31 Mar 2021

சேத்திர கோவை & விண்ணப்பக் கலிவெண்பா

 ஸ்ரீ சுப்பிரமணியக் கடவுள் சேத்திரக் கோவை பிள்ளைத்தமிழ் || வாரானைப் பருவம் 


தாணுமா லயனுடன் மயேசுரர் சதாசிவர்

          சச்சிதா னந்தசாந்தர்

தந்தநவ சத்தியருள் போகாங்க மூர்த்திகள்

          தருமட்ட வித்தியேசுரர்

பேணுமெழு கோடிமா மந்திரே சுரரைந்து

          பேதமா மாகேசுரர்

பேதமொன் றில்லாத நந்திமா காளர்சொல்

          பிருங்கியுட னைங்கரத்தோன்

பூணிடபர் நீள்கௌரி தண்டியெண் டிசைநாதர்

          போற்றுந்த சாயுதங்கள்

பூமண்ட லத்திலுள தெய்வங்கள் வேதங்கள்

          புகழ்கொண்ட தேவர்முனிவர்

காணவரு சிவராச தானியெனு நாகைவரு

          கந்தசுவா மிவருகவே

கைகண்ட அடியர்பணி மெய்கண்ட வேலவன்

          கருணையங் கடல்வருகவே.  


- காஞ்சி சிதம்பர முனிவர் 


    தாணு - உருத்திரன். அட்டவித்தியேசுரர் - அனந்தர், சூக்குமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகவுருத்திரர், திரிமூர்த்தி, சீகண்டர், சீகண்டி என்னும் எண்மர். இவர் அதிகா ரமலம் ஒன்றே உடையவர்.


------------------------------------------------------------------------------

தூத்தகைய பாகைக்கார் என்னும் பணிமொழியார் வாழ்த்தோவா

நாகைக்கா ரோணம் நயந்தோனே – 


பொருள்

காய்ச்சிய பாகு கசப்பு என்று சொல்லும்படியான, தூய அழகிய, பணிவான சொற்களைப் பேசும்

மங்கையர்  வாழ்த்தும் ஒலி எப்போதும் ஒலிக்கும் திருநாகைக்காரோணத்து சிவபெருமானே

உம்மை வணங்குகிறேன். 


திருவருட்பிரகாசவள்ளலார் – விண்ணப்பக்கலிவெண்பா

29 Mar 2021

கணபதி தாசர் நெஞ்சறி விளக்கம்

 நாகை நாகநாதர் மீது கணபதிதாசர் சித்தரின் நெஞ்சறி விளக்கம் பாடல்


விநாயகர் காப்பு


வஞ்சக மனத்தி னாசை மாற்றிய பெரியோர் தாளில்

கஞ்சமா மலரிட் டோதுங் கணபதி தாசன் அன்பால்

நெஞ்சறி விளக்க ஞான நீதிநூல் நூறும் பாடக்

குஞ்சர முகத்து மூலக் குருபரன் காப்பதாமே.


நூல்


1. பூமியிற் சவுந்த ரப்பெண் புணர்ந்திடு நாகை நாதர்

நாமமெந் நாளும் நாவி னவின்றுசெந் தமிழாற் பாடிக்

காமமு மாசா பாசக் கன்மமு மகற்றி மூல

ஓமெனு மெழுத்தைந் தாலே யுனையறிந் துணர்வாய் நெஞ்சே!


2. தந்தைதாய் நிசமு மல்ல: சனங்களு நிசமு மல்ல

மைந்தரும் நிசமு மல்ல மனைவியும் நிசமு மல்ல;

இந்தமெய் நிசமு மல்ல; இல்லறம் நிசமு மல்ல;

சுந்தர நாகை நாதர் துணையடி நிசம்பார் நெஞ்சே!


3. காண்பது மழிந்து போகும்; காயமு மழிந்து போகும்;

ஊண்பொருள் அழிந்து போகும்; உலகமும் அழிந்து போகும்;

பூண்பணி நாகை நாதர் பொற்பதம் அழியா தென்று

வீண்பொழு தினைப்போக் காமல் வெளிதனில் ஒளிபார் நெஞ்சே!


4. மனமெனும் பேயி னாலே மாய்கையாம் இருடான் மூடச்

சனமெனும் ஆசா பாசந் தலைமிசை ஏற்றிக் கொண்டு

கனமெனுஞ் சுமையைத் தூக்கிக் கவலையுற் றிட்டாய் நீயுற்

பனமெனும் நாகை நாதர் பதம்பணிந் தருள்சேர் நெஞ்சே!


5. இருவினைப் பகுதி யாலே எடுத்திந்தத் தேகந் தன்னை

மருவிய நானான் என்று மாயையில் அழிந்தாய் நீதான்;

குருவினாற் குறியைப் பார்த்துக் குண்டலி வழியே சென்றங்கு

உருவினால்நாகை நாதர் உண்மையை உணர்வாய் நெஞ்சே!


6. வானதில் இரவியுன்றன் வயதெலாங் கொடுபோ கின்றான்;

தானதை யறிந்தி டாமல் தரணியி லிருப்போ மென்றே

ஊனமாம் உடலை நம்பி உண்மைகெட் டலைந்தாய் நீமெய்ஞ்

ஞானமே பொருளாய் நாகை நாதரைத் தொழுவாய் நெஞ்சே!


7. எட்டுடன் இரண்டு மாகி இருந்ததோர் எழுத்தைக் காணார்;

விட்டதோர் குறியுங் காணார்; விதியின்றன் விவரங் காணார்!

