7 Dec 2020

திருஞானசம்பந்தர் பதிகம் 2 (கூனல்திங்கள்)





2.116 திருநாகைக்காரோணம்        
 பண் - செவ்வழி

(மயிலை சற்குருநாத தேசிகர்)

(ஹரிஹர தேசிகர்)
             
  திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1

கூனல்திங்கள் குறுங்கண்ணி கான்ற அந்நெடு வெண்ணிலா

ஏனல்பூத்தஅம் மராங்கோதை யோடும்விரா வும்சடை

வானநாடன் அமரர்பெரு மாற்கு இட மாவது

கானல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.


         பொழிப்புரை :வளைந்த பிறையாகிய சிறிய தலைமாலை , ஒளி உமிழும் வெண்ணிலவில் குறிஞ்சி நிலத்தில் தினைக்கொல்லையில் பூத்த கடம்பமலர்மாலை ஆகியவற்றைப் புனைந்த சடையை உடைய வானநாடனும் , அமரர் பெருமானும் ஆகிய இறைவற்கு இடமாவது சோலைகளை வேலியாகக் கொண்டதும் உப்பங்கழிகளை உடையது மாகிய கடல்நாகைக்காரோணமாகும் .



பாடல் எண் : 2

விலங்கல்ஒன்று சிலையாமதில் மூன்றுஉடன் வீட்டினான்,

இலங்கு கண்டத்து எழில்ஆமை பூண்டாற்கு இடம்ஆவது,

மலங்கி ஓங்கிவ் வருவெண்திரை மல்கிய மால்கடல்

கலங்கல் ஓதம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.


         பொழிப்புரை :மேருமலை ஒன்றை வில்லாகக் கொண்டு மும் மதில்களை அழித்தவனும் அழகிய கழுத்தில் ஆமை ஓட்டைப் பூண்ட வனும் ஆகிய இறைவனுக்கு இடம் , கலங்கி ஓங்கி வரும் வெண் திரை களை உடைய கடலின் கரையில் கலங்கிய நீர்ப் பெருக்கோடு கூடிய கழிகள் சூழ்ந்த கடல் நாகைக் காரோணமாகும் .



பாடல் எண் : 3

வெறிகொள் ஆரும் கடல்கைதை நெய்தல்விரி பூம்பொழில்

முறிகொள் ஞாழல் முடப்புன்னை முல்லைமுகை வெண்மலர்

நறைகொள்கொன்றை நயந்துஓங்கு நாதற்கு இடமாவது

கறைகொள்ஓதம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.


         பொழிப்புரை :தளிர்களோடு கூடிய ஞாழல் மலர் , வளைந்த புன்னை மரத்தில் பூத்தமலர்கள் , வெள்ளிய முல்லையரும்புகள் , தேன் நிறைந்த கொன்றைமலர் ஆகியவற்றை விரும்பி அணியும் பெருமானுக்கு இடம் , மணம் கமழும் தாழைமலர் , நெய்தல்மலர் ஆகியவை நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட , கரிய ஓதம் பரவி விளங்கும் கடல் நாகைக்காரோணமாகும் .



பாடல் எண் : 4

வண்டுபாட வளர்கொன்றை மாலைமதி யோடு உடன்

கொண்டகோலம் குளிர்கங்கை தங்கும் குருள் குஞ்சியுள்

உண்டுபோலும் எனவைத்து உகந்த ஒரு வற்குஇடம்

கண்டல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.


         பொழிப்புரை :வண்டுகள் பாடுமாறு மலர்ந்த கொன்றை மலர் மாலையை இளம்பிறையோடு ஒருசேர அணிந்து , சுருண்ட சடையுள் குளிர்ந்த கங்கையை ஐயப்படுமாறு மறைத்துவைத்து மகிழ்ந்த இறைவனுக்கு இடம் , தாழைவேலி சூழ்ந்ததும் உப்பங்கழிகள் நிறைந்ததும் ஆகிய கடல் நாகைக்காரோணமாகும்



பாடல் எண் : 5

வார்கொள்கோலம் முலைமங்கை நல்லார்மகிழ்ந்து ஏத்தவே

நீர்கொள்கோலச் சடைநெடு வெண்திங்கள் நிகழ்வுஎய்தவே

போர்கொள்சூலப் படைபுல்கு கையார்க்கு இடமாவது

கார்கொள் ஓதம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.


