30 Dec 2021

திருமுறை வைப்பு பாடல்கள்

 சிவ ராஜதானி ஷேத்திரம் என்று போற்றப்படக் கூடிய நாகை காரோணம் திருத்தம் தேவார மூவராலும் (எட்டு பதிகங்கள்) பாடப்பெற்ற சிறப்புடையது. மேலும் சைவத் திருமுறைகளில் இத்திருத்தலம் பற்றிய பாடல்கள் பல அமையப் பெற்றுள்ளன அவை முறையே,


திருஞானசம்பந்தர் திருக்கடைக்காப்பு இரண்டு பதிகங்கள்

திருநாவுக்கரசர் தேவாரம் நான்கு பதிகங்கள்

சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பாட்டு இரண்டு பதிகங்கள் (அவற்றில் ஒன்று பிற்சேர்க்கையாக கிடைக்கப்பெற்றது)

மற்றும் "காரோணம்" என்று பல்வேறு தலங்களின் திருமுறை பதிகங்களில் குறிப்பிடப்பட்டு அவை வைப்பு பாடல்களாகவும் அமைந்துள்ளன,

அவற்றுள் மூன்று காரோணத் தலங்களில் ஒன்றான குடந்தைக் காரோணம் திருத்தலம் திருஞான சம்பந்தரால் நேரடியாக பாடப்பட்டுள்ளது. (தி 01.072)

மேலும் திருநாவுக்கரசர்  நாகைக் காரோணரை பல தலங்களின் பதிகங்களில் நினைவு கூறி உள்ளார். அவைகளாவன,

{ தி - திருமுறை, ப- பதிகம், பா - பாடல் }

தி06.ப002.பா06 (மங்குல் மதிதவழும் - தலம் : கோயில் தில்லை )

காதார் குழையினர் கட்டங் கத்தர்
    கயிலாய மாமலையார் #காரோணத்தார்
மூதாயர் மூதாதை யில்லார் போலும்
    முதலும் இறுதியுந் தாமே போலும்
மாதாய மாதர் மகிழ அன்று
    வன்மதவேள் தன்னுடலங் காய்ந்தா ரிந்நாள்
போதார் சடைதாழப் பூதஞ் சூழப்
    புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.

--------------------------------------------------------------------------

தி06.ப007.பா08 (செல்வப் புனற்கெடில - தலம் : திருவதிகை வீரட்டானம் )

தெள்ளும் புனற்கெடில வீரட்டமுந் திண்டீச் சரமுந் திருப்புகலூர் எள்ளும் படையான் இடைத்தானமும் ஏயீச் சரமுநல் லேமங்கூடல் கொள்ளு மிலயத்தார் கோடிகாவுங் குரங்கணில் முட்டமுங் குறும்பலாவுங் கள்ளருந்தத் தெள்ளியா ருள்கியேத்துங் #காரோணந் தம்முடைய காப்புக்களே

-------------------------------------------------------------------------

தி06.ப010.பா10 (நோதங்க மில்லாதார் -
திருப்பந்தணைநல்லூர்)

கல்லூர் கடிமதில்கள் மூன்று மெய்தார்
#காரோணங் காதலார் காதல் செய்து
நல்லூரார் ஞானத்தார் ஞான மானார்
நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
மல்லூர் மணிமலை யின்மே லிருந்து
வாளரக்கர் கோன்தலையை மாளச் செற்றுப்
பல்லூர் பலிதிரிவார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.

-------------------------------------------------------------------------

06.013.04 ( கொடிமாட நீடெருவு - திருப்புறம்பயம் )

பன்மலிந்த வெண்டலை கையி லேந்திப் பனிமுகில் போல்மேனிப் பவந்த நாதர் நென்மலிந்த நெய்த்தானஞ் சோற்றுத் துறை நியமந் துருத்தியும் நீடூர் பாச்சில் கன்மலிந் தோங்கு கழுநீர்க் குன்றங் #கடனாகைக் #காரோணங் கைவிட் டிந்நாள் பொன்மலிந்த கோதையருந் தாமு மெல்லாம் புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.

-------------------------------------------------------------------------

06.017.08 (ஆறு சடைக்கணிவர் - திரு இடைமருதூர் )

காவார் சடைமுடியர் #காரோணத்தர் கயிலாய மன்னினார் பன்னு மின்சொற் பாவார் பொருளாளர் வாளார் கண்ணி பயிலுந் திருவுருவம் பாக மேயார் பூவார் புனலணவு புன்கூர் வாழ்வர் புரமூன்று மொள்ளழலாக் காயத் தொட்ட ஏவார் சிலைமலையர் எங்குந் தாமே இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

-------------------------------------------------------------------------

06.028.09 ( நீற்றினையும் - திரு ஆரூர் )

பிண்டத்தைக் காக்கும் பிரானார் போலும் பிறவி யிறவி இலாதார் போலும் முண்டத்து முக்கண் ணுடையார் போலும் முழுநீறு பூசு முதல்வர் போலுங் கண்டத் திறையே கறுத்தார் போலுங் காளத்தி #காரோணம் மேயார் போலும் அண்டத்துக் கப்புறமாய் நின்றார் போலும் அணியாரூர்த் திருமூலட் டான னாரே.

-------------------------------------------------------------------------

06.033.08 ( பொருங்கைமதக் - ஆரூர் அரநெறி )

காலனைக்கா லாற்காய்ந்த கடவுள் தன்னைக் #காரோணங் கழிப்பாலை மேயான் றன்னைப் பாலனுக்குப் பாற்கடலன் றீந்தான் றன்னைப் பணியுகந்த அடியார்கட் கினியான் றன்னைச் சேலுகளும் வயலாரூர் மூலட் டானஞ் சேர்ந்திருந்த பெருமானைப் பவள மீன்ற ஆலவனை அரநெறியி லப்பன் றன்னை அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே. 

-------------------------------------------------------------------------

06.037.09 ( ஆரார் திரிபுரங்கள் - திருவையாறு )

கச்சியே கம்பனே யென்றேன் நானே
    கயிலாயா #காரோணா என்றேன் நானே
நிச்சன் மணாளனே யென்றேன் நானே
    நினைப்பார் மனத்துளா யென்றேன் நானே
உச்சம்போ தேறேறீ யென்றேன் நானே
    உள்குவா ருள்ளத்தா யென்றேன் நானே
அச்சம் பிணிதீர்க்கும் ஐயா றன்னே
    யென்றென்றே நானரற்றி நைகின்றேனே

-------------------------------------------------------------------------

06.051.01 - ( திருவீழிமிழலை திருத்தாண்டகம் )

கயிலாய மலையுள்ளார் #காரோணத்தார் கந்தமா தனத்துளார் காளத் தியார் மயிலாடு துறையுளார் மாகா ளத்தார் வக்கரையார் சக்கரமாற் கீந்தார் வாய்ந்த அயில்வாய சூலமுங் காபா லமும் அமருந் திருக்கரத்தார் ஆனே றேறி வெயிலாய சோதி விளங்கு நீற்றார் வீழி மிழலையே மேவி னாரே. 

-------------------------------------------------------------------------

06.054.06 ( ஆண்டானை - திரு புள்ளிருக்குவேளூர் )

அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை அம்பலத்துள் நடமாடும் அழகன் றன்னைக் கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக் #கடல்நாகைக் #காரோணங் கருதி னானை இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா திருந்தானை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற பொறையானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.

-------------------------------------------------------------------------

06.62.06 ( எத்தாயர் எத்தந்தை - திருவானைக்கா )

உரையாரும் புகழானே யொற்றி யூராய்
    கச்சியே கம்பனே #காரோணத்தாய்
விரையாரும் மலர்தூவி வணங்கு வார்பால்
    மிக்கானே அக்கரவம் ஆரம் பூண்டாய்
திரையாரும் புனற்பொன்னித் தீர்த்தம் மல்கு
    திருவானைக் காவிலுறை தேனே வானோர்
அரையாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
    அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே

-------------------------------------------------------------------------

06.070.07 (  தில்லைச் சிற்றம்பலமுஞ் - க்ஷேத்திரக்கோவை திருத்தாண்டகம், பொதுப்பதிகம் )

வீழி மிழலைவெண் காடு வேங்கூர் வேதி குடிவிசய மங்கை வியலூர் ஆழியகத் தியான்பள்ளி அண்ணா மலை ஆலங் காடும் அரதைப் பெரும் பாழி பழனம்பனந் தாள்பா தாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட் டூர்தண் காழி #கடல்நாகைக் #காரோ ணத்துங் கயிலாய நாதனையே காண லாமே.

-------------------------------------------------------------------------

06.082.07 ( வானத் திளமதியும் - திரு சாய்க்காடு )

கடுவெளியோ டோ ரைந்து மானார் போலுங் #காரோணத் தென்று மிருப்பார் போலும் இடிகுரல்வாய்ப் பூதப் படையார் போலும் ஏகம்பம் மேவி யிருந்தார் போலும் படியொருவ ரில்லாப் படியார் போலும் பாண்டிக் கொடுமுடியுந் தம்மூர் போலுஞ் செடிபடுநோ யடியாரைத் தீர்ப்பார் போலுந் திருச்சாய்க்காட் டினிதுறையுஞ் செல்வர் தாமே.


-------------------------------------------------------------------------

சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பாட்டு
07.031.04 ( முந்தையூர் முதுகுன்றங் - திரு இடையாறு )

கச்சையூர் காவங் கழுக்குன்றங் #காரோணம் பிச்சையூர் திரிவான் கடவூர் வடபேறூர் கச்சியூர் கச்சி #சிக்கல் நெய்த்தானம் மிழலை இச்சையூர் எய்தமான் இடையா றிடைமருதே

-------------------------------------------------------------------------

பதினோராம் திருமுறை பதிகங்கள்

கபிலதேவ நாயனார் - சிவபெருமான் திருவந்தாதி (11.022.66)

பாடல் எண் : 66

எனக்குவளை நில்லா எழில்இழந்தேன் என்னும் எனக்குவளை நில்லாநோய் செய்தான் - இனக்குவளைக் கண்டத்தான் நால்வேதன் #காரோணத் தெம்மானைக் கண்டத்தான் நெஞ்சேகாக் கை

-------------------------------------------------------------------------

பரணதேவ நாயனார் - சிவபெருமான் திருவந்தாதி (11.023.35)

பாடல் எண் : 35

கடனாகக் கைதொழுமின் கைதொழவல் லீரேல்
கடல்நாகைக் காரோணம் மேயான் கடநாகம்
மாளவுரித் தாடுவான் நும்மேல் வல்வினைநோய்
மாளவிரித் தாடுவான் வந்து .

-------------------------------------------------------------------------

மேலும் பன்னிரண்டாம் திருமுறை திருத்தொண்டர் (பெரிய) புராணத்தில் அதிபத்த நாயனார் வரலாற்றில் இத்திருத்தலம் பற்றிய பாடல்கள் அமைந்துள்ளன.

தொகுப்பிற்கு உறுதுணையாக இருந்த இணையதளங்கள் shaivam.org மற்றும் thevaaram.org

காரோணா .. தியாகேசா
     திருச்சிற்றம்பலம்








































3 Sept 2021

நாகை காரோணமும், நாவுக்கரசர் கண்ட நடராஜரும்

பல்லவர் காலத்தில் திருநாவுக்கரசரும். ஞானசம்பந்தரும் கடல் #நாகை காரோணத்தான் என்று இக் கோயிலில் குடிகொண்டுள்ள இறைவனை தம் பாடல்களில் பணிந்தேத்துகின்றனர்.


காரோணர் சன்னதியை அடுத்து #தியாகராஜர் சன்னதியுள்ளது. அதன் சுவற்றில் வெளிச்சம் குறைந்த நிலையிலுள்ள சிற்பம் கண்ணையும், கருத்தையும் கவருவதாகவுள்ளது. இது போன்ற சிற்பத்தினைத் தமிழகத்தில் காண்பது மிகவும் அரிது. அர்ச்சகரின் தீபஒளியில் மட்டுமே அச்சிற்பத்தினை காணமுடியும். 


அச்சிற்பம் #நடராஜர் சிற்பமாகும். இதன் வலதுபுறம் ஜுரகரேஸ்வரர் சிற்பம் மகிச்சிறியளவில் உள்ளது. ஆடவல்லானின் ஆடலுக்கு இணையாக அம்மையும் ஆடுவதாகவும் வலதுகால் கீழாக முயலகனும் ஒருபுறம் வாணன் #குடமுழா இசைக்க மறுபுறம் #பூதகணங்கள் வாத்திய கருவிகளை கையாளுகின்ற காட்சியும் அமைந்துள்ளது. 


ஆடல் இறைவனின் தலைக்கு மேலாக இடதுபுறத்தில் கங்காதேவியின் உருவமும் வலதுபுறத்தில் தட்சிணாமுர்த்திக்குரிய உருத்திராட்ச மாலையும்,பை மற்றும் மயிற்பீலியினாலான சாமரம் போன்றவையும் வடிக்கப்பட்டுள்ளதால் (உயர்ந்த #பாசுபத விரதம் ஞானம் எனப்படும், #சிவன் யோக ஆசிரியனாக ஞானத்தை வழங்கும் குருவாகவிளங்குகிறார் என ம,இராசமாணிக்கனார் தமது நுலில் குறித்துள்ளார்) இப்பகுதியானது தட்சிணாமூர்த்தியைக்குறிப்பதாக வடிக்கப்பட்டுள்ளது. 