தொட்டதோர் குறியுங் காணார்: சோதிமெய்ப் பொருளுங் காணார்:

கிட்டுமோ நாகை நாதர் கிருபைதா னுரைப்பாய் நெஞ்சே!


8. வஞ்சக நடைம ரத்தில் வளர்வினைக் கொம்பி லேறிச்

சஞ்சல மனக்கு ரங்கு தாவியே அலைய நீதான்

பஞ்சபா தகங்கள் செய்து பாம்பின் வாய்த் தேரை யானாய்;

நஞ்சமு தருந்து நாகை நாதரை வணங்கு நெஞ்சே!


9. உடலினை நிசமென் றெண்ணி உலகெலாம் ஓடி யாடிக்

கடல்மரக் கலப்பாய்க் கம்பக் காகம் போற் கலக்க முற்றாய்;

திடமருள் குருவின் பாதஞ் சிக்கெனப் பிடித்து நின்றால்

நடமிடு நாகை நாதர் நற்பதம் பணிவாய் நெஞ்சே!


10. வீட்டிருள் போக வென்றே விளக்கினை ஏற்றி வைத்தால்

வீட்டிருள் எங்கே போச்சு? விளக்கொளி எங்கே போச்சு?

கூட்டினில் நடஞ்செய் ஈசன் குறிப்பறி யாமல் நீதான்

நாட்டினில் அலைந்தாய் நாகை நாதரை வணங்கு நெஞ்சே!


11. காட்டினில் மேவு கின்ற கனபுழு வெல்லாம் பார்த்து

வேட்டுவ னெடுத்து வந்து விரும்பியக் கிருமி தன்னைக்

கூட்டிலே அடைத்தும் அந்தக் குளவிதன் உருவாய்ச் செய்யும்

நாட்டினில் நீதா னாகை நாதரை வணங்கு நெஞ்சே!


12 குளத்திலே கிடக்கும் ஆமை குளக்கரை முட்டை யிட்டுக்

குளத்துநீர்க் குள்ளிருந்து குறிப்புடன் நினைக்கும் போது

குளத்திலே புதைத்த முட்டை கருவுரு வானாற் போலுன்

உளத்திலே நாகை நாதர் உருவறிந் துணர்வாய் நெஞ்சே!


13. மருவிய சிலந்திப் பூச்சி வயிற்றினிலே நூலுண் டாக்கி

உருவுடன் கூடு கட்டி உகந்ததி லிருக்கு மாபோல்

குருபர னுனது கூட்டில் குடியிருப் பதனைப் பார்த்து

பெருவெளி நாகை நாதர் பெருமைகண் டருள்சேர் நெஞ்சே!


14. வாரணம் முட்டையிட்டு வயிற்றில்வைத் தனைத்துக் கொண்டு

பூரணக் கூடுண் டாக்கிப் பொரித்திடுங் குஞ்சு போலக்

காரணக் குருவை மூலக் கனல்விளக் கதனாற் கண்டு

நாரணன் அறியா நாகை நாதரைப் பணிவாய் நெஞ்சே!


15. புல்லினுள் இருக்கும்பூச்சி பொருந்தவெண் ணுரையுண் டாக்கி

மெல்லிய தண்ணீர் வீட்டில் வெயிற்படா திருக்கு மாபோல்

சொல்லிலே நாகை நாதர் தோய்ந்திடச் சூட்சங் கண்டாற்

கல்லிலே தெய்வ மில்லைக் கருத்திலே தெய்வம் நெஞ்சே!


16. தண்ணீரி லிருக்கும் மீன்கள் தண்ணீரிற் கருவைப் பித்திக்

கண்ணினாற் பார்க்கும் போது கயலுறு வானாற் போல

நண்ணிய குருவைக் கண்டு நாதனல் லுருவைச் சேர்த்து

விண்ணின்மேல் நாகை நாதர் மெல்லடி வெளிபார் நெஞ்சே!


17. இலகிய ஊசிக் காந்தம் இரும்பினை இழுப்பதேபோல்

உலவிய குருப ரன்றாள் உன்னையாட கொண்ட தன்மை

நலமுடன் அறிந்த நீதான் நாயனை யறிந்தி டாமல்

நிலமிசை யலைந்தாய் நாத லிங்கரை நினைப்பாய் நெஞ்சே!


18. சூரிய காந்தம் பஞ்சைச் சுட்டிடுஞ் சுடரே போலக்

கூரிய அடிமூ லத்தின் குண்டலிக் கனலை மூட்டி

வீரிய விருந்து ணாத வெளிவீடு தன்னிற் சென்றே

ஆரிய நாகை நாதர் அடியினை தொழுவாய் நெஞ்சே!


19. ஐவகைப் பூதந் தொண்ணூற்றாறுதத் துவங்க ளாட்டும்

தெய்வமுன் னிடத்தி ருக்கத் தேசத்தில் அலைந்தாய் நீதான்;

பொய்வசத் தேக பந்தம் போக்கிமெய்ப் பொருளை நோக்கி

ஐவரோ ரிடத்திற் கூடும் ஆனந்தம் அறிவாய் நெஞ்சே!


20. ஊனமாம் உடலம் பொய்யென் றுணர்ந்துமெய் யறிவைக் கண்டு

தானவ னான போதே சற்குரு பதத்தைச் சேர்ந்தாய்.

வானதி லிரவி திங்கள் வந்துபோ வதனைக் கண்டால்

ஞானவான் நாகை நாதர் நடனமுங் காண்பாய் நெஞ்சே!


