🌷 யமுனை நதிக்கரையில் அமைந்த ஓர் நகரத்தில் வேத, ஆகமங்களை நன்கு கற்று உணர்ந்து அதில் சிறப்புற்று விளங்கிய "கருத்தமன்" எனும் முனிவரின் மகனான "புண்டரீகர்" தனது தந்தையிடம் முக்தி நிலையை அளிக்க வல்ல இறைவனைப் பற்றியும் அதற்கான வழிகளையும் கேட்டறிந்தார். கருத்தம முனிவரும் தனது மகனுக்கு சிவபெருமானின் பெருமைகளை எடுத்துரைத்து, முக்தி நிலையை அடைவதற்கான வழிமுறைகளை கூறி புண்டரீக முனிவரை காசி செல்லும்படி பணித்தார்.
🌷 அதன்படி உடலோடு முக்தி பெற எண்ணிய புண்டரீக முனிவர் காசியை அடைந்து சுவாமி விஸ்வநாதர், விசாலாட்சி அன்னையை "ஈராயிரம் வருடங்கள்" வழிபட்டு வந்தபோதும் இறைவன் காட்சி அளிக்கவில்லை. அவ்வேளையில் "வாமதேவன்" எனும் முனிவர் புண்டரீக முனிவரிடம் இங்கு காசியில் துன்பம் அடைந்தவருக்கே சாரூப முத்தி எனவே, காஞ்சி சென்று வழிபடுமாறு கூறினார்.
🌷 பின்னர் காஞ்சி வந்தடைந்த புண்டரீக முனிவர் ஏகாம்பர நாதரை வழிபட்டு, தனியாக காயாரோகண (கச்சி காரோணம்) லிங்க பிரதிஷ்டை செய்து "பன்னிரண்டாயிரம்" ஆண்டுகள் வழிபட்டு வந்தார். அப்போது அசரீரியாக இறைவன் குடந்தை எனும் கும்பகோணம் செல்லுமாறு அருளினார்.
🌷 அதன்படி கும்பகோணம் அடைந்து கும்பேஸ்வரர் சுவாமியை வழிபட்டு, அங்கும் தனியாக காயாரோகண (குடந்தை காரோணம்) லிங்க பிரதிஷ்டை செய்து "எட்டாயிரம்" ஆண்டுகள் வழிபட்டு வந்தபோதும் இறைவன் காட்சி அளிக்கவில்லை. பின்னர் கண்ணுவ முனிவரின் ஆலோசனைப்படி உடலோடு முத்திபெற சிவராஜதானி என்றழைக்கப்படும் நாகை திருத்தலமே உகந்தது என அங்கு வந்தடைந்தார்.
🌷 அங்கு "தேவ தீர்த்தம்" முதலிய பல தீர்த்தங்களில் நீராடி "ஆதிபுராணர்" (நாகை பெரிய கோயில்) சுவாமியை வழிபட்டு சறுவ தீர்த்தத்தின் தென் மேற்கே குடில் அமைத்து அங்கே காயாரோகண (நாகை காரோணம்) லிங்கம் அமைத்து முறைப்படி கிரியை பூசனைகள் செய்து பல ஆண்டுகள் வழிபட்டு வந்தார். இறைவனும் மனமுவந்து காட்சியளித்து தனது மூன்றாவது காட்சியின்போது ஐக்கியப்படுத்திக் கொள்வதாக அருளினார்.
🌷 புண்டரீக முனிவரும் மகிழ்ந்து தொடர்ந்து இறைவனை, உணவின்றி விரத முறைகளுடன் வழிபட்டு இரண்டாம் காட்சியை பெற்று, மேலும் கடும் தவமியற்றி மூன்றாம் காட்சியில் இறைவனுடன் உடலோடு ஒன்றாக கலந்து பேரின்ப முக்தியடைந்தார். இந்த ஐதீக விழாவானது வருடம்தோறும் ஆனி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் அன்று அர்த்தஜாமத்தில் போது நடைபெறுகிறது.
இறைவன் ஆதிபுராணர் புண்டரீக முனிவரை காயத்தோடு (உடம்போடு) ஆரோகணம் செய்து கொண்டமையால் காயாரோகணேஸ்வரர் என பின்னர் அழைக்கப்பெற்றார். சறுவ தீர்த்தம் "புண்டரீக தீர்த்தம்" என ஆயிற்று. புண்டரீக முனிவர் குடில் அமைத்து வழிபட்ட கோயில் "மேலை காரோணம்" என வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment