவனை யறிவாற் கண்டு

திடமிகு சீவ சாட்சி தரிசிக்கச் சீவன் முத்தி

இடமரு நாகை நாத ரிணையடி யுணர்வாய் நெஞ்சே!


70. மெய்யருள் விளங்குட் சோதி வெளிதனை அறிவா லுன்னி

ஐயமில் லாமற் காண்போ ரவரின்ப முத்த ரென்று

துய்யமெய்ஞ் ஞான நூல்கள் சொல்வதாற் பரத்தை நோக்கிச்

செய்யதாள் வாசி நாகை லிங்கரைத் தெரிசி நெஞ்சே!


71. முந்தின பிறப்பு வந்த முதன்மையும் அறியாய் இப்பால்

பிந்தின பிறப்பு வந்த பெருமையும் அறியாய் நீதான்:

அந்தரப் பட்சி போல அலைகின்றாய்: அகத்து ளேமுச்

சந்தியை அறிந்து நாகை நாதரைச் சார்வாய் நெஞ்சே!


72. காகத்தின் கண்ணி ரண்டிற் காண்பதுங் கண்ணொன்றே போல்

தேகத்தின் அறிவின் கண்ணைத் திடமுடன் அறிந்து கொண்டு

மோகத்தின் கனலில் வீழா முனைசுழி வாசி பார்த்தால்

ஏகத்தால் நாகை நாத ரிணையடி சார்வாய் நெஞ்சே!


73. ஓட்டிலே பட்ட பட்சி உழல்கின்ற நெறிபோ லாசைக்

கட்டிலே மயங்கி மாறாக் கவலையுற் றலைந்தாய் நீதான்;

நெட்டிலே யோடு வாசி நிலைமையாய் நிறுத்தி மேரு

வட்டிலே நாகை நாதர் வாழ்பதி அறிவாய் நெஞ்சே!


74. ஆனைவாய்க் கரும்பு போலும் அரவின்வாய்த் தேரை போலும்

பூனைவா யெலியைப் போலும் புவியில்நைந் தலைந்தாய் ஞானத்

தேனைவாய் அருந்தி முத்தி சோந்திடச் சிவத்தை நோக்கி

ஊனுளே நாகை நாதர் உற்றிட மறவாய் நெஞ்சே!


75. மித்திர குருக்கள் சொல்லை மெய்யென்று கல்லை வைத்துப்

பத்திர புட்பஞ் சார்த்திப் பணிந்திடும் பாவை நீதான்

சித்திரப் பதுமை போலுஞ் செய்தொழி லொடுங்கி நின்று

புத்தியாய் நாகை நாதர் பொன்னடி போற்று நெஞ்சே!


76. உப்போடு புளிப்புங் கைப்பும் உணர்வினால் அறிந்து நீதான்

எப்போது முனக்குள் நாயன் இருப்பிடம் அறியா தென்னே?

முப்போதுங் குருவைப் போற்றி முனைசுழி வாசி பார்த்தால்

அப்போது நாகை நாதர் அடியிணை அறிவாய் நெஞ்சே!


77. படிக்கவும் நாவி ருக்கப் பணியவுஞ் சிரமி ருக்கப்

பிடிக்கவுங் கரமி ருக்கப் பேணவுங் குருவி ருக்க

நடிக்கவுந் தாளி ருக்க நாடவுங் கண்ணி ருக்க

இடுக்கமுற் றலைந்தாய் நாகை நாதரை இறைஞ்சு நெஞ்சே!


78. அருவுரு வில்லா நாயன் அணுவினுக் கணுவாய் நின்றும்

மருவுபல் லுயிர் கட் கெல்லாம் வடிறுவே றான தன்மை

ஒருவரும் அறியார் நல்லோர் உறுதியா லறிவார்; ஞான

குருபர நாகை நாதர் குறுப்பறிந் துணர்வாய் நெஞ்சே!


79. ஆண்டொறு நூறு கற்பம் ஓளடத மூலியுண்டு

நீண்டதோர் காய சித்தி நெடுநாளைக் கிருந்த பேரும்

மாண்டுதான் போவா ரல்லால் வையகத் திருப்பா ருண்டோ!

தீண்டொணா நாகை நாதர் சீர்ப்பதந் தேடு நெஞ்சே!


80. பொருடனைத் தேடிப் பாரிற் புதைக்கின்ற புத்தி போன்மெய்

அருடனை நிதமுந் தேடி அரனடியதனில் வைத்தால்

இருடனை அகற்றுஞ் சோதி எம்பிரான் முன்னே வந்துன்

மருடனை மாற்றும் நாகை நாதரை வணங்கும் நெஞ்சே!


81. ஆண்டியின் வேடந்தானும் அறிவுடன் எடுத்தி டாமல்

தூண்டிலில் மீனைப் போலத் துள்ளிவீழ்ந் தலைந்தாய் நீதான்

வேண்டிய போது நாயன் மெல்லடி வெளித்தாய்த் தோன்றும்

தாண்டிய வாசி நாகை நாதரைத் தழுவாய் நெஞ்சே!


82. சேற்றிலே நுழைந்தி ருந்த சிறுபிள்ளைப் பூச்சிபோலும்

நீற்றிலே நுழைந்தி ருந்த நேர்மையாம் அழற்சி போலும்

மாற்றுபே ருலகில் நல்லோர் மருவிரி மருவார் சித்தத்

தேற்றியே நாகை நாதர் இணையடி வைப்பாய் நெஞ்சே!


83. நாடகப் பெண்ணை ஆட்டும் நட்டுவன் போலே யுன்றன்

கூடகச் சடத்தை யாட்டுங் குருவைநீ அறிந்தி டாமல்

மூடக மானாய் ஞான முதல்வனை அறிவால் தேடி

ஆடக நாகை நாதர் அடியிணைப் பணிவாய் நெஞ்சே!


84. சத்தியுஞ் சிவமு மாகித் தாண்டவ மாடும் வாசி

சுத்திய மூல நாடிச் சுழுமுனைக் கம்பத்துள்ளே

புத்தியைச் செலுத்தி மேலாம் பொருடனை யெடுக்க வல்லார்

பத்திசெய் நாகை நாதர் பதிதனைப் பார்ப்பாய் நெஞ்சே!