இச்சிற்பத் தொகுதியை நோக்கும்போது அது #சோழர் காலத்தைச் சேர்ந்ததாக அறியமுடிகின்றது. இதனை வடிப்பதற்குக் காரணமாக அமைவது #நாவுக்கரசர் நாகையில் கண்ட நடராஜரின் ஆடல்காட்சியாகும். அக்காட்சியை அவர் தம்முடைய திருவாக்கினால் 


"நிறைபுன லணிந்த சென்னி நீணிலா வரவஞ்சூடி

மறையொலி பாடியாடன் மயானத்து மகிழ்ந்தமைந்தன்

கறைமலி கடல்சூழ்நாகைக் காரோணங் கோயில்கொண்ட

இறைவனை நாளுமேத்த விடும்பைபோ யின்பமாமே".

    - என்று சுட்டுகின்றார். 


#பல்வர் காலத்தில் நாவுக்கரசர் கண்ட நடராஜர் திருவுருவம் சோழ அரசர்களால் பாசுபதசைவத்துடன தொடர்புபடுத்தப்பட்டதை இதன் மூலம் அறிய முடிகின்றது. இச்சிற்பத்தில் #ஆடவல்லான், #கங்காதரர் மற்றும் #தட்சிணாமூர்த்தி ஆகிய மூன்று திருவுருவங்களும் ஒரே வடிவாகக் காணப்படுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். இவ்வாறாக மூன்று திருவுருவங்களும் ஒருங்கே அமைந்த சிற்பத்தைத் தமிழகத்தில் எங்கும் காண்பது அரிதாகும். அத்தகு பெருமையினை #நாகை_காரோணம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


நன்றி: தில்லைராஜன் இணையப்பக்கம்


#NagaiKaronam #NagaiTemples #Shaivam #SivanTemple #SivaRajathani #Nadarajar

அதிபத்த நாயனார் - திருத்தொண்டர் (பெரிய)புராணம்

"விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன் ” - திருத்தொண்டத்தொகை 


“திறமமர் மீன்படுக் கும்பொழு தாங்கொரு மீன்சிவற்கென்

றுறவமர் மாகடற் கேவிடு வோனொரு நாட்கனக

நிறமமர் மீன்பட நின்மலற் கென்றுவிட் டோன்கமலம்

புறமமர் நாகை யதிபத்த னாகிய பொய்யிலியே” 


- திருத்தொண்டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி (52)


குறிப்புரை: கடலில் வலையை வீசி மீன் பிடிக்கும் பொழுது மீன் ஒன்றே ஒன்று தனியாக வலையில் அகப்பட்டுக் கிடைக்குமாயின் அந்த மீனை, 'இந்த மீன் சிவனுக்கு உரிய மீன்' என்று அதனை மீண்டும் கடலிலே விடுபவர் இந் நாயனார். இவருக்குச் சோதனையாகப் பல நாட்களில் வலையில் ஒவ்வொரு மீனே அகப்பட்டு வந்தது. அதைக் கடலிலே விட்டமையால் உணவின்றிக் குடும்பத்துடன் மெலியும் நாளில் ஒரு நாள் தனி ஒரு மீன் பொன்னும், இரத்தினமுமே உருவாகி, உலகம் வில் பெறும் அளவினதாய் அகப்பட, அதனையும் கடலிலே விடுத்தார், உடனே பெருமான் காட்சி தந்து அழைத்துச் செல்ல, முத்தி பெற்றார். இந் நாயனார் பத்தருட் சிறந்த 'அதிபத்தர்' எனப் பெயர் பெற்றமை உணரற்பாற்று. அமர் - அந்த மீன் வாழ்கின்ற. புறம் - புறத்துச் சூழ்ந்த பொய்கைகள்; ஆகுபெயர். நாகை - நாகப் பட்டினம்.



சேக்கிழார் பெரியபுராணம் 


பாடல் எண் : 1 


மன்னி நீடிய செங்கதி

    ரவன்வழி மரபில்

தொன்மை யாம்முதற் சோழர்தந்

    திருக்குலத் துரிமைப்

பொன்னி நாடெனுங் கற்பகப்

    பூங்கொடி மலர்போல்

நன்மை சான்றது நாகைப்பட்

    டினத்திரு நகரம் 


பொழிப்புரை : உரிமை நிலைபெற்று வாழ்ந்து வருகின்ற கதிரவன் வழியில் வந்த மரபான, பழமையும் முதன்மையும் பெற்ற சோழர்க ளின் குலத்திற்கு உரிமையுடைய காவிரிநாடு என்னும் கற்பகப் பூங் கொடியில் மலர்ந்த மலரைப் போன்று நாகைப்பட்டினம் என்ற நகரம் நலம் சிறந்து விளங்கும் மேன்மை உடையதாம்.


பாடல் எண் 2 


தாம நித்திலக் கோவைகள்

    சரிந்திடச் சரிந்த

தேம லர்க்குழல் மாதர்பந்

    தாடுதெற் றிகள்சூழ்

காமர் பொற்சுடர் மாளிகைக்

    கருங்கடல் முகந்த

மாமு கிற்குலம் மலையென

    ஏறுவ மருங்கு 


பொழிப்புரை: 


முத்து மாலைகளின் கோவைகள் சரியத் தேன் பொருந்திய மலர்களைச் சூடிய தாழ்ந்த கூந்தலையுடைய பெண்கள் பந்தாடும் மேடைகளைக் கொண்ட விரும்பத்தக்க பொன் ஒளி மின்னும் மாளிகைகளை, இவை மலை என்று மயங்கி, அவற்றின் அருகே, கரிய கடல் நீரை முகந்து நிற்கும் கரிய மேகக் கூட்டங்கள் நெருங்குவன. 


பாடல் எண் : 3 


பெருமை யில்செறி பேரொலி

    பிறங்கலின் நிறைந்து

திரும கட்குவாழ் சேர்விட

    மாதலின் யாவும்

தருத லில்கடல் தன்னினும்

    பெரிதெனத் திரைபோல்

கரிப ரித்தொகை மணிதுகில்

    சொரிவதாங் கலத்தால். 


பொழிப்புரை: 


பெருமை மிக்க பேரோசை நிறைதலாலும், அழகு நிறைந்த திருமகள் வாழும் உறைவிடமாதலாலும், வேண்டும் பொருள்களை எல்லாம் அளித்தலாலும், கடலை விடப் பெரியது என்று சொல்லுமாறு விளங்கி, அலை என யானைத் தொகைகள், குதிரைத் தொகைகள், மணிகள், ஆடைகள் ஆகிய இவை முதலான பொருள்களை எல்லாம் மரக்கலங்களில் கொணர்ந்து தர, அந்நகரம் சிறந்து விளங்கும்.



பாடல் எண் : 4 


நீடு தொல்புகழ் நிலம்பதி

    னெட்டினும் நிறைந்த

பீடு தங்கிய பலபொருள்

    மாந்தர்கள் பெருகிக்

கோடி நீள்தனக் குடியுடன்

    குவலயங் காணும்

ஆடி மண்டலம் போல்வதவ்

    வணிகிளர் மூதூர்

பொழிப்புரை: 


பெரும் புகழுடைய பதினெண் நிலங்களிலும் நிறைந்த பெருமையுடைய பல பொருள்களைக் கொண்ட மக்களும் சேர்ந்து பெருகி வாழ்வதாலும், கோடியளவினும் பெருகிய செல்வக் குடி மக்களுடன் விளங்குவதாலும், அவ்வழகுடைய பழைய நகரம், இவ்வுலகம் முழுவதும் தனக்குள் நிழலாக அடங்கக் காணப்படுகின்ற கண்ணாடி மண்டலம் போன்றதாகும். 


பாடல் எண் : 5 


அந்நெ டுந்திரு நகர்மருங்

    கலைகடல் விளிம்பில்

பன்னெ டுந்திரை நுரைதவழ்

    பாங்கரின் ஞாங்கர்

மன்னு தொன்மையின் வலைவளத்

    துணவினில் மலிந்த

தன்மை வாழ்குடி மிடைந்தது

    தடநுளைப் பாடி 


பொழிப்புரை: 


அத்தகைய பெருநகரத்தின் அருகில் அலைகளை உடைய கடல் விளிம்பில், நீண்டு அலைகளின் நுரை வந்து தவழ்வ தற்கு இடமான பகுதிகளை அடுத்து, நிலையானதும் பழைமையான துமான பரதவர் மரபில், வலைவீசி மீன் பிடிக்கும் தொழிலால் பெறும் வளமையுடைய மீன் உணவு பெருகிய இயல்பினால் வாழ்வு பெற்ற பரதவர் குடிகள் நெருங்கியுள்ளன.



பாடல் எண் : 6 


புயல ளப்பில வெனவலை

    புறம்பணை குரம்பை

அயல ளப்பன மீன்விலைப்

    பசும்பொனி னடுக்கல்

வியல ளக்கரில் விடுந்திமில்

    வாழ்நர்கள் கொணர்ந்த

கயல ளப்பன பரத்தியர்

    கருநெடுங் கண்கள் 


பொழிப்புரை: 


அளவற்ற மேகங்கள் கிடந்தாற்போல் வலைகள் பெருகிய குடிகளின் அருகே, மீன் விலைக்குக் கொள்வோர் கொண்டு வந்த பசும்பொற்குவியல்கள் அளவிடப்படுவன. பரந்த கடலில் செலுத்தும் மீன்பிடிப் படகுகளின் வழி, பரதவர் கொணர்ந்த கயல் மீன்களை அவரிடம் பெற்றுக் கொள்ளும் பரத்தியரின் கரிய கண்கள் அவை இவ்வளவு விலை பெறும் என்பதைக் கண்ட அளவில் அளந்து விடுவன.



பாடல் எண் : 7 


உணங்கல் மீன்கவர் வுறுநசைக்

    குருகுடன் அணைந்த

கணங்கொள் ஓதிமங் கருஞ்சினைப்

    புன்னையங் கானல்

அணங்கு நுண்ணிடை நுளைச்சியர்

    அணிநடைக் கழிந்து

மணங்கொள் கொம்பரின் மருங்குநின்று

    இழியல மருளும் 


பொழிப்புரை: 


உலர்ந்த மீன்களைக் கவர்தற்கு ஆசையுடைய பறவைகளுடன் வந்த கூட்டமான அன்னப் பறவைகள், வருந்துகின்ற நுண்ணிய இடையையுடைய நுளைச்சியரின் அழகிய நடைக்குத் தோற்று, உயர்ந்த கிளைகளையுடைய புன்னைக் காட்டில், மணம் மிக்க அப்புன்னைக் கொம்புகளினின்றும் இறங்காமல் மருட்சி கொண்டி ருக்கும்.



பாடல் எண் : 8 


வலைநெ டுந்தொடர் வடம்புடை

    வலிப்பவர் ஒலியும்

விலைப கர்ந்துமீன் குவைகொடுப்

    பவர்விளி ஒலியும்

தலைசி றந்தவெள் வளைசொரி

    பவர்தழங் கொலியும்

அலைநெ டுங்கடல் அதிரொலிக்

    கெதிரொலி யனைய 


பொழிப்புரை: 


வலைகளில் பிணிக்கப்பட்டிருக்கும் நீண்ட தொடர் களையுடைய வடங்களை இழுத்துச் செம்மை செய்பவர்களின் ஒலியும், விலையை எடுத்துக் கூறி மீன் குவியலைக் கொடுப்பவர் வாங்குவோரை அழைக்கின்ற ஒலியும், மிகச் சிறந்த வெண்மையான சங்குகளை எடுத்துக் குவிப்பவர்களின் ஒலியும், பெரிய கடல் ஒலிக்கு எதிர் ஒலி போன்று விளங்குவன. 


பாடல் எண் : 9 


அனைய தாகிய அந்நுளைப்

    பாடியில் அமர்ந்து

மனைவ ளம்பொலி நுளையர்தங்

    குலத்தினில் வந்தார்

புனையி ளம்பிறை முடியவர்

    அடித்தொண்டு புரியும்

வினைவி ளங்கிய அதிபத்தர்

    எனநிகழ் மேலோர்



பொழிப்புரை: 


அத்தகைய நுளைப்பாடியில் வாழ்ந்து, அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றிவரும் நுளையரின் குலத்தில் தோன்றியவர். இளம்பிறைச் சந்திரனைச் சூடிய முடியையுடைய இறைவரின் அடித்தொண்டு செய்யும் செயலில் சிறந்து விளங்கிய `அதிபத்தர்` எனும் பெயர்பெற்ற மேன்மையை உடையவராவர்.


பாடல் எண் : 10 


ஆங்கு அன்பர்தாம் நுளையர்தந்

    தலைவராய் அவர்கள்

ஏங்கு தெண்டிரைக் கடலிடைப்

    பலபட இயக்கிப்

பாங்கு சூழ்வலை வளைத்துமீன்

    படுத்துமுன் குவிக்கும்

ஓங்கு பல்குவை யுலப்பில

    வுடையராய் உயர்வார்



பொழிப்புரை: 


அவ்வதிபத்தர் என்னும் அன்பர், நுளையரின் தலைவராகி, ஒலிக்கின்ற தெளிந்த அலைகளையுடைய கடலில் பலவாறு தொழில் செய்து, பக்கங்களில் சூழும் வலைகளை வளைத்து வீசி, மீன்களைப் பிடித்துக் கொண்டு வந்து குவிக்கும் உயர்ந்த பலவகை மீன் குவைகள் பலவாக, அவற்றை உடையவராய் அதனால் உயர்ந்தவராய் விளங்கினார். 