         பொழிப்புரை :நல்லவர் மகிழ்ந்தேத்த , கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையோடு கூடிய அழகோடு , தண்மையான அழகிய சடையில் நீண்ட நிலாக்கதிர்களைப் பரப்பும் இளம்பிறை விளங்கப் போருடற்றும் சூலப்படையைக் கையின்கண் கொண்டு விளங்கும் சிவ பிரானுக்குரிய இடம் ஓதம் பெருகும் கரிய கழிகள் சூழ்ந்த கடல் நாகைக் காரோணமாகும் .



பாடல் எண் : 6

விடை அதுஏறி  விடஅரவு அசைத்தவ் விகிர்தர்அவர்

படைகொள்பூதம் பலபாட ஆடும்பர மர்அவர்

உடைகொள்வேங்கை உரிதோல் உடையார்க்கு இடமாவது

கடைகொள்செல்வம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.


         பொழிப்புரை :விடைமீது ஏறி வருபவனும் , விடம்பொருந்திய பாம்பை இடையில்கட்டிய விகிர்தனும் , பூதப்படைகள் பாட ஆடும் பரமனும் , புலித்தோலை உடையாக உடுத்தவனும் ஆகிய சிவபெரு மானுக்குரிய இடம் , மீன்களாகிய செல்வங்கள் நிறைந்த கழிசூழ்ந்த கடல்நாகைக்காரோணமாகும் .



பாடல் எண் : 7

பொய்துவாழ்வார் மனம்பாழ் படுக்கும் மலர்ப்பூசனை

செய்துவாழ்வார் சிவன்சேவடிக்கே செலும் சிந்தையார்

எய்தவாழ்வார் எழில்நக்கர் எம்மாற்கு இடமாவது

கைதல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.


         பொழிப்புரை :மனத்தைப் பாழ்படுத்தி வாழும் பொய்ம்மை வாழ்வுடையாரும் , சிவன் சேவடிக்கே செல்லும் சிந்தையராய் மலர் தூவிப் பூசனைசெய்து வாழ் அடியவரும் தம்மை எய்த வாழ்வாராகிய அழகிய பெருமானுக்கு இடம் , தாழை வேலியையும் உப்பங் கழிகளையும் உடைய கடல் நாகைக் காரோணமாகும் .



பாடல் எண் : 8

பத்துஇரட்டி திரள் தோள் உடையான் முடிபத்துஇற

அத்து இரட்டி விரலால் அடர்த்தார்க்கு இடமாவது

மைத்திரட்டிவ் வருவெண்திரை மல்கிய மால்கடல்

கத்திஉரட்டுங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.


         பொழிப்புரை :இருபது தோள்களை உடைய இராவணனுடைய பத்துத் தலைகளும் நெரியச் சிவந்த கால் விரல்களால் அடர்த்த பெருமானுக்குரிய இடம் , கரிய மணலைத்திரட்டி வரும் வெண்திரைகளை உடைய பெரியகடலைச் சூழ்ந்துள்ள கழிகள் ஒளிசிறந்து ஒலியெழுப் பும் கடல் நாகைக்காரோணமாகும் .



பாடல் எண் : 9

நல்லபோதில் உறைவானும் மாலும் நடுக்கத்தினால்

அல்லர் ஆவர் எனநின்ற பெம்மாற்கு இடமாவது

மல்லல் ஓங்கிவ் வருவெண்திரை மல்கிய மால்கடல்

கல்லல் ஓதம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.


         பொழிப்புரை :நல்ல தாமரை மலரில் உறையும் நான்முகனும் , திருமாலும் நடுக்கத்தால் இவரே சிவபரஞ்சுடர் எனவும் அல்லர் எனவும் ஐயுற நின்ற பெருமானுக்குரிய இடம் , வளமோங்கிவரும் வெள்ளிய அலைகள் நிரம்பிய பெரிய கடலினது ஒலிக்கும் ஓதங்களை யுடைய கழிகள் சூழ்ந்த கடல் நாகைக்காரோணமாகும் .



பாடல் எண் : 10

உயர்ந்தபோதின் உருவத்து உடைவிட்டு உழல்வார்களும்

பெயர்ந்தமண்டை இடுபிண்ட மாவுண்டு உழல்வார்களும்

நயந்துகாணா வகைநின்ற நாதர்க்கு இடமாவது

கயங்கொள்ஓதம் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.