85. நாட்டமாம் அறிவின் கண்ணால் நாயனைப் பருகிப் பார்த்துத்

தேட்டமாங் கருணை பெற்ற சிவனடி யார்கள் தங்கள்

கூட்டமாம் பரத்திற் சென்று குருபணி விடையுஞ் செய்கொண்

டாட்டமா நாகை நாதர் அருள்தர வருவார் நெஞ்சே!


86. காலனை உதைத்த நாயன் காலெனும் வாசி தாளை

மூலநன் மனையிற் கண்டு முப்பதி முப்பாழ் தாண்டிப்

பாலமு தருந்த மேலாம் பராபரை பாதம் போற்றி

மாலயன் அறியா நாகை நாதரை வணங்கு நெஞ்சே!


87. கடுமையாம் பகட்டி லேறிக் கயிற்றொடு சூலமேந்திக்

கொடுமையாங் காலன் வந்து கொண்டுபோம் முன்னே நீதான்

அடிமையா நாதன் பாதம் அனுதினம் மறவா தேத்தில்

நெடுமையா நாகை நாதர் நிலைமைகண்டறிவாய் நெஞ்சே!


88. அரகரா சிவசி வாவென் றனுதினம் மறவா தேத்திச்

சிரகயி லாய வீட்டிற் சிவனைநீ யறிந்து தேடில்

மரகத வல்லி பங்கன் வந்துமுன் காட்சி நல்கிப்

பரகதி கொடுக்கும் நாகை நாதரைப் பணிவாய் நெஞ்சே!


89. நடக்கிலும் வாசி பாரு: நாட்டமும் வாசி பாரு:

முடக்கிலும் வாசி பாரு: முனிசுழி வாசி பாரு:

மடக்கிலும் வாசி பாரு: மறிவிலும் வாசி பாரு:

திடக்குரு நாகை நாதர் திருநடஞ் செய்வாய் நெஞ்சே!


90. போனநாள் வீணாய்ப் போனாற் புதியநாள் கெடவி டாமல்

ஞானநாள் இதுதா னென்று நாடெங்கும் குருவைப் போற்றி

வானநா ளத்திற் சென்னி வழிகண்டு மதிப்பா லூறும்

தேனைநன் கருந்தி நாகை லிங்கரைக் தெரிசி நெஞ்சே!


91. பராதல மெல்லாந் தானாயத் தாவர சங்க மங்கள்

நிராமய மாகக் கோத்து நின்றதோர் பொருளா மந்தப்

புராபர வடிவங் கண்டு பரத்துளே யடக்கி மேலாம்

தராதன மூர்த்தி நாகை லிங்கரைப் போற்று நெஞ்சே!


92. மாணிக்க வாச கர்க்கும் மகிழ்ப்பரஞ் சுந்த ரர்க்கும்

ஆணிப்பொன் திருமூ லர்க்கும் அறுபத்து மூவ ருக்கும்

பேணிக்கொள் பெரியோ ருக்கும் பேறருள் சிவனை யுன்னுள்

தோணக்கண் டிருந்து நாகை லிங்கரைத் தொழுவாய் நெஞ்சே!


93. மகத்துவம் அடைந்த நெஞ்சே! மலமாயை கொண்ட நெஞ்சே!

பகுத்தறி வில்லா நெஞ்சே! பலநினை வான நெஞ்சே!

மிகுத்திடு காம நெஞ்சே! மெய்ப்பொருள் அறியா நெஞ்சே!

செகத்தினிலே நாகை நாதர் சீர்ப்பதந் தேடு நெஞ்சே!


94. காலது மேல தாகக் கனியுண்ணும் வௌவால் போல

மூலநல் வாசி யோடு முறைமையை அறிவாற் கண்டு

சீலமெய்ஞ் ஞான போத சிவயோகந் தன்னைப் பார்த்து

ஞாலமேல் நாகை நாதர் நடனமுங் காண்பாய் நெஞ்சே!


95. உறக்கமும் விழிப்பும் போல உடல்பிறந் திறக்குந் தன்மை

சிறக்கவே அறிந்து மிந்தச் செகவாழ்வை மெய்யென் றெண்ணிக்

குறித்தலை குலாமர் சொல்லைக் குறிப்புடன் நம்ப லாமோ?

மறக்கொணா நாகை நாதர் மலரடி வணங்கு நெஞ்சே!


96. எத்தனை புத்தி சொல்லி எடுத்தெடுத் துரைத்தும் நீதான்

பித்தனைப் போலே யோடிப் பிறவிசா கரத்தில் வீழ்ந்தாய்:

முத்தமிழ் நாகை நாதர் முண்டக மலர்த்தாள் போற்றிச்

சத்தமுன் னுடலிற் றோற்றுந் தலந்தனைப் பார்ப்பாய் நெஞ்சே!


97. சுவர்த்தலைப் பூனை போலச் சுற்றிய பிறவி தீரத்

தவத்தினுக் குருவ மான சற்குரு தாளைப் போற்றிச்

சிவத்துடன் கலந்து மேவிச் சிதம்பர வழியே சென்றங்

கெவர்க்குமே லான நாகை நாதரை வணங்கு நெஞ்சே!


98. அலைவாயிற் பூடு போலும் ஆனைவாய்க் கவளம் போலும்

வலைவாயில் மிருகம் போலும் மயங்கிநைந் தலைந்தாய் நீதான்;

உலைவாயில் மெழுகைப் போல உருகிமெய்ப் பொருளை யுன்னிப்

பலகாலு மேத்தி நாகை லிங்கரைப் பணிவாய் நெஞ்சே!


99. மூலமாம் நகர மீதில் முளைத்தெழுஞ் சுடரைக் கண்டு

காலத்தீ மேலே யேற்றிக் கபாலத்தே னமுத ருந்திக்

கோலமா மதுவே யுண்டு குருபதந் தன்னிற் சேர்ந்து

வாலகந் தரியால் நாகை லிங்கரை வணங்கு நெஞ்சே!