பாடல் எண் : 11 


முட்டில் மீன்கொலைத் தொழில்வளத்

    தவர்வலை முகந்து

பட்ட மீன்களில் ஒருதலை

    மீன்படுந் தோறும்

நட்ட மாடிய நம்பருக்

    கெனநளிர் முந்நீர்

விட்டு வந்தனர் விடாதஅன்

    புடன்என்றும் விருப்பால் 


பொழிப்புரை: 


குறைவில்லாத மீன்களைப் பிடித்து, அக்கொலைத் தொழிலின் வளத்தையுடைய பரதவர், வலைகளால் வாரி எடுக்க, அதனுள் அகப்பட்ட மீன்களில், ஒரு தலைமையான மீன் கிட்டும் தோறும், `இஃது ஐந்தொழில் செய்து அருட்கூத்தாடுகின்ற ஐயருக்காகுக!\' என்று, இடையறாத அன்பினால் விருப்புடன், குளிர்ந்த கடலிடத்தில் நாடோறும் விட்டு வந்தார்.


பாடல் எண் : 12 


வாகு சேர்வலை நாள்ஒன்றில்

    மீனொன்று வரினும்

ஏக நாயகர் தங்கழற்

    கெனவிடும் இயல்பால்

ஆகு நாள்களில் அனேகநாள்

    அடுத்தொரு மீனே

மேக நீர்படி வேலையில்

    படவிட்டு வந்தார் 


பொழிப்புரை: 


ஒழுங்காக மீன்களைப் பிடித்து வரும் வலையில், ஒரு நாளில் ஒரு மீனே வரினும் `முழுமுதல்வரான இறைவரின் திருவடிக்கே' ஆகும் என விடுத்துவரும் நாள்களில், பல நாள்கள் தொடர்ந்து ஒரு மீனே, மேகம் படியும் கடலில் கிடைக்க, அதனை, அவர், இறைவருக்காக என்றே கடலின்கண் விட்டு வந்தார்.


பாடல் எண் : 13 


மீன்வி லைப்பெரு குணவினில்

    மிகுபெருஞ் செல்வம்

தான்ம றுத்தலின் உணவின்றி

    அருங்கிளை சாம்பும்

பான்மை பற்றியும் வருந்திலர்

    பட்டமீன் ஒன்று

மான்ம றிக்கரத் தவர்கழற்

    கெனவிட்டு மகிழ்ந்தார் 


பொழிப்புரை: 


மீனை விற்பதனால் பெருகும் உணவுப் பண்டங்க ளால் மிக்க பெருஞ்செல்வம் இவ்வகையில் சுருங்கியமையால், தம் அரிய உறவினர்கள் உணவில்லாமல் பசியால் வருந்துவது பற்றியும், அவர் வருந்தவில்லை. வலையில் அகப்படுவது ஒரு மீனே யாயினும் அதனையும் தொடர்ந்து, மான் கன்றைக் கையில் ஏந்திய இறைவரி 


பாடல் எண் : 14 


சால நாள்கள்இப் படிவரத்

    தாம்உண வயர்த்துக்

கோல மேனியுந் தளரவுந்

    தந்தொழில் குறையாச்

சீல மேதலை நின்றவர்

    தந்திறந் தெரிந்தே

ஆல முண்டவர் தொண்டர்அன்

    பெனும்அமு துண்பார் 


பொழிப்புரை: 


பல நாள்கள் இவ்வாறே நிகழத் தாம் உணவு மறந்து வாடித் தம் அழகிய திருமேனியும் தளர்ச்சியடையத் தம் தொண்டினின் றும் குறைவுபடாத அவ்வொழுக்கத்தில் சலியாமல் ஒழுகியவரின் இயல்பை அறிந்து, நஞ்சுண்ட இறைவர் இத் தொண்டரின் அன்பு எனும் அமுதத்தை உண்பாராய், 


பாடல் எண் : 15 


ஆன நாள்ஒன்றில் அவ்வொரு

    மீனுமங் கொழித்துத்

தூநி றப்பசுங் கனகநற்

    சுடர்நவ மணியால்

மீனு றுப்புற அமைத்துல

    கடங்கலும் விலையாம்

பான்மை அற்புதப் படியதொன்

    றிடுவலைப் படுத்தார் 


பொழிப்புரை: 


முற்கூறியவாறே நிகழ்ந்த நாள் ஒன்றில், அவ்வொரு மீனும் அங்கு வலையில் அகப்படாது போகச் செய்து, தூய நிறமுடைய பசும் பொன்னாலும் ஒளியுடைய மணிகளாலும் மீன் உறுப்புக்கள் பொருந்தும்படி அமைத்து, உலகனைத்துமே அதற்குரிய விலை என மதிக்கத்தக்க அற்புதத் தன்மை கொண்ட ஒரு மீன், வீசிய வலையில் அகப்படுமாறு இறைவர் செய்தனர். 


பாடல் எண் : 16 


வாங்கு நீள்வலை அலைகடற்

    கரையில்வந் தேற

ஓங்கு செஞ்சுடர் உதித்தென

    வுலகெலாம் வியப்பத்

தாங்கு பேரொளி தழைத்திடக்

    காண்டலும் எடுத்துப்

பாங்கு நின்றவர் மீன்ஒன்று

    படுத்தனம் என்றார்



பாடல் எண் : 17 


என்று மற்றுளோர் இயம்பவும்

    ஏறுசீர்த் தொண்டர்

பொன் திரட்சுடர் நவமணி

    பொலிந்தமீ னுறுப்பால்

ஒன்று மற்றிது என்னையா

    ளுடையவர்க் காகும்

சென்று பொற்கழல் சேர்கெனத்

    திரையொடுந் திரித்தார்



பொழிப்புரை: 


என்று பரதவர் உரைக்கவும், அதுகேட்ட மிகுகின்ற சிறப்பையுடைய தொண்டரான அதிபத்தர் `பொன்னும் தொகுதியான ஒளியுடைய நவமணிகளும் விளங்கும், மீன் உறுப்புகளினால் பொருந்தும் உலகியலில் காணக் கூடாத இம்மீன், என்னை ஆட்கொள் கின்ற இறைவருக்கே ஆகும்: அவரது பொற்கழலை இது சேர்வதா கும்!' என்று கடலில் விடுத்தார். 


பாடல் எண் : 18 


அகில லோகமும் பொருள்முதற்

    றாம்எனும் அளவில்

புகலு மப்பெரும் பற்றினைப்

    புரையற எறிந்த

இகலில் மெய்த்திருத் தொண்டர்முன்

    இறைவர்தாம் விடைமேல்

முகில்வி சும்பிடை யணைந்தனர்

    பொழிந்தனர் முகைப்பூ 


பொழிப்புரை: 


எவ்வுலகும் பொருளையே முதன்மையாக வுடையது என்று கூறும் அப்பெரிய வலிய பொன்னாசை என்னும் பெரும் பற்றை முழுமையாக நீக்கிய ஒப்பில்லாத மெய்த்தொண்டர் முன்னே, இறைவர் விடையூர்தியின் மேல், மேகம் தவழும் வானத்தில் எழுந்தருளினார். அதுபொழுது தேவர்கள் கற்பகப் பூமழை சொரிந்தனர்.


பாடல் எண் : 19 


பஞ்ச நாதமும் எழுந்தன

    அதிபத்தர் பணிந்தே

அஞ்ச லிக்கரம் சிரமிசை

    யணைத்துநின் றவரை

நஞ்சு வாண்மணி மிடற்றவர்

    சிவலோகம் நண்ணித்

தஞ்சி றப்புடை அடியர்பாங்

    குறத்தலை யளித்தார் 


பொழிப்புரை: 


`பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு' (குறள், 247) என்ற திருவள்ளுவனாரும். `பொருள்ளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது' (குறள்., 248) என்பர். அவ்வருட்செல்வமே அதிபத்தரின் செல்வமாயிற்று.


பாடல் எண் : 20 


தம்ம றம்புரி மரபினில்

    தகும்பெருந் தொண்டு

மெய்ம்மை யேபுரி அதிபத்தர்

    விளங்குதாள் வணங்கி

மும்மை யாகிய புவனங்கள்

    முறைமையிற் போற்றும்

செம்மை நீதியார் கலிக்கம்பர்

    திருத்தொண்டு பகர்வாம் 


பொழிப்புரை: 


மீன்பிடிக்கும் தம் மரபிற்கு ஏற்றவாறே, தகுதியான பெருந் திருத்தொண்டை உண்மையில் தவறாது செய்து அருள் பெற்ற அதிபத்த நாயனாரின் விளக்கம் செய்யும் திருவடிகளை வணங்கி, இனி உலகங்கள் மூன்றும் முறையாகப் போற்றுகின்ற செம்மையும் நீதியும் உடைய கலிக்கம்ப நாயனாரின்' திருத்தொண்டைக் கூறுவாம். அதிபத்த நாயனார் புராணம் முற்றிற்று.


14 Aug 2021

07.101 பொன்னாம் இதழி விரைமத்தம்

 இன்று #ஆடி_சுவாதி 🌷 #சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை 🙏( 14/08/2021)


சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பாட்டில் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ள இப்பதிகம் நாகை காரோணம் திருத்தலத்தில் இயற்றி உள்ளதாக அமைந்துள்ளது. Shaivam.Org


#பொன்னாம்_இதழி_விரைமத்தம்

(07.101 ஏழாம் திருமுறை) பண் : காந்தாரம் 


பொன்னாம் இதழி விரைமத்தம் பொங்குகங்கைப் புரிசடைமேல் முன்னா அரவம் மதியமும் சென்னி வைத்தல் மூர்க்கு அன்னே துன்னா மயூரம் சோலைதொறும் ஆட தூரத் துணைவண்டு தென்னா என்னும் தென்நாகைத் திருக்காரோணத்து இருப்பீரே.  1 


வரைக்கை வேழம் உரித்தும் அரன்நடமாட்டு ஆனால் மனைதோறும் இரக்கை ஒழியீர் பழி அறியில் ஏற்றை விற்று நெல் கொள்வீர் முரைக் கை பவளக்கால் காட்ட மூரி சங்கத்தொடு முத்தம் திரைக்கை காட்டும் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  2 


புல்லும் பெறுமே விடை புனரச் சடைமேல் ஒரு பெண் புக வைத்தீர் இல்லம் தோறும் பலி என்றால் இரக்க இடுவார் இடுவாரே முல்லை முறுவல் கொடி எடுப்ப கொன்றைமுகம் மோதிரம் காட்ட செல்லும் புறவின் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  3 


மாண்டார் எலும்பும் கலும்பும் எலாம் மாலை ஆக மகிழ்ந்து அருளி பூண்தார் பொறி ஆடு அரவு ஆமை புரம்மூன்று எரித்தீர் பொருள்ஆக தூண்டா விளக்கு மணிமாட வீதிதோறும் சுடர்உய்க்க சேண்தார் புரிசைத் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  4 


ஒருவர்க்கு ஒருவர்அரிது ஆகில் உடை வெண்தலை கொண்டு ஊர்ஊரன் இருவர்க்கு ஒருவர் இரந்து உண்டால் எளிதே சொல்லீர் எத்தனையும் பருவன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர் தெருவில் சிந்தும் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  5 


தோடை உடுத்த காது உடையீர் தோலை உடுத்துச் சோம்பாதே ஆடை உடுத்துக் கண்டக்கால் அழகிது அன்றே அரிது அன்று ஓடை உடுத்த குமுதமே உள்ளங்கை மறிப்ப புறம்கை அனம் சேடை உடுத்தும் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  6 


கடு நஞ்சு உண்டு இரக்கவே கண்டம் கறுத்தது இக் காலம் விடும் நஞ்சு உண்டு நாகத்தை வீட்டில் ஆட்டை வேண்டா நீர் கொடு மஞ்சுகள் தோய் நெடுமாடம் குலவு மணிமாளிகைக் குழாம் இடு மிஞ்சு இதை சூழ் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  7 


பள்ளம் பாறும் நறும் புனலைச் சூடி பெண் ஓர் பாகமா வெள்ளை நீறே பூசுவீர் மேயும் விடையும் பாயுமே தொள்ளை ஆம் நல் கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கம் இடத் தொள்ளும் வேலைத் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  8 


மத்தம் கவரும் மலர்க் கொன்றைமாலைமேல் மால் ஆனாளை உய்த்து அங்கு அவரும் உரை செய்தால் உமக்கே அன்றே பழி உரையீர் முத்தம் கவரும் நகை இளையார் மூரித் தானை முடி மன்னர் சித்தம் கவரும் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  9 


மறை அன்று ஆலின் கீழ் நால்வர்க்கு அளித்தீர் களித்தார் மதில் மூன்றும் இறையில் எரித்தீர் ஏழ் உலகும் உடையார் இரந்து ஊண் இனிதேதான் திறை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சித் திருக் கோபுரத்து நெருக்க மலர்ச் சிறை வண்டு அறையும் தென்நாகைத் திருக் காரோணத்து இருப்பீரே.  10 


தேரார் வீதித் தென்நாகைத் திருக் காரோணத்து இறையானைச் சீரார் மாடத் திருநாவலூர்க் கோன் சிறந்த வன் தொண்டன் ஆரா அன்போடு உரைசெய்த அஞ்சோடு அஞ்சும் அறிவார்கள் வாரார் முலையாள் உமை கணவன் மதிக்க இருப்பார் வான் அகத்தே.  11




12 Aug 2021

நீலலோசனி ❤️ மீனலோசனி


கருந்தடங்கண்ணி அங்கயற்கண்ணி

🎯 #நாகை மற்றும் #மதுரை ஸ்தலங்களுக்கு இடையேயான சில ஒப்பீடுகள் ..