         பொழிப்புரை :தாமரை மலர் போன்று சிவந்த கல்லாடையை உடுத்தவர்களும் உடையின்றித் திரிபவர்களும் கையில் ஏந்திய மண்டையில் பிறர் இடும் பிச்சையை உணவாகக் கொண்டு உழல்பவரும் ஆகிய புத்தர்களும் சமணர்களும் விரும்பிக் காணாத வாறு நின்ற பெருமானுக்கு உரிய இடம் ஆழமும் நீர்ப் பெருக்கும் உடைய கழிகள் சூழ்ந்து விளங்கும் கடல்நாகைக் காரோணமாகும் .



பாடல் எண் : 11

மல்குதண்பூம் புனல்வாய்ந்து ஒழுகும்வயல் காழியான்

நல்லகேள்வித் தமிழ்ஞான சம்பந்தன்நல் லார்கள்முன்

வல்லவாறே புனைந்துஏத்துங் காரோணத்து வண்தமிழ்

சொல்லுவார்க்கும் இவைகேட்ப வர்க்கும்துயர் இல்லையே.


         பொழிப்புரை :நீர்நிறைந்த வயல்களால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றியவரும் நல்ல கேள்வியை உடையவரும் ஆகிய தமிழ் ஞானசம்பந்தர் நல்லோர்கள் முன் வல்லவாறு பாடிய காரோணத்துத் திருப்பதிகமாகிய இவ்வண்தமிழைச் சொல்பவர் கட்கும் கேட்பவர்கட்கும் துன்பம் இல்லை .


                                             திருச்சிற்றம்பலம்


திருஞானசம்பந்தர் பதிகம் 1( புனையும் விரி)



திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 463

நீடுதிருநீலநக்கர் நெடுமனையில்

         விருந்துஅமுது செய்து, நீர்மைப்

பாடும்யாழ்ப் பெரும்பாணரும் தங்க

         அங்குஇரவு பள்ளி மேவி,

ஆடும்அவர் அயவந்தி பணிவதனுக்கு

         அன்பருடன் அணைந்து சென்று,

நாடியநண் புஉடைநீல நக்கடிகள்

         உடன்நாதர் கழலில்தாழ்ந்து.


         பொழிப்புரை : அன்பு நீடும் திருநீலநக்க நாயனாரின் பெரிய இல்லத்தில் விருந்து அமுது உண்டு, நல்ல நீர்மையுடன் பாடும் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் உடன்தங்க அன்று அங்குப் பள்ளி அமர்ந்து, கூத்தியற்றும் இறைவரின் `அயவந்தியினைப்\' பணிவதற்கு, அன்பர்களுடனே சேர்ந்து சென்று, நாடிய நட்பையுடைய நீலநக்க நாயனாருடன் இறைவன் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.



பெ. பு. பாடல் எண் : 464

கோதுஇலா ஆர்அமுதைக் கோமளக்கொம்

         புடன்கூடக் கும்பிட்டு ஏத்தி,

ஆதியாம் மறைப்பொருளால் அருந்தமிழின்

         திருப்பதிகம் அருளிச் செய்வார்,

நீதியால் நிகழ்கின்ற நீலநக்கர்

         தம்பெருஞ்சீர் நிகழ வைத்து,

பூதிசா தனர்பரவும் புனிதஇயல்

         இசைப்பதிகம் போற்றி செய்தார்.


         பொழிப்புரை : குற்றம் அற்ற அரிய அமிழ்தத்தைப் போன்ற இறைவரை, அழகிய இளம்கொம்பைப் போன்ற அம்மையாருடன் வணங்கி ஏத்தி, பழைய மறைகளின் பொருள் விளங்க அரிய தமிழின் திருப்பதிகம் பாடுவார், மறைவழி ஒழுகும் திருநீலநக்கரின் பெருஞ் சிறப்புகள் விளங்க வைத்து, திருநீற்று நெறியைப் போற்றி வரும் தொண்டர்கள் போற்றுமாறு, தூய இயல் இசை உடைய பதிகத்தை அருளிச் செய்தார்.



பெ. பு. பாடல் எண் : 465

பரவியகா தலில்பணிந்து பாலறா

         வாயர்புறத்து அணைந்து, பண்பு

விரவியநண்பு உடைஅடிகள் விருப்புஉறு

         காதலில் தங்கி மேவும் நாளில்,

அரவுஅணிந்தார் பதிபிறவும் பணியஎழும்

         ஆதரவால் அணைந்து செல்வார்,

உரவுமனக் கருத்துஒன்றாம் உள்ளம்உடை

         யவர்க்கு விடை உவந்து நல்கி.