100. இறந்திடும் இருபத்தோரா யிரத்தறு நூறு பேரும்

இறந்திடிக் காயம் போனா வீசனைக் காண்ப தெந்நாள்?

மறந்திடா தறிவால் மூலவாசியை மேலே யேற்றிச்

சிறந்தசிற் பரத்து நாகை லிங்கரைத் தெரிசி நெஞ்சே!


நூற் பயன்


1. கதிதரு மூலா தாரக் கணபதி தாசன் சொன்ன

நிதிமணி மாலை யான நெஞ்சறி விளக்கம் நூறும்

துதிசெய்யும் அறிவோர் ஞான சோதியின் வடிவ மாக

மதியணி நாகை நாதர் மலர்ப்பதம் பெற்று வாழ்வார்


2. நித்தியப் பொருள தான நெஞ்சறி விளக்கம் நூறும்

பத்தியாய் மனத்தி லெண்ணிப் படித்ததன் பயன்காண் போர்கள்

முத்திமெய்ஞ் ஞானம் பெற்று மூவர்க்கும் முதல்வராகிச்

சத்தியுஞ் சிவமுந் தோன்றுந் தற்பர மதனுட் சார்வார்.


3. கனகமார் மணிசேர் மூல கணபதி தாச னாக

நினைவினா லறிகட் செப்பும் நெஞ்சறி விளக்கம் நூறும்

வினவியே படிப்போர் கேட்போர் வினையெலாம் அகன்று மெய்யுற்

பனமெனும் மோட்ச நாலாம் பதம்பெற்றுப் பதத்துள் வாழ்வார்.



16 Dec 2020

நீலாயதாட்சி அம்மன் திருப்பள்ளியெழுச்சி



1. பூ விரிந்து வாசமிடும் 
                 பூபாள நேரம்
புள்ளினம் பாட்டிசைத்து 
         பண் பாடும் வானம்
புன்னகைத்துப் பகலவன் 
    இருளகற்றும் வேளை
பாவையே நீலாயதாக்ஷி 
    திருப்பள்ளி எழுவாயே!

2. மங்கல இசை நாதம் 
       மாதா உனை எழுப்பிட
செங்கமலத் திருப்பாதம் 
       பூதேவி வருடிட
தங்க மலர் கொண்டுன்னை 
      தரிசிக்க வந்தோமே
மங்களம் பொங்கிட நீலாயதாக்ஷி 
     பள்ளி எழுவாயே!

3. வண்டினம் சேர்க்கும் 
       அமுதொக்கும் மதுவும்
ஆவினம் அருளும் 
     புனிதமிகு பாலும்
நேசமுடன் வாசமிகு அமுத 
     நீரும் வைத்தோம்
நீராட நீலாயதாக்ஷி 
  பள்ளி எழுவாயே!

4. விண்ணவர் மண்ணவர் 
       வியந்துநின் பார்வை பெற
பண்ணொடு பாசுரம் 
   வேதமும் ஓதி நிற்க
வண்ணமிகு வாசமலர் 
    சூட்ட வந்தோம்
கண்ணழகுத் தாயே நீலாயதாக்ஷி 
   பள்ளி எழுவாயே!

5. காயாரோகணன் காயத்தில்      
       கலந்தவள் நீ
மாயப் பிறப்பின் மயக்கம் 
      அறுப்பவள் நீ
சேயெங்கள் துயரம் 
    துடைப்பவள் நீ
தூயவளே நீலாயதாக்ஷி 
  பள்ளி எழுவாய் நீ!

6. உயிரின் காற்றை 
   உன்னகம் கொண்டவளே
உயிரினம் அனைத்தும் 
   உள்ளம் குளிர்ந் துய்வுற
உய்ய நின் பாதம் 
    போற்றிப் மகிழ்ந்திட
உயர்ந்தவளே நீலாயதாக்ஷி, 
    பள்ளி எழுவாயே!

7. தேடித் தேடி வந்தோமே 
       தேவி நின் தாள் பணிய
ஓடி ஓடி வந்தோமே 
     நின்னருள் பெற்றிட
வாடி வாடி நிற்குமெங்கள் 
    வேதனை களைந்திட
கோடிகோடி நமஸ்காரம் 
    நீலாயதாக்ஷி பள்ளி எழுவாயே!

நன்றி: நாகை வை.ராமஸ்வாமி அவர்கள்


Neelayatakshi Suprabatham 

By Nagai.V.Ramaswamy

Translated By P.R.Ramachander

Goddess Neelayadakshi is the consort of Lord Shiva in the temple city of Thirunagai Karonam (Arulmigu Neelayadakshi Amman Samedha Shri Kayahorana Swami Temple), near Nagapattinam of Tamil Nadu. It is the one of the 108 Shakthi sthalas of India.

Neelayadakshi means Goddess with blue eyes. The lord here is called Kayarohanar, because he permitted Sage Pundareeka to ascend to the heaven along with his body. Muthuswami Deekshithar has composed a great song “Amba Neelayadakshi “praising this goddess. The author of this great stotra has also composed several krithis in her praise.

1.Poo virindu vasamidum Bhoopala neram, Pullinam pattu isaithu pan padum neram, Punnagai pagalavan irulagathum velai Pavaye Neelayadakshi palli ezhundarulvaye 

It is the time for Bhoopala, when flowers open and wave,
It is time when the birds make music and sing,
It is time that the smiling Sun removes the darkness,
Oh Lady Neelayadakshi, would you please wake up.

2.Mangala isai nadam mathaa unnai ezhuppida, Chengamala thiruppadam bhoodevi varudita, Thanga malar kondu unnai darisikka vandhome, Mangalam pongidave Neelayadakshi palli ezhuvaye. 

When the soulful sounds wake you up mother,
When your red lotus like feet is caressed by mother earth,
We have come to see you along with golden flowers,
And so Neelayadakshi would you please wake up so that good ebbs out.

3.Vandinam cherkkum amudu okkum madhuvum, Avinam arulum punidhammigu paalum, Nesamudan vasa migu amudha neerum vaithom, Neerada Neelayadakshi palli ezhuvaye. 

We have arranged, the nectar like honey collected by honey bees,
The milk conferred to us by the grace of cows,
As well the scented nectar like water,
And so Neelayadakshi, would you please wake up to take your bath.