🎯 சிவபெருமானின் நாகம் வலம் செய்து உண்டான நகரம் மதுரை என்பதால் #திருஆலவாய் (ஆலம் என்றால் நாகம்) என்ற பெயர் உண்டு. நாகர்கள் வசித்து சிவபூஜை செய்த நகரம் #நாகப்பட்டினம் என அழைக்கப்படுகிறது.

🎯 மதுரையில் சொக்கநாதப் பெருமான் 64 #திருவிளையாடல்கள் நிகழ்த்தியது போல், நாகை உள்ளிட்ட #சப்தவிடங்கர் தலங்களில் தியாகராஜப் பெருமான் 360 திருவிளையாடல்களை நிகழ்த்தி உள்ளார்.

🎯 மதுரையில் #சுந்தரேஸ்வரர் ஆகவும் நாகையில் #சுந்தர_விடங்கர் ஆகவும் சுவாமி அருளாட்சி புரிகிறார்.

🎯 #பதஞ்சலி, #வியாக்ரபாதர் முனிவர்களுக்கு #நடராஜர் திருநடனம் காட்டி அருளிய பல தலங்களில் இவூர்களும் அடக்கம்.

🎯 கைலாயத்தில் நடைபெற்ற சிவன் பார்வதி திருமணக் காட்சியை அகத்தியருக்கு நாகையிலும் இறைவன் காட்டியருளினார். மதுரையில் சிவபெருமான் சுந்தரேஸ்வரர் ஆக எழுந்தருளி மீனாட்சி அம்மனை #திருமணம் செய்து அருள்புரிகிறார்.

🎯 அம்பிகையின் 64 #சக்தி பீடங்களில் மிக முக்கியமான ஐந்து ஆட்சி பீடங்களில் இவ்விரு ஊர்களும் அடக்கம்,

🎯 இவ்விரு ஊர்களில் சிவஸ்தலம் முதன்மையாக உள்ளபோதிலும் அம்பிகையின் பெயராலேயே, நாகை நீலாயதாட்சி #அம்மன்_கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் என அழைக்கபடுகிறது.

🎯 நாகையில் #நீலாயதாட்சி அம்மன் நித்ய கன்னியாக வீற்றிருந்து, நீலநிற கடல் போன்ற பரந்த பார்வையால் தன் பக்தர்களுக்கு அருள் புரிகிறாள், மதுரையில் #மீனாட்சி அம்மன் நித்ய சுமங்கலியாக வீற்றிருந்து மீன் போன்ற விழிகளால் பக்தர்களை குழந்தையாக காத்து அருள்கிறாள்.

🎯 இவ்விரு தலங்களிலும் அன்னை ஸ்ரீ ராஜ #சியாமளா தேவியாகவே போற்றப்படுகின்றனர். மதுரையில் மீனாட்சி அம்மன் மரகத பச்சை நிறத்திலும் , நாகையில் நீலம் கலந்த பச்சை நிறத்திலும் ராஜ மாதங்கியாக காட்சி தருகின்றனர்.

🎯 இரு தலங்களிலும் #ஆடி மாதம் அம்பாள் சன்னதியில் கொடியேற்றத்துடன் பத்து நாட்கள் உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெறும்.

🎯 நாகையில் நீலாயதாட்சி அம்மனுக்கு ஆடிப்பூரம் முன்னிட்டு அம்பிகை பூப்பெய்தல் #பூரம்_கழித்தல் விழாவாகவும். மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு ஆடி #முளைக்கொட்டு உற்சவத்தில் பூரம் அன்று ருதுமங்கள ஸ்னானம், ஏற்றி இறக்கும் வைபவம் நடைபெறும்.

🎯 சூரசம்காரம் உடன் தொடர்புடையதாக #முருகப்பெருமான் நாகை சிக்கலில் #வேல் வாங்கி சம்காரம் செய்து, மதுரை திருப்பரங்குன்றத்தில் தெய்வானையை #மணம் முடிக்கிறார்.

🎯 திருமால் #அழகர் ஆக சுந்தரராஜ பெருமாள் என்ற திருநாமத்துடன் மதுரையிலும், #அழகியார் ஆக சௌந்தரராஜ பெருமாள் என்ற திருநாமத்துடன் நாகையில் அருள்புரிகிறார்.

#மீள்பதிவு FB\NagaiKaronam




11 Jul 2021

புண்டரீக முனிவர் வரலாறு



🌷 யமுனை நதிக்கரையில் அமைந்த ஓர் நகரத்தில் வேத, ஆகமங்களை நன்கு கற்று உணர்ந்து அதில் சிறப்புற்று விளங்கிய "கருத்தமன்" எனும் முனிவரின் மகனான "புண்டரீகர்" தனது தந்தையிடம் முக்தி நிலையை அளிக்க வல்ல இறைவனைப் பற்றியும் அதற்கான வழிகளையும் கேட்டறிந்தார். கருத்தம முனிவரும் தனது மகனுக்கு சிவபெருமானின் பெருமைகளை எடுத்துரைத்து, முக்தி நிலையை அடைவதற்கான வழிமுறைகளை கூறி புண்டரீக முனிவரை காசி செல்லும்படி பணித்தார்.


🌷 அதன்படி உடலோடு முக்தி பெற எண்ணிய புண்டரீக முனிவர் காசியை அடைந்து சுவாமி விஸ்வநாதர், விசாலாட்சி அன்னையை "ஈராயிரம் வருடங்கள்" வழிபட்டு வந்தபோதும் இறைவன் காட்சி அளிக்கவில்லை. அவ்வேளையில் "வாமதேவன்" எனும் முனிவர் புண்டரீக முனிவரிடம் இங்கு காசியில் துன்பம் அடைந்தவருக்கே சாரூப முத்தி எனவே, காஞ்சி சென்று வழிபடுமாறு கூறினார்.


🌷 பின்னர் காஞ்சி வந்தடைந்த புண்டரீக முனிவர் ஏகாம்பர நாதரை வழிபட்டு, தனியாக காயாரோகண (கச்சி காரோணம்) லிங்க பிரதிஷ்டை செய்து "பன்னிரண்டாயிரம்" ஆண்டுகள் வழிபட்டு வந்தார். அப்போது அசரீரியாக இறைவன் குடந்தை எனும் கும்பகோணம் செல்லுமாறு அருளினார்.


🌷 அதன்படி கும்பகோணம் அடைந்து கும்பேஸ்வரர் சுவாமியை வழிபட்டு, அங்கும் தனியாக காயாரோகண (குடந்தை காரோணம்) லிங்க பிரதிஷ்டை செய்து "எட்டாயிரம்" ஆண்டுகள் வழிபட்டு வந்தபோதும் இறைவன் காட்சி அளிக்கவில்லை. பின்னர் கண்ணுவ முனிவரின் ஆலோசனைப்படி உடலோடு முத்திபெற சிவராஜதானி என்றழைக்கப்படும் நாகை திருத்தலமே உகந்தது என அங்கு வந்தடைந்தார்.


🌷 அங்கு "தேவ தீர்த்தம்" முதலிய பல தீர்த்தங்களில் நீராடி "ஆதிபுராணர்" (நாகை பெரிய கோயில்) சுவாமியை வழிபட்டு சறுவ தீர்த்தத்தின் தென் மேற்கே குடில் அமைத்து அங்கே காயாரோகண (நாகை காரோணம்) லிங்கம் அமைத்து முறைப்படி கிரியை பூசனைகள் செய்து பல ஆண்டுகள் வழிபட்டு வந்தார். இறைவனும் மனமுவந்து காட்சியளித்து தனது மூன்றாவது காட்சியின்போது ஐக்கியப்படுத்திக் கொள்வதாக அருளினார்.


🌷 புண்டரீக முனிவரும் மகிழ்ந்து தொடர்ந்து இறைவனை, உணவின்றி விரத முறைகளுடன் வழிபட்டு இரண்டாம் காட்சியை பெற்று, மேலும் கடும் தவமியற்றி மூன்றாம் காட்சியில் இறைவனுடன் உடலோடு ஒன்றாக கலந்து பேரின்ப முக்தியடைந்தார். இந்த ஐதீக விழாவானது வருடம்தோறும் ஆனி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் அன்று அர்த்தஜாமத்தில் போது நடைபெறுகிறது.


இறைவன் ஆதிபுராணர் புண்டரீக முனிவரை காயத்தோடு (உடம்போடு) ஆரோகணம் செய்து கொண்டமையால் காயாரோகணேஸ்வரர் என பின்னர் அழைக்கப்பெற்றார். சறுவ தீர்த்தம் "புண்டரீக தீர்த்தம்" என ஆயிற்று. புண்டரீக முனிவர் குடில் அமைத்து வழிபட்ட கோயில் "மேலை காரோணம்" என வழங்கப்படுகிறது.

3 Jul 2021

பஞ்ச குரோச ஆலயங்கள்,  ஏழூர் பல்லக்கு திருவிழா

  

சிவ ராஜதானி என போற்றப்படும் பல சிறப்புகள் பெற்ற "நாகை காரோணம்" திருத்தலத்தில் அமைந்துள்ள பன்னிரு சிவாலயங்கள் தேவர்களாலும் முனிவர்களாலும் தனித் தனியாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது போல, 


நகரைச் சுற்றிலும் பல ஆலயங்கள் இத் தலத்துடன் தொடர்புடையவையாக அமைந்துள்ளன. இவைகள் பஞ்ச குரோச தலங்கள் என வழங்கப்படும். (ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக் கூடிய தூரமாகும்) இந்த எல்லை பரப்பில் ஏழு திருத்தலங்கள் அமைந்துள்ளன அவைகள் 1.பொய்கைநல்லூர் 2.பாப்பாகோயில் 3.சிக்கல் 4.பாலூர் 5.வடகுடி 6.தெத்தி 7.நாகூர் ஆகியனவாகும். 


இத்தலங்களை அரசகேசரி மற்றும் தனதத்தன் ஆகியோர் ஆனிமாத தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபட்டு பாவ வினைகள் நீங்கி எமவாதனை இல்லாது முக்தி பெற்றனர். இந்த ஐதீகதின் படியே வருடம் தோறும் மேலே குறிப்பிட்ட நாளில் பஞ்ச குரோச யாத்திரை நடைபெறும். ஆனி அஷ்டமி அன்று காலை ஶ்ரீ காயாரோகண சுவாமி ஆலயத்திலிருந்து கல்யாண சுந்தரர் பல்லக்கில் எழுந்தருளி ஏழு ஊர்களில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று தீர்த்தம்  கொடுத்தருளி, மறுநாள் காலை ஆலயம் வந்தடைவார். 


இந்த பஞ்ச குரோச ஏழூர் பல்லக்கு திருவிழாவினை அடுத்து நிறைவாக, இந்திரனிடமிருந்து சுந்தர விடங்கரை பெற்று நாகையில் பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பிய  சாலிசுக மகாராஜா முக்தி பெறும் ஐதீக நிகழ்வும் நடைபெறும் என்பது குறிப்பிட தக்கதாகும்.




புராண வரலாறு 


உஜ்ஜையினி மாநகரிலே விண்டுதத்தன் என்னும் ஓர் வைஷ்யன் இருந்தான். அவன் மகன் தனதத்தன் பிறந்தது முதல் கொடு நோயால் அவதியுற்றான். ஜோதிடர்கள் அவன் வயது பதினாறு என்றனர். விண்டுதத்தன் தன் மகனை நோக்கி இவ்வூரில் மாகாளர் கோயிலை அடைந்து மாகாளரை பணிந்து

அங்குவரும் அடியார்களுக்கும், முனிவர்களுக்கும் பணிவிடை செய்யுமாறு அனுப்பினார். 


ஓர்நாள் மாகாளரை வழிபட வாம தேவ மாமுனிவர் வந்தார். வந்த முனிவரை தனதத்தன் பணிந்தார். முனிவர் 100

ஆண்டு வாழ்க என்று ஆசி வழங்கினார். அதை கேட்ட தனதத்தன் ஜோதிடர்கள் எனக்கு பதினாறு வயது

என்றனர். ஆனால் நீர் எனக்கு நூறு வயது என்று வாழ்த்தினர் என்று ஆனந்த முற்று ஆடினான். அதற்கு

முனிவர் 16 வயதில் நீ எமலோகத்தை அடைந்து இறைவனை அருளினால் மீண்டும் உஜ்ஜையினிக்கு வந்து

பின் முக்தி அடையவாய் என கூறி விடைபெற்றார். 


