"விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன் ” - திருத்தொண்டத்தொகை
“திறமமர் மீன்படுக் கும்பொழு தாங்கொரு மீன்சிவற்கென்
றுறவமர் மாகடற் கேவிடு வோனொரு நாட்கனக
நிறமமர் மீன்பட நின்மலற் கென்றுவிட் டோன்கமலம்
புறமமர் நாகை யதிபத்த னாகிய பொய்யிலியே”
- திருத்தொண்டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி (52)
குறிப்புரை: கடலில் வலையை வீசி மீன் பிடிக்கும் பொழுது மீன் ஒன்றே ஒன்று தனியாக வலையில் அகப்பட்டுக் கிடைக்குமாயின் அந்த மீனை, 'இந்த மீன் சிவனுக்கு உரிய மீன்' என்று அதனை மீண்டும் கடலிலே விடுபவர் இந் நாயனார். இவருக்குச் சோதனையாகப் பல நாட்களில் வலையில் ஒவ்வொரு மீனே அகப்பட்டு வந்தது. அதைக் கடலிலே விட்டமையால் உணவின்றிக் குடும்பத்துடன் மெலியும் நாளில் ஒரு நாள் தனி ஒரு மீன் பொன்னும், இரத்தினமுமே உருவாகி, உலகம் வில் பெறும் அளவினதாய் அகப்பட, அதனையும் கடலிலே விடுத்தார், உடனே பெருமான் காட்சி தந்து அழைத்துச் செல்ல, முத்தி பெற்றார். இந் நாயனார் பத்தருட் சிறந்த 'அதிபத்தர்' எனப் பெயர் பெற்றமை உணரற்பாற்று. அமர் - அந்த மீன் வாழ்கின்ற. புறம் - புறத்துச் சூழ்ந்த பொய்கைகள்; ஆகுபெயர். நாகை - நாகப் பட்டினம்.
பாடல் எண் : 1
மன்னி நீடிய செங்கதி
ரவன்வழி மரபில்
தொன்மை யாம்முதற் சோழர்தந்
திருக்குலத் துரிமைப்
பொன்னி நாடெனுங் கற்பகப்
பூங்கொடி மலர்போல்
நன்மை சான்றது நாகைப்பட்
டினத்திரு நகரம்
பொழிப்புரை : உரிமை நிலைபெற்று வாழ்ந்து வருகின்ற கதிரவன் வழியில் வந்த மரபான, பழமையும் முதன்மையும் பெற்ற சோழர்க ளின் குலத்திற்கு உரிமையுடைய காவிரிநாடு என்னும் கற்பகப் பூங் கொடியில் மலர்ந்த மலரைப் போன்று நாகைப்பட்டினம் என்ற நகரம் நலம் சிறந்து விளங்கும் மேன்மை உடையதாம்.
பாடல் எண் 2
தாம நித்திலக் கோவைகள்
சரிந்திடச் சரிந்த
தேம லர்க்குழல் மாதர்பந்
தாடுதெற் றிகள்சூழ்
காமர் பொற்சுடர் மாளிகைக்
கருங்கடல் முகந்த
மாமு கிற்குலம் மலையென
ஏறுவ மருங்கு
பொழிப்புரை:
முத்து மாலைகளின் கோவைகள் சரியத் தேன் பொருந்திய மலர்களைச் சூடிய தாழ்ந்த கூந்தலையுடைய பெண்கள் பந்தாடும் மேடைகளைக் கொண்ட விரும்பத்தக்க பொன் ஒளி மின்னும் மாளிகைகளை, இவை மலை என்று மயங்கி, அவற்றின் அருகே, கரிய கடல் நீரை முகந்து நிற்கும் கரிய மேகக் கூட்டங்கள் நெருங்குவன.
பாடல் எண் : 3
பெருமை யில்செறி பேரொலி
பிறங்கலின் நிறைந்து
திரும கட்குவாழ் சேர்விட
மாதலின் யாவும்
தருத லில்கடல் தன்னினும்
பெரிதெனத் திரைபோல்
கரிப ரித்தொகை மணிதுகில்
சொரிவதாங் கலத்தால்.