4.Vinnavar, mannavar viyandhu nin parvai pera, Pannodu pasuram Vedamum odhi nirka, Vanna migu vasa malar choota vandhom, Kannazhugu thaye Neelayadakshi palli ezhuvaye. 

When people of heaven and earth hunger to be seen by you,
When Tamil songs of the saints and Vedas set to tune are sung
We have come to offer you scented flowers of various hues,
And so Neelayadakshi, who is the mother with pretty eyes, would you please wake up.

5.Kayarohanan kayathil kalandhaval nee, Maya pirappin mayakkam aruppaval nee, Chey engal thuyaram thudaippaval nee, Thooyavale Neelayadakshi palli ezhuvay nee. 

You are the one who has merged in to the body of Lord Kayarohana[1],
You are the one who cuts off the illusion of the illusory birth,
You are the one who removes sorrow of your children like us,
Oh pure one, Oh Neelayadakshi, would you please wake up.

6.Uyirin Kathai unnagam kondavale, Uyirinam anaithum ullam kulirndu thuyvura, Uyya nin padam pothi magizhndida, Uyarndavale Neelayadakshi, palli ezhundarulvayo. 

Oh Goddess who has kept the air of life within you,
For the sake of filling the hearts of all beings with great joy,
When they joyously praise your feet and to get salvation,
Oh great one, Oh Neelayadakshi, would you please wake up.

7.Thedi thedi vanthome deviye nin thaal paniya, Odi odi vanthome nin arul pethida, Vadi vadi nirkkum engal vedanai kalainthida, Koti koti Namaskaram Nelayadakshi palli ezhundarulvayo. 

For saluting your feet we came in search of you,
For getting your grace we came running to you,
And so remove the pain from us, who have already wilted,
Billions and billions of salutations, Oh Neelayadakshi, would you please wake up.


8 Dec 2020

தியாகராஜர் கீர்த்தனை 2 (எவரு தெலிய)



தியாகராஜ கிருதி - எவரு தெலிய - ராகம் தோடி - Evaru Teliya - Raga Todi

பல்லவி
எவரு தெலிய பொய்யேரு நீ மஹிமலு

அனுபல்லவி
பு4விலோ 1வரமௌ நாக3 புரமுன கனுகொ3ண்டி
லவ லேஸ1மைனனு 2நீலாயதாக்ஷி ஸாமர்த்2ய(மெவரு)

சரணம் 1
கருகு3 ப3ங்கா3ரு வல்வ கட்டி 3நிர்ஜர தரு
விருலனு கொப்பு நிண்ட3 ஜுட்டி ஸொக3ஸு மீர
கரமுன சிலுகனு பட்டி அதி3யு கா3க
4ஹருனி அட்டிட்டாடி3ஞ்சினட்டி நீ லீலலனு (எவரு)

சரணம் 2
ஹரி ப்3ரஹ்மாது3லு நின்னு 5கொல்வனா வேள ஸுர
விரி போ3ணுலந்த3முதோ 6நில்வனமர வார
தருணுலு நாட்யமுசே கொல்வனன்னியு ஜூசி
கருணா ரஸமு ஜில்கி பில்வனட்டி நீ த3ய(னெவரு)

சரணம் 3
நாக3 பூ4ஷணுனிகி ராணிவைன 7நின்னு
வினா க3தியெவரு நீல வேணி 8ப4க்துல பாலி
பா4க3தே4யமைன ஸ1ர்வாணி ஸந்ததமுனு
த்யாக3ராஜு பல்கின வாணி 9ப்ரியமைன நி(ன்னெவரு)

பாடல் பதம் பிரித்தல் - பொருள்

பல்லவி
எவரு/ தெலிய பொய்யேரு/ நீ/ மஹிமலு/
எவர்/ அறிந்தனர்/ உனது/ மகிமைகளினை/

அனுபல்லவி
பு4விலோ/ வரமௌ/ நாக3/ புரமுன/ கனுகொ3ண்டி/
புவியில்/ புனித/ நாக/ புரத்தினில்/ கண்டுகொண்டேன்/

லவ லேஸ1மு/-ஐனனு/ நீலாயதாக்ஷி/ ஸாமர்த்2யமு/-(எவரு)
எள்ளளவு/ ஆகிலும்/ நீலாயதாட்சியின்/ திறமையினை/ எவர்...

சரணம் 1
கருகு3/ ப3ங்கா3ரு/ வல்வ/ கட்டி/ நிர்ஜர/ தரு/
உருக்கிய/ பொன்/ ஆடை/ யணிந்து/ வானோர்/ தரு/

விருலனு/ கொப்பு/ நிண்ட3/ ஜுட்டி/ ஸொக3ஸு/ மீர/
மலர்களை/ கொண்டை/ நிறைய/ சுற்றி/ சொகுசு/ மீர/

கரமுன/ சிலுகனு/ பட்டி/ அதி3யு கா3க/
கரத்தினில்/ கிளியினை/ யேந்தி/ மேலும்/

ஹருனி/ அட்டு/-இட்டு/-ஆடி3ஞ்சின/-அட்டி/ நீ/ லீலலனு/ (எவரு)
அரனை/ அப்படி/ யிப்படி/ ஆட்டிவைத்த/ அத்தகைய/ உனது/ திருவிளையாடல்களை/ எவர்...

சரணம் 2
ஹரி/ ப்3ரஹ்மா-ஆது3லு/ நின்னு/ கொல்வ/-ஆ வேள/ ஸுர/
அரி/ பிரமாதியர்கள்/ உன்னை/ சேவிக்க/ அவ்வேளை/ வானோர்/

விரி போ3ணுலு/-அந்த3முதோ/ நில்வ/-அமர/ வார/
பூங்குழலியர்/ ஒயிலாக/ நிற்க/ வானோர்/ ஆடல்/

தருணுலு/ நாட்யமுசே/ கொல்வ/-அன்னியு/ ஜூசி/
அணங்குகள்/ நாட்டியமாடி/ சேவிக்க/ யாவற்றினையும்/ கண்டு/

கருணா/ ரஸமு/ ஜில்கி/ பில்வ/-அட்டி/ நீ/ த3யனு/-(எவரு)
கருணை/ ரசத்தினை/ சிந்தி/ அழைக்கும்/ அத்தகைய/ உனது/ தயையினை/ எவர்...