         பொழிப்புரை : பாலறா வாயரான திருஞானசம்பந்தர், பெருகிய அன்பு மிகுதியால் கோயிலின் வெளியே வந்து, அன்புடன் பொருந்திய நட்புக்கொண்ட திருநீலநக்க அடிகளின் விருப்புடைய ஆசையினால் அங்குத் தங்கியிருந்த நாள்களில், பாம்பை அணிந்த இறைவரின் மற்றப் பதிகளையும் வணங்க எழுந்த அன்பினால், அவ்வப் பதிகளுக்கும் செல்வாராய், அறிவால் உள்ளத்தில் எழும் கருத்து ஒன்றேயான மனத்தையுடைய திருநீலநக்கரிடம் மகிழ்ச்சியுடன் விடைபெற்றுப் புறப்பட்டார்.



பெ. பு. பாடல் எண் : 466

மற்றுஅவர்தம் பெருங்கேண்மை மகிழ்ந்து கொண்டு,

         மால்அயனுக்கு அரியபிரான் மருவு தானம்

பல்பலவும் சென்றுபணிந்து ஏத்திப் பாடி,

         பரமர்திருத் தொண்டர்குழாம் பாங்கின் எய்த,

கற்றவர்வாழ் கடல்நாகைக் காரோ ணத்துக்

         கண்ணுதலைக் கைதொழுது, கலந்த ஓசைச்

சொல்தமிழ்மா லைகள் பாடி, சிலநாள் வைகித்

         தொழுதுஅகன்றார் தோணிபுரத் தோன்ற லார்தாம்.


         பொழிப்புரை : பிள்ளையார், அந்நீலநக்கரின் பெருநட்பை மகிழ்ந்து மனத்துட்கொண்டு, நான்முகன், திருமால் என்பவர்க்கும் அரிய சிவபெருமானின் பதிகள் பலவும் சென்று வணங்கிப் போற்றி, இறைவரின் தொண்டர் கூட்டமானது உடன் சூழ்ந்து வரச்சென்று கற்றவர் வாழும் `திருநாகைக் காரோணம்\' என்ற பதியில் வீற்றிருக்கும் இறைவரை வணங்கி, இசையுடன் கூடிய சொல் நிறைந்த தமிழ் மாலைகளைப் பாடிச் சிலநாள்கள் அங்குத் தங்கி, வணங்கி விடைபெற்று நீங்கினார்.


         குறிப்புரை : மருவுதானம் பற்பலவும் என்றது இறையான்சேரி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். எனினும் தெளிவாக எவையும் தெரிந்தில. திருநாகைக்காரோணத்தில் அருளிய பதிகங்கள்:


1.    `புனையும் விரி' : (தி.1 ப.84) - குறிஞ்சி

2.    `கூனல் திங்கள்' : (தி.2 ப.116) - செவ்வழி.


         இப்பாடற்கு முன்னும் பின்னும் உள்ள சந்தத்திற்கும் இப்பாடல் சந்தத்திற்கும் இடையறவு இருத்தல் கண்டு இதனை இடைச் செருகல் என்பர் சிவக்கவிமணியார். எனினும் இப்பாடலில் கடல்நாகைக் காரோணப் பெருமானை வணங்கினார் எனக் கூறி, அடுத்து வரும் பாடலில் `அந்நாகைக் காரோணத்தினின்றும் நீங்கி' என வருதலின் பொருளியைபு காணத்தகும் இப்பாடலை இடைச் செருகலாகக் கொள்ள வேண்டுவது இல்லை என்றே தெரிகிறது.


திருஞானசம்பந்தர் திருப்பதிகங்கள்


1.084     திருநாகைக்காரோணம்        
   பண் - குறிஞ்சி

                                             திருச்சிற்றம்பலம்
(ஹரிஹர தேசிகர்)

(மயிலை சற்குருநாத தேசிகர்)

பாடல் எண் : 1

புனையும் விரிகொன்றைக் கடவுள், புனல்பாய

நனையும் சடைமேல்ஓர் நகுவெண் தலைசூடி,

வினைஇல் அடியார்கள் விதியால் வழிபட்டுக்

கனையும் கடல்நாகைக் காரோ ணத்தானே.


         பொழிப்புரை :விரிந்த கொன்றை மலர் மாலையைப் புனையும் கடவுளாய சிவபிரான், கங்கை நீரைத் தாங்கியதால் நனைந்துள்ள சடையின்மேல், வாய் விரித்துச் சிரிப்பது போன்ற வெள்ளியதொரு தலைமாலையைச் சூடி, வினைநீங்கிய அடியவர்கள் விதிப்படி வழிபடச் செறிந்துள்ள கடற்கரையை அடுத்த நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளார்.