பின்னர் தனதத்தன் 16 வது வயதில் எமதூதர்கள் அவனை எமன் முன் நிறுத்தினர். தனதத்தன் எமனை பார்த்து வாமதேவ முனிவர் எனக்கு 100 ஆண்டுகள் வாழ வாழ்த்தியுள்ளதை சொன்னார். எமன் நடுநடுங்கி

தூதர்களை பார்த்து உடனே தனதத்தனை பூலோகத்தில் விடுமாறு கட்டளையிட்டான். தனதத்தன் எம

உபாதனைகள் அனைத்தையும் எமன் அருளால் பார்த்து இதிலிருந்து மீள்வதற்கு ஏதேனும் உபாயம் உண்டா

என்று கேட்டான். அதற்கு எமன் சிவஞானம் அடைதல், சிவபூஜை செய்தல், சிவனடியாரை பணிதல்

இதனன்றியும் நாகை காரோணத்தை பஞ்சகுரோசத்தை கழ்தல் என்றார். 


பின்னர் எமதூதர்கள் தனதத்தனை

பூவுலகில் விட்டனர். தனதத்தன் தூங்கி எழுந்தவனை போல் எழுந்து எமலோகத்தில் நடந்தவைகளை தாய், தந்தை மற்றும் அந்நாட்டு அரசகேசரிக்கும் கூறினான். 


உஜ்ஜையினி மன்னன் அரசகேசரி தன் பரிவாரங்களுடன் நாகையை அடைந்து சகல சிவாலயங்களையும் தரிசித்து ஆனிமாதம் பூதாஷ்டமி அன்று சுவாமி அம்பாளை பல்லக்கில் வைத்து

அலங்கரித்து பஞ்சகுரோச யாத்திரை புறப்பட்டு விழாக்கள் கண்டு காரோணரை தொழுது முக்தி நிலை பெற்றான். மன்னன் அரசகேசரியை அடுத்து தனதத்தனும் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி தினத்தில் காயாரோகண சுவாமியை வழிப்பட்டு சுற்றியுள்ள பஞ்ச குரோச தலங்களை தரிசித்து முக்தி பெற்றான். இந்த பஞ்ச குரோசத்தில் உள்ள மணல் எல்லாம் சிவலிங்கம் நீரெல்லம் தீர்த்தம் என தலபுராணம் சிறப்பாக விவரிக்கிறது. 


இத்தகைய சிறப்பான தலங்களை தரிசித்து நாமும் பாவ வினைகளில் இருந்து நீங்க எமவாதனை இல்லாது இறைவன் அருள் பெறுவோம்.



நாகை காரோணம் 

பஞ்ச குரோச தலங்கள் 


1.பொய்கைநல்லூர் - ஸ்ரீ நந்திநாதர் திருக்கோயில். 

(வாயில் காவலில் தவறிய நந்தி நாகைக்கு தென்பால் ஆலங்காட்டில் தன் பெயரால் ஒர் லிங்கம் நிறுவி

வழிபாடு செய்து இறைவன் அருளால் தன் தவறை நீக்கிய தலம் ). 


2. பாப்பாகோவில் - ஸ்ரீ கதம்பநாதர் திருக்கோயில்

(கதம்ப முனிவரால் லிங்கம் நிறுவப்பட்டு அவரால் வழிபடப்பட்ட தலம். சூரசம்ஹாரம் முடிந்து முருகப்பெருமான் இந்த கதம்பவன தலத்தில் சத்தி ஆயுதத்தினால் தீர்த்தம் உண்டாக்கி வழிபட்ட பஞ்ச கடம்ப தலங்களில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது )  


3. சிக்கல் - ஸ்ரீ வெண்ணைநாதர் திருக்கோயில். 


நாய் ஊணை உண்ட காமதேனு வெள்பாலை மரத்தின் அடியில் குற்றம் நீங்க பெற்று அந்த ஆனந்தத்தில் தன் மடியில் உள்ள பாலை சுரந்து பால்குளத்தை ஏற்படுத்தியது. வசிஷ்டர் அதில் திரண்ட வெண்ணையை கொண்டு லிங்கம் நிறுவி வெண்ணைநாதர் என்று பெயரிட்டார். அந்த வெண்ணை பாலில் சிக்கி கொண்டதால் அவ்வூருக்கு சிக்கல் என்று வழங்கப்பட்டது. 


4. பாலூர் - ஸ்ரீ இயமநாதர் திருக்கோயில். 


பிரமன் செய்த யாககுண்டத்திலிருந்து வெளிப்பட்ட லிங்கத்தினை, சூரியன் தீர்த்தம் அமைத்து வழிபட்டு இயமனை

புத்திரனாக பெற்ற தலம்.  


5. வடகுடி - ஸ்ரீ திருமேனியழகர் (சுந்தரலிங்க சுவாமி) திருக்கோயில். சந்திரன் தீர்த்தம் அமைத்து வழிபட்ட தலம்



6. தெத்தி - ஶ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோயில். கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் அன்று அக்னி பகவான் இத்தலத்தில் லிங்கத்தை நிறுவி தீர்த்தம் அமைத்து வழிபட்டு பேறு பெற்றான்.



7.நாககன்னிகாபுரம் (நாகூர்)

சுயம்புவாக தோன்றிய ஈசனை வாசுகி என்ற நாக கன்னிகை வழிபாடு செய்து நான்கு புத்திரிகைளை

பெற்ற தலம். இக்கோயிலை சாலிசுக மகாராஜா கட்டினார். 

15 May 2021

பரசுராமர் பூஜை செய்த கார்முகேஸ்வரர்

சித்திரை மாதம் வரும் அக்ஷய திரிதியை  தினத்தில் பகவான் ஸ்ரீ பரசுராமரின் அவதார தினமாகவும் கருதப்படுகிறது.


மகாவிஷ்ணுவின் அம்சமான இவர் நாகை காரோணத்தில் #சிவபூஜை செய்த புராண தொடர்பைப் பற்றியும், தனிக்கோயிலாக நிலைபெற்று இருந்த மூர்த்தி இடம்பெயர்ந்த வரலாற்று நிகழ்வையும் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.


#புராணத்தொடர்பு


ஜமதக்னி முனிவர், ரேணுகா தேவி ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் பரசுராமர். ஒரு சமயம் அவரது தாய் ரேணுகா தேவி ஆசிரம தேவைகளுக்காக நீர் எடுக்க செல்கையில் ஆற்றில் #கார்த்தவீரியன் எனும் அரசனின் உருவம் தெரிந்தது கண்டு தனது கற்பின் நெறியில் இருந்து சற்று தவறினார். 


இதனை அறிந்த ஜமதக்கினி முனிவர் #ரேணுகா தேவியை சிரச்சேதம் செய்யும்படி பரசுராமருக்கு ஆணையிட்டார். "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" என்ற வாக்கினை கடைபிடித்த பரசுராமரும் அவ்வாரே செய்தார். இதனை அறிந்த கார்த்தவீரியன் #ஜமதக்னி முனிவரை கொன்றான். 


தன் தாய் தந்தை இருவரும் இறப்பதற்கு காரணமான கார்த்தவீரியன் மீது பரசுராமர் கோபம் கொண்டு பழிதீர்க்க எண்ணினார் . பின்னர் தன் தாயை கொன்ற குற்றம் நீங்க #நாகை_காரோணம் அடைந்து ஆதிபுராணர் காயாரோகண சுவாமியை வழிபட்டார்.


 பின் #தேவநதி என்று போற்றக்கூடிய உப்பனாறு கரையில் சிவலிங்கமும் தீர்த்தம் அமைத்து வழிபட்டு வந்தார். அதன் பயனாய் சிவபெருமான் காட்சியளித்து பரசுராமர் அவர் தாயை கொன்ற குற்றம் நீக்கி, வலிமை கொண்ட அரசனை வெற்றிகொள்ள #கார்முகம் ஏனும் வில்லினை அருளினார். அதனைப் பெற்ற பரசுராமரும் கார்த்தவீரியனை அழித்தார்.


#வரலாற்று_நிகழ்வு


பரசுராமருக்கு அருளிய கார்முகேஸ்வரர் இறைவனுக்கு தனிக் கோயில் அமைத்து #கார்முகேசம் என்ற பெயரில் பலகாலம் உப்பனாறு கரையினில் விளங்கி வந்தது.


16ஆம் நூற்றாண்டில் நாகப்பட்டினத்தில் நிர்வாக அதிகாரம் பெற்றிருந்த #டச்சுக்காரர்கள் இக்கோயில் இருந்த இடத்தில் கோட்டை அமைக்க எண்ணி அதனை அப்புறப்படுத்தினர் என்று தெரிகிறது.


இக்கோயிலில் இருந்து இடம்பெயர்ந்த மூல லிங்க மூர்த்தி தற்போது நாகை #நீலாயதாட்சி அம்மன் கோயிலில், காயாரோகண சுவாமி பிரகார திருச்சுற்றில் மாவடி பிள்ளையார் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். 


மேலும் கோஷ்ட மூர்த்தியாக இருந்த #முருகப்பெருமான் தற்போது தனிக்கோயிலாக குமரக் கோயிலில் மூலவராக எழுந்தருளி உள்ளார். கார்முகேசம் கோயில் முன்பு இருந்த இடத்தை குறிக்கும் விதமாக தற்போது அங்கே சம்மட்டி #பிள்ளையார் அவ்விடத்தை காத்து வருகிறார். 


இத்தகைய புராண, வரலாற்று நிகழ்வுகளை பலரும் அறியாமையால், முன்பு மூலவராக தனிக்கோயிலில் வீற்றிருந்த #கார்முகேஸ்வர் மூர்த்தி தற்போது பக்தர்களின் கவனிப்பாரின்றி உள்ளார். இனியாவது இவரின் மகத்துவம் உணர்ந்து வழிபடுவோம். 🙏


மேலும் நாகப்பட்டினம் திருக்கோவில்கள் பற்றிய பதிவுகளை பெற நமது நாகை காரோணம் முகநூல் பக்கத்தை பின்தொடரவும், மற்றும் நாகை ஆலயங்கள் என்ற குழுவிலும் இணைந்து பயன்பெறுங்கள். 


#NagaiKaronam 🌷 #NagaiTemples




31 Mar 2021

சேத்திர கோவை & விண்ணப்பக் கலிவெண்பா

 ஸ்ரீ சுப்பிரமணியக் கடவுள் சேத்திரக் கோவை பிள்ளைத்தமிழ் || வாரானைப் பருவம் 


தாணுமா லயனுடன் மயேசுரர் சதாசிவர்

          சச்சிதா னந்தசாந்தர்

தந்தநவ சத்தியருள் போகாங்க மூர்த்திகள்

          தருமட்ட வித்தியேசுரர்

பேணுமெழு கோடிமா மந்திரே சுரரைந்து

          பேதமா மாகேசுரர்

பேதமொன் றில்லாத நந்திமா காளர்சொல்

          பிருங்கியுட னைங்கரத்தோன்

பூணிடபர் நீள்கௌரி தண்டியெண் டிசைநாதர்

          போற்றுந்த சாயுதங்கள்

பூமண்ட லத்திலுள தெய்வங்கள் வேதங்கள்

          புகழ்கொண்ட தேவர்முனிவர்

காணவரு சிவராச தானியெனு நாகைவரு

          கந்தசுவா மிவருகவே

கைகண்ட அடியர்பணி மெய்கண்ட வேலவன்

          கருணையங் கடல்வருகவே.  


- காஞ்சி சிதம்பர முனிவர் 


    தாணு - உருத்திரன். அட்டவித்தியேசுரர் - அனந்தர், சூக்குமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகவுருத்திரர், திரிமூர்த்தி, சீகண்டர், சீகண்டி என்னும் எண்மர். இவர் அதிகா ரமலம் ஒன்றே உடையவர்.


------------------------------------------------------------------------------

தூத்தகைய பாகைக்கார் என்னும் பணிமொழியார் வாழ்த்தோவா

நாகைக்கா ரோணம் நயந்தோனே – 


பொருள்

காய்ச்சிய பாகு கசப்பு என்று சொல்லும்படியான, தூய அழகிய, பணிவான சொற்களைப் பேசும்

மங்கையர்  வாழ்த்தும் ஒலி எப்போதும் ஒலிக்கும் திருநாகைக்காரோணத்து சிவபெருமானே

உம்மை வணங்குகிறேன். 


திருவருட்பிரகாசவள்ளலார் – விண்ணப்பக்கலிவெண்பா

29 Mar 2021

கணபதி தாசர் நெஞ்சறி விளக்கம்

 நாகை நாகநாதர் மீது கணபதிதாசர் சித்தரின் நெஞ்சறி விளக்கம் பாடல்


விநாயகர் காப்பு


வஞ்சக மனத்தி னாசை மாற்றிய பெரியோர் தாளில்

கஞ்சமா மலரிட் டோதுங் கணபதி தாசன் அன்பால்

நெஞ்சறி விளக்க ஞான நீதிநூல் நூறும் பாடக்

குஞ்சர முகத்து மூலக் குருபரன் காப்பதாமே.


நூல்


1. பூமியிற் சவுந்த ரப்பெண் புணர்ந்திடு நாகை நாதர்

நாமமெந் நாளும் நாவி னவின்றுசெந் தமிழாற் பாடிக்

காமமு மாசா பாசக் கன்மமு மகற்றி மூல

ஓமெனு மெழுத்தைந் தாலே யுனையறிந் துணர்வாய் நெஞ்சே!