சரணம் 3
நாக3/ பூ4ஷணுனிகி/ ராணிவைன/ நின்னு/
அரவு/ அணிவோனின்/ இராணியாகிய/ உன்னை/

வினா/ க3தி/-எவரு/ நீல வேணி/ ப4க்துல/ பாலி/
அன்றி/ புகல்/ யாரே/ கருங்குழலி/ தொண்டர்/ பங்கில்/

பா4க3தே4யமைன/ ஸ1ர்வாணி/ ஸந்ததமுனு/
நற்பேறாகிய/ சர்வாணி/ எவ்வமயமும்/

த்யாக3ராஜு/ பல்கின/ வாணி/ ப்ரியமைன/ நின்னு/-(எவரு)
தியாகராசன்/ கூறிய/ சொற்களை/ விரும்பும்/ உன்னை/ எவர்...


எவரு தெலிய பொய்யேரு நீ மஹிமலு

அ. பு4விலோ வரமௌ நாக3 புரமுன கனுகொ3ண்டி
லவ லேஸ1(மை)னனு நீ(லா)ய(தா)க்ஷி ஸாமர்த்2ய(மெவரு)

ச1. கருகு3 ப3ங்கா3ரு வல்வ கட்டி நிர்ஜர தரு
விருலனு கொப்பு நிண்ட3 ஜுட்டி ஸொக3ஸு மீர
கரமுன சிலுகனு பட்டி அதி3யு கா3க
ஹருனி அட்(டி)ட்(டா)டி3ஞ்சி(ன)ட்டி நீ லீலலனு (எவரு)

ச2. ஹரி ப்3ரஹ்(மா)து3லு நின்னு கொல்வ(னா) வேள ஸுர
விரி போ3ணு(ல)ந்த3முதோ நில்வ(ன)மர வார
தருணுலு நாட்யமுசே கொல்வ(ன)ன்னியு ஜூசி
கருணா ரஸமு ஜில்கி பில்வ(ன)ட்டி நீ த3ய(னெவரு)

ச3. நாக3 பூ4ஷணுனிகி ராணிவைன நின்னு
வினா க3தி(யெ)வரு நீல வேணி ப4க்துல பாலி
பா4க3தே4ய(மை)ன ஸ1ர்வாணி ஸந்ததமுனு
த்யாக3ராஜு பல்கின வாணி ப்ரியமைன நி(ன்னெவரு)

எவர் அறிந்தனர் உனது மகிமைகளினை?

புவியில், புனித நாகபுரத்தினில் கண்டுகொண்டேன்;
எள்ளளவாகிலும், நீலாயதாட்சியின் திறமையினை
எவர் அறிந்தனர்?

1. உருக்கிய பொன்னாடை யணிந்து, வானோர் தரு
மலர்களை கொண்டை நிறையச் சுற்றி, சொகுசு மீர
கரத்தினில் கிளியினையேந்தி, மேலும்
அரனை, அப்படியிப்படி ஆட்டிவைத்த அத்தகைய உனது
திருவிளையாடல்களை எவர் அறிந்தனர்?

2. அரி, பிரமாதியர்கள் உன்னைச் சேவிக்க, அவ்வேளை வானோர்
பூங்குழலியர் ஒயிலாக நிற்க, வானோர் ஆடல்
அணங்குகள் நாட்டியமாடி சேவிக்க, யாவற்றினையும் கண்டு,
கருணைரசத்தினைச் சிந்தி, அழைக்கும் அத்தகைய உனது
தயையினை எவர் அறிந்தனர்?

3. அரவணிவோனின் இராணியாகிய உன்னை
அன்றி புகல் யாரே, கருங்குழலி! தொண்டர் பங்கில்
நற்பேறாகிய சர்வாணி! எவ்வமயமும்,
தியாகராசன் கூறிய சொற்களை விரும்பும் உன்னை
எவர் அறிந்தனர்?

நாகபுரம் - நாகப்பட்டினம்
நீலாயதாட்சி - நாகப்பட்டினத்தில் பார்வதியின் பெயர்
வானோர் தரு - பாரிசாதம்
கருணைரசம் - நவரசங்களில் ஒன்று
அரவணிவோன் - சிவன்
சர்வாணி - பார்வதி



தியாகராஜர் கீர்த்தனை 1 (கர்மமே)


தியாகராஜ கிருதி - கர்மமே ப3லவந்த - ராகம் ஸாவேரி - Karmame Balavanta - Raga Saveri - Nagappattinam Kshetra

பல்லவி
கர்மமே 1ப3லவந்தமாயா தல்லி
2காயாரோஹண ஜாயா

அனுபல்லவி
நிர்மலமகு3 நாக3 புரமுன நெலகொன்ன
3நீலாயதாக்ஷி ஸகல லோக ஸாக்ஷி (க)

சரணம் 1
த4ரனு த4னிகுல கோரினா நா
பரிதாபமுல் தீர்ப லேரைரியனி
ஸரகு3ன நே ப3யலு-தே3ரி வச்சி
பரம பாவனி நீ ஸன்னிதி4 4ஜேரினா (க)

சரணம் 2
5வாரிதி4 மதி3 க3ர்விஞ்சியீ
வஸுத4கு தா ரானெஞ்சி நின்னு
ஸாரெகு கனி 6தல வஞ்சியுண்டு3
தீ4ர-தனமு கல்கு3 நினு 7பொட3கா3ஞ்சினா (க)

சரணம் 3
காஸாஸ லேனி நா மதி3கி நீ
8கருணயே த4னமனி பலிகி
நிண்டா3ஸதோ வச்சி ஸன்னிதி4கி நிஜ
தா3ஸுடை3ன ஸ்ரீ த்யாக3ராஜுனிகி (க)