பாடல் எண் : 2

பெண்ஆண் எனநின்ற பெம்மான், பிறைச்சென்னி,

அண்ணா மலைநாடன், ஆரூர் உறை அம்மான்,

மண்ஆர் முழவுஓவா மாடந் நெடுவீதிக்

கண்ஆர் கடல்நாகைக் காரோ ணத்தானே.


         பொழிப்புரை :பெண்ணும் ஆணுமாய் ஓருருவில் விளங்கும் பெருமானும், பிறை சூடிய சென்னியனாய் அண்ணாமலை ஆரூர் ஆகிய ஊர்களில் எழுந்தருளிய தலைவனும் ஆகிய சிவபிரான் மார்ச்சனை பொருந்திய முழவின் ஒலி இடைவிடாமல் கேட்கும், மாட வீடுகளுடன் கூடிய நெடிய வீதிகளை உடைய அகன்ற இடப்பரப்புடைய கடலையடுத்த நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.



பாடல் எண் : 3

பாரோர் தொழ, விண்ணோர் பணிய, மதில்மூன்றும்

ஆர்ஆர் அழல்ஊட்டி, அடியார்க்கு அருள்செய்தான்,

தேர்ஆர் விழவுஓவாச் செல்வன், திரைசூழ்ந்த

கார்ஆர் கடல்நாகைக் காரோ ணத்தானே.


         பொழிப்புரை :மண்ணக மக்கள் தொழவும், விண்ணவர் பணியவும் அனைவர்க்கும் நெருங்குதற்கரிய அழலை ஊட்டி அழித்து அடியவர்க்கு அருள் செய்து, தேரோட்டமாகிய சிறப்பு விழா இடைவிடாது நிகழும் சிறப்பினை ஏற்றருளும் செல்வன் ஆகிய சிவபெருமான், அலைகள் நிரம்பிய, மேகங்கள் பொருந்திய கடலின் கரையில் விளங்கும் நாகைக் காரோணம் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்.



பாடல் எண் : 4

மொழிசூழ் மறைபாடி முதிரும் சடைதன்மேல்

அழிசூழ் புனல்ஏற்ற அண்ணல், அணிஆய

பழிசூழ்வு இலர்ஆய பத்தர் பணிந்து ஏத்த,

கழிசூழ் கடல் நாகைக் காரோ ணத்தானே.


         பொழிப்புரை :பொருள் பொதிந்த சொற்கள் நிரம்பிய வேதங்களைப் பாடிக் கொண்டு, முதிர்ந்த தன் சடைமுடி மேல் உலகை அழிக்க எண்ணிவந்த கங்கை நதியை ஏற்றருளிய தலைவனாகிய சிவபெருமான், அழகிய செயல்களோடு பழிபாவங்களை மனத்திலும் கருதாதவர்களாகிய அடியவர்கள் பணிந்து போற்ற உப்பங்கழிகள் சூழ்ந்த கடற்கரையை அடுத்துள்ள நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.



பாடல் எண் : 5

ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கு அருள் நல்கி,

சேண் நின் றவர்க்கு இன்னம் சிந்தை செயவல்லான்,

பேணி வழிபாடு பிரியாது எழுந்தொண்டர்

காணும் கடல்நாகைக் காரோ ணத்தானே.


         பொழிப்புரை :ஆணும் பெண்ணுமான வடிவோடு காட்சி தந்து, அடியவர்களுக்கு அருள் வழங்கி, வானுலகில் வாழும் தேவர்கட்கு மேலும் அருள்புரிய விரும்பும் மனத்தை உடையனாய் விளங்கும் சிவபிரான், அன்புடன் வழிபாடு செய்து பிரியாது வாழும் தொண்டர்கள் காணும் வண்ணம் கடற்கரையில் விளங்கும் நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.



பாடல் எண் : 6

ஏனத்து எயிறோடும் அரவம் மெய்பூண்டு

வானத்து இளந்திங்கள் வளரும் சடைஅண்ணல்

ஞானத்து உரைவல்லார் நாளும் பணிந்துஏத்தக்

கானல் கடல் நாகைக் காரோ ணத்தானே.


         பொழிப்புரை :பன்றியின் பல், பாம்பு ஆகியவற்றை மெய்யிற் பூண்டு, வானகத்தே இயங்கும் இளம்பிறை தங்கும் சடைமுடியை உடைய தலைமையாளனாகிய சிவபெருமான், மெய்யறிவு மயமான சொற்களைப் பேசவல்ல அடியவர்கள் நாள்தோறும் பணிந்து போற்றச் சோலைகள் சூழ்ந்த கடற்கரையை அடுத்துள்ள நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.