பொழிப்புரை:
பெருமை மிக்க பேரோசை நிறைதலாலும், அழகு நிறைந்த திருமகள் வாழும் உறைவிடமாதலாலும், வேண்டும் பொருள்களை எல்லாம் அளித்தலாலும், கடலை விடப் பெரியது என்று சொல்லுமாறு விளங்கி, அலை என யானைத் தொகைகள், குதிரைத் தொகைகள், மணிகள், ஆடைகள் ஆகிய இவை முதலான பொருள்களை எல்லாம் மரக்கலங்களில் கொணர்ந்து தர, அந்நகரம் சிறந்து விளங்கும்.
பாடல் எண் : 4
நீடு தொல்புகழ் நிலம்பதி
னெட்டினும் நிறைந்த
பீடு தங்கிய பலபொருள்
மாந்தர்கள் பெருகிக்
கோடி நீள்தனக் குடியுடன்
குவலயங் காணும்
ஆடி மண்டலம் போல்வதவ்
வணிகிளர் மூதூர்
பொழிப்புரை:
பெரும் புகழுடைய பதினெண் நிலங்களிலும் நிறைந்த பெருமையுடைய பல பொருள்களைக் கொண்ட மக்களும் சேர்ந்து பெருகி வாழ்வதாலும், கோடியளவினும் பெருகிய செல்வக் குடி மக்களுடன் விளங்குவதாலும், அவ்வழகுடைய பழைய நகரம், இவ்வுலகம் முழுவதும் தனக்குள் நிழலாக அடங்கக் காணப்படுகின்ற கண்ணாடி மண்டலம் போன்றதாகும்.
பாடல் எண் : 5
அந்நெ டுந்திரு நகர்மருங்
கலைகடல் விளிம்பில்
பன்னெ டுந்திரை நுரைதவழ்
பாங்கரின் ஞாங்கர்
மன்னு தொன்மையின் வலைவளத்
துணவினில் மலிந்த
தன்மை வாழ்குடி மிடைந்தது
தடநுளைப் பாடி
பொழிப்புரை:
அத்தகைய பெருநகரத்தின் அருகில் அலைகளை உடைய கடல் விளிம்பில், நீண்டு அலைகளின் நுரை வந்து தவழ்வ தற்கு இடமான பகுதிகளை அடுத்து, நிலையானதும் பழைமையான துமான பரதவர் மரபில், வலைவீசி மீன் பிடிக்கும் தொழிலால் பெறும் வளமையுடைய மீன் உணவு பெருகிய இயல்பினால் வாழ்வு பெற்ற பரதவர் குடிகள் நெருங்கியுள்ளன.
பாடல் எண் : 6
புயல ளப்பில வெனவலை
புறம்பணை குரம்பை
அயல ளப்பன மீன்விலைப்
பசும்பொனி னடுக்கல்
வியல ளக்கரில் விடுந்திமில்
வாழ்நர்கள் கொணர்ந்த
கயல ளப்பன பரத்தியர்
கருநெடுங் கண்கள்
பொழிப்புரை:
அளவற்ற மேகங்கள் கிடந்தாற்போல் வலைகள் பெருகிய குடிகளின் அருகே, மீன் விலைக்குக் கொள்வோர் கொண்டு வந்த பசும்பொற்குவியல்கள் அளவிடப்படுவன. பரந்த கடலில் செலுத்தும் மீன்பிடிப் படகுகளின் வழி, பரதவர் கொணர்ந்த கயல் மீன்களை அவரிடம் பெற்றுக் கொள்ளும் பரத்தியரின் கரிய கண்கள் அவை இவ்வளவு விலை பெறும் என்பதைக் கண்ட அளவில் அளந்து விடுவன.