பதம் பிரித்தல் - பொருள்

பல்லவி
கர்மமே/ ப3லவந்தமு/-ஆயா/ தல்லி/
ஊழ்வினையே/ வலுக்கட்டாயம்/ ஆனதா/ தாயே/

காயா-ஆரோஹண/ ஜாயா/
காயாரோகணர்/ இல்லாளே/

அனுபல்லவி
நிர்மலமகு3/ நாக3/ புரமுன/ நெலகொன்ன/
தூய்மையான/ நாக/ புரத்தில்/ நிலைபெற்ற/

நீல-ஆயத-அக்ஷி/ ஸகல/ லோக/ ஸாக்ஷி/ (க)
கருந்தடங்கண்ணீ/ அனைத்து/ உலக/ சாட்சியே/

சரணம் 1
த4ரனு/ த4னிகுல/ கோரினா/ நா/
புவியில்/ செல்வந்தரை/ கோரினாலும்/ எனது/

பரிதாபமுல்/ தீர்ப/ லேரைரி/-அனி/
பரிதாபத்தினை/ தீர்க்க/ இயலார்/ என/

ஸரகு3ன/ நே/ ப3யலு-தே3ரி/ வச்சி/
உடனே/ நான்/ புறப்பட்டு/ வந்து/

பரம/ பாவனி/ நீ/ ஸன்னிதி4/ ஜேரினா/ (க)
முற்றிலும்/ புனிதமானவளே/ உனது/ சன்னிதி/ யடைந்தாலும்/ ஊழ்வினையே...

சரணம் 2
வாரிதி4/ மதி3/ க3ர்விஞ்சி/-ஈ/
வாரிதியோன்/ மதி/ செருக்குற்று/ இந்த/

வஸுத4கு/ தா/ ரானு/-எஞ்சி/ நின்னு/
நிலத்துள்/ தான்/ புக/ எண்ணி/ உன்னை/

ஸாரெகு/ கனி/ தல/ வஞ்சி/-உண்டு3/
எப்போழ்தும்/ கண்டு/ தலை/ தாழ்த்தி/ யிருக்கும்/

தீ4ர-தனமு/ கல்கு3/ நினு/ பொட3கா3ஞ்சினா/ (க)
தீரத்தனம்/ உடைத்த/ உன்னை/ தரிசித்தாலும்/ ஊழ்வினையே...

சரணம் 3
காஸு-ஆஸ/ லேனி/ நா/ மதி3கி/ நீ/
பணத்தாசை/ இல்லாத/ எனது/ உள்ளத்திற்கு/ உனது/

கருணயே/ த4னமு/-அனி/ பலிகி/
கருணையே/ செல்வம்/ என்று/ உரைத்து/

நிண்டு3/-ஆஸதோ/ வச்சி/ ஸன்னிதி4கி/ நிஜ/
நிரம்ப/ ஆசையுடன்/ வந்து/ சன்னிதிக்கு/ உண்மை/

தா3ஸுடை3ன/ ஸ்ரீ த்யாக3ராஜுனிகி/ (க)
தொண்டனாகிய/ ஸ்ரீ தியாகராசனுக்கு/ ஊழ்வினையே...



ஊழ்வினையே வலுக்கட்டாயமானதா, தாயே?
காயாரோகணர் இல்லாளே!

தூய்மையான நாகபுரத்தில் நிலைபெற்ற
கருந்தடங்கண்ணீ! அனைத்துலக சாட்சியே!
ஊழ்வினையே வலுக்கட்டாயமானதா, தாயே?
காயாரோகணர் இல்லாளே!

1. புவியில், செல்வந்தரைக் கோரினாலும், எனது
பரிதாபத்தினைத் தீர்க்க இயலாரென,
உடனே, நான் புறப்பட்டு வந்து,
முற்றிலும் புனிதமானவளே! உனது சன்னிதி யடைந்தாலும்,
ஊழ்வினையே வலுக்கட்டாயமானதா, தாயே?
காயாரோகணர் இல்லாளே!

2. வாரிதியோன், மதி செருக்குற்று, இந்த
நிலத்துள் தான் புக எண்ணி, உன்னை
எப்போழ்தும் கண்டு, தலை தாழ்த்தியிருக்கும்,
தீரத்தனமுடைத்த, உன்னை தரிசித்தாலும்,
ஊழ்வினையே வலுக்கட்டாயமானதா, தாயே?
காயாரோகணேசுவரர் இல்லாளே!

3. பணத்தாசை இல்லாத எனதுள்ளத்திற்கு, உனது
கருணையே செல்வமென்று உரைத்து,
நிரம்ப ஆசையுடன் வந்து சன்னிதிக்கு, உண்மைத்
தொண்டனாகிய இத்தியாகராசனுக்கு
ஊழ்வினையே வலுக்கட்டாயமானதா, தாயே?
காயாரோகணர் இல்லாளே!

காயாரோகணர் - திருநாகைக்காரோணம் - நாகப்பட்டினம்
நாகபுரம் - நாகப்பட்டினம்
கருந்தடங்கண்ணி - நீலாயதாட்சி
வாரிதியோன் - கடல்

முத்துஸ்வாமி தீக்ஷிதர் கீர்த்தனை 2 (அம்பா நீலாயதாக்ஷி)



Dikshitar Kriti - Amba Neelaayathaakshi Karunaa - Raga Neelambari

அம்பா3 நீலாயதாக்ஷி - ராக3ம் நீலாம்ப3ரி - தாளம் ஆதி3

பல்லவி
அம்பா3 நீலாயதாக்ஷி கருணா கடாக்ஷி
அகி2ல லோக ஸாக்ஷி கடாக்ஷி

அனுபல்லவி
பி3ம்பா3த4ரி சித்ப்ரதி-பி3ம்பா3த4ரி
பி3ந்து3 நாத3 வஸ1ங்கரி ஸ1ங்கரி
(மத்4யம கால ஸாஹித்யம்)
அம்பு3ஜா ரமண ஸோத3ரி அதி ரதி2
அம்ப3ரி காத3ம்ப3ரி நீலாம்ப3ரி

சரணம்
ஸி1வ ராஜதா4னீ க்ஷேத்ர வாஸினி ஸ்1ரித ஜன விஸ்1வாஸினி
ஸி1வ காயாரோஹணேஸோ1ல்லாஸினி சித்3ரூப விலாஸினி
நவ யோகி3னி சக்ர விகாஸினி நவ ரஸ த3ர ஹாஸினி
ஸுவர்ண-மய விக்3ரஹ ப்ரகாஸி1னி ஸுவர்ண-மய ஹாஸினி
(மத்4யம கால ஸாஹித்யம்)
பு4வனோத3ய ஸ்தி2தி லய வினோதி3னி
பு4வனேஸ்1வரி க்ஷிப்ர ப்ரஸாதி3னி
நவ மாணிக்ய வல்லகீ வாதி3னி
ப4வ கு3ரு கு3ஹ வேதி3னி ஸம்மோதி3னி

variations -
அம்பா3 - அம்ப3
அதி ரதி2 - ஆத3ரி

பாடல் பதம் பிரிப்பு

பல்லவி
அம்பா3 நீல-ஆயத-அக்ஷி கருணா கடாக்ஷி
அகி2ல லோக ஸாக்ஷி கடாக்ஷி

அனுபல்லவி
பி3ம்ப3-அத4ரி சித்-ப்ரதி-பி3ம்பா3-த4ரி
பி3ந்து3 நாத3 வஸ1ங்கரி ஸ1ங்கரி
அம்பு3ஜா ரமண ஸோத3ரி அதி ரதி2
அம்ப3ரி காத3ம்ப3ரி நீலாம்ப3ரி

சரணம்
ஸி1வ ராஜதா4னீ க்ஷேத்ர வாஸினி ஸ்1ரித ஜன விஸ்1வாஸினி
ஸி1வ காய-ஆரோஹண-ஈஸ1-உல்லாஸினி சித்3-ரூப விலாஸினி
நவ யோகி3னி சக்ர விகாஸினி நவ ரஸ த3ர ஹாஸினி
ஸுவர்ண-மய விக்3ரஹ ப்ரகாஸி1னி ஸுவர்ண-மய ஹாஸினி
பு4வன-உத3ய ஸ்தி2தி லய வினோதி3னி
பு4வன-ஈஸ்1வரி க்ஷிப்ர ப்ரஸாதி3னி
நவ மாணிக்ய வல்லகீ வாதி3னி
ப4வ கு3ரு கு3ஹ வேதி3னி ஸம்மோதி3னி

முத்துசுவாமி தீக்ஷிதர் கீர்த்தனை 1 (காயாரோஹணேஸம்)

Dikshitar Kriti - Kaayaarohanesam - Raga Deva Gandharam



காயாரோஹணேஸ1ம் - ராக3ம் தே3வ கா3ந்தா4ரம் - தாளம் - ரூபகம்

பல்லவி
காயாரோஹணேஸ1ம் ப4ஜரே ரே மானஸ
(மத்4யம கால ஸாஹித்யம்)
கலி கல்மஷாபஹம் ஸி1வ ராஜதா4னீ க்ஷேத்ர ஸ்தி2தம்

அனுபல்லவி
ப4யாபஹம் தி3க்பாலகாதி3 வினுத மஹேஸ்1வரம்
(மத்4யம கால ஸாஹித்யம்)
மாயா-மய ஜக3தா3தா4ரம் கு3ரு கு3ஹோபசாரம்

சரணம்
நீலாயதாக்ஷீ மனோல்லாஸ-கரணம்
நித்ய ஸு1த்3த4 ஸத்த்வ கு3ணம் பு4க்தி முக்தி ப்ரத3 நிபுணம்
(மத்4யம கால ஸாஹித்யம்)
பாலித ப4க்தம் பஞ்சானனம் ப்ரணத க3ஜானனம்
பா3ல சந்த்3ர ஸே1க2ரம் ப4வ பாஸ1 மோசனம் த்ரி-நயனம்

பாடல் பதம் பிரிப்பு 

பல்லவி
காய-ஆரோஹண-ஈஸ1ம் ப4ஜரே ரே மானஸ
கலி கல்மஷ-அபஹம் ஸி1வ ராஜதா4னீ க்ஷேத்ர ஸ்தி2தம்

அனுபல்லவி
ப4ய-அபஹம் தி3க்-பாலக-ஆதி3 வினுத மஹா-ஈஸ்1வரம்
மாயா-மய ஜக3த்3-ஆதா4ரம் கு3ரு கு3ஹ-உபசாரம்

சரணம்
நீல-ஆயத-அக்ஷீ மன-உல்லாஸ-கரணம்
நித்ய ஸு1த்3த4 ஸத்த்வ கு3ணம் பு4க்தி முக்தி ப்ரத3 நிபுணம்
பாலித ப4க்தம் பஞ்ச-ஆனனம் ப்ரணத க3ஜ-ஆனனம்
பா3ல சந்த்3ர ஸே1க2ரம் ப4வ பாஸ1 மோசனம் த்ரி-நயனம்


சியாமா சாஸ்திரிகள் கீர்த்தனை ( நீலாயதாக்ஷி நீவே )



Syama Sastry Kriti - Nilayatakshi - Raga Paraju

பல்லவி

நீ(லா)ய(தா)க்ஷீ நீவே ஜக3த்-ஸாக்ஷீ

அனுபல்லவி
பா2(லா)க்ஷுனி ராணீ பாலித ஸ்1ரித ஸ்1ரேணீ (நீல)

சரணம் 1
தீ3ன ரக்ஷகீ அப4ய தா3ன(மீ)யவே ஸாம
கா3ன லோலே அபி4மான(மீ)யவே தே3வீ (நீல)

சரணம் 2
ஆதி3 ஸ1க்தி கௌமாரீ மேதி3னிலோ நின்னு பொக3ட3
ஆதி3 ஸே1ஷுனி(கை)ன ரா(தி3)க(னே)மி ஜெப்புது3 தே3வீ (நீல)

சரணம் 3
காம பாலினீ வினு நீ நாமமுலே த4ர்(மா)ர்த2
காம மோக்ஷ(மி)ச்சேதி3 ஸ்1யாம க்ரு2ஷ்ண பாலினீ தே3வீ (நீல)

பாடல் பொருள்

பல்லவி
கருந்தடங்கண்ணீ! நீயே உலக சாட்சி.