21. கிட்டுமோ ஞான யோகம்? கிடைக்குமோ குருவின் பாதம்?

கட்டுமோ மூல வாசி? காணுமோ கயிலை வீடு?

எட்டுமோ நாக லிங்கம்? ஏற்றுமோ தீப சோதி?

தட்டுமோ பளிங்கு மேடை தனையறியார்க்கு நெஞ்சே!


22. ஒருபதந் தன்னைக் தூக்கி ஒருபுதற் தன்னை மாற்றி

இருபதம் ஆடு கின்ற இயல்பைநீ அறிந்தா யானால்

குருபத மென்று கூறுங் குறிப்புனக் குள்ளே யாச்சு

வருபத நாகை நாதர் மலரடி காண்பாய் நெஞ்சே!


23. நாடென்றும் நகர மென்றும் நலந்திகழ் வாழ்வ தென்றும்

வீடென்றும் மனையா ளென்றும் மிக்கதோர் மைந்தர் என்றும்

மாடென்றுஞ் சம்பத் தென்றும் வாஞ்சை கொண்டலைந்தாய் இந்தக்

கூடொன்றும் அழிந்தாற் கூடத் தொடருமோ கூறு நெஞ்சே!


24. ஏட்டிலே எழுதும் நூல்கள் எத்தனை படித்தும் நீதான்

காட்டிலே எறித்த திங்கள் கானலிற் சலம்போ லானாய்;

நாட்டிலே தெய்வமென்று நடந்தலை யாம லுன்றன்

கூட்டினில் நாகை நாதர் குறிப்பறிந் துணர்வாய் நெஞ்சே!


25. நற்பிடி சோறு வைத்தால் நாயனென் றறிந்து கொண்டு

சொற்படி பின்னே ஓடுஞ் சுணங்கன் போற்குணமு ண்டாகி

விற்பிடித் தடிக்கப் பெற்ற விமலனார் கமல பாதம்

பிற்பிடி பிடித்து நாகை நாதரைக் காண்பாய் நெஞ்சே!


26. விரகநா யகனைத் தேடி விரும்பிய மங்கை போலக்

குரவனா ருபதே சத்தைக் குறிப்புடன் நிதமுந் தேடி

இரவுடன் பகலு மான இருபத நடனங் கண்டால்

சிரமதில் நாகை நாதர் சிலம்பொலி கேட்கும் நெஞ்சே!


27. வாரணன் அயன்மால் ருத்ரன் மகேசுரன் சதாசி வன்றன்

காரண மாறு வீட்டிற் கலந்தவ ரிருக்கும் அப்பால்

பூரண நிராதா ரத்தின் புதுமையுங் கண்டு போற்றி

ஆரண நாகை நாதர் அடியிணை தொழுவாய் நெஞ்சே!


28. மோரிலே நீரை விட்டால் முறிந்திடுங் கொள்கை போலக்

காரிய குருவை விட்டுக் காரண குருவைக் கண்டு

சீரிய சாலு நீர்போற் சேர்ந்திரு வருமொன்றாகி

ஆரிய நாகை நாதர் அடிபணிந் தேத்து நெஞ்சே!


29. நித்திரை வந்தபோது நினைவுதானிருந்த தெங்கே?

புத்திரர் தாமுமெங்கே? புணர்ந்திடும் மனைவி எங்கே?

பத்திர பூசை எங்கே? பல தொழில் செய்வதெங்கே?

சிற்பர நாகை நாதர் செயலினை அறிவாய் நெஞ்சே!


30. வேடத்தைத் தரித்தாலென்ன? வெண்பொடி யணிந்தா லென்ன?

நாடொத்து வாழ்ந்தாலென்ன? நதிதலங் கண்டா லென்ன?

தேடொத்த நாகை நாதர் சீரடி சிந்தை தேர்ந்தெ

ஓடைத்தா மரையின் பூப்போல் உயுர்வர்நற் பெரியோர் நெஞ்சே!


31. தள்ளிடு சுணங்கன் போலச் சாத்திரம் படித்தா லென்ன?

வெள்ளிய துகிலைத் தாவி வேட்டியாய்த் தரித்தா லென்ன?

உள்ளிருந் தாட்ட விக்கும் ஒருவனை உருகித் தேடித்

தெள்ளியல் நாகை நாதர் செயல் காணார் மாந்தர் நெஞ்சே!


32. பளிங்குற்ற குளத்து நீரைப் பாசிதான் மறைத்தாற் போலக்

களங்கற்ற புத்தி தன்னைக் காமந்தான் மூடிக்கொண்டு

விளங்கத்தான் செய்வதில்லை மெய்யறி விளக்கை யேற்றி

முழங்கத்தான் நாகை நாதர் முழுமொழி பகர்வாய் நெஞ்சே!


33. மண்ணதை எடுத்து நீரால் வகையுடன் பிசைந்து பாண்டம்

பண்ணியே கனலாற் கட்டுப் பாதையென் பதுதான் விட்டே

அண்ணலார் வாய்வா காச மடைந் தஐம் பூதக் கூட்டை

விண்ணமால் நாகை நாதர் விளையாட்டென்றறிவாய் நெஞ்சே!


34. கண்ணாடி தன்னிற் றோற்றுங் காரண உருவம் போல

உண்ணாடி மூலா தாரத் துதித்தசற் குருவைக் கண்டு

விண்ணாடி வெளியைப் பார்த்து விளக்கொளி மகிமை சேர்ந்தால்

மண்ணாடு நாகை நாதர் வந்துனை ஆள்வார் நெஞ்சே!