பாடல் எண் : 7

அரைஆர் அழல் நாகம் அக்கோடு அசைத்திட்டு

விரைஆர் வரைமார்பின் வெண்நீறு அணிஅண்ணல்,

வரைஆர் வனபோல வளரும் வங்கங்கள்

கரைஆர் கடல் நாகைக் காரோ ணத்தானே.


         பொழிப்புரை :இடையில் அழல்போலும் கொடிய நாகத்தைச் சங்கு மணிகளோடு இணைத்துக் கட்டிக் கொண்டு, மணம் கமழும் மலை போன்ற மார்பில் திருவெண்ணீறு அணிந்துள்ள தலைமையாளனாகிய சிவபெருமான், மலைகள் மிதந்து வருவன போலக் கப்பல்கள் கரையைச் சாரும் கடலை அடுத்துள்ள நாகைக் காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.



பாடல் எண் : 8

வலங்கொள் புகழ்பேணி வரையால் உயர்திண்தோள்

இலங்கைக்கு இறைவாட அடர்த்து,அங்கு அருள்செய்தான்,

பலங்கொள் புகழ்மண்ணில் பத்தர் பணிந்து ஏத்த,

கலங்கொள் கடல்நாகைக் காரோ ணத்தானே.


         பொழிப்புரை :மேலும் மேலும் வெற்றிகளால் பெற்ற புகழால் தருக்கி, மலை போன்று உயர்ந்த திண்ணிய தோளால் கயிலை மலையை எடுத்த இராவணனை வாடுமாறு அடர்த்துப்பின் அவனுக்கு அருள்செய்த சிவபிரான், வாழ்வின் பயனாகக் கொள்ளத் தக்க புகழை உடையவர்களாகிய அடியவர்கள் மண்ணுலகில் தன்னைப் பணிந்து ஏத்த மரக்கலங்கள் பொருந்திய கடற்கரையை அடுத்து விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.


 

பாடல் எண் : 9

திருமால் அடிவீழ, திசைநான் முகன்ஏத்தப்

பெருமான் எனநின்ற பெம்மான், பிறைச்சென்னிச்

செருமால் விடைஊரும் செல்வன், திரைசூழ்ந்த

கருமால் கடல்நாகைக் காரோ ணத்தானே.


         பொழிப்புரை :திருமால் தன் திருவடியில் விழுந்து வணங்கவும், நான்முகன் ஏத்தவும், தானே முழுமுதற் பரம்பொருள் என உணர்ந்து அழலுருவாய் ஓங்கி நின்ற பெருமானும், பிறைமதியை முடியிற்சூடிப் பகைவரை எதிர்க்க வல்ல விடையேற்றை ஊர்ந்து வரும் செல்வனும் ஆகிய சிவபெருமான், அலைகளால் சூழப்பட்ட கரிய பெரிய கடற்கரையில் விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.



பாடல் எண் : 10

நல்லார் அறம்சொல்ல, பொல்லார் புறம்கூற,

அல்லார் அலர்தூற்ற, அடியார்க்கு அருள்செய்வான்,

பல்ஆர் தலைமாலை அணிவான், பணிந்துஏத்தக்

கல்ஆர் கடல்நாகைக் காரோ ணத்தானே.


         பொழிப்புரை :நல்லவர்கள் அறநெறிகளைப் போதிக்கவும், பொல்லாதவர்களாகிய சமணர்கள் புறங்கூறவும், நல்லவரல்லாத புத்தர்கள் பழி தூற்றவும், தன் அடியவர்க்கு அருள்புரியும் இயல்பினன் ஆகிய இறைவன் சுடுகாட்டில் கிடக்கும் பலர் தலையோடுகளை மாலைகளாகக் கோத்து அணிந்தவனாய்ப் பலரும் பணிந்து ஏத்த, கல் என்னும் ஒலியோடு கூடிய கடற்கரையில் விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளியுள்ளான்.



பாடல் எண் : 11

கரைஆர் கடல்நாகைக் காரோ ணம்மேய

நரைஆர் விடையானை நவிலும் சம்பந்தன்

உரைஆர் தமிழ்மாலை பாடும் அவர்எல்லாம்

கரையா உருவாகிக் கலிவான் அடைவாரே.