அனுபல்லவி
நெற்றிக் கண்ணனின் ராணீ! அண்டியோர் வரிசையினைப் பேணுபவளே!

சரணம் 1
எளியோரைக் காப்பவளே! அபயமெனும் கொடையருள்வாயம்மா. சாம
கானத்தில் மகிழ்பவளே! தன்னவனெனும் பற்று அருள்வாயம்மா, தேவீ!

சரணம் 2
ஆதி சக்தியே! கௌமாரியே! மேதினியில், உன்னைப் புகழ,
ஆதி சேடனுக்காகிலும் வாராது; மேற்கொண்டு, என்ன சொல்வேன், தேவீ!

சரணம் 3
மன்மதனைக் காத்தவளே! கேளாய். உனது நாமங்களே, அறம், பொருள்,
இன்பம் மற்றும் வீடு அளிப்பவை. சியாம கிருஷ்ணனைப் பேணுபவளே, தேவீ!

கருந்தடங்கண்ணி - நாகப்பட்டினத்தில் அம்மையின் பெயர்
அபயம் - புகல்
சாம கானம் - சாமன் எனும் மறையோதல்
அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு - இவை புருஷார்த்தங்கள் எனப்படும்.

பாடல் பதம் பிரிப்பு

பல்லவி
நீல-ஆயத-அக்ஷீ நீவே ஜக3த்-ஸாக்ஷீ

அனுபல்லவி
பா2ல-அக்ஷுனி ராணீ பாலித ஸ்1ரித ஸ்1ரேணீ (நீல)

சரணம் 1
தீ3ன ரக்ஷகீ அப4ய தா3னமு-ஈயவே ஸாம
கா3ன லோலே அபி4மானமு-ஈயவே தே3வீ (நீல)

சரணம் 2
ஆதி3 ஸ1க்தி கௌமாரீ மேதி3னிலோ நின்னு பொக3ட3
ஆதி3 ஸே1ஷுனிகி-ஐன ராது3-இகனு-ஏமி ஜெப்புது3 தே3வீ (நீல)

சரணம் 3
காம பாலினீ வினு நீ நாமமுலே த4ர்ம-அர்த2
காம மோக்ஷமு-இச்சேதி3 ஸ்1யாம க்ரு2ஷ்ண பாலினீ தே3வீ (நீல)

7 Dec 2020

அருணகிரிநாதர் திருப்புகழ் 3 (விழுதாதெனவே)


விழுதாதெனவே  
(நாகப்பட்டினம்)



பாடல் விளக்கம்



தனனா தனனா தனனா தனனா
     தனனா தனனா ...... தனதான

பாடல்

விழுதா தெனவே கருதா துடலை
     வினைசேர் வதுவே ...... புரிதாக

விருதா வினிலே யுலகா யதமே
     லிடவே மடவார் ...... மயலாலே

அழுதா கெடவே அவமா கிடநா
     ளடைவே கழியா ...... துனையோதி

அலர்தா ளடியே னுறவாய் மருவோ
     ரழியா வரமே ...... தருவாயே

தொழுதார் வினைவே ரடியோ டறவே
     துகள்தீர் பரமே ...... தருதேவா

சுரர்பூபதியே கருணா லயனே
     சுகிர்தா வடியார் ...... பெருவாழ்வே

எழுதா மறைமா முடிவே வடிவே
     லிறைவா எனையா ...... ளுடையோனே

இறைவா எதுதா வதுதா தனையே
     இணைநா கையில்வாழ் ...... பெருமாளே.

சொல் விளக்கம்

விழுதா தெனவே கருதா துடலை ... (இறைவனருளால்) விழுகின்ற
தாது (சுக்கிலம்)தான் இந்த உடல் என்று புரிந்து கொள்ளாமல்,

வினைசேர் வதுவே புரிதாக ... வினைகளை மேலும் மேலும்
சேர்ப்பதையே விரும்புவதாக,

விருதா வினிலே ... வாழ்நாளை வீணாக்கி,

உலகா யதமேலிடவே ... (தேகமே ஆத்மா, போகமே மோட்சம் என்ற)
உலக வழக்கில் புத்தி மேலிட,

மடவார் மயலாலே ... பெண்களின் மேல் ஆசை மயக்கம் மிகுந்து,

அழுது ஆகெடவே அவமாகிட ... அழுதும், கெட்டுப்போயும்,
கேவலமாகி

நாளடைவே கழியாது ... வாழ்க்கை முழுவதும் கழிந்து போகாமல்,

உனையோதி ... உன்னைப் புகழ்ந்து துதித்து,

அலர்தா ளடியே னுறவாய் ... மலர்ந்த தாமரை போன்ற உன்
திருவடிகளே எனக்கு உறவாக

மருவோரழியா வரமே தருவாயே ... பொருந்திய ஒப்பற்ற அழியாத
வரம் நீ தந்தருள்வாயாக.

தொழுதார் வினை ... தொழுகின்ற அடியார்கள்தம் வினையின்

வே ர்யோ டறவே ... வேர் அடியோடு அற்றுப்போகும்படியாக

துகள்தீர் பரமே தருதேவா ... குற்றமற்ற பரமபதத்தைத் தரும்
தேவனே,

சுரர்பூபதியே ... தேவர்களுக்கு அரசனே,

கருணா லயனே ... கருணைக்கு இருப்பிடமானவனே,

சுகிர்தா அடியார் பெருவாழ்வே ... புண்ணியனே, அடியார்களின்
பெருவாழ்வே,

எழுதா மறைமா முடிவே ... எழுதப்படாத மறையாம் வேதத்தின்
முடிவானவனே,

வடிவேலிறைவா ... கூரிய வேலை ஏந்திய இறைவனே,

எனையாளுடையோனே ... என்னை ஆட்கொண்டுள்ளவனே,

இறைவா எதுதா அதுதா ... இறைவனே, நீ எது தரவேண்டுமோ
அதைத் தந்தருள்.

தனையே இணைநா கையில் ... தனக்குத் தானே இணையாகும்
நாகப்பட்டினத்தில்

வாழ் பெருமாளே. ... வீற்றிருக்கின்ற பெருமாளே.