பாடல் எண் : 7
உணங்கல் மீன்கவர் வுறுநசைக்
குருகுடன் அணைந்த
கணங்கொள் ஓதிமங் கருஞ்சினைப்
புன்னையங் கானல்
அணங்கு நுண்ணிடை நுளைச்சியர்
அணிநடைக் கழிந்து
மணங்கொள் கொம்பரின் மருங்குநின்று
இழியல மருளும்
பொழிப்புரை:
உலர்ந்த மீன்களைக் கவர்தற்கு ஆசையுடைய பறவைகளுடன் வந்த கூட்டமான அன்னப் பறவைகள், வருந்துகின்ற நுண்ணிய இடையையுடைய நுளைச்சியரின் அழகிய நடைக்குத் தோற்று, உயர்ந்த கிளைகளையுடைய புன்னைக் காட்டில், மணம் மிக்க அப்புன்னைக் கொம்புகளினின்றும் இறங்காமல் மருட்சி கொண்டி ருக்கும்.
பாடல் எண் : 8
வலைநெ டுந்தொடர் வடம்புடை
வலிப்பவர் ஒலியும்
விலைப கர்ந்துமீன் குவைகொடுப்
பவர்விளி ஒலியும்
தலைசி றந்தவெள் வளைசொரி
பவர்தழங் கொலியும்
அலைநெ டுங்கடல் அதிரொலிக்
கெதிரொலி யனைய
பொழிப்புரை:
வலைகளில் பிணிக்கப்பட்டிருக்கும் நீண்ட தொடர் களையுடைய வடங்களை இழுத்துச் செம்மை செய்பவர்களின் ஒலியும், விலையை எடுத்துக் கூறி மீன் குவியலைக் கொடுப்பவர் வாங்குவோரை அழைக்கின்ற ஒலியும், மிகச் சிறந்த வெண்மையான சங்குகளை எடுத்துக் குவிப்பவர்களின் ஒலியும், பெரிய கடல் ஒலிக்கு எதிர் ஒலி போன்று விளங்குவன.
பாடல் எண் : 9
அனைய தாகிய அந்நுளைப்
பாடியில் அமர்ந்து
மனைவ ளம்பொலி நுளையர்தங்
குலத்தினில் வந்தார்
புனையி ளம்பிறை முடியவர்
அடித்தொண்டு புரியும்
வினைவி ளங்கிய அதிபத்தர்
எனநிகழ் மேலோர்
பொழிப்புரை:
அத்தகைய நுளைப்பாடியில் வாழ்ந்து, அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றிவரும் நுளையரின் குலத்தில் தோன்றியவர். இளம்பிறைச் சந்திரனைச் சூடிய முடியையுடைய இறைவரின் அடித்தொண்டு செய்யும் செயலில் சிறந்து விளங்கிய `அதிபத்தர்` எனும் பெயர்பெற்ற மேன்மையை உடையவராவர்.
பாடல் எண் : 10
ஆங்கு அன்பர்தாம் நுளையர்தந்
தலைவராய் அவர்கள்
ஏங்கு தெண்டிரைக் கடலிடைப்
பலபட இயக்கிப்
பாங்கு சூழ்வலை வளைத்துமீன்
படுத்துமுன் குவிக்கும்
ஓங்கு பல்குவை யுலப்பில
வுடையராய் உயர்வார்
பொழிப்புரை:
அவ்வதிபத்தர் என்னும் அன்பர், நுளையரின் தலைவராகி, ஒலிக்கின்ற தெளிந்த அலைகளையுடைய கடலில் பலவாறு தொழில் செய்து, பக்கங்களில் சூழும் வலைகளை வளைத்து வீசி, மீன்களைப் பிடித்துக் கொண்டு வந்து குவிக்கும் உயர்ந்த பலவகை மீன் குவைகள் பலவாக, அவற்றை உடையவராய் அதனால் உயர்ந்தவராய் விளங்கினார்.
பாடல் எண் : 11
முட்டில் மீன்கொலைத் தொழில்வளத்
தவர்வலை முகந்து
பட்ட மீன்களில் ஒருதலை
மீன்படுந் தோறும்
நட்ட மாடிய நம்பருக்
கெனநளிர் முந்நீர்
விட்டு வந்தனர் விடாதஅன்
புடன்என்றும் விருப்பால்
பொழிப்புரை:
குறைவில்லாத மீன்களைப் பிடித்து, அக்கொலைத் தொழிலின் வளத்தையுடைய பரதவர், வலைகளால் வாரி எடுக்க, அதனுள் அகப்பட்ட மீன்களில், ஒரு தலைமையான மீன் கிட்டும் தோறும், `இஃது ஐந்தொழில் செய்து அருட்கூத்தாடுகின்ற ஐயருக்காகுக!\' என்று, இடையறாத அன்பினால் விருப்புடன், குளிர்ந்த கடலிடத்தில் நாடோறும் விட்டு வந்தார்.