35. உருவமும் நிழலும் போல உகந்து பின்றொடரும் நாயன்

பருவங்கண் டறிந்தி டாமற் பருந்தின் காற் பட்சி யானாய்.

பருவனை நடுவ ணைக்குட் பொருந்திய நடனங் கண்டால்

குருபர நாகை நாதர் கூப்பிட வருவார் நெஞ்சே!


36. கணக்கிலா எழுவ கைக்குட் கலந்துரு எடுத்த இந்நாள்

பிணக்கிலா நரசென் மந்தான் பிறப்பதே அரிதென் றெண்ணிக்

குணக்கிலாக் குணமுண்டாகிக் கோதிலா ஞானம் போற்றி

இணக்கிலா நாகை நாதர் இணையடி சேர்வாய் நெஞ்சே!


37. அரியதோர் நரசென் மந்தான் அவனியிற் பிறந்து பின்னாள்

பெரியபே ரின்ப ஞானம் பெறுவதே யரிதென் றெண்ணி

உரியவே தாந்தத் தன்மை உரைக்குமா சானைப் போற்றித்

தெரியொணா நாகை நாதர் சீர்ப்பதந் தேடு நெஞ்சே!


38. பசும்பொனின் நாம மொன்றிற் பணிதிவே றானாற் போலே

விசும்பெலாங் கலந்த சோதி வெவ்வேறு தெய்வமாகி

உசும்புசீ வாத்து மாக்கள் உடல்பல வான தன்மை

கசிந்துகண் டுருகி நாகை லிங்கரைக் காண்பாய் நெஞ்சே!


39. விண்டவர் கண்டதில்லை விட்டதோர் குறைமெய்ஞ் ஞானம்

கண்டவர் விண்டதில்லை; ககனவம் பலத்தின் காட்சி

அண்டர்கோ டஞ்சை யீசன் அடியிணை வாசி யுச்சி

மண்டல நாகை நாதர் வாழ்பதி வழிபார் நெஞ்சே!


40. காதுடன் நாக்கு மூக்குக் கண்ணுயிர் சிரங்க ருத்து

மாதுட னீச னாடு மலர்ப்பதம் அறிந்தி டாமல்

வாதுசொற் றர்க்க நூல்கள் வகைபல படித்தா லென்ன?

சாதுவாய் நாகை நாதர் தாள்கண்டு தனைப்பார் நெஞ்சே!


41. தீபத்தை மலரென் றெண்ணிச் சென்றிடு விட்டில் போலக்

கோபத்தின் கனலில் வீழ்ந்து கொடியதோர் பிறவி பெற்றாய்;

ஆபத்து வந்தா லுன்னோ டியாவர் தாம் வருவார்? அந்தக்

கோபத்தை மறந்து நாகை லிங்கரைத் தொழுவாய் நெஞ்சே!


42. மின்மினிப் பூச்சி தன்னுள் மெய்யொளி கண்டாற் போல

உன்மன மொடுங்கி யேயுன் உள்ளொளி கண்டாற் பின்னைச்

சென்மமு மில்லை; அந்தச் சிவத்துளே சேர்வாய்; நாளும்

பொன்மகள் புகழும் நாகை நாதரைப் போற்று நெஞ்சே!


43. செம்பினிற் களிம்பு போலச் சீவனுஞ் சடமுங் கூடி

நம்பின உடலைக் கண்டு நல்லுயிர் வடிவங் காணாய்!

வெம்பிய காம மாயை விட்டுமெய்ப் பொருளைத் தேடிக்

கும்பிய நாகை நாதர் கூத்தாடல் காண்பாய் நெஞ்சே!


44.இலவுகாத் திருந்த பட்சி ஏங்கியே பறக்கு மாபோல்

உலகமே பொருளாய் நம்பி ஒருபலன் அற்றாய் நீதான்;

தலைமையாங் குருவைப் போற்றித் தாளிணை வாசி கண்டால்

நிலைமையாம் நாகை நின்னிடை நிற்பார் நெஞ்சே!


45. ஆத்தும லிங்கங் கண்டுள் அன் பெனும் மலரை நன்றாய்ச்

சார்த்தியே பிரண வத்தாற் றனிப்பெரு வட்டஞ் சூட்டிப்

போற்றியே தீப மூலப் புரிசுடர் விளக்கும் பார்த்துப்

போற்றியே நாகை நாதர் பொன்னடி பூசி நெஞ்சே!


46. சுக்கில விந்து தானுஞ் சுரோணிதக் கருவிற் கூடிப்

பக்குவக் குழவி யாகிப் பையுளே அடைந்த பாவை

அக்குவை யதனை விட்டிங் கவனியிற் பிறந்த சூட்சம்

அக்கினி நாகை நாதர் அமைத்ததென் றறிவாய் நெஞ்சே!


47. நீக்கமில் லாமலெங்கும் நிறைந்ததோர் வெளியை யுன்னுள்

தாக்கியே அறிவி னாலே தனைமறந் திருந்து பார்வை

நோக்கியே நிட்டை கூடி நொடியரை நிமிடம் வாங்கித்

தூக்கியே நாத நாகை நாதரைத் தொழுவாய் நெஞ்சே!


48. கடலென விளங்கும் வேத காரணக் குருவைக் கண்டுன்

உடல்பொருள் ஆவி மூன்றும் உகந்தவர்க் குதவி நீதான்

திடமுடன் பூர்த்தி யாகிச் செந்தூசிற் பரத்திற் சேர்ந்து

நடமிடும் வாசி நாகை நாதரை நாடு நெஞ்சே!


