11 Jul 2021

புண்டரீக முனிவர் வரலாறு



🌷 யமுனை நதிக்கரையில் அமைந்த ஓர் நகரத்தில் வேத, ஆகமங்களை நன்கு கற்று உணர்ந்து அதில் சிறப்புற்று விளங்கிய "கருத்தமன்" எனும் முனிவரின் மகனான "புண்டரீகர்" தனது தந்தையிடம் முக்தி நிலையை அளிக்க வல்ல இறைவனைப் பற்றியும் அதற்கான வழிகளையும் கேட்டறிந்தார். கருத்தம முனிவரும் தனது மகனுக்கு சிவபெருமானின் பெருமைகளை எடுத்துரைத்து, முக்தி நிலையை அடைவதற்கான வழிமுறைகளை கூறி புண்டரீக முனிவரை காசி செல்லும்படி பணித்தார்.


🌷 அதன்படி உடலோடு முக்தி பெற எண்ணிய புண்டரீக முனிவர் காசியை அடைந்து சுவாமி விஸ்வநாதர், விசாலாட்சி அன்னையை "ஈராயிரம் வருடங்கள்" வழிபட்டு வந்தபோதும் இறைவன் காட்சி அளிக்கவில்லை. அவ்வேளையில் "வாமதேவன்" எனும் முனிவர் புண்டரீக முனிவரிடம் இங்கு காசியில் துன்பம் அடைந்தவருக்கே சாரூப முத்தி எனவே, காஞ்சி சென்று வழிபடுமாறு கூறினார்.


🌷 பின்னர் காஞ்சி வந்தடைந்த புண்டரீக முனிவர் ஏகாம்பர நாதரை வழிபட்டு, தனியாக காயாரோகண (கச்சி காரோணம்) லிங்க பிரதிஷ்டை செய்து "பன்னிரண்டாயிரம்" ஆண்டுகள் வழிபட்டு வந்தார். அப்போது அசரீரியாக இறைவன் குடந்தை எனும் கும்பகோணம் செல்லுமாறு அருளினார்.


🌷 அதன்படி கும்பகோணம் அடைந்து கும்பேஸ்வரர் சுவாமியை வழிபட்டு, அங்கும் தனியாக காயாரோகண (குடந்தை காரோணம்) லிங்க பிரதிஷ்டை செய்து "எட்டாயிரம்" ஆண்டுகள் வழிபட்டு வந்தபோதும் இறைவன் காட்சி அளிக்கவில்லை. பின்னர் கண்ணுவ முனிவரின் ஆலோசனைப்படி உடலோடு முத்திபெற சிவராஜதானி என்றழைக்கப்படும் நாகை திருத்தலமே உகந்தது என அங்கு வந்தடைந்தார்.


🌷 அங்கு "தேவ தீர்த்தம்" முதலிய பல தீர்த்தங்களில் நீராடி "ஆதிபுராணர்" (நாகை பெரிய கோயில்) சுவாமியை வழிபட்டு சறுவ தீர்த்தத்தின் தென் மேற்கே குடில் அமைத்து அங்கே காயாரோகண (நாகை காரோணம்) லிங்கம் அமைத்து முறைப்படி கிரியை பூசனைகள் செய்து பல ஆண்டுகள் வழிபட்டு வந்தார். இறைவனும் மனமுவந்து காட்சியளித்து தனது மூன்றாவது காட்சியின்போது ஐக்கியப்படுத்திக் கொள்வதாக அருளினார்.


🌷 புண்டரீக முனிவரும் மகிழ்ந்து தொடர்ந்து இறைவனை, உணவின்றி விரத முறைகளுடன் வழிபட்டு இரண்டாம் காட்சியை பெற்று, மேலும் கடும் தவமியற்றி மூன்றாம் காட்சியில் இறைவனுடன் உடலோடு ஒன்றாக கலந்து பேரின்ப முக்தியடைந்தார். இந்த ஐதீக விழாவானது வருடம்தோறும் ஆனி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் அன்று அர்த்தஜாமத்தில் போது நடைபெறுகிறது.


இறைவன் ஆதிபுராணர் புண்டரீக முனிவரை காயத்தோடு (உடம்போடு) ஆரோகணம் செய்து கொண்டமையால் காயாரோகணேஸ்வரர் என பின்னர் அழைக்கப்பெற்றார். சறுவ தீர்த்தம் "புண்டரீக தீர்த்தம்" என ஆயிற்று. புண்டரீக முனிவர் குடில் அமைத்து வழிபட்ட கோயில் "மேலை காரோணம்" என வழங்கப்படுகிறது.