பாடல் எண் : 12
வாகு சேர்வலை நாள்ஒன்றில்
மீனொன்று வரினும்
ஏக நாயகர் தங்கழற்
கெனவிடும் இயல்பால்
ஆகு நாள்களில் அனேகநாள்
அடுத்தொரு மீனே
மேக நீர்படி வேலையில்
படவிட்டு வந்தார்
பொழிப்புரை:
ஒழுங்காக மீன்களைப் பிடித்து வரும் வலையில், ஒரு நாளில் ஒரு மீனே வரினும் `முழுமுதல்வரான இறைவரின் திருவடிக்கே' ஆகும் என விடுத்துவரும் நாள்களில், பல நாள்கள் தொடர்ந்து ஒரு மீனே, மேகம் படியும் கடலில் கிடைக்க, அதனை, அவர், இறைவருக்காக என்றே கடலின்கண் விட்டு வந்தார்.
பாடல் எண் : 13
மீன்வி லைப்பெரு குணவினில்
மிகுபெருஞ் செல்வம்
தான்ம றுத்தலின் உணவின்றி
அருங்கிளை சாம்பும்
பான்மை பற்றியும் வருந்திலர்
பட்டமீன் ஒன்று
மான்ம றிக்கரத் தவர்கழற்
கெனவிட்டு மகிழ்ந்தார்
பொழிப்புரை:
மீனை விற்பதனால் பெருகும் உணவுப் பண்டங்க ளால் மிக்க பெருஞ்செல்வம் இவ்வகையில் சுருங்கியமையால், தம் அரிய உறவினர்கள் உணவில்லாமல் பசியால் வருந்துவது பற்றியும், அவர் வருந்தவில்லை. வலையில் அகப்படுவது ஒரு மீனே யாயினும் அதனையும் தொடர்ந்து, மான் கன்றைக் கையில் ஏந்திய இறைவரி
பாடல் எண் : 14
சால நாள்கள்இப் படிவரத்
தாம்உண வயர்த்துக்
கோல மேனியுந் தளரவுந்
தந்தொழில் குறையாச்
சீல மேதலை நின்றவர்
தந்திறந் தெரிந்தே
ஆல முண்டவர் தொண்டர்அன்
பெனும்அமு துண்பார்
பொழிப்புரை:
பல நாள்கள் இவ்வாறே நிகழத் தாம் உணவு மறந்து வாடித் தம் அழகிய திருமேனியும் தளர்ச்சியடையத் தம் தொண்டினின் றும் குறைவுபடாத அவ்வொழுக்கத்தில் சலியாமல் ஒழுகியவரின் இயல்பை அறிந்து, நஞ்சுண்ட இறைவர் இத் தொண்டரின் அன்பு எனும் அமுதத்தை உண்பாராய்,
பாடல் எண் : 15
ஆன நாள்ஒன்றில் அவ்வொரு
மீனுமங் கொழித்துத்
தூநி றப்பசுங் கனகநற்
சுடர்நவ மணியால்
மீனு றுப்புற அமைத்துல
கடங்கலும் விலையாம்
பான்மை அற்புதப் படியதொன்
றிடுவலைப் படுத்தார்
பொழிப்புரை:
முற்கூறியவாறே நிகழ்ந்த நாள் ஒன்றில், அவ்வொரு மீனும் அங்கு வலையில் அகப்படாது போகச் செய்து, தூய நிறமுடைய பசும் பொன்னாலும் ஒளியுடைய மணிகளாலும் மீன் உறுப்புக்கள் பொருந்தும்படி அமைத்து, உலகனைத்துமே அதற்குரிய விலை என மதிக்கத்தக்க அற்புதத் தன்மை கொண்ட ஒரு மீன், வீசிய வலையில் அகப்படுமாறு இறைவர் செய்தனர்.