49. நாசியி னுனியின் மீது நடனமே செய்யுந் தேசி

வாசிவா வென்றே யன்னுள் வாங்கியே மௌன முற்றுக்

காசிமா நதியுந் தில்லைக் கனகவம் பலமுங் கண்டு

பூசித்து நாகை நாதர் பொன்னடி வணங்கு நெஞ்சே!


50. தாவுநல் லுதய காலந் தபனன்தே ரெழும்பக் கண்டு

கூவுமாக் குக்கு டங்கள் கூப்பிடு காட்டிற் சம்பு

மேவியே நீயும் அந்த மெய்யறி வறிந்தா யானால்

மூவர்கோ னாகை நாதர் முன்வந்து நிற்பர் நெஞ்சே!


51. வஞ்சியர் மீதில் ஆசை வைத்திந்த வைய மீதில்

சங்கையில் லாத துன்பச் சாகரந் தனிலே வீழ்ந்தாய்;

நங்கைமேல் வைத்த பாசம் நாயன்மேல் வைத்து நீயும்

செங்கையால் நாகை நாதர் சீர்பதந் தொழுவாய் நெஞ்சே!


52. அன்றிலும் பேடும் போல அடிமையுங் குருவுங் கூடிக்

கொண்டிருந்த தடிமூ லத்திற் குதித்தெழு வாசி யாடக்

கண்டிமை யாத நாட்டக் கருணையால் வெளியி லேறிப்

பண்டித நாகை நாத லிங்கரைப் பணிவாய் நெஞ்சே!


53. குலங்கெட்டுப் பாசங் கெட்டுக் கோத்திர பேதங் கெட்டு

மலங்கெட்டுக் கோபங் கெட்டு மங்கையர் ஆசை கெட்டுத்

தலங்கெட்டுத் தானும் கெட்டுத் தனக்குளே வெறும்பா ழாகிப்

பலங்கெட்டு நாகை நாதர் பதங்கொள்வார் பெரியோர் நெஞ்சே!


54. ஓமெனும் பிரண வத்துள் உதித்தவைந் தெழுத்து மாகி

ஆமெனும் அகார பீடத் தமர்ந்திடு வாசி கண்டே

ஊமெனு மௌன முற்றே யூறிடு மதிப்பா லுண்டு

தாமெனும் நாகை நாதர் தாண்டவம் பார்ப்பாய் நெஞ்சே!


55. அலைதனிற் றுரும்பு போலும் ஆலைவாய்க் கரும்பு போலும்

வலைதனில் மானைப் போலும் மயங்கிநைந் தலைந்தாய் நீதான்;

உலைதனில் மெழுகைப் போலும் உருகி மெய்ப் பொருளை யுன்னி

நிலைதனி னின்று நாகை லிங்கரைக் காண்பாய் நெஞ்சே!


56. பொறிவழி யலைந்து மீளும் புலன்களை அடக்கி ஞான

அறிவெனும் விழியினாலே அம்பர வெளியைப் பார்த்தே

உறிதனி லிருக்குங் கள்ளை உண்டுதற் போதம் விட்டு

நெறிதரு நாகை நாதர் நிலைமைகண் டறிவாய் நெஞ்சே!


57. ஆயாத நூல்க ளெல்லாம் ஆய்ந்துநீ பார்த்துங் காமத்

தீயான குழியில் வீழ்ந்து சென்னமுற் றலைந்தா யுன்னின்

காயாத பாலை யுண்டு கனகவம் பலத்தைக் கண்டு

மாயாமா நாகை நாதர் மலரடி வணங்கு நெஞ்சே!


58. ஆதார மாறுந் தாண்டி ஐம்பூத வடிவுந் தாண்டி

மீதான வெளியுந் தாண்டி விளங்கிய பரன்றன் கூத்தை

நீதானும் அறிந்து கொண்டு நின்மல வடிவ மாகி

வேதாந்த நாகை நாதர் மெல்லடி வெளிபார் நெஞ்சே


59. பார்த்திடும் திசைக ளெங்கும் பராபர வெளிதான் கூடிக்

கோத்திடும் வடிவை ஞானக் குருவினா லறிந்து கொண்டு

பேர்த்திடு மிமையா நாட்டத் திருந்துபே ரின்ப வெள்ளம்

வார்த்திட மூழ்கி நாகை லிங்கரை வணங்கு நெஞ்சே!


60. சச்சிதா னந்த மான சற்குரு பதத்தைப் போற்றிக்

கச்சிமா நகர மூலக் கனல்விளக் கதனை யேற்றி

உச்சிமேல் வைத்துப் பார்வை யுணர்வினால் வெளியி லுன்னித்

தச்சிலா வீட்டில் நாகை லிங்கரைத் தழுவு நெஞ்சே!


61. மாரின்ப முலையா ளோடு மன்றிலே நடஞ்செய் வோனைப்

பேரின்ப வீட்டைக் கண்டு பிரணவ விளக்கை யேற்றிச்

சேரின்ப வெளியில் வாசித் திருவிளையாடல் பார்த்தால்

ஓரின்ப நாகை நாதர்க் குகந்துவந் துரைப்பார் நெஞ்சே!