         பொழிப்புரை :இடைவிடாது ஒலி செய்யும் கடலின் கரையில் விளங்கும் நாகைக்காரோணத்தில் எழுந்தருளிய வெண்மை நிறம் பொருந்திய விடை ஊர்தியைக் கொண்டுள்ள இறைவனை ஞானசம்பந்தன் பரவிப் போற்றிய புகழ்பொருந்திய இத்தமிழ் மாலையைப் பாடிப் பரவுபவர் அனைவரும் அழியாத வடிவத்தோடு ஆரவாரம் மிக்க வானுலகை அடைவார்கள்.

திருச்சிற்றம்பலம்



தல சிறப்புகள்



நாகை காரோணம் என்கின்ற நாகப்பட்டினம் சப்தாவிடங்க தலங்களில் ஒன்றாகும். 

இங்குள்ள ஸ்ரீ நீலாயதாக்ஷி, ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற #சிவஸ்தலம். இந்த கோவில் மதுரை மீனாக்ஷி அம்மன், காஞ்சி காமாக்ஷி அம்மன் மற்றும் காசி விசாலாக்ஷி அம்மன் கோவில்களை போல நீலாயதாக்ஷி அம்மன் கோவில் என்று தான் அழைக்கப்படுகிறது.  

மூலவர் – ஸ்ரீ #காயாரோகணேஸ்வரர் ( ஆதிபுராணர் ), அம்பாள் –ஸ்ரீ நீலாயதாக்ஷி ( கருந்தடங்கண்ணி ), ஸ்ரீ தியாகராஜர் (சுந்தரவிடங்கர்), நடனம் – தரங்க நடனம். சப்தவிடங்கத் தலங்களில் இரண்டாவது தலம். கடற்கரை வீசி நடனம் – பாராவாரதரங்க நடனம் ( கடலில் அலை ஆடுவது போல் ).

அதிபத்த நாயனாருக்கு சிவனார் அருள் செய்த விழா ஆவணி மாதத்தில் நடக்கிறது. அதிபத்த நாயனார் வாழ்ந்த இடம் – செம்படவர்சேரி – தற்போது நம்பியாங்குப்பம் என்று அழைக்கப்படுகிறது

ஆதிசேஷன் வழிபட்ட தலம்

சக்திபீடங்களில் ஒன்றான தலம் 
இது சிவன் கோவில் ஆனாலும், மக்கள் நீலாயதாக்ஷி அம்மன் கோயில் என்றே அழைக்கின்றனர்

கயிலையும் , காசியும் போல இத்தலமும் முக்திமண்டபத்துடன் திகழ்கிறது 
சப்தரிஷிகளுக்கும் சிவனார் சோமாஸ்கந்தராய் காட்சியளித்த தலம்

சாலிசுக மன்னனுக்கு கல்யாண கோலம் காட்டும் பஞ்சக்குரோச யாத்திரையாகிய சப்தஸ்தான விழா நடைபெறுகிறது

தசரதன் சனீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம்

அம்பாள் , முருகன் , திருமால் , அகத்தியர் , வசிஷ்டர் , முசுகுந்தன் , அரசகேசரி , விசித்திரகவசன் , விரூரகன் , பத்திரசேனன் , பாற்கரன் , மித்திரன் , காளகண்டன் , சண்டதருமன் முதலியோர் வழிபாட்டு அருள்பெற்ற தலம்

வைகாசியில் திருக்கல்யாண விழா, ஆடிப்பூரம், சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை முதலான உற்சவங்கள். 
கோயில்களில் திருவிழாவின் போது, சுவாமி மாடவீதிகளைச் சுற்றிவிட்டு கோயிலுக்குத் திரும்பிவிடுவார். 

ஆனால், இக்கோயிலில் இங்கிருந்து கிளம்பும் சுவாமி, நாகையைச் சுற்றியுள்ள பொய்கைநல்லூர், பொறவாச்சேரி, சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் என ஏழு ஊர்களுக்குச் சென்றுவிட்டு கோயிலுக்குத் திரும்புகிறார். சாலிச மகாராஜா இந்த ஏழு தலங்களில் சிவபூஜை செய்தபின்பு, சிவன் இங்கு திருமணக்கோலத்தில் காட்சி தந்தார். இதன் அடிப்படையில், சுவாமி 7 ஊர்களைச் சுற்றி வருகிறார்.