2. தந்தைதாய் நிசமு மல்ல: சனங்களு நிசமு மல்ல

மைந்தரும் நிசமு மல்ல மனைவியும் நிசமு மல்ல;

இந்தமெய் நிசமு மல்ல; இல்லறம் நிசமு மல்ல;

சுந்தர நாகை நாதர் துணையடி நிசம்பார் நெஞ்சே!


3. காண்பது மழிந்து போகும்; காயமு மழிந்து போகும்;

ஊண்பொருள் அழிந்து போகும்; உலகமும் அழிந்து போகும்;

பூண்பணி நாகை நாதர் பொற்பதம் அழியா தென்று

வீண்பொழு தினைப்போக் காமல் வெளிதனில் ஒளிபார் நெஞ்சே!


4. மனமெனும் பேயி னாலே மாய்கையாம் இருடான் மூடச்

சனமெனும் ஆசா பாசந் தலைமிசை ஏற்றிக் கொண்டு

கனமெனுஞ் சுமையைத் தூக்கிக் கவலையுற் றிட்டாய் நீயுற்

பனமெனும் நாகை நாதர் பதம்பணிந் தருள்சேர் நெஞ்சே!


5. இருவினைப் பகுதி யாலே எடுத்திந்தத் தேகந் தன்னை

மருவிய நானான் என்று மாயையில் அழிந்தாய் நீதான்;

குருவினாற் குறியைப் பார்த்துக் குண்டலி வழியே சென்றங்கு

உருவினால்நாகை நாதர் உண்மையை உணர்வாய் நெஞ்சே!


6. வானதில் இரவியுன்றன் வயதெலாங் கொடுபோ கின்றான்;

தானதை யறிந்தி டாமல் தரணியி லிருப்போ மென்றே

ஊனமாம் உடலை நம்பி உண்மைகெட் டலைந்தாய் நீமெய்ஞ்

ஞானமே பொருளாய் நாகை நாதரைத் தொழுவாய் நெஞ்சே!


7. எட்டுடன் இரண்டு மாகி இருந்ததோர் எழுத்தைக் காணார்;

விட்டதோர் குறியுங் காணார்; விதியின்றன் விவரங் காணார்!

தொட்டதோர் குறியுங் காணார்: சோதிமெய்ப் பொருளுங் காணார்:

கிட்டுமோ நாகை நாதர் கிருபைதா னுரைப்பாய் நெஞ்சே!


8. வஞ்சக நடைம ரத்தில் வளர்வினைக் கொம்பி லேறிச்

சஞ்சல மனக்கு ரங்கு தாவியே அலைய நீதான்

பஞ்சபா தகங்கள் செய்து பாம்பின் வாய்த் தேரை யானாய்;

நஞ்சமு தருந்து நாகை நாதரை வணங்கு நெஞ்சே!


9. உடலினை நிசமென் றெண்ணி உலகெலாம் ஓடி யாடிக்

கடல்மரக் கலப்பாய்க் கம்பக் காகம் போற் கலக்க முற்றாய்;

திடமருள் குருவின் பாதஞ் சிக்கெனப் பிடித்து நின்றால்

நடமிடு நாகை நாதர் நற்பதம் பணிவாய் நெஞ்சே!


10. வீட்டிருள் போக வென்றே விளக்கினை ஏற்றி வைத்தால்

வீட்டிருள் எங்கே போச்சு? விளக்கொளி எங்கே போச்சு?

கூட்டினில் நடஞ்செய் ஈசன் குறிப்பறி யாமல் நீதான்

நாட்டினில் அலைந்தாய் நாகை நாதரை வணங்கு நெஞ்சே!


11. காட்டினில் மேவு கின்ற கனபுழு வெல்லாம் பார்த்து

வேட்டுவ னெடுத்து வந்து விரும்பியக் கிருமி தன்னைக்

கூட்டிலே அடைத்தும் அந்தக் குளவிதன் உருவாய்ச் செய்யும்

நாட்டினில் நீதா னாகை நாதரை வணங்கு நெஞ்சே!


12 குளத்திலே கிடக்கும் ஆமை குளக்கரை முட்டை யிட்டுக்

குளத்துநீர்க் குள்ளிருந்து குறிப்புடன் நினைக்கும் போது

குளத்திலே புதைத்த முட்டை கருவுரு வானாற் போலுன்

உளத்திலே நாகை நாதர் உருவறிந் துணர்வாய் நெஞ்சே!


13. மருவிய சிலந்திப் பூச்சி வயிற்றினிலே நூலுண் டாக்கி

உருவுடன் கூடு கட்டி உகந்ததி லிருக்கு மாபோல்

குருபர னுனது கூட்டில் குடியிருப் பதனைப் பார்த்து

பெருவெளி நாகை நாதர் பெருமைகண் டருள்சேர் நெஞ்சே!


14. வாரணம் முட்டையிட்டு வயிற்றில்வைத் தனைத்துக் கொண்டு

பூரணக் கூடுண் டாக்கிப் பொரித்திடுங் குஞ்சு போலக்

காரணக் குருவை மூலக் கனல்விளக் கதனாற் கண்டு

நாரணன் அறியா நாகை நாதரைப் பணிவாய் நெஞ்சே!


15. புல்லினுள் இருக்கும்பூச்சி பொருந்தவெண் ணுரையுண் டாக்கி

மெல்லிய தண்ணீர் வீட்டில் வெயிற்படா திருக்கு மாபோல்

சொல்லிலே நாகை நாதர் தோய்ந்திடச் சூட்சங் கண்டாற்

கல்லிலே தெய்வ மில்லைக் கருத்திலே தெய்வம் நெஞ்சே!


16. தண்ணீரி லிருக்கும் மீன்கள் தண்ணீரிற் கருவைப் பித்திக்

கண்ணினாற் பார்க்கும் போது கயலுறு வானாற் போல

நண்ணிய குருவைக் கண்டு நாதனல் லுருவைச் சேர்த்து

விண்ணின்மேல் நாகை நாதர் மெல்லடி வெளிபார் நெஞ்சே!


17. இலகிய ஊசிக் காந்தம் இரும்பினை இழுப்பதேபோல்

உலவிய குருப ரன்றாள் உன்னையாட கொண்ட தன்மை

நலமுடன் அறிந்த நீதான் நாயனை யறிந்தி டாமல்

நிலமிசை யலைந்தாய் நாத லிங்கரை நினைப்பாய் நெஞ்சே!


18. சூரிய காந்தம் பஞ்சைச் சுட்டிடுஞ் சுடரே போலக்

கூரிய அடிமூ லத்தின் குண்டலிக் கனலை மூட்டி

வீரிய விருந்து ணாத வெளிவீடு தன்னிற் சென்றே

ஆரிய நாகை நாதர் அடியினை தொழுவாய் நெஞ்சே!


19. ஐவகைப் பூதந் தொண்ணூற்றாறுதத் துவங்க ளாட்டும்

தெய்வமுன் னிடத்தி ருக்கத் தேசத்தில் அலைந்தாய் நீதான்;

பொய்வசத் தேக பந்தம் போக்கிமெய்ப் பொருளை நோக்கி

ஐவரோ ரிடத்திற் கூடும் ஆனந்தம் அறிவாய் நெஞ்சே!


20. ஊனமாம் உடலம் பொய்யென் றுணர்ந்துமெய் யறிவைக் கண்டு

தானவ னான போதே சற்குரு பதத்தைச் சேர்ந்தாய்.

வானதி லிரவி திங்கள் வந்துபோ வதனைக் கண்டால்

ஞானவான் நாகை நாதர் நடனமுங் காண்பாய் நெஞ்சே!


21. கிட்டுமோ ஞான யோகம்? கிடைக்குமோ குருவின் பாதம்?

கட்டுமோ மூல வாசி? காணுமோ கயிலை வீடு?

எட்டுமோ நாக லிங்கம்? ஏற்றுமோ தீப சோதி?

தட்டுமோ பளிங்கு மேடை தனையறியார்க்கு நெஞ்சே!


22. ஒருபதந் தன்னைக் தூக்கி ஒருபுதற் தன்னை மாற்றி

இருபதம் ஆடு கின்ற இயல்பைநீ அறிந்தா யானால்

குருபத மென்று கூறுங் குறிப்புனக் குள்ளே யாச்சு

வருபத நாகை நாதர் மலரடி காண்பாய் நெஞ்சே!


23. நாடென்றும் நகர மென்றும் நலந்திகழ் வாழ்வ தென்றும்

வீடென்றும் மனையா ளென்றும் மிக்கதோர் மைந்தர் என்றும்

மாடென்றுஞ் சம்பத் தென்றும் வாஞ்சை கொண்டலைந்தாய் இந்தக்

கூடொன்றும் அழிந்தாற் கூடத் தொடருமோ கூறு நெஞ்சே!


24. ஏட்டிலே எழுதும் நூல்கள் எத்தனை படித்தும் நீதான்

காட்டிலே எறித்த திங்கள் கானலிற் சலம்போ லானாய்;

நாட்டிலே தெய்வமென்று நடந்தலை யாம லுன்றன்

கூட்டினில் நாகை நாதர் குறிப்பறிந் துணர்வாய் நெஞ்சே!


25. நற்பிடி சோறு வைத்தால் நாயனென் றறிந்து கொண்டு

சொற்படி பின்னே ஓடுஞ் சுணங்கன் போற்குணமு ண்டாகி

விற்பிடித் தடிக்கப் பெற்ற விமலனார் கமல பாதம்

பிற்பிடி பிடித்து நாகை நாதரைக் காண்பாய் நெஞ்சே!


26. விரகநா யகனைத் தேடி விரும்பிய மங்கை போலக்

குரவனா ருபதே சத்தைக் குறிப்புடன் நிதமுந் தேடி

இரவுடன் பகலு மான இருபத நடனங் கண்டால்

சிரமதில் நாகை நாதர் சிலம்பொலி கேட்கும் நெஞ்சே!


27. வாரணன் அயன்மால் ருத்ரன் மகேசுரன் சதாசி வன்றன்

காரண மாறு வீட்டிற் கலந்தவ ரிருக்கும் அப்பால்

பூரண நிராதா ரத்தின் புதுமையுங் கண்டு போற்றி

ஆரண நாகை நாதர் அடியிணை தொழுவாய் நெஞ்சே!


28. மோரிலே நீரை விட்டால் முறிந்திடுங் கொள்கை போலக்

காரிய குருவை விட்டுக் காரண குருவைக் கண்டு

சீரிய சாலு நீர்போற் சேர்ந்திரு வருமொன்றாகி

ஆரிய நாகை நாதர் அடிபணிந் தேத்து நெஞ்சே!


29. நித்திரை வந்தபோது நினைவுதானிருந்த தெங்கே?

புத்திரர் தாமுமெங்கே? புணர்ந்திடும் மனைவி எங்கே?

பத்திர பூசை எங்கே? பல தொழில் செய்வதெங்கே?

சிற்பர நாகை நாதர் செயலினை அறிவாய் நெஞ்சே!


30. வேடத்தைத் தரித்தாலென்ன? வெண்பொடி யணிந்தா லென்ன?

நாடொத்து வாழ்ந்தாலென்ன? நதிதலங் கண்டா லென்ன?

தேடொத்த நாகை நாதர் சீரடி சிந்தை தேர்ந்தெ

ஓடைத்தா மரையின் பூப்போல் உயுர்வர்நற் பெரியோர் நெஞ்சே!


31. தள்ளிடு சுணங்கன் போலச் சாத்திரம் படித்தா லென்ன?

வெள்ளிய துகிலைத் தாவி வேட்டியாய்த் தரித்தா லென்ன?

உள்ளிருந் தாட்ட விக்கும் ஒருவனை உருகித் தேடித்

தெள்ளியல் நாகை நாதர் செயல் காணார் மாந்தர் நெஞ்சே!


32. பளிங்குற்ற குளத்து நீரைப் பாசிதான் மறைத்தாற் போலக்

களங்கற்ற புத்தி தன்னைக் காமந்தான் மூடிக்கொண்டு

விளங்கத்தான் செய்வதில்லை மெய்யறி விளக்கை யேற்றி

முழங்கத்தான் நாகை நாதர் முழுமொழி பகர்வாய் நெஞ்சே!


33. மண்ணதை எடுத்து நீரால் வகையுடன் பிசைந்து பாண்டம்

பண்ணியே கனலாற் கட்டுப் பாதையென் பதுதான் விட்டே

அண்ணலார் வாய்வா காச மடைந் தஐம் பூதக் கூட்டை

விண்ணமால் நாகை நாதர் விளையாட்டென்றறிவாய் நெஞ்சே!


34. கண்ணாடி தன்னிற் றோற்றுங் காரண உருவம் போல

உண்ணாடி மூலா தாரத் துதித்தசற் குருவைக் கண்டு

விண்ணாடி வெளியைப் பார்த்து விளக்கொளி மகிமை சேர்ந்தால்

மண்ணாடு நாகை நாதர் வந்துனை ஆள்வார் நெஞ்சே!


35. உருவமும் நிழலும் போல உகந்து பின்றொடரும் நாயன்

பருவங்கண் டறிந்தி டாமற் பருந்தின் காற் பட்சி யானாய்.