62. நாயனை யறிந்தி டாமல் நானென்னும் ஆண்மை யாலே

ஆயனில் லாத் காலி யாகி நீ யலைய லுற்றாய்:

காயமே கோயி லாகக் கலந்திருந் தவனைக் கண்டு

மாயொணா வாழ்க்கை நாகை நாதரை வணங்கு நெஞ்சே!


63. உருப்படுங் கல்லுஞ் செம்பும் உண்மையாய்த் தெய்வ மென்றே

மருப்புனை மலரைச் சூட்டி மணியாட்டித் தூபங் காட்டி

விருப்பமுற் றலைந்தாய் அந்த வினைமயல் விட்டு நின்னுள்

இருப்பவர் நாகை நாதர் இணையடி பூசி நெஞ்சே!


64. உனைவிட வேறே தெய்வம் உண்டென உலகிற் றேடும்

நினைவதே தெய்வமாகி நீகண்டு நின்றா யானால்

சென்னமாம் பிறவி போகும் சிவத்துளே சேர்க்கு மெங்கோன்:

மனமகிழ் வாசி நாகை நாதர் தாள் வணங்கு நெஞ்சே!


65. ஆசையாம் பாச மாயை அறிவதை மயக்கி யுன்னுள்

ஈசனைத் தேடொட் டாம லிருக்குமவ் விருளைப் போக்கிக்

கோசமா குறியை நோக்கிக் குருபரன் வடிவைக் கண்டு

வாசமா மலரால் நாகை நாதரை வணங்கு நெஞ்சே!


66. கன்றதைத் தேடுங் காறுங் காலியைப் போலே யுன்னுள்

நின்றபே ரொளியைக் கண்டு நினைவெனு மறிவாற் றெய்வம்

ஒன்றெனக் கண்டா யானால் உமையவ ளுடனே தில்லை

மன்றினுள் ஆடும் நாகை நாதர்முன் வருவாய் நெஞ்சே!


67. மடைவாயிற் பட்சி போலே மனந்தனை யடக்கி வாதி

விடையேறு மீசன் பாதம் விரும்பிய பெரியோர் பின்னே

தடையறத் திருந்து ஞான சாதகம் பெற்று நீதான்

புடைசூழ நாகை நாதர் பொன்னடி போற்று நெஞ்சே!


68. சிரமெனுங் குகையி னுள்ளே சிவகயி லாய மன்றில்

அரனிட மமையும் வாசி யாடல்தான் செய்வா ரென்று

பரமமெய்ஞ் ஞான நூல்கள் பகர்வதை யறிந்து பார்த்து

வரமிகு நாகை நாதர் மலரடி வணங்கு நெஞ்சே!


69. கடமதில் நிறைந்து நின்ற கனவொளி போலே யுன்றன்

செடமதில் நிறைந்து நின்ற சீவனை யறிவாற் கண்டு

திடமிகு சீவ சாட்சி தரிசிக்கச் சீவன் முத்தி

இடமரு நாகை நாத ரிணையடி யுணர்வாய் நெஞ்சே!


70. மெய்யருள் விளங்குட் சோதி வெளிதனை அறிவா லுன்னி

ஐயமில் லாமற் காண்போ ரவரின்ப முத்த ரென்று

துய்யமெய்ஞ் ஞான நூல்கள் சொல்வதாற் பரத்தை நோக்கிச்

செய்யதாள் வாசி நாகை லிங்கரைத் தெரிசி நெஞ்சே!


71. முந்தின பிறப்பு வந்த முதன்மையும் அறியாய் இப்பால்

பிந்தின பிறப்பு வந்த பெருமையும் அறியாய் நீதான்:

அந்தரப் பட்சி போல அலைகின்றாய்: அகத்து ளேமுச்

சந்தியை அறிந்து நாகை நாதரைச் சார்வாய் நெஞ்சே!


72. காகத்தின் கண்ணி ரண்டிற் காண்பதுங் கண்ணொன்றே போல்

தேகத்தின் அறிவின் கண்ணைத் திடமுடன் அறிந்து கொண்டு

மோகத்தின் கனலில் வீழா முனைசுழி வாசி பார்த்தால்

ஏகத்தால் நாகை நாத ரிணையடி சார்வாய் நெஞ்சே!


73. ஓட்டிலே பட்ட பட்சி உழல்கின்ற நெறிபோ லாசைக்

கட்டிலே மயங்கி மாறாக் கவலையுற் றலைந்தாய் நீதான்;

நெட்டிலே யோடு வாசி நிலைமையாய் நிறுத்தி மேரு

வட்டிலே நாகை நாதர் வாழ்பதி அறிவாய் நெஞ்சே!


74. ஆனைவாய்க் கரும்பு போலும் அரவின்வாய்த் தேரை போலும்

பூனைவா யெலியைப் போலும் புவியில்நைந் தலைந்தாய் ஞானத்

தேனைவாய் அருந்தி முத்தி சோந்திடச் சிவத்தை நோக்கி

ஊனுளே நாகை நாதர் உற்றிட மறவாய் நெஞ்சே!


75. மித்திர குருக்கள் சொல்லை மெய்யென்று கல்லை வைத்துப்

பத்திர புட்பஞ் சார்த்திப் பணிந்திடும் பாவை நீதான்

சித்திரப் பதுமை போலுஞ் செய்தொழி லொடுங்கி நின்று

புத்தியாய் நாகை நாதர் பொன்னடி போற்று நெஞ்சே!


76. உப்போடு புளிப்புங் கைப்பும் உணர்வினால் அறிந்து நீதான்

எப்போது முனக்குள் நாயன் இருப்பிடம் அறியா தென்னே?