3 Jul 2021

பஞ்ச குரோச ஆலயங்கள்,  ஏழூர் பல்லக்கு திருவிழா

  

சிவ ராஜதானி என போற்றப்படும் பல சிறப்புகள் பெற்ற "நாகை காரோணம்" திருத்தலத்தில் அமைந்துள்ள பன்னிரு சிவாலயங்கள் தேவர்களாலும் முனிவர்களாலும் தனித் தனியாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது போல, 


நகரைச் சுற்றிலும் பல ஆலயங்கள் இத் தலத்துடன் தொடர்புடையவையாக அமைந்துள்ளன. இவைகள் பஞ்ச குரோச தலங்கள் என வழங்கப்படும். (ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக் கூடிய தூரமாகும்) இந்த எல்லை பரப்பில் ஏழு திருத்தலங்கள் அமைந்துள்ளன அவைகள் 1.பொய்கைநல்லூர் 2.பாப்பாகோயில் 3.சிக்கல் 4.பாலூர் 5.வடகுடி 6.தெத்தி 7.நாகூர் ஆகியனவாகும். 


இத்தலங்களை அரசகேசரி மற்றும் தனதத்தன் ஆகியோர் ஆனிமாத தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபட்டு பாவ வினைகள் நீங்கி எமவாதனை இல்லாது முக்தி பெற்றனர். இந்த ஐதீகதின் படியே வருடம் தோறும் மேலே குறிப்பிட்ட நாளில் பஞ்ச குரோச யாத்திரை நடைபெறும். ஆனி அஷ்டமி அன்று காலை ஶ்ரீ காயாரோகண சுவாமி ஆலயத்திலிருந்து கல்யாண சுந்தரர் பல்லக்கில் எழுந்தருளி ஏழு ஊர்களில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று தீர்த்தம்  கொடுத்தருளி, மறுநாள் காலை ஆலயம் வந்தடைவார். 


இந்த பஞ்ச குரோச ஏழூர் பல்லக்கு திருவிழாவினை அடுத்து நிறைவாக, இந்திரனிடமிருந்து சுந்தர விடங்கரை பெற்று நாகையில் பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பிய  சாலிசுக மகாராஜா முக்தி பெறும் ஐதீக நிகழ்வும் நடைபெறும் என்பது குறிப்பிட தக்கதாகும்.




புராண வரலாறு 


உஜ்ஜையினி மாநகரிலே விண்டுதத்தன் என்னும் ஓர் வைஷ்யன் இருந்தான். அவன் மகன் தனதத்தன் பிறந்தது முதல் கொடு நோயால் அவதியுற்றான். ஜோதிடர்கள் அவன் வயது பதினாறு என்றனர். விண்டுதத்தன் தன் மகனை நோக்கி இவ்வூரில் மாகாளர் கோயிலை அடைந்து மாகாளரை பணிந்து

அங்குவரும் அடியார்களுக்கும், முனிவர்களுக்கும் பணிவிடை செய்யுமாறு அனுப்பினார். 


ஓர்நாள் மாகாளரை வழிபட வாம தேவ மாமுனிவர் வந்தார். வந்த முனிவரை தனதத்தன் பணிந்தார். முனிவர் 100

ஆண்டு வாழ்க என்று ஆசி வழங்கினார். அதை கேட்ட தனதத்தன் ஜோதிடர்கள் எனக்கு பதினாறு வயது

என்றனர். ஆனால் நீர் எனக்கு நூறு வயது என்று வாழ்த்தினர் என்று ஆனந்த முற்று ஆடினான். அதற்கு

முனிவர் 16 வயதில் நீ எமலோகத்தை அடைந்து இறைவனை அருளினால் மீண்டும் உஜ்ஜையினிக்கு வந்து

பின் முக்தி அடையவாய் என கூறி விடைபெற்றார். 


பின்னர் தனதத்தன் 16 வது வயதில் எமதூதர்கள் அவனை எமன் முன் நிறுத்தினர். தனதத்தன் எமனை பார்த்து வாமதேவ முனிவர் எனக்கு 100 ஆண்டுகள் வாழ வாழ்த்தியுள்ளதை சொன்னார். எமன் நடுநடுங்கி

தூதர்களை பார்த்து உடனே தனதத்தனை பூலோகத்தில் விடுமாறு கட்டளையிட்டான். தனதத்தன் எம

உபாதனைகள் அனைத்தையும் எமன் அருளால் பார்த்து இதிலிருந்து மீள்வதற்கு ஏதேனும் உபாயம் உண்டா

என்று கேட்டான். அதற்கு எமன் சிவஞானம் அடைதல், சிவபூஜை செய்தல், சிவனடியாரை பணிதல்

இதனன்றியும் நாகை காரோணத்தை பஞ்சகுரோசத்தை கழ்தல் என்றார். 