பருவனை நடுவ ணைக்குட் பொருந்திய நடனங் கண்டால்

குருபர நாகை நாதர் கூப்பிட வருவார் நெஞ்சே!


36. கணக்கிலா எழுவ கைக்குட் கலந்துரு எடுத்த இந்நாள்

பிணக்கிலா நரசென் மந்தான் பிறப்பதே அரிதென் றெண்ணிக்

குணக்கிலாக் குணமுண்டாகிக் கோதிலா ஞானம் போற்றி

இணக்கிலா நாகை நாதர் இணையடி சேர்வாய் நெஞ்சே!


37. அரியதோர் நரசென் மந்தான் அவனியிற் பிறந்து பின்னாள்

பெரியபே ரின்ப ஞானம் பெறுவதே யரிதென் றெண்ணி

உரியவே தாந்தத் தன்மை உரைக்குமா சானைப் போற்றித்

தெரியொணா நாகை நாதர் சீர்ப்பதந் தேடு நெஞ்சே!


38. பசும்பொனின் நாம மொன்றிற் பணிதிவே றானாற் போலே

விசும்பெலாங் கலந்த சோதி வெவ்வேறு தெய்வமாகி

உசும்புசீ வாத்து மாக்கள் உடல்பல வான தன்மை

கசிந்துகண் டுருகி நாகை லிங்கரைக் காண்பாய் நெஞ்சே!


39. விண்டவர் கண்டதில்லை விட்டதோர் குறைமெய்ஞ் ஞானம்

கண்டவர் விண்டதில்லை; ககனவம் பலத்தின் காட்சி

அண்டர்கோ டஞ்சை யீசன் அடியிணை வாசி யுச்சி

மண்டல நாகை நாதர் வாழ்பதி வழிபார் நெஞ்சே!


40. காதுடன் நாக்கு மூக்குக் கண்ணுயிர் சிரங்க ருத்து

மாதுட னீச னாடு மலர்ப்பதம் அறிந்தி டாமல்

வாதுசொற் றர்க்க நூல்கள் வகைபல படித்தா லென்ன?

சாதுவாய் நாகை நாதர் தாள்கண்டு தனைப்பார் நெஞ்சே!


41. தீபத்தை மலரென் றெண்ணிச் சென்றிடு விட்டில் போலக்

கோபத்தின் கனலில் வீழ்ந்து கொடியதோர் பிறவி பெற்றாய்;

ஆபத்து வந்தா லுன்னோ டியாவர் தாம் வருவார்? அந்தக்

கோபத்தை மறந்து நாகை லிங்கரைத் தொழுவாய் நெஞ்சே!


42. மின்மினிப் பூச்சி தன்னுள் மெய்யொளி கண்டாற் போல

உன்மன மொடுங்கி யேயுன் உள்ளொளி கண்டாற் பின்னைச்

சென்மமு மில்லை; அந்தச் சிவத்துளே சேர்வாய்; நாளும்

பொன்மகள் புகழும் நாகை நாதரைப் போற்று நெஞ்சே!


43. செம்பினிற் களிம்பு போலச் சீவனுஞ் சடமுங் கூடி

நம்பின உடலைக் கண்டு நல்லுயிர் வடிவங் காணாய்!

வெம்பிய காம மாயை விட்டுமெய்ப் பொருளைத் தேடிக்

கும்பிய நாகை நாதர் கூத்தாடல் காண்பாய் நெஞ்சே!


44.இலவுகாத் திருந்த பட்சி ஏங்கியே பறக்கு மாபோல்

உலகமே பொருளாய் நம்பி ஒருபலன் அற்றாய் நீதான்;

தலைமையாங் குருவைப் போற்றித் தாளிணை வாசி கண்டால்

நிலைமையாம் நாகை நின்னிடை நிற்பார் நெஞ்சே!


45. ஆத்தும லிங்கங் கண்டுள் அன் பெனும் மலரை நன்றாய்ச்

சார்த்தியே பிரண வத்தாற் றனிப்பெரு வட்டஞ் சூட்டிப்

போற்றியே தீப மூலப் புரிசுடர் விளக்கும் பார்த்துப்

போற்றியே நாகை நாதர் பொன்னடி பூசி நெஞ்சே!


46. சுக்கில விந்து தானுஞ் சுரோணிதக் கருவிற் கூடிப்

பக்குவக் குழவி யாகிப் பையுளே அடைந்த பாவை

அக்குவை யதனை விட்டிங் கவனியிற் பிறந்த சூட்சம்

அக்கினி நாகை நாதர் அமைத்ததென் றறிவாய் நெஞ்சே!


47. நீக்கமில் லாமலெங்கும் நிறைந்ததோர் வெளியை யுன்னுள்

தாக்கியே அறிவி னாலே தனைமறந் திருந்து பார்வை

நோக்கியே நிட்டை கூடி நொடியரை நிமிடம் வாங்கித்

தூக்கியே நாத நாகை நாதரைத் தொழுவாய் நெஞ்சே!


48. கடலென விளங்கும் வேத காரணக் குருவைக் கண்டுன்

உடல்பொருள் ஆவி மூன்றும் உகந்தவர்க் குதவி நீதான்

திடமுடன் பூர்த்தி யாகிச் செந்தூசிற் பரத்திற் சேர்ந்து

நடமிடும் வாசி நாகை நாதரை நாடு நெஞ்சே!


49. நாசியி னுனியின் மீது நடனமே செய்யுந் தேசி

வாசிவா வென்றே யன்னுள் வாங்கியே மௌன முற்றுக்

காசிமா நதியுந் தில்லைக் கனகவம் பலமுங் கண்டு

பூசித்து நாகை நாதர் பொன்னடி வணங்கு நெஞ்சே!


50. தாவுநல் லுதய காலந் தபனன்தே ரெழும்பக் கண்டு

கூவுமாக் குக்கு டங்கள் கூப்பிடு காட்டிற் சம்பு

மேவியே நீயும் அந்த மெய்யறி வறிந்தா யானால்

மூவர்கோ னாகை நாதர் முன்வந்து நிற்பர் நெஞ்சே!


51. வஞ்சியர் மீதில் ஆசை வைத்திந்த வைய மீதில்

சங்கையில் லாத துன்பச் சாகரந் தனிலே வீழ்ந்தாய்;

நங்கைமேல் வைத்த பாசம் நாயன்மேல் வைத்து நீயும்

செங்கையால் நாகை நாதர் சீர்பதந் தொழுவாய் நெஞ்சே!


52. அன்றிலும் பேடும் போல அடிமையுங் குருவுங் கூடிக்

கொண்டிருந்த தடிமூ லத்திற் குதித்தெழு வாசி யாடக்

கண்டிமை யாத நாட்டக் கருணையால் வெளியி லேறிப்

பண்டித நாகை நாத லிங்கரைப் பணிவாய் நெஞ்சே!


53. குலங்கெட்டுப் பாசங் கெட்டுக் கோத்திர பேதங் கெட்டு

மலங்கெட்டுக் கோபங் கெட்டு மங்கையர் ஆசை கெட்டுத்

தலங்கெட்டுத் தானும் கெட்டுத் தனக்குளே வெறும்பா ழாகிப்

பலங்கெட்டு நாகை நாதர் பதங்கொள்வார் பெரியோர் நெஞ்சே!


54. ஓமெனும் பிரண வத்துள் உதித்தவைந் தெழுத்து மாகி

ஆமெனும் அகார பீடத் தமர்ந்திடு வாசி கண்டே

ஊமெனு மௌன முற்றே யூறிடு மதிப்பா லுண்டு

தாமெனும் நாகை நாதர் தாண்டவம் பார்ப்பாய் நெஞ்சே!


55. அலைதனிற் றுரும்பு போலும் ஆலைவாய்க் கரும்பு போலும்

வலைதனில் மானைப் போலும் மயங்கிநைந் தலைந்தாய் நீதான்;

உலைதனில் மெழுகைப் போலும் உருகி மெய்ப் பொருளை யுன்னி

நிலைதனி னின்று நாகை லிங்கரைக் காண்பாய் நெஞ்சே!


56. பொறிவழி யலைந்து மீளும் புலன்களை அடக்கி ஞான

அறிவெனும் விழியினாலே அம்பர வெளியைப் பார்த்தே

உறிதனி லிருக்குங் கள்ளை உண்டுதற் போதம் விட்டு

நெறிதரு நாகை நாதர் நிலைமைகண் டறிவாய் நெஞ்சே!


57. ஆயாத நூல்க ளெல்லாம் ஆய்ந்துநீ பார்த்துங் காமத்

தீயான குழியில் வீழ்ந்து சென்னமுற் றலைந்தா யுன்னின்

காயாத பாலை யுண்டு கனகவம் பலத்தைக் கண்டு

மாயாமா நாகை நாதர் மலரடி வணங்கு நெஞ்சே!


58. ஆதார மாறுந் தாண்டி ஐம்பூத வடிவுந் தாண்டி

மீதான வெளியுந் தாண்டி விளங்கிய பரன்றன் கூத்தை

நீதானும் அறிந்து கொண்டு நின்மல வடிவ மாகி

வேதாந்த நாகை நாதர் மெல்லடி வெளிபார் நெஞ்சே


59. பார்த்திடும் திசைக ளெங்கும் பராபர வெளிதான் கூடிக்

கோத்திடும் வடிவை ஞானக் குருவினா லறிந்து கொண்டு

பேர்த்திடு மிமையா நாட்டத் திருந்துபே ரின்ப வெள்ளம்

வார்த்திட மூழ்கி நாகை லிங்கரை வணங்கு நெஞ்சே!


60. சச்சிதா னந்த மான சற்குரு பதத்தைப் போற்றிக்

கச்சிமா நகர மூலக் கனல்விளக் கதனை யேற்றி

உச்சிமேல் வைத்துப் பார்வை யுணர்வினால் வெளியி லுன்னித்

தச்சிலா வீட்டில் நாகை லிங்கரைத் தழுவு நெஞ்சே!


61. மாரின்ப முலையா ளோடு மன்றிலே நடஞ்செய் வோனைப்

பேரின்ப வீட்டைக் கண்டு பிரணவ விளக்கை யேற்றிச்

சேரின்ப வெளியில் வாசித் திருவிளையாடல் பார்த்தால்

ஓரின்ப நாகை நாதர்க் குகந்துவந் துரைப்பார் நெஞ்சே!


62. நாயனை யறிந்தி டாமல் நானென்னும் ஆண்மை யாலே

ஆயனில் லாத் காலி யாகி நீ யலைய லுற்றாய்:

காயமே கோயி லாகக் கலந்திருந் தவனைக் கண்டு

மாயொணா வாழ்க்கை நாகை நாதரை வணங்கு நெஞ்சே!


63. உருப்படுங் கல்லுஞ் செம்பும் உண்மையாய்த் தெய்வ மென்றே

மருப்புனை மலரைச் சூட்டி மணியாட்டித் தூபங் காட்டி

விருப்பமுற் றலைந்தாய் அந்த வினைமயல் விட்டு நின்னுள்

இருப்பவர் நாகை நாதர் இணையடி பூசி நெஞ்சே!


64. உனைவிட வேறே தெய்வம் உண்டென உலகிற் றேடும்

நினைவதே தெய்வமாகி நீகண்டு நின்றா யானால்

சென்னமாம் பிறவி போகும் சிவத்துளே சேர்க்கு மெங்கோன்:

மனமகிழ் வாசி நாகை நாதர் தாள் வணங்கு நெஞ்சே!


65. ஆசையாம் பாச மாயை அறிவதை மயக்கி யுன்னுள்

ஈசனைத் தேடொட் டாம லிருக்குமவ் விருளைப் போக்கிக்

கோசமா குறியை நோக்கிக் குருபரன் வடிவைக் கண்டு

வாசமா மலரால் நாகை நாதரை வணங்கு நெஞ்சே!


66. கன்றதைத் தேடுங் காறுங் காலியைப் போலே யுன்னுள்

நின்றபே ரொளியைக் கண்டு நினைவெனு மறிவாற் றெய்வம்

ஒன்றெனக் கண்டா யானால் உமையவ ளுடனே தில்லை

மன்றினுள் ஆடும் நாகை நாதர்முன் வருவாய் நெஞ்சே!


67. மடைவாயிற் பட்சி போலே மனந்தனை யடக்கி வாதி

விடையேறு மீசன் பாதம் விரும்பிய பெரியோர் பின்னே

தடையறத் திருந்து ஞான சாதகம் பெற்று நீதான்

புடைசூழ நாகை நாதர் பொன்னடி போற்று நெஞ்சே!


68. சிரமெனுங் குகையி னுள்ளே சிவகயி லாய மன்றில்

அரனிட மமையும் வாசி யாடல்தான் செய்வா ரென்று

பரமமெய்ஞ் ஞான நூல்கள் பகர்வதை யறிந்து பார்த்து

வரமிகு நாகை நாதர் மலரடி வணங்கு நெஞ்சே!


69. கடமதில் நிறைந்து நின்ற கனவொளி போலே யுன்றன்

செடமதில் நிறைந்து நின்ற சீவனை யறிவாற் கண்டு

திடமிகு சீவ சாட்சி தரிசிக்கச் சீவன் முத்தி

இடமரு நாகை நாத ரிணையடி யுணர்வாய் நெஞ்சே!