முப்போதுங் குருவைப் போற்றி முனைசுழி வாசி பார்த்தால்

அப்போது நாகை நாதர் அடியிணை அறிவாய் நெஞ்சே!


77. படிக்கவும் நாவி ருக்கப் பணியவுஞ் சிரமி ருக்கப்

பிடிக்கவுங் கரமி ருக்கப் பேணவுங் குருவி ருக்க

நடிக்கவுந் தாளி ருக்க நாடவுங் கண்ணி ருக்க

இடுக்கமுற் றலைந்தாய் நாகை நாதரை இறைஞ்சு நெஞ்சே!


78. அருவுரு வில்லா நாயன் அணுவினுக் கணுவாய் நின்றும்

மருவுபல் லுயிர் கட் கெல்லாம் வடிறுவே றான தன்மை

ஒருவரும் அறியார் நல்லோர் உறுதியா லறிவார்; ஞான

குருபர நாகை நாதர் குறுப்பறிந் துணர்வாய் நெஞ்சே!


79. ஆண்டொறு நூறு கற்பம் ஓளடத மூலியுண்டு

நீண்டதோர் காய சித்தி நெடுநாளைக் கிருந்த பேரும்

மாண்டுதான் போவா ரல்லால் வையகத் திருப்பா ருண்டோ!

தீண்டொணா நாகை நாதர் சீர்ப்பதந் தேடு நெஞ்சே!


80. பொருடனைத் தேடிப் பாரிற் புதைக்கின்ற புத்தி போன்மெய்

அருடனை நிதமுந் தேடி அரனடியதனில் வைத்தால்

இருடனை அகற்றுஞ் சோதி எம்பிரான் முன்னே வந்துன்

மருடனை மாற்றும் நாகை நாதரை வணங்கும் நெஞ்சே!


81. ஆண்டியின் வேடந்தானும் அறிவுடன் எடுத்தி டாமல்

தூண்டிலில் மீனைப் போலத் துள்ளிவீழ்ந் தலைந்தாய் நீதான்

வேண்டிய போது நாயன் மெல்லடி வெளித்தாய்த் தோன்றும்

தாண்டிய வாசி நாகை நாதரைத் தழுவாய் நெஞ்சே!


82. சேற்றிலே நுழைந்தி ருந்த சிறுபிள்ளைப் பூச்சிபோலும்

நீற்றிலே நுழைந்தி ருந்த நேர்மையாம் அழற்சி போலும்

மாற்றுபே ருலகில் நல்லோர் மருவிரி மருவார் சித்தத்

தேற்றியே நாகை நாதர் இணையடி வைப்பாய் நெஞ்சே!


83. நாடகப் பெண்ணை ஆட்டும் நட்டுவன் போலே யுன்றன்

கூடகச் சடத்தை யாட்டுங் குருவைநீ அறிந்தி டாமல்

மூடக மானாய் ஞான முதல்வனை அறிவால் தேடி

ஆடக நாகை நாதர் அடியிணைப் பணிவாய் நெஞ்சே!


84. சத்தியுஞ் சிவமு மாகித் தாண்டவ மாடும் வாசி

சுத்திய மூல நாடிச் சுழுமுனைக் கம்பத்துள்ளே

புத்தியைச் செலுத்தி மேலாம் பொருடனை யெடுக்க வல்லார்

பத்திசெய் நாகை நாதர் பதிதனைப் பார்ப்பாய் நெஞ்சே!


85. நாட்டமாம் அறிவின் கண்ணால் நாயனைப் பருகிப் பார்த்துத்

தேட்டமாங் கருணை பெற்ற சிவனடி யார்கள் தங்கள்

கூட்டமாம் பரத்திற் சென்று குருபணி விடையுஞ் செய்கொண்

டாட்டமா நாகை நாதர் அருள்தர வருவார் நெஞ்சே!


86. காலனை உதைத்த நாயன் காலெனும் வாசி தாளை

மூலநன் மனையிற் கண்டு முப்பதி முப்பாழ் தாண்டிப்

பாலமு தருந்த மேலாம் பராபரை பாதம் போற்றி

மாலயன் அறியா நாகை நாதரை வணங்கு நெஞ்சே!


87. கடுமையாம் பகட்டி லேறிக் கயிற்றொடு சூலமேந்திக்

கொடுமையாங் காலன் வந்து கொண்டுபோம் முன்னே நீதான்

அடிமையா நாதன் பாதம் அனுதினம் மறவா தேத்தில்

நெடுமையா நாகை நாதர் நிலைமைகண்டறிவாய் நெஞ்சே!


88. அரகரா சிவசி வாவென் றனுதினம் மறவா தேத்திச்

சிரகயி லாய வீட்டிற் சிவனைநீ யறிந்து தேடில்

மரகத வல்லி பங்கன் வந்துமுன் காட்சி நல்கிப்

பரகதி கொடுக்கும் நாகை நாதரைப் பணிவாய் நெஞ்சே!


89. நடக்கிலும் வாசி பாரு: நாட்டமும் வாசி பாரு:

முடக்கிலும் வாசி பாரு: முனிசுழி வாசி பாரு:

மடக்கிலும் வாசி பாரு: மறிவிலும் வாசி பாரு:

திடக்குரு நாகை நாதர் திருநடஞ் செய்வாய் நெஞ்சே!