பின்னர் எமதூதர்கள் தனதத்தனை

பூவுலகில் விட்டனர். தனதத்தன் தூங்கி எழுந்தவனை போல் எழுந்து எமலோகத்தில் நடந்தவைகளை தாய், தந்தை மற்றும் அந்நாட்டு அரசகேசரிக்கும் கூறினான். 


உஜ்ஜையினி மன்னன் அரசகேசரி தன் பரிவாரங்களுடன் நாகையை அடைந்து சகல சிவாலயங்களையும் தரிசித்து ஆனிமாதம் பூதாஷ்டமி அன்று சுவாமி அம்பாளை பல்லக்கில் வைத்து

அலங்கரித்து பஞ்சகுரோச யாத்திரை புறப்பட்டு விழாக்கள் கண்டு காரோணரை தொழுது முக்தி நிலை பெற்றான். மன்னன் அரசகேசரியை அடுத்து தனதத்தனும் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி தினத்தில் காயாரோகண சுவாமியை வழிப்பட்டு சுற்றியுள்ள பஞ்ச குரோச தலங்களை தரிசித்து முக்தி பெற்றான். இந்த பஞ்ச குரோசத்தில் உள்ள மணல் எல்லாம் சிவலிங்கம் நீரெல்லம் தீர்த்தம் என தலபுராணம் சிறப்பாக விவரிக்கிறது. 


இத்தகைய சிறப்பான தலங்களை தரிசித்து நாமும் பாவ வினைகளில் இருந்து நீங்க எமவாதனை இல்லாது இறைவன் அருள் பெறுவோம்.



நாகை காரோணம் 

பஞ்ச குரோச தலங்கள் 


1.பொய்கைநல்லூர் - ஸ்ரீ நந்திநாதர் திருக்கோயில். 

(வாயில் காவலில் தவறிய நந்தி நாகைக்கு தென்பால் ஆலங்காட்டில் தன் பெயரால் ஒர் லிங்கம் நிறுவி

வழிபாடு செய்து இறைவன் அருளால் தன் தவறை நீக்கிய தலம் ). 


2. பாப்பாகோவில் - ஸ்ரீ கதம்பநாதர் திருக்கோயில்

(கதம்ப முனிவரால் லிங்கம் நிறுவப்பட்டு அவரால் வழிபடப்பட்ட தலம். சூரசம்ஹாரம் முடிந்து முருகப்பெருமான் இந்த கதம்பவன தலத்தில் சத்தி ஆயுதத்தினால் தீர்த்தம் உண்டாக்கி வழிபட்ட பஞ்ச கடம்ப தலங்களில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது )  


3. சிக்கல் - ஸ்ரீ வெண்ணைநாதர் திருக்கோயில். 


நாய் ஊணை உண்ட காமதேனு வெள்பாலை மரத்தின் அடியில் குற்றம் நீங்க பெற்று அந்த ஆனந்தத்தில் தன் மடியில் உள்ள பாலை சுரந்து பால்குளத்தை ஏற்படுத்தியது. வசிஷ்டர் அதில் திரண்ட வெண்ணையை கொண்டு லிங்கம் நிறுவி வெண்ணைநாதர் என்று பெயரிட்டார். அந்த வெண்ணை பாலில் சிக்கி கொண்டதால் அவ்வூருக்கு சிக்கல் என்று வழங்கப்பட்டது. 


4. பாலூர் - ஸ்ரீ இயமநாதர் திருக்கோயில். 


பிரமன் செய்த யாககுண்டத்திலிருந்து வெளிப்பட்ட லிங்கத்தினை, சூரியன் தீர்த்தம் அமைத்து வழிபட்டு இயமனை

புத்திரனாக பெற்ற தலம்.  


5. வடகுடி - ஸ்ரீ திருமேனியழகர் (சுந்தரலிங்க சுவாமி) திருக்கோயில். சந்திரன் தீர்த்தம் அமைத்து வழிபட்ட தலம்



6. தெத்தி - ஶ்ரீ அக்னீஸ்வரர் திருக்கோயில். கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் அன்று அக்னி பகவான் இத்தலத்தில் லிங்கத்தை நிறுவி தீர்த்தம் அமைத்து வழிபட்டு பேறு பெற்றான்.



7.நாககன்னிகாபுரம் (நாகூர்)

சுயம்புவாக தோன்றிய ஈசனை வாசுகி என்ற நாக கன்னிகை வழிபாடு செய்து நான்கு புத்திரிகைளை

பெற்ற தலம். இக்கோயிலை சாலிசுக மகாராஜா கட்டினார்.