70. மெய்யருள் விளங்குட் சோதி வெளிதனை அறிவா லுன்னி

ஐயமில் லாமற் காண்போ ரவரின்ப முத்த ரென்று

துய்யமெய்ஞ் ஞான நூல்கள் சொல்வதாற் பரத்தை நோக்கிச்

செய்யதாள் வாசி நாகை லிங்கரைத் தெரிசி நெஞ்சே!


71. முந்தின பிறப்பு வந்த முதன்மையும் அறியாய் இப்பால்

பிந்தின பிறப்பு வந்த பெருமையும் அறியாய் நீதான்:

அந்தரப் பட்சி போல அலைகின்றாய்: அகத்து ளேமுச்

சந்தியை அறிந்து நாகை நாதரைச் சார்வாய் நெஞ்சே!


72. காகத்தின் கண்ணி ரண்டிற் காண்பதுங் கண்ணொன்றே போல்

தேகத்தின் அறிவின் கண்ணைத் திடமுடன் அறிந்து கொண்டு

மோகத்தின் கனலில் வீழா முனைசுழி வாசி பார்த்தால்

ஏகத்தால் நாகை நாத ரிணையடி சார்வாய் நெஞ்சே!


73. ஓட்டிலே பட்ட பட்சி உழல்கின்ற நெறிபோ லாசைக்

கட்டிலே மயங்கி மாறாக் கவலையுற் றலைந்தாய் நீதான்;

நெட்டிலே யோடு வாசி நிலைமையாய் நிறுத்தி மேரு

வட்டிலே நாகை நாதர் வாழ்பதி அறிவாய் நெஞ்சே!


74. ஆனைவாய்க் கரும்பு போலும் அரவின்வாய்த் தேரை போலும்

பூனைவா யெலியைப் போலும் புவியில்நைந் தலைந்தாய் ஞானத்

தேனைவாய் அருந்தி முத்தி சோந்திடச் சிவத்தை நோக்கி

ஊனுளே நாகை நாதர் உற்றிட மறவாய் நெஞ்சே!


75. மித்திர குருக்கள் சொல்லை மெய்யென்று கல்லை வைத்துப்

பத்திர புட்பஞ் சார்த்திப் பணிந்திடும் பாவை நீதான்

சித்திரப் பதுமை போலுஞ் செய்தொழி லொடுங்கி நின்று

புத்தியாய் நாகை நாதர் பொன்னடி போற்று நெஞ்சே!


76. உப்போடு புளிப்புங் கைப்பும் உணர்வினால் அறிந்து நீதான்

எப்போது முனக்குள் நாயன் இருப்பிடம் அறியா தென்னே?

முப்போதுங் குருவைப் போற்றி முனைசுழி வாசி பார்த்தால்

அப்போது நாகை நாதர் அடியிணை அறிவாய் நெஞ்சே!


77. படிக்கவும் நாவி ருக்கப் பணியவுஞ் சிரமி ருக்கப்

பிடிக்கவுங் கரமி ருக்கப் பேணவுங் குருவி ருக்க

நடிக்கவுந் தாளி ருக்க நாடவுங் கண்ணி ருக்க

இடுக்கமுற் றலைந்தாய் நாகை நாதரை இறைஞ்சு நெஞ்சே!


78. அருவுரு வில்லா நாயன் அணுவினுக் கணுவாய் நின்றும்

மருவுபல் லுயிர் கட் கெல்லாம் வடிறுவே றான தன்மை

ஒருவரும் அறியார் நல்லோர் உறுதியா லறிவார்; ஞான

குருபர நாகை நாதர் குறுப்பறிந் துணர்வாய் நெஞ்சே!


79. ஆண்டொறு நூறு கற்பம் ஓளடத மூலியுண்டு

நீண்டதோர் காய சித்தி நெடுநாளைக் கிருந்த பேரும்

மாண்டுதான் போவா ரல்லால் வையகத் திருப்பா ருண்டோ!

தீண்டொணா நாகை நாதர் சீர்ப்பதந் தேடு நெஞ்சே!


80. பொருடனைத் தேடிப் பாரிற் புதைக்கின்ற புத்தி போன்மெய்

அருடனை நிதமுந் தேடி அரனடியதனில் வைத்தால்

இருடனை அகற்றுஞ் சோதி எம்பிரான் முன்னே வந்துன்

மருடனை மாற்றும் நாகை நாதரை வணங்கும் நெஞ்சே!


81. ஆண்டியின் வேடந்தானும் அறிவுடன் எடுத்தி டாமல்

தூண்டிலில் மீனைப் போலத் துள்ளிவீழ்ந் தலைந்தாய் நீதான்

வேண்டிய போது நாயன் மெல்லடி வெளித்தாய்த் தோன்றும்

தாண்டிய வாசி நாகை நாதரைத் தழுவாய் நெஞ்சே!


82. சேற்றிலே நுழைந்தி ருந்த சிறுபிள்ளைப் பூச்சிபோலும்

நீற்றிலே நுழைந்தி ருந்த நேர்மையாம் அழற்சி போலும்

மாற்றுபே ருலகில் நல்லோர் மருவிரி மருவார் சித்தத்

தேற்றியே நாகை நாதர் இணையடி வைப்பாய் நெஞ்சே!


83. நாடகப் பெண்ணை ஆட்டும் நட்டுவன் போலே யுன்றன்

கூடகச் சடத்தை யாட்டுங் குருவைநீ அறிந்தி டாமல்

மூடக மானாய் ஞான முதல்வனை அறிவால் தேடி

ஆடக நாகை நாதர் அடியிணைப் பணிவாய் நெஞ்சே!


84. சத்தியுஞ் சிவமு மாகித் தாண்டவ மாடும் வாசி

சுத்திய மூல நாடிச் சுழுமுனைக் கம்பத்துள்ளே

புத்தியைச் செலுத்தி மேலாம் பொருடனை யெடுக்க வல்லார்

பத்திசெய் நாகை நாதர் பதிதனைப் பார்ப்பாய் நெஞ்சே!


85. நாட்டமாம் அறிவின் கண்ணால் நாயனைப் பருகிப் பார்த்துத்

தேட்டமாங் கருணை பெற்ற சிவனடி யார்கள் தங்கள்

கூட்டமாம் பரத்திற் சென்று குருபணி விடையுஞ் செய்கொண்

டாட்டமா நாகை நாதர் அருள்தர வருவார் நெஞ்சே!


86. காலனை உதைத்த நாயன் காலெனும் வாசி தாளை

மூலநன் மனையிற் கண்டு முப்பதி முப்பாழ் தாண்டிப்

பாலமு தருந்த மேலாம் பராபரை பாதம் போற்றி

மாலயன் அறியா நாகை நாதரை வணங்கு நெஞ்சே!


87. கடுமையாம் பகட்டி லேறிக் கயிற்றொடு சூலமேந்திக்

கொடுமையாங் காலன் வந்து கொண்டுபோம் முன்னே நீதான்

அடிமையா நாதன் பாதம் அனுதினம் மறவா தேத்தில்

நெடுமையா நாகை நாதர் நிலைமைகண்டறிவாய் நெஞ்சே!


88. அரகரா சிவசி வாவென் றனுதினம் மறவா தேத்திச்

சிரகயி லாய வீட்டிற் சிவனைநீ யறிந்து தேடில்

மரகத வல்லி பங்கன் வந்துமுன் காட்சி நல்கிப்

பரகதி கொடுக்கும் நாகை நாதரைப் பணிவாய் நெஞ்சே!


89. நடக்கிலும் வாசி பாரு: நாட்டமும் வாசி பாரு:

முடக்கிலும் வாசி பாரு: முனிசுழி வாசி பாரு:

மடக்கிலும் வாசி பாரு: மறிவிலும் வாசி பாரு:

திடக்குரு நாகை நாதர் திருநடஞ் செய்வாய் நெஞ்சே!


90. போனநாள் வீணாய்ப் போனாற் புதியநாள் கெடவி டாமல்

ஞானநாள் இதுதா னென்று நாடெங்கும் குருவைப் போற்றி

வானநா ளத்திற் சென்னி வழிகண்டு மதிப்பா லூறும்

தேனைநன் கருந்தி நாகை லிங்கரைக் தெரிசி நெஞ்சே!


91. பராதல மெல்லாந் தானாயத் தாவர சங்க மங்கள்

நிராமய மாகக் கோத்து நின்றதோர் பொருளா மந்தப்

புராபர வடிவங் கண்டு பரத்துளே யடக்கி மேலாம்

தராதன மூர்த்தி நாகை லிங்கரைப் போற்று நெஞ்சே!


92. மாணிக்க வாச கர்க்கும் மகிழ்ப்பரஞ் சுந்த ரர்க்கும்

ஆணிப்பொன் திருமூ லர்க்கும் அறுபத்து மூவ ருக்கும்

பேணிக்கொள் பெரியோ ருக்கும் பேறருள் சிவனை யுன்னுள்

தோணக்கண் டிருந்து நாகை லிங்கரைத் தொழுவாய் நெஞ்சே!


93. மகத்துவம் அடைந்த நெஞ்சே! மலமாயை கொண்ட நெஞ்சே!

பகுத்தறி வில்லா நெஞ்சே! பலநினை வான நெஞ்சே!

மிகுத்திடு காம நெஞ்சே! மெய்ப்பொருள் அறியா நெஞ்சே!

செகத்தினிலே நாகை நாதர் சீர்ப்பதந் தேடு நெஞ்சே!


94. காலது மேல தாகக் கனியுண்ணும் வௌவால் போல

மூலநல் வாசி யோடு முறைமையை அறிவாற் கண்டு

சீலமெய்ஞ் ஞான போத சிவயோகந் தன்னைப் பார்த்து

ஞாலமேல் நாகை நாதர் நடனமுங் காண்பாய் நெஞ்சே!


95. உறக்கமும் விழிப்பும் போல உடல்பிறந் திறக்குந் தன்மை

சிறக்கவே அறிந்து மிந்தச் செகவாழ்வை மெய்யென் றெண்ணிக்

குறித்தலை குலாமர் சொல்லைக் குறிப்புடன் நம்ப லாமோ?

மறக்கொணா நாகை நாதர் மலரடி வணங்கு நெஞ்சே!


96. எத்தனை புத்தி சொல்லி எடுத்தெடுத் துரைத்தும் நீதான்

பித்தனைப் போலே யோடிப் பிறவிசா கரத்தில் வீழ்ந்தாய்:

முத்தமிழ் நாகை நாதர் முண்டக மலர்த்தாள் போற்றிச்

சத்தமுன் னுடலிற் றோற்றுந் தலந்தனைப் பார்ப்பாய் நெஞ்சே!


97. சுவர்த்தலைப் பூனை போலச் சுற்றிய பிறவி தீரத்

தவத்தினுக் குருவ மான சற்குரு தாளைப் போற்றிச்

சிவத்துடன் கலந்து மேவிச் சிதம்பர வழியே சென்றங்

கெவர்க்குமே லான நாகை நாதரை வணங்கு நெஞ்சே!


98. அலைவாயிற் பூடு போலும் ஆனைவாய்க் கவளம் போலும்

வலைவாயில் மிருகம் போலும் மயங்கிநைந் தலைந்தாய் நீதான்;

உலைவாயில் மெழுகைப் போல உருகிமெய்ப் பொருளை யுன்னிப்

பலகாலு மேத்தி நாகை லிங்கரைப் பணிவாய் நெஞ்சே!


99. மூலமாம் நகர மீதில் முளைத்தெழுஞ் சுடரைக் கண்டு

காலத்தீ மேலே யேற்றிக் கபாலத்தே னமுத ருந்திக்

கோலமா மதுவே யுண்டு குருபதந் தன்னிற் சேர்ந்து

வாலகந் தரியால் நாகை லிங்கரை வணங்கு நெஞ்சே!


100. இறந்திடும் இருபத்தோரா யிரத்தறு நூறு பேரும்

இறந்திடிக் காயம் போனா வீசனைக் காண்ப தெந்நாள்?

மறந்திடா தறிவால் மூலவாசியை மேலே யேற்றிச்

சிறந்தசிற் பரத்து நாகை லிங்கரைத் தெரிசி நெஞ்சே!


நூற் பயன்


1. கதிதரு மூலா தாரக் கணபதி தாசன் சொன்ன

நிதிமணி மாலை யான நெஞ்சறி விளக்கம் நூறும்

துதிசெய்யும் அறிவோர் ஞான சோதியின் வடிவ மாக

மதியணி நாகை நாதர் மலர்ப்பதம் பெற்று வாழ்வார்


2. நித்தியப் பொருள தான நெஞ்சறி விளக்கம் நூறும்

பத்தியாய் மனத்தி லெண்ணிப் படித்ததன் பயன்காண் போர்கள்

முத்திமெய்ஞ் ஞானம் பெற்று மூவர்க்கும் முதல்வராகிச்

சத்தியுஞ் சிவமுந் தோன்றுந் தற்பர மதனுட் சார்வார்.


3. கனகமார் மணிசேர் மூல கணபதி தாச னாக

நினைவினா லறிகட் செப்பும் நெஞ்சறி விளக்கம் நூறும்

வினவியே படிப்போர் கேட்போர் வினையெலாம் அகன்று மெய்யுற்

பனமெனும் மோட்ச நாலாம் பதம்பெற்றுப் பதத்துள் வாழ்வார்.