90. போனநாள் வீணாய்ப் போனாற் புதியநாள் கெடவி டாமல்

ஞானநாள் இதுதா னென்று நாடெங்கும் குருவைப் போற்றி

வானநா ளத்திற் சென்னி வழிகண்டு மதிப்பா லூறும்

தேனைநன் கருந்தி நாகை லிங்கரைக் தெரிசி நெஞ்சே!


91. பராதல மெல்லாந் தானாயத் தாவர சங்க மங்கள்

நிராமய மாகக் கோத்து நின்றதோர் பொருளா மந்தப்

புராபர வடிவங் கண்டு பரத்துளே யடக்கி மேலாம்

தராதன மூர்த்தி நாகை லிங்கரைப் போற்று நெஞ்சே!


92. மாணிக்க வாச கர்க்கும் மகிழ்ப்பரஞ் சுந்த ரர்க்கும்

ஆணிப்பொன் திருமூ லர்க்கும் அறுபத்து மூவ ருக்கும்

பேணிக்கொள் பெரியோ ருக்கும் பேறருள் சிவனை யுன்னுள்

தோணக்கண் டிருந்து நாகை லிங்கரைத் தொழுவாய் நெஞ்சே!


93. மகத்துவம் அடைந்த நெஞ்சே! மலமாயை கொண்ட நெஞ்சே!

பகுத்தறி வில்லா நெஞ்சே! பலநினை வான நெஞ்சே!

மிகுத்திடு காம நெஞ்சே! மெய்ப்பொருள் அறியா நெஞ்சே!

செகத்தினிலே நாகை நாதர் சீர்ப்பதந் தேடு நெஞ்சே!


94. காலது மேல தாகக் கனியுண்ணும் வௌவால் போல

மூலநல் வாசி யோடு முறைமையை அறிவாற் கண்டு

சீலமெய்ஞ் ஞான போத சிவயோகந் தன்னைப் பார்த்து

ஞாலமேல் நாகை நாதர் நடனமுங் காண்பாய் நெஞ்சே!


95. உறக்கமும் விழிப்பும் போல உடல்பிறந் திறக்குந் தன்மை

சிறக்கவே அறிந்து மிந்தச் செகவாழ்வை மெய்யென் றெண்ணிக்

குறித்தலை குலாமர் சொல்லைக் குறிப்புடன் நம்ப லாமோ?

மறக்கொணா நாகை நாதர் மலரடி வணங்கு நெஞ்சே!


96. எத்தனை புத்தி சொல்லி எடுத்தெடுத் துரைத்தும் நீதான்

பித்தனைப் போலே யோடிப் பிறவிசா கரத்தில் வீழ்ந்தாய்:

முத்தமிழ் நாகை நாதர் முண்டக மலர்த்தாள் போற்றிச்

சத்தமுன் னுடலிற் றோற்றுந் தலந்தனைப் பார்ப்பாய் நெஞ்சே!


97. சுவர்த்தலைப் பூனை போலச் சுற்றிய பிறவி தீரத்

தவத்தினுக் குருவ மான சற்குரு தாளைப் போற்றிச்

சிவத்துடன் கலந்து மேவிச் சிதம்பர வழியே சென்றங்

கெவர்க்குமே லான நாகை நாதரை வணங்கு நெஞ்சே!


98. அலைவாயிற் பூடு போலும் ஆனைவாய்க் கவளம் போலும்

வலைவாயில் மிருகம் போலும் மயங்கிநைந் தலைந்தாய் நீதான்;

உலைவாயில் மெழுகைப் போல உருகிமெய்ப் பொருளை யுன்னிப்

பலகாலு மேத்தி நாகை லிங்கரைப் பணிவாய் நெஞ்சே!


99. மூலமாம் நகர மீதில் முளைத்தெழுஞ் சுடரைக் கண்டு

காலத்தீ மேலே யேற்றிக் கபாலத்தே னமுத ருந்திக்

கோலமா மதுவே யுண்டு குருபதந் தன்னிற் சேர்ந்து

வாலகந் தரியால் நாகை லிங்கரை வணங்கு நெஞ்சே!


100. இறந்திடும் இருபத்தோரா யிரத்தறு நூறு பேரும்

இறந்திடிக் காயம் போனா வீசனைக் காண்ப தெந்நாள்?

மறந்திடா தறிவால் மூலவாசியை மேலே யேற்றிச்

சிறந்தசிற் பரத்து நாகை லிங்கரைத் தெரிசி நெஞ்சே!


நூற் பயன்


1. கதிதரு மூலா தாரக் கணபதி தாசன் சொன்ன

நிதிமணி மாலை யான நெஞ்சறி விளக்கம் நூறும்

துதிசெய்யும் அறிவோர் ஞான சோதியின் வடிவ மாக

மதியணி நாகை நாதர் மலர்ப்பதம் பெற்று வாழ்வார்


2. நித்தியப் பொருள தான நெஞ்சறி விளக்கம் நூறும்

பத்தியாய் மனத்தி லெண்ணிப் படித்ததன் பயன்காண் போர்கள்

முத்திமெய்ஞ் ஞானம் பெற்று மூவர்க்கும் முதல்வராகிச்

சத்தியுஞ் சிவமுந் தோன்றுந் தற்பர மதனுட் சார்வார்.


3. கனகமார் மணிசேர் மூல கணபதி தாச னாக

நினைவினா லறிகட் செப்பும் நெஞ்சறி விளக்கம் நூறும்

வினவியே படிப்போர் கேட்போர் வினையெலாம் அகன்று மெய்யுற்

பனமெனும் மோட்ச நாலாம் பதம்பெற்றுப் பதத்துள் வாழ்வார்.