செய்த பாவத்திற்கு மன்னிப்பும், முக்தியும் கிடைக்க வழிபடவேண்டிய தலம்

சிவன் கோயில்களில் பிரதோஷத்தின்போது, சிவன் ரிஷப வாகனத்தில் செல்வது வழக்கம். ஆனால் இக்கோயிலில் மோகினி வடிவில் பெருமாளும் புறப்பாடாகிறார். பிரதோஷ வேளைக்கு முன்பாக, பெருமாளின் மோகினி அவதாரம் நிகழ்ந்ததால், பிரதோஷத்தன்று மோகினி வடிவில் பெருமாள் புறப்பாடாகிறார். இவரை பிரதோஷத்தின்போது மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் சிவனாரின் மூலஸ்தானத்திற்குள் வைத்துவிடுகின்றனர்.

அழுகுணி சித்தரின் ஜீவசமாதி இக்கோயிலில் உள்ளது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு யாகம் மற்றும் விசேஷ பூஜைகள் நடத்தப்படுகிறது. பவுர்ணமிதோறும் பாயச நைவேத்யம் படைத்து, விசேஷ பூஜை செய்து வழிபடுகின்றனர்.

கரோணா தியாகேசா...!!!

4 Dec 2020

நாக தோஷம் போக்கும் நாகாபரண விநாயகர்


நாகாபரணப்பிள்ளையார்

மாமேவு தந்தையொரு மருப்பையென
    விளித்திடத்தன் மெளலி யாய
தூமேவு பிறையொருபாற் சொருகாவத்
    தந்தையெதிர் தோன்ற நின்று
பாமேவும் ஒருமருப்ப னியானோநீ
    யோதெரிந்து பகரா யென்று
பூமேவு நகைகொளுநா காபரணக்
    களிற்றிருதாள் போற்றி வாழ்வாம்
 
- திருநாகைக்காரோணம் தலபுராணம் 

பொழிப்புரை: பெருமை மிக்க தந்தையாகிய சிவபெருமான் விநாயகரை நோக்கி, “ஒற்றைக்கொாம்பனே” (ஏகதந்தன்) என்று அழைத்திடவும், விநாயகர் தனது திருமுடியாக அணி செய்வதாகிய தூய்மை பொருந்திய பிறைநிலவை ஒருபுறம் சொருகித் தனது தந்தையாரின் எதிரே
தோன்றும்படியாக நின்று, "துதிக்கப்படும் பாடல்களில் பொருந்தியிருக்கும் ஒற்றைக்கொம்பன் நானா? நீயோ? தெரிந்து கூறுவாயாக !"
என்று கூறி, அழகு பொலியப் புன்னகை செய்திடுகின்ற நாகாபரணத்தை அணிந்த தலவிநாயகரின் திருவடி இணைகளைப் போற்றி வாழ்வோமாக !

குறிப்புரை: “ஒருபுறம் கொம்பு விளங்கவும், இன்னொரு புறம் வளைந்த பிறையையும் அணிந்தமையால் யான் ஒரு கொம்புடையவன் அல்லன்; இரு கொம்புடையவன் ஆவேன். முன்பொருகால் நீ வென்ற பன்றியின் ஒரு கொம்பை மட்டும் நீ அணிந்திருப்பதால், நீயே ஒற்றைக்கொம்பன் ஆனாய்" என விநாயகர் கூறினார் என்பர்


சிறப்பம்சம் :

🌷 நாகப்பட்டினத்தில் உள்ள நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாகும். மதுரை மீனாட்சி அம்மன், காஞ்சி காமாட்சி அம்மன், காசி விசாலாட்சி அம்மன் ஆலயங்களைப் போல, இந்தக் கோவிலும் அம்மனை முன்னிலைப் படுத்தும் திருக்கோவிலாக அமைந்திருக்கிறது.

🌷 இங்கு சிறப்பு மூர்த்தியாக நாகாபரணப் பிள்ளையார் என்பவர், இந்தக் கோவிலில் அருள்பாலிக்கிறார். ஆலயத்தின் முகப்பில் வீற்றிருக்கும் இந்த விநாயகர், உடலில் நாகத்தை ஆபரணமாக சூடி, தலைக்கு மேலே மற்றொரு நாகம் குடை பிடித்தபடி இருக்க அதன் கீழே காட்சி தருகிறார். இதன் காரணமாகவே இந்த விநாயகருக்கு, ‘நாகாபரண விநாயகர்’ என்று பெயர் வந்தது.

🌷 நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு, ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொண்டால், அந்த தோஷங்கள் விலகும் என்கிறார்கள். ராகு- கேது பெயர்ச்சியின்போது இவருக்கு விசேஷ பூஜைகளும் நடக்கிறது.