பாடல் எண் : 16
வாங்கு நீள்வலை அலைகடற்
கரையில்வந் தேற
ஓங்கு செஞ்சுடர் உதித்தென
வுலகெலாம் வியப்பத்
தாங்கு பேரொளி தழைத்திடக்
காண்டலும் எடுத்துப்
பாங்கு நின்றவர் மீன்ஒன்று
படுத்தனம் என்றார்
பாடல் எண் : 17
என்று மற்றுளோர் இயம்பவும்
ஏறுசீர்த் தொண்டர்
பொன் திரட்சுடர் நவமணி
பொலிந்தமீ னுறுப்பால்
ஒன்று மற்றிது என்னையா
ளுடையவர்க் காகும்
சென்று பொற்கழல் சேர்கெனத்
திரையொடுந் திரித்தார்
பொழிப்புரை:
என்று பரதவர் உரைக்கவும், அதுகேட்ட மிகுகின்ற சிறப்பையுடைய தொண்டரான அதிபத்தர் `பொன்னும் தொகுதியான ஒளியுடைய நவமணிகளும் விளங்கும், மீன் உறுப்புகளினால் பொருந்தும் உலகியலில் காணக் கூடாத இம்மீன், என்னை ஆட்கொள் கின்ற இறைவருக்கே ஆகும்: அவரது பொற்கழலை இது சேர்வதா கும்!' என்று கடலில் விடுத்தார்.
பாடல் எண் : 18
அகில லோகமும் பொருள்முதற்
றாம்எனும் அளவில்
புகலு மப்பெரும் பற்றினைப்
புரையற எறிந்த
இகலில் மெய்த்திருத் தொண்டர்முன்
இறைவர்தாம் விடைமேல்
முகில்வி சும்பிடை யணைந்தனர்
பொழிந்தனர் முகைப்பூ
பொழிப்புரை:
எவ்வுலகும் பொருளையே முதன்மையாக வுடையது என்று கூறும் அப்பெரிய வலிய பொன்னாசை என்னும் பெரும் பற்றை முழுமையாக நீக்கிய ஒப்பில்லாத மெய்த்தொண்டர் முன்னே, இறைவர் விடையூர்தியின் மேல், மேகம் தவழும் வானத்தில் எழுந்தருளினார். அதுபொழுது தேவர்கள் கற்பகப் பூமழை சொரிந்தனர்.
பாடல் எண் : 19
பஞ்ச நாதமும் எழுந்தன
அதிபத்தர் பணிந்தே
அஞ்ச லிக்கரம் சிரமிசை
யணைத்துநின் றவரை
நஞ்சு வாண்மணி மிடற்றவர்
சிவலோகம் நண்ணித்
தஞ்சி றப்புடை அடியர்பாங்
குறத்தலை யளித்தார்
பொழிப்புரை:
`பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு' (குறள், 247) என்ற திருவள்ளுவனாரும். `பொருள்ளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது' (குறள்., 248) என்பர். அவ்வருட்செல்வமே அதிபத்தரின் செல்வமாயிற்று.
பாடல் எண் : 20
தம்ம றம்புரி மரபினில்
தகும்பெருந் தொண்டு
மெய்ம்மை யேபுரி அதிபத்தர்
விளங்குதாள் வணங்கி
மும்மை யாகிய புவனங்கள்
முறைமையிற் போற்றும்
செம்மை நீதியார் கலிக்கம்பர்
திருத்தொண்டு பகர்வாம்
பொழிப்புரை:
மீன்பிடிக்கும் தம் மரபிற்கு ஏற்றவாறே, தகுதியான பெருந் திருத்தொண்டை உண்மையில் தவறாது செய்து அருள் பெற்ற அதிபத்த நாயனாரின் விளக்கம் செய்யும் திருவடிகளை வணங்கி, இனி உலகங்கள் மூன்றும் முறையாகப் போற்றுகின்ற செம்மையும் நீதியும் உடைய கலிக்கம்ப நாயனாரின்' திருத்தொண்டைக் கூறுவாம். அதிபத்த நாயனார் புராணம் முற்றிற்று.
No comments:
Post a Comment